=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக்
காரணமானார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச்
சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி,
கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று
கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார்.
அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக்
கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர்
அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா: 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15.
19 (பல்லவி: 16a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச்
செய்யும்.
1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும்
வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
2ab உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை
மீட்டருளும். பல்லவி
2c எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப்
பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும்
கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை
நடத்தியருளும். பல்லவி
4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை
விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது
கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய
ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். பல்லவி
14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; `நீரே என்
கடவுள்' என்று சொன்னேன். 15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது
கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத்
துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி
19 உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப்
பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில்
நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! பல்லவி
தொடர்பாடல்
இப்பாடலை முழுமையாகவோ அல்லது * எனும் அடையாளத்திலிருந்து (11.
தூய நல்தாயே...) சுருக்கமாகவோ தேவைக்கேற்ப பாடலாம் அல்லது சொல்லலாம்.
1.திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில், கண்ணீர் பெருகிடத்
துயருடன் அந்தோ! நின்றார் வியாகுலத் தாய்மரி.
2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத் துயருறும் அவரது
நெஞ்சை, அந்தோ! ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.
3. தேவ சுதனின் அன்பால் அன்னை, பேரரும் ஆசி பெற்றவர், அன்று எத்துணைத்
துயரும் வருத்தமும் கொண்டார்.
4. அன்புத் தாயவர் மாண்புறு மகனின் துன்பம் அனைத்தும் நோக்கிய
போது கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!
5. இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும் கிறிஸ்துவின் அன்னையைக்
காணும் போதில் எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!
6. தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும் கிறிஸ்துவின் அன்னையை
நோக்கிடும் போதில் உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!
7. தம்முடைய மக்களின் பாவம் நீங்க தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற
தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.
8. தேனினுமினிய தேவனின் மைந்தன் அனைவரும் கைவிட ஆறுதலின்றித்
தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்.
9. அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா, அடியேன் உம்முடன் அழுது வருந்த,
உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.
10. இறைவனாம் கிறிஸ்துவுக்கன்பு செய்து என்றும் அவருக் குகந்தவராக,
என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.
*11. தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்: துயருறும் சிலுவை நாதரின்
காயம் ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.
12. அடியேனுக்காய் காயமும் துன்பமும் ஏற்கத் திருவுளம் கொண்ட
உம் மகனின் துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.
13. சிலுவை நாதருடன் துயருறவும், பக்தியால் உம்முடன் புலம்பவும்,
என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.
14. சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும் கண்ணீர் அழுகையில்
நானும் சேர்ந்து பங்குற விரும்புகின்றேனே.
15. கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே, கனிவுடன் என்னைக் கடைக்கண்
நோக்கி உம்மோடழுதிட அருள் செய், அம்மா.
16. கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும் பாடுகள் யாவிலும் பங்கு
கொள்ளவும் காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.
17. நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும் அவரது சிலுவையும்,
சிந்திய இரத்தமும் என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.
18. என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில் வீழ்ந்து அவதியுறாமல்
கன்னியே, என்னைக் காத்திடுவீரே.
19. கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே வந்திடும் வேளை வெற்றிக்
குருத்தைத் தாங்க நம் அன்னை வழியாய் அருள்வீர்.
20. என்னுடல் மரித்து அழியும் போதில் என்றன் ஆன்மா பரகதி மகிமை
எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா!
தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின்
வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே
அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம்
அடைந்தார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
19: 25-27
அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும்
குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும்
நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம்
அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்"
என்றார்.
பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல்
அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
அல்லது
உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 33-35
அக்காலத்தில் குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன்
தாயும் தந்தையும் வியப்புற்றனர்.
சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி,
"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும்
ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நிகழ்வு
மைக்கேல் ஆஞ்சலோ என்ற கலைஞன் வடித்த மிகவும் தத்ரூபமான ஒரு
சிற்பம்தான் 'Pieta' என்பதாகும். இந்த சிற்பத்தில் இயேசுவின்
இறந்த உடலை தாய் மரியா தன்னுடைய மடியில் வைத்திருப்பார். இந்த
சிற்பத்தை அவர் வடிவமைத்துவிட்டு, மக்களுடைய பார்வைக்கு அதனை
வைத்தார். அதைப் பார்த்த நிறையப் பேர் பாராட்டிச் சென்றார்கள்.
