|
|
20 செப்டம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
24ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை
நாடித் தேடு.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 6: 2-12
அன்பிற்குரியவரே, இவற்றை நீ கற்பித்து ஊக்குவி. மாற்றுக்
கொள்கைகளைக் கற்பித்து, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலம்
தரும் வார்த்தைகளுக்கும், இறைப் பற்றுக்குரிய போதனைகளுக்கும்
ஒத்துப்போகாதவர்கள், தற்பெருமை கொண்டவர்கள்; ஒன்றும் தெரியாதவர்கள்;
விவாதங்களிலும் சொற்போர்களிலும் பைத்தியம் கொண்டவர்கள்.
பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், ஓயாத
மோதல்கள் முதலியன இவற்றிலிருந்தே உண்டாகின்றன. உண்மையை இழந்தவர்களிடமும்
சீரழிந்த மனத்தைக் கொண்டவரிடமும் இவை காணப்படுகின்றன.
இறைப் பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே
தரும். உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை
விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது. எனவே, உணவும் உடையும்
நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.
செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில்
சிக்கிக்கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக் கூடிய பல்வேறு
தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக்
கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை.
பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர்
விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே
தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள்.
கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்
பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு.
விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள்.
அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய். அதனை முன்னிட்டே பல சாட்சிகள்
முன்னிலையில் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்டாய்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
49: 5-6. 7-9. 16-17. 18-19 (பல்லவி: மத் 5: 3)
Mp3
=================================================================================
பல்லவி: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு
அவர்களதே.
5 துன்பக் காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக் கொண்டு
கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்? 6 தம் செல்வத்தில்
நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப் பெருக்கைக்
குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். பல்லவி
7 உண்மையில், தம்மைத் தாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம்
உயிரை மீட்க எதையும் கடவுளுக்குத் தர இயலாது. 8 மனித உயிரின்
ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது. 9
ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திட முடியுமா? படுகுழியைக் காணாமல்
இருந்திட முடியுமா? பல்லவி
16 சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம்
பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! 17 ஏனெனில்
சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது
செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை. பல்லவி
18 உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும்,
'நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,
19 அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும்
பகலொளியைக் காணப் போவதில்லை. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,
உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக்
கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-3
அக்காலத்தில் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி
பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன்
இருந்தனர். பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான
பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின்
மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும்
மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக்
கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை
நாடித் தேடு.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம்6: 2-12
கண்ணியில் சிக்கிக்கொள்பவர் யார்?
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். அவர் மலையடியாரத்தில் ஒரு குடிசை அமைத்து,
அங்கு வந்த மக்கட்குப் போதித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரைக்
காண ஒரு மனிதர் வந்தார். அவர் துறவியிடம் ஒரு சிறு பையைக்
கொடுத்து, "
சுவாமி! இதை வாங்கிக் கொள்ளுங்கள்... உங்கட்குத்
தேவைப்படும்"
என்றார். துறவி அவர் கொடுத்த பையைப் பிரித்துப்
பார்த்தார், அதில் பத்தாயிரத்தும் மேல் பணம் இருந்தது.
துறவி ஒரு கணம் சிந்தித்தார். "
எனக்குப் பத்தாயிரத்தும் மேல்
பணம் தருகின்றாயே! அப்படியானால் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கும்?"
என்று கேட்டார். "
என்னிடம் இப்பொழுது பண கோடிகட்கும் மேல் பணம்
இருக்கும்"
என்று அவர் சொல்லி முடித்ததும், துறவி அவரிடம்,
"
உனக்கு இதற்கு மேலும் பணம்வேண்டும் என்ற ஆசை இருக்கின்றதா?"
என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், "
ஆமாம்
சுவாமி! இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும்... பெரிய
கோடிஸ்வரராக வேண்டும்"
என்றார்.
