|
|
18 செப்டம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
24ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 14-16
அன்பிற்குரியவரே, நான் விரைவில் உன்னிடம் வருவேன் என்னும் எதிர்நோக்குடன்
இவற்றை உனக்கு எழுதுகிறேன். நான் வரக் காலம் தாழ்த்தினால், நீ
கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இத்திருமுகத்தின்
வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை; இத்திருச்சபை உண்மைக்குத்
தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது. நமது சமயத்தின் மறை உண்மை
உயர்வானது என்பதில் ஐயமே இல்லை.
அது பின்வருமாறு: "மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய
ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத்
தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால்
நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
111: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 2a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை. அல்லது: அல்லேலூயா.
1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும்
சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள்
உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.
பல்லவி
3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும்
நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில்
நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.
பல்லவி
5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது
உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின்
உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க
தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 63b, 68b
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும்
ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே
உள்ளன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை.
நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
7: 31-35
அக்காலத்தில் இயேசு, "
இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்?
இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து
ஒருவரை ஒருவர் கூப்பிட்டு
'நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள்
கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை'
என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும்
இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை,
'பேய் பிடித்தவன்'
என்றீர்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்,
குடிக்கிறார்; நீங்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,
வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள்.
எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே
சான்று"
என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 7: 31-35
தீய தலைமுறையினர்
அமெரிக்காவைச் சார்ந்த ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பம்
ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்குச் சென்றுவிட்டு, தங்களுடைய
நான்கு சக்கர வண்டியில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தது.
வருகிற வழியில் அக்குடும்பத்தில் இருந்த தந்தை, "இன்றைக்குப்
பங்குத்தந்தை பிரசங்கமா வைத்தார்! நீட்டி முழங்கி வைத்தாரே ஒழிய,
ஒரு சுவாரஸ்யம் இல்லை... எனக்குத் தூக்கமே வந்துவிட்டது" என்றார்.
தந்தையைத் தொடர்ந்து தாய் பேசத் தொடங்கினார். "இன்றைக்கு
திருவிருந்துப் பாடல் பாடப்பட்டபோது, பியானோ வாசிக்கக் கூடியவர்
ஒரு கட்டையை இறக்கி வாசித்துவிட்டார். அதனால் அப்பாடலைக் கேட்பதற்கும்
சகிக்கவில்லை." இவர் இவ்வாறு சொன்னதற்குக் காரணம், இவர் அமெரிக்காவில்
இருந்த ஓர் இசைக் கல்லூரியில் இசை ஆசிரியையாக இருந்தார். அதனால்தான்
இவர் இப்படிக் குறைபட்டுக் கொண்டார்.
இவரைத் தொடர்ந்து குடும்பத்தில் இருந்த மூதாட்டி, "எனக்கு நீங்கள்
சொன்னது போல் பங்குத்தந்தையின் பிரசங்கமும் கேட்கவில்லை; பாடற்குழுவினர்
பாடிய பாடலும் கேட்கவில்லை. ஏனெனில் நான் அமர்ந்திருந்த இடத்தில்
ஒலியமைப்பு (Sound System) சரியாகவே இல்லை... எவ்வளவு பெரிய
கோயில் இது...இதில் இந்தச் சின்ன விஷயத்தைக்கூட கவனிக்க
மாட்டேன் என்கிறார்கள். என்ன கோயில் நிர்வாகமோ...?" என்று மிகவும்
வருத்தப்பட்டுக் கொண்டார்கள்.
இப்படி வண்டியில் இருந்த எல்லாரும் பேசிமுடித்த பின்பு, தந்தைக்குப்
பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சுட்டிப்பெண், "அப்பா நான்
திருப்பலியைச் சரியாகக் காணமுடியாத வண்ணம் எனக்கு முன்னால் அமர்ந்திருந்த
ஒரு பாட்டி என்னை மறைத்துக் கொண்டார்... ஆனாலும் நாம்
காணிக்கையாகச் செலுத்திய ஒரு டாலருக்கு இது எவ்வளவோ பரவாயில்லை"
என்றாள். இது கேட்டு எல்லாரும் அப்படியே அதிர்ந்து போனார்கள்.
தங்களிடம் ஏராளமான தவறுகளைகளையும் குற்றங்குறைகளையும்
வைத்துக்கொண்டு மற்றவரைத் தவறாகப் பேசும் போக்கு இன்றைக்கு
பெரும்பாலானவர்களிடம் மலிந்துவிட்டு என்பதை இந்நிகழ்வு பகடி
செய்வதாய் இருக்கிறது. இன்றைய நற்செய்தியில், யாரிடமும் நிறைவடையாத
அல்லது திருப்தியடையாத பரிசேயக் கூட்டத்தை ஆண்டவர் இயேசு கடுமையாகச்
சாடுகின்றார். இயேசு எதற்கு அவர்களை அவ்வாறு சாடவேண்டும்? அவர்கள்
செய்த குற்றமென்ன? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
திருமுழுக்கு யோவான்மீது குற்றம் கண்டுபிடித்தவர்கள்
நற்செய்தியில் இயேசு பரிசேயர்களின் செயல்பாடு சிறுபிள்ளைத் தனமானது
என்று சாடுகின்றார். அதற்குக் காரணம், திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர்
எலியாவின் உளப்பாங்கைக் கொண்டவராய், ஆண்டவர்காக மக்களைத் தயார்
செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல், அவர் மிக எளிய உணவை உண்டு
சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படி இருந்தபோதும் மக்கள்
அவரை ஏற்றுக் கொள்ளாமல், அவரைப் 'பேய் பிடித்தவன்' என்று விமர்சனம்
செய்தார்கள்.