ஒருசிலர் சிற்பத்தில் மரியாவின் முகத்தில் இயேசுவை இழந்த கவலை
தெரியவில்லை, அவர் மிகவும் இளமையாக இருப்பது போன்று
தெரிகின்றார் என்று விமர்சனம் செய்தார்கள். அவர்களுடைய விமர்சனத்தைக்
கேட்டுக்கொண்ட மைக்கேல் ஆஞ்சலோ இவ்வாறு பதில் சொன்னார்: மரியாவின்
முகத்தில் துக்கமோ, வேதனையோ தெரியாமல் இருப்பதற்குக் காரணம்,
அவர் இயேசுவின் இழப்பினால், துக்கப்படவில்லை என்று அர்த்தம்
கிடையாது. மாறாக தன்னுடைய மகன் உயிர்த்தெழுவார் என்ற எதிர்நோக்கோடு
இருந்தார். அதனால்தான் அவருடைய முகத்தில் துக்கமோ, வேதனையோ
தெரியவில்லை. மேலும் மரியா இளமைத் தோற்றத்தோடு இருப்பதற்குக்
காரணம் அவருடைய தூய்மையும் மாசற்றதன்மைமே ஆகும். அவையே மரியாவை
இளமையோடு இருக்கச் செய்தது.
இவ்வாறு அவர் பதில் சொன்னபிறகு சிற்பத்தை விமர்சனம் செய்தவர்கள்
அமைதியாகச் சென்றார்கள்.
வரலாற்றுப் பின்னணி
வியாகுல அன்னையின் விழா பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு
வந்ததற்கான வரலாறு இருக்கின்றது. 1221 ஆம் ஆண்டு ஸ்கூனன் (Schonan)
என்ற இடத்தில் வியாகுல அன்னைக்கென்று பீடம் ஒன்று எழுப்பப்பட்டது.
அதன்பிறகு வியாகுல அன்னையின் பக்தி முயற்சிகளை சர்வைட்ஸ் சபையார்
வளர்த்தெடுத்தனர். 1727 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த
பதிமூன்றாம் பெனடிக்ட் வியாகுல அன்னையின் விழாவை உலகும் முழுவதும்
கொண்டாடப் பணித்தார். 1913 ஆம் ஆண்டு, திருத்தந்தை பத்தாம் பத்திநாதர்
இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள், அதாவது
திருச்சிலுவை மகிமை விழாவிற்கு அடுத்த நாளில் கொண்டாடப் பணித்தார்.
இவ்வாறு தோன்றியதுதான் வியாகுல அன்னையின் பெருவிழாவாகும்.
மரியாவின் ஏழு வியாகுலங்கள்
மரியா, வானத்தூதர் கபிரியேலின் வார்த்தைகளுக்கு ஆம் எனச்
சொல்லி, இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து நடக்கத் தொடங்கியதிலிருந்து,
இறந்த இயேசுவை அடக்கம் செய்தது வரை அனுபவித்த வியாகுலங்கள்
துன்பங்கள் ஏராளம். ஆனாலும் திருச்சபை மரியாவின் வியாகுலங்கள்
ஏழு என்று மட்டும் பட்டியலிட்டிருக்கிறது. எனவே, அவை என்னென்ன
என்று சிந்தித்துப் பார்ப்போம்.
சிமியோனின் இறைவாக்கு (லூக் 2:25-35)
மரியாவும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையுமான யோசேப்பும் குழந்தை
இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச்
சென்றபோது அங்கிருந்த சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி,
"இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு
பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப்
பாயும்" (லூக் 2:34-35) என்று மரியாவிடம் சொல்லுகிறார்.
சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாவின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை
ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக இருப்பதால்
துன்பங்கள் வரலாம் என மரியாவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது
இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க
மாட்டார்.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல் (மத்
2:13-14)
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது குழந்தை
இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை கனவின் மூலமாகத்
தெரிந்துகொண்ட யோசேப்பு மரியாவையும் குழந்தை இயேசுவையும்
தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து
600 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும்,
வேதனையோடும் கழித்த மரியாவிற்கு இது ஒரு வியாகுலம்தான்.
சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல் (லூக் 2:43- 47)
தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், "மரியா அடைந்த வியாகுலங்களில்
மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனதுதான்.
ஏனென்றால் மற்ற வியாகுலங்களில் இயேசு மரியாவோடு உடன் இருப்பார்.