உடனே துறவி அந்த மனிதர் கொடுத்த பணத்தை அவரிடம் திரும்பிக்
கொடுத்து, "
நான் ஏழைகளிடமிருந்து பணம் வாங்குவதில்லை"
என்றார்.
"
சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை... சற்று
விளக்கமாகச் சொல்லுங்கள்"
என்றார் அந்த மனிதர். "
ஒருவரிடம் பணம்
கொட்டிக் கிடந்தாலும், அவரிடம் '
இன்னும் வேண்டும், இன்னும்
வேண்டும்'
என்ற ஆசை இருக்குமாயின் அவர் ஏழைதான். அதேநேரத்தில்
ஒருவர் ஏழையாக இருந்தாலும், அவரிடம் போதுமென்ற மனநிறைவு இருக்குமாயின்
அவர் செல்வந்தர். உங்களிடம் அளவுக்கதிகமான பணம் இருந்தும்,
'
இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்'
என்ற எண்ணம் இருப்பதால்,
நீங்கள் ஏழைதான், ஆனால், என்னிடம் போதுமென்ற மனநிறைவு இருப்பதால்,
நான் ஏழையாக இருந்தாலும் செல்வந்தர்தான். அதனால்தான் சொன்னேன்,
'
நான் ஏழைகளிடமிருந்து பணம் எதுவும் வாங்குவதில்லை என்று'
என்றார்.
துறவி இவ்வாறு சொன்னதைக் கேட்டு அந்த மனிதர் மிகவும் வருத்ததோடு
சென்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்றுதான் பலர், '
இன்னும்
வேண்டும், இன்னும் வேண்டும்'
என்ற பேராசையில் பணத்தையும்
பொருளையும் சேகரிக்க ஆசைப்படுகின்றார்கள். முடிவில் அவற்றாலேயே
அழிந்துபோகின்றார்கள். இன்றைய முதல் வாசத்தில் புனித பவுல்,
செல்வம் சேர்க்க விரும்புகிறவர்களைச் சோதனையாகிய கண்ணியில்
சிக்கிக் கொள்கிறார்கள் என்ற கூறுகின்றார். பவுல் எதற்காக இப்படிச்
சொல்கின்றார் என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பணம் மனநிறைவைத் தராது
பவுல் திமொத்தேயுவிடம் திருமுகத்தின் வழியாகப் பேசுகின்றபோது,
"
செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில்
சிக்கிக்கொள்கிறார்கள்"
என்று சொல்வதற்குக் காரணம், செல்வம் ஒருபோதும்
மனநிறைவைத் தராது என்பதால்தான். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
ஆண்டவர் இயேசு சொல்கின்ற அறிவற்ற செல்வன் உவமை (லூக் 12). அந்தச்
செல்வந்தனின் நிலம் நன்றாக விளைந்திருந்தது; அதைக் கொண்டு அவன்,
இது போதும் என்று மனநிறைவு அடைந்திருக்கலாம். அவனோ மனநிறைவு அடையாமல்,
மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில், களஞ்சியத்தை
இடுத்துப் பெரிதாகக் காட்டுகின்றான். இறுதியில் அந்த இரவே அவன்
அழிந்து போகின்றான். இந்த அறிவற்ற செல்வந்தைப் போன்றுதான் பலரும்
'
இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்'
என்ற பேராசையில், இருப்பதை
சரியாக அனுபவிக்க வழியில்லாமல் அழிந்து போகிறார்கள்.
பணம் தருகின்ற இன்பம் நீடித்து இருக்காது
பவுல் திமொத்தேயுவிடம் மேற்கூறிய வார்த்தைகளைச் சொல்ல இன்னொரு
காரணம், பணம் தருகின்ற இன்பம் நீடித்து இருக்காது என்பதால்தான்.
