|
|
|
|
|
பொதுக்காலம்
23ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 15-17
அன்பிற்குரியவர்களே, பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு
வந்தார்'. - இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத்
தக்கது. - அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான். ஆயினும் கடவுள்
எனக்கு இரங்கினார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை
கொள்ள இருப்போருக்கு நான் முன்மாதிரியாய் விளங்க வேண்டும் என்பதற்காக
முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்.
அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத, எக்காலத்துக்கும் அரசராய்
இருக்கின்ற ஒரே கடவுளுக்கு என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக!
ஆமென்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
113: 1-2. 3-4. 5-7 (பல்லவி: 2)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் பெயர் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக!
1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப்
போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும்
எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி
3 கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக!
4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்
விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி
5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய
உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும்
குனிந்து பார்க்கின்றார்; 7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர்
தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து
கைதூக்கி விடுகின்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக்
கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள்
அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை
'ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன் கூப்பிடுகிறீர்கள்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
6: 43-49
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "கெட்ட கனி
தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு
மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.
ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை;
முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச்
சேர்ப்பாருமில்லை. நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து
நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை
எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.
நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை,
'ஆண்டவரே, ஆண்டவரே' என ஏன்
கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு,
அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு
எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின்மீது அடித்தளம்
அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப்
பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை;
ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.
நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல்
மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல்
மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 6: 43-49
இறைவார்த்தை என்பது கேட்பதற்கு
மட்டுமல்ல,வாழ்ந்து காட்டுவதற்கும்தான்
நிகழ்வு
அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவத் தளபதியாக இருந்தவர் ஜோசப்
தர்ரன் (Joseph Darran). அவர்க்குக் கடவுள் நம்பிக்கையே
கிடையாது. அவரிடம் ஒரு பெரியவர் வேலைபார்த்து வந்தார். அவர் பெயர்
ரெய்வி. ரெய்வி நேர்மையான ஒரு பணியாளர். அவருடைய வாழ்க்கையைப்
பார்த்துவிட்டு ஜோசப் தர்ரன் மிகவும் வியந்து நின்றார். ஒருநாள்
ஜோசப் தர்ரன் தன்னிடம் வேலை பார்த்துவந்த பெரியவரைக்
கூப்பிட்டு, 'ஐயா! என்னிடம் நீங்கள் பல ஆண்டுகளாக வேலை
பார்த்து வருகிறீர்கள். உங்களுடைய நேர்ந்மையான வாழ்க்கையைப்
பார்த்து மிகவும் வியந்து நிற்கின்றேன். அதிலும் குறிப்பாக இத்தனை
ஆண்டுகள் நீங்கள் என்னிடம் வேலைசெய்திருக்கின்றீர்கள். ஒருமுறை
கூட என்னிடம் எதையும் திருடியதில்லை. அது எப்படி உங்களால்
முடிந்தது?" என்று கேட்டார்.
"ஐயா! நான் ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவன். எங்களுடைய சமயம்
'யாருடைய பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது... திருடவும் கூடாது'
என்று சொல்லியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், 'திருடியதை உரியவரிடம்
திருப்பித் தராமல் மன்னிப்புக் கிடையாது' என்றும்
சொல்லியிருக்கின்றது. அப்படியிருக்கும்போது நான் திருடுவதால்
என்ன பயன்? அதனால்தான் நான் திருடவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல்
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்" என்றார் பெரியவர். இதைக் கேட்டு
அந்த இராணுவத் தளபதி மிகவும் வியந்து நின்றார்.
இதற்குப் பின்பு சில ஆண்டுகள் கழித்து, பெரியவர் தன்னுடைய உடல்நலம்
கருதி பணியிலிருந்து ஓய்வுபெற்று தன்னுடைய குடும்பத்தோடு நிம்மதியாக
வாழ்ந்துவந்தார். ஒருநாள் அவர் செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தபோது,
அதில் வந்த ஒரு செய்தியைக் கண்டு அவர் ஆச்சரியட்டார். அந்தச்
செய்தித்தாளில் வந்த செய்தி இதுதான்: "மொலாக்காய்த் தீவில் உள்ள
தொழுநோயாளர்கள் மத்தியில் பணிசெய்து வந்த தமியான், தொழுநோயால்
பாதிக்கப்பட்டு இறந்துபோனதால், அவருடைய இடத்தில் அமெரிக்க ஐக்கிய
நாட்டின் இராணுவத் தளபதியும் தற்போது குருவானவருமான ஜோசப் தர்ரன்
பணிசெய்ய உள்ளார்."