இதில் இயேசு மரியாவோடு இல்லை. தான் ஏதாவது தவறு
செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப்
பிரிந்துபோய்விட்டாரோ என மரியா நினைத்திருக்கக் கூடும். அது
அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்". தூய லிகோரி
சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது மரியாவிற்கு
மிகப்பெரிய வியாகுலம்தான்.
இயேசு சிலுவை சுமந்து செல்லுதல் (லூக் 23:27)
கள்வர்களுக்கும் நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும்
சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய மகனுக்குக் கொடுக்கப்பட்டதை
நினைத்து மரியா மிகுந்த வேதனை அடைந்திருக்கலாம். அது அவருக்கு
மிகப்பெரிய வியாகுலமாக அமைந்திருக்கும்.
சிலுவையின் அடியில் துணை நின்றது (யோவா 19:41,42)
ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்
தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாவிற்கு வேதனையிலும் வேதனையாக
இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு செய்த அற்புதங்களையும்
அதிசயங்களையும் பார்த்த சீடர்கள் ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து
எவ்வளவோ நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக்
கை நெகிழ்ந்தது இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும்
பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறாரே என்று
மரியா மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய
வியாகுலமாக இருந்திருக்கும்.
இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல் (யோவா 19: 40)
எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக்
கொடுத்தபோது சிமியோன் சொன்ன 'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்'
என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து மரியா பெரிதும்
வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின் உடலை இப்படியா சுமந்திருப்பது
என்று மரியாவிற்கு இந்நிகழ்வு பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.
இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல் (யோவா 19: 41-42)
இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே
இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியா அடக்கம் செய்கிறார். உலகத்தில்
இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்?. மரியா தனக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட
ஒரு வியாகுலத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும்
இறைத் திருவுளமென தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாவைப்
பொறுத்தளவில் பாடுகள் தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது
ஆழமான விசுவாசமாக இருந்திருக்கும். அதானால் அவர் எல்லாத் துங்களையும்
பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடும் இன்று, இவ்விழா நமக்கு
உணர்த்தும் செய்தி என்ன சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
மரி(அன்னை)யைப் போன்று துன்பங்களை ஏற்போம், அன்னைக்காக துன்பங்களை
ஏற்போம்
மரியா, இயேசுவுக்காக, இறைவனின் மீட்புத் திட்டம் நிறைவேறுவதற்காக
எவ்வளவோ துன்பங்களை, வியாகுலங்களை அனுபவித்தார். அவரைப் போன்று
நாமும் இறைவனின் திருவுளம் இந்த மண்ணில் நிறைவேற வேண்டும் என்பதற்காக
துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுதான் இவ்விழா உணர்த்தும்
முக்கியமான செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
கூறுவார், "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று
(மத் 16:24). இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு இணங்க மரியா இயேசுவுக்காக,
இறைத் திருவுளம் நிறைவேறுவதற்காக எவ்வளவோ துன்பங்களை அனுபவித்தார்.
அவரைப் போன்று நாமும் இயேசுவுக்காகத் துன்பங்களை ஏற்கத் தயாராக
இருக்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அது மட்டுமல்லாமல், நம்முடைய அன்னையர்களுக்காக நாம் துன்பங்களை
ஏற்கவும் தியாகங்களை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றோமா? எனவும்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் பல நேரங்களில் நாம்
வளரும்வரை பெற்றோரின், தாயின் உதவிகளை வேண்டிய மட்டும்
பெற்றுக்கொள்கிறோம். வளர்ந்த பிறகு பெற்றோர்களை, தாயை
முற்றிலுமாக மறந்துபோய்விடுகின்றோம். இந்நிலை மாறவேண்டும்.
நாமும் அவர்களுக்காக தியாகங்களை, துன்பங்களை மேற்கொள்ளத் துணியவேண்டும்.