இன்றைக்குப் பலர் பணம்தான் மகிழ்ச்சியைத் தரும் என்று அதைத்
தேடி அலைகின்றார்கள். அதைச் சம்பாதிக்க பின், அதில் இன்பம்
காணாமல் ஏதோ ஒன்றை இழந்தது போன்று உணர்கின்றார்கள். நற்செய்தியில்
வருகின்ற சக்கேயும் இப்படித்தான். பணத்தைத் தேடினார்; தவறான
வழியில் அதை ஈட்டினார். முடிவில் மன நிம்மதி இல்லாமல் இயேசுவைத்
தேடி வருகின்றார். ஆகையால், பணம் ஒருபோதும் நீடித்த இன்பத்தைத்
தராது என்பதை உணர்வது நல்லது (லூக் 12: 15)
பணம் ஒருவரை பாவத்திற்கு இட்டுச் செல்லும்
பவுல் திமொத்தேயுவிடம் மேற்கூறிய அறிவுரையைக் கூறக் காரணம்,
பணம் ஒருவரை பாவத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால்தான். இன்றைக்குப்
பலர் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியில், எப்படிப்பட்ட தவறையும்
செய்யத் துணிகின்றார்கள். இயேசுவின் சீடர்களில் ஒருவனும் அவரைக்
காட்டிக் கொடுத்தவனுமாகிய யூதாசு முப்பது வெள்ளிக்கு ஆசைப்பட்டு
இயேசுவைக் காட்டிக்கொடுத்தான் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆகையால்,
பணம் ஒருவரை பாவம் செய்யத் தூண்டும் என்பதாலேயே பவுல் இத்தகைய
அறிவுரையைக் கூறிவிட்டு, "
கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து
தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை
நாடித் தேடு"
என்கின்றார்
ஆதலால், பவுல் திமொத்தேயுக்கு கூறிய அறிவுரைகளை நாம் உள்வாங்கிக்
கொண்டவர்களாய் பாவத்திற்கு இட்டுச் செல்லும் பணத்திற்குப்
பின்னால் செல்லாமல், விண்ணகத்திற்கு இட்டுச் செல்லும் ஆண்டவரை
நாடுவோம்.
சிந்தனை
'
ஆண்டவரைத் தேடுங்கள்; நீங்கள் வாழ்வடைவீர்'
(ஆமோ 5:4) என்பார்
ஆமோஸ் இறைவாக்கினர். நாம் அழிவுக்கு இட்டுச் செல்லும் பணத்திற்குப்
பின் செல்லாமல், நிலைவாழ்வைத் தரும் ஆண்டவர்க்குப் பின்னால்
செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
தூயவர்களான ஆன்ட்ரூ கிம், பால் சோங் மற்றும் அவருடைய தோழர்கள்
(செப்டம்பர் 20)
"
நாங்களும் ஆண்டவருக்கு ஊழிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்"
யோசுவா 24: 18)
வாழ்க்கை வரலாறு
கொரியாவில் கிறிஸ்தவம் வளர்ந்து வந்ததற்கான நீண்ட நெடிய வரலாறெல்லாம்
ஒன்றும் இல்லை. பதினாறாம் நூற்றாண்டில்தான் கிறிஸ்தவதிற்கான
விதையானது அங்கே தூவப்பட்டிருக்கின்றது. அப்படியிருந்தபோதும்
இன்றைக்கு அங்கே ஆழமான விசுவாசம் கொண்ட கிறிஸ்தவர்களைப்
பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது. இங்கே
கொரியாவில் எப்படி கிறிஸ்தவம் வேறோன்றியது, யாரெல்லாம் அங்கே
கிறிஸ்துவுக்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள் என்று
பார்ப்போம்.