திருமுழுக்கு யோவான் சாதாரண மனிதர் கிடையாது; அவர் மனிதராகப்
பிறந்தவர்களுள் பெரியவர். அவரையே பரிசேயக் கூட்டம் விமர்சனம்
செய்ததால்தான், இயேசு அவர்களின் செயல்பாடு சிறுபிள்ளைத் தனமானது
என்று சாடுகின்றார்.
இயேசுவிடம் குற்றம் கண்டுபித்த பரிசேயக் கூட்டம்
இயேசு திருமுழுக்கு யோவானைப் போன்று இருக்கவில்லை; அவர் மக்களோடு
மக்களாக இருந்தார்; உண்டார்; குடித்தார். அவர்களோ அவரைப்
'பெருந்தினிக்காரர்' என்று குற்றம் சொல்லத் தொடங்கினார்கள். இவ்வாறு
எப்படி வாழ்ந்தாலும் அதில் குற்றம் காண்பவர்களாகப் பரிசேயர்கள்
இருந்ததனாலேயே இயேசு அவர்களைச் சாடுகின்றார்.
அடிப்படையில் பரிசேயர்கள் எதிலும் நிறைவடையாதவர்களாக, உண்மையைத்
திறந்த மனதோடு ஏற்கும் பக்குவமில்லாதவர்களாக இருந்தார்கள். அதனால்தான்
அவர்கள் எல்லாரிடமும் குறை கண்டு பிடித்தார்கள். இயேசுவின் பணிவாழ்வில்
இந்தப் பரிசேயக்கூட்டம் இயேசு சொன்ன எதையும் ஏற்றுக்கொள்ளாமல்,
அதைப் புரிந்துகொள்வதற்கும் முயற்சி செய்யாமல், குறைகண்டு
பிடிப்பது ஒன்றும் தங்களுடைய குலத்தொழில் என்பது குறையை மட்டும்
கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களது
செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று சாடுகின்றார்.
இந்த இடத்தில் நம்முடைய வாழ்வையும் நாம் தன்னாய்வுக்கு உட்படுத்திப்
பார்ப்பது நல்லது. நாம் உண்மையைத் திறந்த மனதோடு ஏற்பவர்களாக
இருக்கிறோமா? அல்லது பரிசேயர்களைப் போன்று மூடிய மனத்தவராக, அடுத்தவரிடம்
குற்றம் காண்பவராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
'
தன்னிடம் உள்ள குறையைப் பார்க்காமல் அடுத்தவரிடம் இருக்கின்ற
குறையைப் பார்ப்பது என்பது முட்டாளுக்கே உரிய குணம்' என்பார்
சிசரோ என்ற அறிஞர். ஆகையால் நாம் பிறரிடம் குறைகளைப் பார்க்காமல்,
நிறைகளைப் பார்த்து பாராட்டக் கற்றுக் கொள்வோம். அதன் வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
முதல் வாசகம்
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 14-16
"
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது"
.
நிகழ்வு
ஒருமுறை மாவீரன் நெப்போலியன் எதிரிநாட்டவரோடு போரிடும்போது,
போரில் தோற்றுப்போக, எதிரிநாட்டவரால் கைது செய்யப்பட்டு ஒரு
தீவில் கைதியாக வைக்கப்பட்டான். அப்பொழுது அவன் அடைந்த வேதனைக்கு
அளவே இல்லை. இதைப் பார்த்து, அவன்மீது இரக்கப்பட்ட எதிரிநாட்டிலிருந்த
அதிகாரி ஒருவர், "
உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகளைக்
குவித்திருப்பீர்கள்... எத்தகைய பகைவர்களைப் பந்தாடியிருப்பீர்கள்...
அவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து நீங்கள் ஆறுதல் அடையலாமே,
எதற்காக நீங்கள் இப்படி நடந்துவிட்டதே என்று வருத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றீர்கள்"
என்றார்.
உடனே நெப்போலியன் அவரிடம், "
ஒருகாலத்தில் நான், இந்த உலகத்தில்
தோன்றிய மாவீரர் அலெக்ஸ்சாண்டர், நாசரேத்து இயேசு போன்று
நானும் பெரிய மனிதர் என்று நினைத்துக்கொண்டு ஆணவத்தோடு அலைந்தேன்.
இப்பொழுது அலெக்ஸ்சாண்டர் எங்கிருக்கின்றார் என்று தெரியவில்லை...
அவருடைய எலும்புகள் எங்கிருக்கின்ற என்றும் தெரியாது. நானோ எதிரியின்
கையில் மாட்டிக்கொண்டு கொடிய வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன்...