கர்நாடகா மாநிலத்தில் சகார தாலுகாவில் உள்ளது
செட்டிசாரா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பவன்குமார்
என்ற 15 வயது சிறுவன், உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றார்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவன்குமாரை, பாகுபாலி என்று
பெருமையுடன் அழைக்கின்றனர். இதற்கு என்ன காரணம்? இவரது
தாயார் தினமும் வீட்டு தேவைக்காக அரை கிலோ மீட்டர் தொஓரம்
நடந்து சென்று தண்ணீர் கொண்டு வந்துள்ளார். தினமும் தண்ணீர்
கொண்டு வர, இரண்டு மணி நேரம் அம்மா படும் கஷ்டத்தை பார்த்து
வேதனைப்பட்ட பவன்குமார், தன்னுடைய அம்மாவின் கஷ்டத்தை நிரந்தரமாக
தீர்க்க முடிவு எடுத்தார். இதற்காக வீட்டின் பின் பகுதியில்
கிணறு தோண்ட முடிவு எடுத்தார். அதுவும் தனி ஆளாக கிணறு வெட்ட
முடிவு எடுத்தார். பள்ளி விடுமுறை நாட்களில் தினசரி கிணறு
வெட்டி அம்மாவின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்.
இது பற்றி பவன் குமார் கூறுகையில், "இந்த கிணறு வெட்டத் துவங்கிய
போது, பலர் 'ஏன் இந்த கஷ்டம்?, கிணறு வெட்ட வேண்டாம்' என்று
கூறினார்கள். எனது நண்பர்கள் மட்டுமல்ல, எனது தாயாரும்
'நீ கஷ்டப்பட வேண்டாம், நான் எப்போதும் போல் கிராம கிணற்றில்
இருந்து தண்ணீர் கொண்டு வருகின்றேன்' என்று கூறினார். ஆனால்
நான்தான் வீட்டின் பின்புறம் தனி ஆளாக 45 அடி ஆழத்திற்கு
கிணறு வெட்டினேன். தொடக்கத்தில் தண்ணீரும் கிடைக்கவில்லை.
அந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய கையில் முறிவு ஏற்ப்பட்டது.
எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அதன்பிறகு கிணறு வெட்டும் இரண்டு
தொழிலாளர்களின் உதவியுடன் மேலும் 10 அடி ஆழம் கிணறு
தோண்டினேன். இப்போது தண்ணீர் கிடைத்துள்ளது. இதன்மூலம் என்னுடைய
அம்மாவின் நீண்ட கால கஷ்டத்தை போக்கியுள்ளேன். அது மட்டுமல்லாமல்
எங்கள் கிராமத்தில் இருக்கும் மற்றவர்களும், இந்த கிணற்றில்
இருந்து தண்ணீர் சேகரித்து கொள்ளவும் பேருதவியாக இருக்கின்றேன்"
என்று கூறுகின்றார். (தினமலர் 2016, மே 13)
ஒரு மகன் தன்னுடைய தாயின் மீது கொண்ட அன்பிற்கு இதைவிட மிகச்
சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. ஆகவே, நாமும் நமக்காக
பலவேறு தியாகங்களை மேற்கொள்ளும் நம் பெற்றோருக்காக தாய்க்காக
தியாகங்களை மேற்கொள்வோம். அது மட்டுமல்லாமல் மரியன்னையைப்
போன்று இறைத் திருவுளம் நிறைவேற துன்பங்களை ஏற்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
மரியன்னையின் துயரங்கள் / வியாகுல அன்னையின் விழா
1808 ஆம் ஆண்டில் ஒருநாள் திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் திருத்தந்தையாக
பணியாற்றிக் கொண்டிருந்தபோது அலெக்ஸாண்டர் என்ற மன்னன் திருத்தந்தை
அவர்களை ஒருசில அரசியல் காரணங்களுக்காக கடத்திச் சென்று,
வீட்டுச் சிறையில் வைத்தான். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் திருத்தந்தை
அவர்கள் வீட்டுச் சிறையில் இருந்தார்கள். அக்காலத்தில் அவர் அனுபவித்த
துன்பங்கள் ஏராளம். 1814 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதிதான் மன்னன்
அலெக்ஸ்சாண்டர் திருத்தந்தை அவர்களை விடுதலை செய்து அனுப்பி
வைத்தான்.
திருத்தந்தை அவர்கள் வீட்டுச் சிறையில் இருந்தபோது தான் அனுப்பவித்த
துன்பங்கள், வேதனைகள் எல்லாவற்றையும் அன்னை மரியா தன்னுடைய
வாழ்வில் அனுப்பவித்த துன்பங்களோடு சேர்த்து மரியின் வியாகுலங்கள்
என்று கொண்டாடப் பணித்தார். அவ்வாறு உருவானதுதான் வியாகுல அன்னையின்
விழா.