1592 ஆம் ஆண்டு, ஜப்பானியப் படையெடுப்பு கொரிய மண்ணில் நிகழ்ந்தபோது
ஒருசில கிறிஸ்தவப் படைவீரர்கள் வழியாக கிறிஸ்தவம் அங்கே
துளிர்விட்டது என்று சொல்வார்கள். இதற்குப் பிறகு 1777 ஆம் ஆண்டு
சீனாவின் வழியாக கிறிஸ்தவ இலக்கியங்கள் கொரியாவிற்குக் கொண்டுவரப்பட்டு,
அதன்மூலம் கொரிய நாட்டுக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய நம்பிக்கையில்
உறுதியடைந்தார்கள். இதைத் தொடர்ந்து 1794 ஆம் ஆண்டு
சீனாவிலிருந்து ஒரு குருவானவர் கொரிய மண்ணில் காலடி எடுத்துவைத்தபோது,
ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு இருப்பது கண்டு அவர் ஆச்சரியப்பட்டுப்
போனார். அவர் அவர்களுக்கு இறைவார்த்தையைப் போதித்தும் அவர்களை
விசுவாசத்தில் இன்னும் உறுதிப்படுத்தியும் வந்தார். இப்படி
கொரியாவில் கிறிஸ்தவம் படிப்படியாக வளரத் தொடங்கியது.
1836 ஆம் ஆண்டு, ஏராளமான மறைபோதகர்கள் கொரியாவிற்கு வந்து
கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள்.
இதனால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வேகமாக வளரத் தொடங்கியது. இதைப்
பார்த்து பயந்துபோன கொரிய அரசாங்கம், '
கிறிஸ்தவர்களை இப்படியே
விட்டுவைத்தால், அவர்கள் வளர்ந்து, பெரிய இனமாக மாறிவிடுவார்கள்'
என்று சொல்லி 1839 -1867 வரையிலான காலகட்டங்களில் கிறிஸ்தவர்களைப்
பிடித்து சித்ரவதை செய்து கொல்லத் தொடங்கினார்கள். இதனால் ஆயிரத்துக்கும்
மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இறந்துபோனார்கள்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர்களை நாம் இங்கே
குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். ஒருவர் ஆன்ட்ரூ கிம் என்ற
குருவானவர். இவர் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு
அறிவித்து, அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியதால், கொடூரமாகக்
கொல்லப்பட்டார். இரண்டாமவர் பால் சோங் என்ற பொதுநிலையினர். இவரும்
கிறிஸ்தவம் கொரிய மண்ணில் வளர்வதற்காக கடுமையாகப் பாடுபட்டார்.
அதனால் கொல்லப்பட்டார். மூன்றாமவர் கொலும்பா கிம். இவரும்
சிறையில் வைத்து கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டார். இப்படி
கொரிய மண்ணில் கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தி உயிர்நீத்த மறைசாட்சிகள்
ஏராளம்.
1984 ஆம் ஆண்டு, தூய திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்
கொரியாவிற்குச் சென்றபோது மேலே சொல்லப்பட்ட மூன்று பேர் உட்பட
103 பேருக்கு புனிதர் பட்டம் கொடுத்து உயர்த்தினார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
கொரிய நாட்டு மறைசாட்சிகளான ஆன்ட்ரூ கிம், பால் சோங் மற்றும்
அவர்களுடைய தோழர்களின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
1. இறைநம்பிக்கையில் உறுதியாக இருந்தல்
'
இறைநம்பிக்கையில் உறுதியாக இருத்தல்'
இதுதான் நாம் இந்த கொரிய
நாட்டு மறைசாட்சிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான
பாடமாக இருக்கின்றது. இவர்கள் யாவரும் எத்தகைய எதிர்ப்புகள்,
அச்சுறுத்தல் வந்தபோதும் தங்களுடைய விசுவாசத்திலிருந்து விலகவில்லை.