கடவுள் நம்பிக்கையில்லாத ஜோசப் தர்ரன் குருவானவரானதற்கும் பலரும்
பணிசெய்வதற்குத் தயங்குகின்ற தொழுநோயாளர்கள் மத்தியில் பணிசெய்யச்
சென்றதற்கும் ரெய்வி என்ற அந்தப் பெரியவரின் எடுத்துக்காட்டான
வாழ்க்கைதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. ரெய்வி என்ற
அந்தப் பெரியவர் இறைவார்த்தையைக் கேட்பவராக மட்டும் இருந்துவிடாமல்,
அதை வாழ்ந்து காட்டுபவராக இருந்தார். அதனால்தான் அவருடைய
வாழ்க்கையைப் பார்த்துவிட்டு ஜோசப் தர்ரன் என்ற அந்த இராணுவத்
தளபதி குருவானவராகவும் பின்னர் தொழுநோயாளர் நடுவில் பணிசெய்பவராகவும்
மாறினார்.
நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையைக் கேட்பவராக மட்டும் இருந்துவிடாமல்,
அதைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது இந்த சமூகத்தில் எத்தகைய
மாற்றங்கள் ஏற்படுகின்றன என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த
நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய இறைவார்த்தையும் இதே
செய்தியைத்தான் நமக்குக் எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக்
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவார்த்தையைக் கேட்பதோடு திருப்திப்பட்டுக்கொள்ளகூடியவர்கள்
நற்செய்தியில், ஆண்டவர் இயேசு இரண்டு வகையான மனிதர்களைக்
குறித்து பேசுகின்றார். அதில் முதலில் வருகின்றவர்கள், இறைவார்த்தையைக்
கேட்பதோடு நின்றுவிடக்கூடியவர்கள். எபிரேயர்க்கு எழுதப்பட்ட
திருமடலின் அதன் ஆசிரியர் கூறுவார், "கடவுளின் வார்த்தை உயிருள்ளது;
ஆற்றல் மிக்கது." (எபி 4:12) அப்படிப்பட்ட இறைவார்த்தையைக்
கேட்பதோடு நிறுத்திக்கொள்ளக்கூடியவர்கள் இன்றைக்குப் பலர் இருக்கின்றார்கள்.
இவர்களுடைய எண்ணமெல்லாம், 'இறைவார்த்தையைக் கேட்டுவிட்டோம் அதோடு
நம்முடைய சமயக்கடமை முடிந்துவிட்டது' என்பதாகவே இருக்கின்றது.
இறைவார்த்தை ஆற்றல் வாய்ந்ததாக, உயிருள்ளதாக இருக்கின்றதென்றால்,
அதைக் கேட்கக்கூடிய ஒவ்வொருவரும் செயலில் இறங்கவேண்டும். இறைவார்த்தையைக்
கேட்டுவிட்டு செயலில் இறங்கவில்லை என்றால், அவர்கள் பெயரளவுக்குக்
கிறிஸ்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அல்லது மணல்மீது
வீட்டைக் கட்டிய அறிவிலியைப் போன்றவர்களாய்த்தான் இருக்கின்றார்கள்
என்று சொல்லவேண்டும்.
இறைவார்த்தையைக் கேட்பதோடு மட்டுமல்லாமல், அதன்படி வாழ்கின்றவர்கள்
நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது வகையினர். இறைவார்த்தையைக்
கேட்டு அதன்படி வாழக்கூடியவர்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவார்த்தையின்
படி வாழ்கின்றபோது, எத்தகைய சவால்கள் வந்தாலும் உறுதியாக இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களை இயேசு கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய
அறிவாளிக்கு ஒப்பிடுகின்றார்கள். இயேசுவின் வழியில் நடக்கின்ற
ஒவ்வொருவரும் இறைவார்த்தையைக் கேட்டு, அதில் உறுதியாக இருக்கவேண்டும்
என்பதுதான் இயேசுவின் திருவுளமாக இருக்கின்றது. ஆனால், நடைமுறைதான்
வேறொன்றாக இருக்கின்றது.
யாரெல்லாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி தங்களுடைய வாழ்வை
அமைத்துக்கொள்கின்றார்களோ, அவர்கள் ஆண்டவரில் உறுதியாக இருப்பதோடு
மட்டுமல்லாமல், அடுத்தவர்க்கும் கலங்கரை விளக்காக இருக்கின்றார்.
அதனால் நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நம்முடைய
வாழ்வை அமைத்துக் கொள்பவர்களாக மாறுவோம்.