தொடக்கத்தில் இவ்விழாவனது செப்டம்பர் 18 ஆம் தேதி கொண்டாடப்பட்டு
வந்தது. ஆனால் திருத்தந்தை பத்தாம் பத்திநாதர்தான் இவ்விழாவை
திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவிற்கு அடுத்து கொண்டாடப் பணித்தார்.
ஆம், இன்று நாம் வியாகுல் அன்னையின் விழாவைக்
கொண்டாடுகின்றோம். மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாள் அனுபவித்த
துன்பங்களை, ஆண்டவர் இயேசுவோடு பட்ட பாடுகளை இன்றைய நாளில்
நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.
ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தாயானவள் முக்கியப்பங்கு ஆற்றுகிறாள்.
அதனால்தான் கவிஞன் ஒருவன் இவ்வாறு பாடினான், "அம்மானா சும்மா
இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா" என்று. இது முற்றிலும் உண்மை.
தாய்தான் ஒரு குழந்தையின் வளர்ப்பில், அதனுடைய முன்னேற்றத்தில்
முக்கியப் பங்கு ஆற்றுகிறாள். அந்த வகையில் பார்க்கும்போது ஆண்டவர்
இயேசுவின் வளர்ச்சியில், அவருடைய முழு மனித முன்னேற்றத்தில் மரியாளின்
பங்கு மிக முக்கியமானது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
அன்னை மரியாள் மீட்புத் திட்டத்தில் பங்குகொண்டதற்காக அனுபவித்த
துன்பங்கள் ஏராளம். பல துன்பங்களை நாம் சொல்லிக்கொண்டே
போனாலும் திருச்சபை ஏழு என்று வரிசைப்படுத்தி இருக்கிறது. அவையாவன:
1. சிமியோனின் இறைவாக்கு, 2. குழந்தை இயேசுவை ஏரோது மன்னனிடமிருந்து
காப்பாற்ற எகிப்துக்கு தூக்கிக்கொண்டு ஓடுதல், 3. இயேசு
கோவிலில் காணாமல் போதல், 4. சிலுவை சுமந்துகொண்டு சென்ற இயேசுவை
வழியில் சந்தித்தல், 5. இயேசு சிலுவையில் அறியப்படல், 6. இயேசு
தன்னுடைய மடியில் சுமத்தல், 7. இயேசுவை கல்லறையில் அடக்கம்
செய்தல்.
இயேசுவுக்காக, இறையாட்சிப் பணியில் பங்கெடுத்ததற்காக மரியா அனுபவித்த
துன்பங்கள் இவை மட்டுமில்லை இன்னும் ஏராளம். தன்னுடைய மகனை மக்கள்
அனைவரும் பேய்பிடித்தவன், பெருந்தீனிக்காரன், பாவிகளின் நண்பன்
என்று விமர்சனம் செய்யும்போது மரியாள் அதிகமான துன்பங்களை அனுபவித்திருக்கலாம்.
ஆனாலும் அவள் கடவுளுக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான்
கடவுள் அவரை இறைவனின் தாயாக உயர்த்தினார்.
நம்முடைய குடும்பங்களிலும் கூட பிள்ளைகளின் வளர்ச்சிக்காக, அவர்களின்
முன்னேற்றத்திற்காக நம்முடைய தாய்மார்கள் அனுபவிக்கும் துன்பங்கள்,
சிலுவைகள் ஏராளம். எனவே அவர்களை இந்த நாளில் சிறப்பாக
நினைவுகூர்ந்து பார்த்து, அவர்களுக்காக மன்றாடுவது இன்னும்
பொருத்தமாக இருக்கும்.
மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய
தாயைக் குறித்துச் சொல்லும்போது சொல்வார், "சிறுவயதில் பள்ளிக்கூடத்தில்
இருந்த ஆசிரியர்கள் என்னை ஒன்றுக்கும் உதவாதவன், மக்கு என்று
சொல்லி, வெளியே அனுப்பியபோது என்னுடைய தாய்தான் என்னை சிறப்பாக
வளர்த்தெடுத்தாள்; அறிவையும், ஆறுதலையும் தந்து என்னை ஒரு தலைசிறந்த
விஞ்ஞானியாக உருவாக்கினாள். அதற்காக அவள் பட்ட கஷ்டங்கள் ஏராளம்,
துன்பங்கள் ஏராளம். அவள் மட்டும் இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை"
என்று.