மாறாக இறுதிவரைக்கும் உறுதியாக இருந்து, ஆண்டவர் இயேசுவுக்கு
சான்று பகர்ந்து வாழ்ந்தார்கள். நாம் இந்த மறைசாட்சிகளைப்
போன்று ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்கின்றோமா? என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இன்று நாம் நினைவுகூருகின்ற ஆன்ட்ரூ கிம் என்ற குருவானார் அடிக்கடி
சொல்லக்கூடிய வார்த்தைகள், "
கிறிஸ்தவர்கள் என்று நாங்கள் அழைக்கப்படுவதை
நினைத்து பெருமிதம் கொள்கின்றோம். அதேநேரத்தில் கிறிஸ்துவின்
போதனையை வாழ்வாக்காமல், பெயருக்கு கிறிஸ்தவர்களாக இருப்பதில்
எந்தவொரு அர்த்தமில்லை"
. எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவை.
இதைதான் இயேசு கிறிஸ்து, "
என்னை நோக்கி, "
ஆண்டவரே, ஆண்டவரே"
எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவதில்லை, மாறாக விண்ணுலகில்
இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தின்படி நடப்பவரே நுழைவர்"
என்று கூறுவார். (மத் 7:21).
ஆகையால், நாம் பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக இல்லாமல்,
கிறிஸ்துவின் போதனையை வாழ்வாக்குகின்றவர்களாக, அதன்மூலம் அவருக்கு
சான்று பகரக்கூடியவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
லூக்கா 8: 1-3
இயேசுவுக்குப் பணிவிடை செய்வோம்
நிகழ்வு
குருவானவர் ஒருவர் ஆப்ரிக்க மக்கட்கு மத்தியில் மறைப்போதகப் பணியைச்
செய்து வந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது, அவர்
மக்களைப் பார்த்துச் சொன்னார், "
கடவுள் நமக்கு எவ்வளவோ நன்மைகளைச்
செய்திருக்கின்றார். அந்த நன்றிப் பெருக்கின் அடையாளமாக அடுத்த
வாரம் திருப்பலிக்கு வருகின்றபோது, அவர்க்கு ஏதாவது கொண்டு
வாருங்கள்."
குருவானவர் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து, இறைமக்களில் ஒருசிலர்
அடுத்தவாரம் திருப்பலிக்கு வந்தபோது, தங்களுடைய தோட்டத்தில்
விளைந்த பழங்கள், காய்கறிகள் ஆகியற்றவற்றைக் கொண்டு வந்தார்கள்;
இன்னும் சிலர் தங்களுடைய இல்லங்களில் இருந்த கோழி, முட்டை,
தானியங்களைக் கொண்டுவந்தார்கள்; மற்றும் சிலர் தாங்களாகவே
செய்த கைவினைப் பொருள்களான மர நாற்காலிகள், பொம்மைகள்,
மூங்கில் கூடைகளைக் கொண்டுவந்தார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமான பொருளைக் கொண்டுவந்து கோயிலை நிரப்பினார்கள்.
வழக்கமாக ஞாயிறுத் திருப்பலிக்கு வரும் எல்லாரும் வந்திருந்தார்கள்,
ஒரே ஒரு பெரியவரைத் தவிர. அவர் சற்றுத் தாமதமாக வந்தார். அவர்
தன்னுடைய கையில் எதையும் எடுத்துக்கொண்டு வரவில்லை. இதனால்
கோயிலில் இருந்த எல்லாரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
வந்தவர் பீடத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த ஒரு மூங்கில்
கூடைக்குள் போய் உட்கார்ந்தார். இதைப் பார்த்துவிட்டு குருவானவர்
அவரிடம், "
நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?"
என்று
கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், "
எல்லாரும் தங்களுடைய நன்றிப்
பெருக்கின் அடையாளமாகத் தங்களிடமிருந்த ஏதோவொன்றைத் தந்தார்கள்.
ஆனால், நான் கடவுளுடைய பணிக்காக என்னையே தருகிறேன்"
என்றார்.
இதைக் கேட்டு குருவானவர் ஆலயத்தில் திரண்டிருந்தவர்களைப்
பார்த்துச் சொன்னார், "
மற்ற எல்லாரும் கொடுத்த காணிக்கையை விடவும்,
தன்னையே காணிக்கையாகத் தந்த இந்தப் பெரியவரின் காணிக்கை மிக
உயர்ந்தது."