நான் இறந்தபிறகு மக்கள் என்னை உடனே மறந்துவிடுவார்கள், ஆனால்,
நாசரேத்து இயேசு அப்படியில்லை. அவர் இறந்து பல நூறு ஆண்டுகள்
ஆனபின்னும் மக்களுடைய மனதில் நீங்கா இடம் வகித்துக்
கொண்டிருக்கின்றார்; அவர்மீது நம்பிக்கை கொள்ளும் மக்கள்கூட்டம்
ஒவ்வொருநாளும் கூடிக்கொண்டேதான் இருக்கின்றது. உண்மையைச் சொல்லவேண்டும்
என்றால், இந்த உலகத்தில் தோன்றியவர்களில் அவர்க்கு இணை
வேறுயாரும் கிடையாது. இப்படி இருக்கும் நான் எதைச்
சாதித்துவிட்டேன் என்று ஆறுதல் அடைவது?"
என்று மிக வருத்தத்தோடு
சொன்னார்.
மாவீரன் சொல்வது போன்று, இந்த உலகத்தில் தோன்றியவர்களில் இயேசுவுக்கு
இணை வேறு யாரும் கிடையாது. காரணம் அவரே இந்த உலகத்தை மீட்க
மானிடராய்ப் பிறந்தவர்; அவரே எல்லார்க்கும் வாழ்வு கொடுப்பதற்காகக்
கல்வாரி மலையில் தன்னையே பலியாகத் தந்தவர்.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், "
நமது சமயத்தின் மறை உண்மை
உயர்வானது"
என்று குறிப்பிடுகின்றார். அவர் அவ்வாறு சொல்வதற்குக்
காரணமென்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மானிடராய் அவர் வெளிப்பட்டார்
புனித பவுல் திமொத்தேயுவிடம், "
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது"
என்று சொல்லிவிட்டு, எதனால் அது உயர்வானது என்று எழுதுகின்றார்.
அவ்வாறு அவர் எழுதுகின்றபோது, அதில் முதலாவது இடம்பெறக்கூடிய
வார்த்தைகள்தான், '
மானிடராய் அவர் வெளிப்பட்டார்' என்ற
வார்த்தைகளாகும். வார்த்தையான இயேசு, கடவுளோடு கடவுளாக இருந்தார்
(யோவா 1:1). அவர் மனிதராகி (யோவா 1: 4) மக்கட்கு ஆண்டவருடைய
வார்த்தையை எடுத்துச் சொல்லி, அவர்களை ஆண்டவரிடம் கொண்டுவர தன்னுடைய
வாழ்வையே அர்ப்பணித்தார். மேலும் அவர் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட
நிலையில் வல்லமையுள்ள இறைவன் என மெய்ப்பிக்கப்பட்டார் (உரோ 1:
4).
* பிற இனத்தார்க்குப் பறைசாற்றப்பட்டார்*
அடுத்ததாக, தூய ஆவியாரால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டவராய், எங்கும்
நன்மை செய்துகொண்டே சென்று இயேசு (திப 10: 38) தன்னுடைய பணி தொடர்ந்து
நடைபெற்றவேண்டும் என்பதற்காகத் திருத்தூதர்களைத்
தேர்ந்தெடுத்து, அவர்கள் வழியாக இறையாட்சியைப் பற்றியும் தன்னைப்
பற்றியும் அறிவிக்கச் செய்தார். இவ்வாறு அவர் பிற இனத்தார்க்கு
பறைசாற்றப் பட்டார்.
மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்
நிறைவாக, இயேசு இம்மண்ணுலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியதும்,
அதாவது உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றதும், உலகெங்கும்
நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும் என்று தன்னுடைய சீடர்களிடம்
சொல்லிவிட்டு, விண்ணேற்றமடைந்தார்.
"
நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது"
என்று திமொத்தேயுவிடம்
சொன்ன புனித பவுல், இதுவரைக்கும் நாம் சிந்தித்துப் பார்த்ததைச்
சொல்கின்றார். அதைச் சொல்லிவிட்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிப்
பறைசாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றார்.
நமது சமயத்தின் உயர்வான மறை உண்மையை சிந்தித்துப் பார்த்த
நாம், இப்பொழுது நாம் செய்யவேண்டியது என்ன என்று சிந்தித்துப்
பார்ப்போம். திருப்பலியின்போது குருவானவர், "
நம்பிக்கையின் மறைபொருள்"
என்று சொல்கின்றபோது, இறைமக்கள் அனைவரும், "
ஆண்டவரே, நீர் வருமளவும்
உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்"
என்று சொல்வார்களே, அதுதான் நாம் செய்யவேண்டியதாக இருக்கின்றது.
ஆம், நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசு வருகின்ற வரைக்கும் அவருடைய
இறப்பினை அறிக்கையிட்டு, அவருடைய உயிர்ப்பினை எடுத்துரைக்க
வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையான பணியாகும்.
சிந்தனை
'
உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு
கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு (யோவா 17: 3) என்பார் இயேசு.
ஆகையால், நாம் இயேசு இறைமகன் என்ற உண்மையை அறிந்து, அதை மற்றவர்க்கும்
அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|