ஆம், தாமஸ் ஆல்வா எடிசனுடைய முன்னேற்றத்தில் அவளுடைய தாயானவள்
முக்கியப் பங்காற்றியதுபோல இன்னும் எத்தனையோ மனிதர்களுடைய வளர்ச்சியில்
தாயானவள் சிறப்பான ஓர் இடம் வகிக்கிறாள் என்று சொன்னால் அது
மிகையாகாது. எனவே மீட்புத் திட்டத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த
மரியன்னையின் தியாகங்களை எண்ணிப் பார்ப்போம். அவரைப் போன்று இந்த
மானுட சமுதாய முன்னேற்றத்திற்காக நாம் துன்பங்களை துணிவுடன் ஏற்க
முன்வருவோம்.
நிறைவாக வியாகுல அன்னையால் நடந்த ஓர் அற்புதத்தை தியானித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
தூய சார்லஸ் பொரோமேயு மிலன் நகரில் ஆயராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி.
1583 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி சார்லஸ் பொரோமேயுவின் ஆளுகைக்கு
உட்பட்ட ஓர் ஆலயத்தில் இரண்டு விவசாயிகள் வழிபடச் சென்றார்கள்.
அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த போது மரியன்னியின் சிரூபத்திலிருந்து
கண்ணீர் வழிந்து வந்தது. சிறுது நேரத்தில் அது இரத்தமாக மாறியது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த விவசாயிகள் இருவரும் ஓடிப்போய்
அதை மக்களிடத்தில் சொன்னார்கள். மக்களும் அந்த அற்பத்தை வந்து
பார்த்தார்கள். அப்படிப் பார்க்க வந்தவர்களில் ஒருவர் மரியின்
கண்ணிலிருந்து வரும் இரத்தம் உண்மைதானா என்று சோதித்து அறிய
விரும்பி, இறுதியில் அது உண்மையெனக் கண்டுகொண்டார். பின்னர் இச்செய்தி
ஆயரின் செவிகளை எட்டியது. அவரும் கார்லோ பாஸ்கேப் என்பவற்றின்
தலைமையில் ஒரு தனிக் குழுவை அமைத்து, அது உண்மைதானா? என்று கண்டறியச்
சொன்னார். அந்த குழுவும் தங்களுடைய சோதனையின் முடிவில் உண்மையென
அறிவித்தது. இதனால் ஆயர் அவர்கள் 'வியாகுல அன்னைக்கு அந்த இடத்தில்
ஆலயம் கட்டத் தொடங்கினார். இப்படித்தான் வியாகுல அன்னையின் பக்தி
படிப்படியாகப் பரவியது.
எனவே, வியாகுல அன்னையின் விழாவைக் கொண்டாடும் நாம் அந்த அன்னையைப்
போன்று இறைவனுக்காகத் துன்பங்களைத் துணிவுடன்
தாங்கிக்கொள்வோம், இறைவனின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள்
பெறுவோம். - Fr Palay Mariaantonyraj, Palayamkotai. 2016
மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 15) 2015
மரியன்னையின் துயரங்கள்
பத்துவயதுச் சிறுவன் ஒருவன் தன்னுடைய தாயின் அருகில் அமர்ந்துகொண்டு,
அவளது முகத்தையே பார்த்துக்கொண்டு சொன்னான், "அம்மா இந்த உலகத்தில்
இருக்கக்கூடிய எல்லா முகங்களையும்விட உங்கள் முகம் மிகவும் அழகாக
இருக்கிறது". தாய் அதைக்கேட்டு உள்ளுக்குள்
சிரித்துக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து, அவன் தன்னுடைய
தாயின் கைகளைப் பார்த்துத் திடுக்கிட்டான். ஏனெனில் அவை பார்ப்பதற்கே
விகாரமாக இருந்தன. உடனே அவன் தன் தாயிடம், "இந்த உலகத்தில் இவ்வளவு
மோசமான கைகளைப் பார்த்ததில்லை" என்றான். இதைகேட்டு தாய் ஒருநிமிடம்
நொறுங்கிப் போனாள்.