ஆம், கடவுளுக்காக, அவருடைய பணிக்காக நம்மிடமிருந்து ஏதோவொன்றைத்
தருவதை விடவும் நம்மையே தருவது மிகவும் உயர்ந்தது. இத்தகைய உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய
நற்செய்தி வாசகத்தில் இயேசு செய்துவந்த நற்செய்திப் பணிக்காகத்
தங்களால் இயன்றதையும், ஏன், தங்களையே தந்தும் உதவிய இயேசுவின்
பெண் சீடர்களைக் குறித்து வாசிக்கின்றோம். நற்செய்திப் பணிக்காக
அவர்கள் செய்த உதவி அல்லது தியாகம் எத்தகையது என்பதை இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்
நகர் நகராய் நற்செய்தி அறிவித்து வந்த இயேசு
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி
வாசகத்தின் தொடக்கத்தில் இயேசு, நகர் நகராய் ஊர் ஊராய்ச்
சென்று நற்செய்தி அறிவித்து வந்ததைக் குறித்து வாசிக்கின்றோம்.
இயேசு இந்த உலகத்திற்கு வந்ததே நற்செய்தி அறிவிக்கத்தான் (மாற்
1: 38). எனவே அவர் நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தி
அறிவித்து வந்தார். மக்களும் அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட
அமுத மொழிகளைக் கேட்பதற்காகக் கூட்டம் கூட்டமாய் வந்தார்கள்.
இயேசு அந்த மக்கட்கு நற்செய்தி அறிவித்ததோடு மட்டுமல்லாமல்,
அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களிடமிருந்த
தீய ஆவிகளை விரட்டியடித்தார். இவ்வாறு இயேசு இம்மண்ணுலகில்
வாழ்ந்தபோது, ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைப்பதில் இன்பம்
கண்டார்.
ஆண்டவருடைய நற்செய்திப் பணிக்கு உடனிருந்து உதவியவர்கள்
இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தியை அறிவித்ததற்கு
உடனிருந்து உதவியவர்களை இங்கு நாம் குறிப்பிட்டுச் சொல்லியாக
வேண்டும். இயேசு ஆற்றி வந்த நற்செய்திப் பணிக்கு, அவருடைய
திருத்தூதர்கள் போக, பெண்கள் சிலரும் உறுதுணையாக இருந்து உதவி
வந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் மகதலா மரியா, சூசன்னா,
யோவன்னா ஆகியோர் ஆவர். இவர்கள் தங்களிடமிருந்த உடைமைகளைக்
கொண்டு, இயேசு செய்துவந்த நற்செய்திப் பணிக்கு உதவி வந்தார்கள்.
இவர்கள் உண்மையிலேயே நம்முடைய பாராட்டிற்கு உரியவர்களாக இருக்கின்றார்கள்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த எத்தனையோ ஆண்கட்குத்
தோன்றாத எண்ணம், இவர்கட்குத் தோன்றியது என்றால், அதற்காக இவர்களை
நாம் பாராட்டியாக வேண்டும். அதே நேரத்தில் இந்தப் பெண் சீடர்களைப்
போன்று ஆண்டவருடைய நற்செய்திப் பணிக்கு நாமும் நம்மாலான உதவிகளைச்
செய்தாகவேண்டும். அது வெறும் பணமாக மட்டுமில்லாமல், நம்மையே தந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்.
சிந்தனை
'
நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள்
பெருகவேண்டும் என்றே விருபுகிறேன்'
(பிலி 4: 17) என்பார் பவுல்.
ஆகையால், நாம் நற்செய்திப் பணிக்கு நம்மால் இயன்ற உதவிகளைச்
செய்வோம். அதனால் நற்பயனையும் இறையருளையும் நிறைவாகப்
பெறுவோம்.
|
|