அந்நேரத்தில் தூரத்திலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக்
கொண்டிருந்த அவனுனது தந்தை, அவனைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்
ஒரு கதை சொன்னார், "அன்பு மகனே! ஒரு காலத்தில் ஒரு அம்மாவும்,
அப்பாவும், அவர்களுடைய குழந்தையும் ஒரு சிறு குடிசையில்
வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் குழந்தையை தொட்டலில் தூங்கவைத்துவிட்டு,
அம்மா வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது
திடிரென்று வீட்டில் தீப்பற்றிக்கொள்ள அவள் என்ன செய்வதென்று
தெரியாமால் திகைத்து நின்றாள். பின்னர் தன்னுடைய உயிர்
போனாலும் பரவாயில்லை, உள்வீட்டில் தொட்டிலில் தூங்கும் தன் மகனை
எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்று ஓடினாள். அதற்குள் தீ
தொட்டிலில் பரவிவிடவே, தன்னுடைய இரண்டு கைகளால் தீயை அடித்து
அணைத்துவிட்டு தொட்டிலில் இருந்த தன்னுடைய குழந்தையைத்
தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவந்தாள். இதனால் அந்தத் தாயின் கைகள்
இரண்டும் கருகிப் போயின" என்றார்.
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன்,
"தன்னுடைய உயிரையே பணையம் வைத்து, கைகளையும் கருகவிட்ட அந்தத்தாய்
உண்மையிலே பெரியவள்தான்" என்றான். அதற்கு அவனுடைய தந்தை,
"அந்தத் தாய் வேறுயாருமல்ல, உன்னுடைய அம்மாதான்" என்றான்.
உடனே சிறுவன் ஓடோடிபோய், அம்மாவைக் கட்டி அணைத்து, அவளுடைய கைகளில்
முத்தமிட்டு, "இந்த உலகத்தில் இருக்கக்கூடிய எல்லாக் கைகளை விடவும்,
இந்தக் கைகள் மிகவும் அழகானவை" என்றான்.
அன்னை என்பவள் பிள்ளைகளுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவள்
என்பதைத்தான் இந்த நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
இன்று திருச்சபையானது மரியன்னையின் துயரங்களை - வியாகுல அன்னையின்
நினைவுநாளைக் - கொண்டாடுகிறது. "பிள்ளைகளுக்காகத் தாய்
செய்யும் தியாகத்தை இத்தகையதென்று எழுத்தால் எழுத முடியாது என்பார்"
திரு.வி.க. அவர்கள். ஆம், ஒரு குழந்தையின் முன்னேற்றத்திற்காக
தாய் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம். அதற்கு மரியன்னையும்கூட
விதிவிலக்கல்ல.
இயேசுவை ஒரு முழுமனிதனாக வளர்த்தெடுப்பதில் மரியாள் மிகபெரிய
பங்காற்றியிருக்கிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது. அதற்காக
அவர் அனுபவித்த துன்பங்கள் அதிகம்; கொடுத்த விலை அதிகம்.
மரியாள் இயேசுவுக்காக பல்வேறு துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த
போதிலும் திருச்சபை ஏழு துன்பங்களை வியாகுலங்களைப் - பட்டியலிடுகிறது.
அவையாவன 1. சிமியோனின் "உள்ளத்தை ஊடுருவும்" இறைவார்த்தை, 2.எகிப்துக்கு
தப்பியோடல், 3. இயேசு கோவிலில் காணாமல் போதல், 4.சிலுவை சுமந்து
சென்ற இயேசுவை சந்தித்தல், 5. இயேசு சிலுவையில் அறையப்படல், 6.இறந்த
இயேசு உடலை மடியில் வைத்தல், 7. இயேசுவை கல்லறையில் அடக்கம்
செய்தல். இதுபோன்ற தருணங்களில் எல்லாம் மரியாளின் உள்ளத்தை
நிச்சயம் ஒரு வாள் ஊடுவியிருக்கலாம். ஆனால் மரியாள் தான் பட்ட
துன்பங்களை எல்லாம் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில் படிக்கின்றோம், "இயேசு இறைமகனாக இருந்தும்,
துன்பங்களில் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்" என்று.
மரியாளும்கூட தனது துன்பங்களில் வழியாக தந்தைக் கடவுளின் இறைத்திருவுளத்திற்கு
கீழ்படிந்து நடக்கிறார். அவரது அன்புக்கு உரியவராகிறார்.
இறைவழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவருமே நமக்கு வரும் துன்பங்களை
துணிவோடு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் துன்பம் இல்லை
என்றால் இன்பம் இல்லை. சிலுவை இல்லை என்றால் மீட்பு இல்லை.
ஆகையில் மரியாளைப் போன்று துன்பனளைத் துணிவோடு ஏற்போம். இறையருள்
பெறுவோம்.
Fr Palay Mariaantonyraj, Palayamkotai
|