சிந்தனை
'இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ளவேண்டாம்.
அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்' (யாக் 1: 22) என்பார்
புனித யாக்கோபு. ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
1 திமொத்தேயு 1: 15-17
"பாவிகளைத் தேடி மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார்"
நிகழ்வு
ஒரு மாலை வேளையில் ஒரு சிறுமியும் அவளுடைய தோழியும் கண்ணாம்பூச்சி
விளையாடிக்கொண்டிருந்தார்கள். நேரம் போவது தெரியாமல் மிகவும்
விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த அந்த விளையாட்டில், சிறுமி
ஒளிந்துகொள்ளும் முறை வந்தபோது, யார்க்கும் தெரியாத ஒரு மறைவான
இடத்திற்குச் சென்று ஒளிந்துகொண்டாள்.
ஐந்து நிமிடங்கட்கும் மேல் ஆனது. அவளுடைய தோழி அவளைத் தேடிவரவில்லை;
பத்து நிமிடங்கள் ஆனது. அப்பொழுதும் அவளுடைய அவளைத் தேடிவரவில்லை.
'என்னதான் ஆயிற்று' என்று அவள் அந்த மறைவான இடத்திலிருந்து
வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, அவளுடைய தோழி அங்கு
இல்லை என்பது. 'போறதுதான் போகிறாள், விளையாட்டு முடிந்துவிட்டது
என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே... எதற்காக
இவள் இப்படிச் செய்தாள்' என்று அவள் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினாள்.
இவ்வாறு அவள் அழுவதைத் தன்னுடைய வீட்டின் பால்கனியிலிருந்து
பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர் அவள் அருகில் வந்து அவளைத்
தேற்றினார். பின்னர் அவர் அவளிடம், "உனக்கு ஏற்பட்ட இந்த வேதனைதான்
ஆண்டவர்க்கும் ஏற்பட்டிருக்கும்!. நீ எப்படி உன்னுடைய தோழி உன்னைத்
தேடி வந்து, உன்னைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தாயோ,
அதுபோன்றுதான் ஆண்டவரும் தன்னுடைய மக்கள் தன்னைத் தேடிவந்து,
தன்னோடு ஒன்றித்திருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால்,
அவர்கள் அவரைத் தேடிவராமல், பாவ வழியில் சென்றதால், அவரே அவர்களைத்
தேடிச் சென்றார்" என்றார்.
தொடர்ந்து அவர் அந்தச் சிறுமியிடம், "நீயும் உன்னுடைய தோழி உன்னைத்
தேடிவராமலும் உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலும் வீட்டிற்குச் சென்றதற்காக
அவளோடு பேசாமல் இருந்துவிடாதே! அவளைத் தேடிச் சென்று, அவளோடு
நட்போடு இரு" என்றார். பெரியவர் தன்னிடம் சொன்னதே போன்றே அந்தச்
சிறுமி தன்னுடைய தோழி செய்த தவறினை மன்னித்து, அவளோடு நட்போடு
இருக்கத் தொடங்கினாள்.
ஆண்டவர் தன்னைவிட்டு விலகிச் சென்றவர்களை அப்படியே விட்டுவிடவில்லை.
மாறாக, அவர்களைத் தேடிச் சென்று மீட்டார். இத்தகைய உண்மையை எடுத்துச்
சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. முதல் வாசகத்தில்,
ஆண்டவராகிய இயேசு பாவியாகிய தன்னை மீட்டதைக் குறித்துப் புனித
பவுல் குறிப்பிடுகின்றார். அதைப் பற்றி இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
(பாவியாகிய) பவுலை மீட்ட ஆண்டவர் இயேசு
முதல் வாசகத்தில் புனித பவுல், 'பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு
இவ்வுலகிற்கு வந்தார்' என்ற கூற்றினைச் சொல்லிவிட்டு, அக்கூற்று
தன்னளவில் உண்மை என்று குறிப்பிடுகின்றார்.
ஒருகாலத்தில் பவுல், கிறிஸ்தவர்களைப் பின்பற்றி வந்தவர்களை
சிறைப்பிடித்தும் அவர்களைச் சித்ரவதை செய்தும் வந்தார். இவ்வாறு
அவர் தான் இயேசுவைத் துன்புறுத்துகின்றோம் (திப 9: 5) என்ற உண்மை
தெரியாமல் குற்றம், பாவம் செய்து வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில்
அவர் தமஸ்கு நகர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது ஆண்டவர்
அவரைத் தடுத்தாட்கொண்டு, அவரை மீட்கின்றார் அல்லது அவரைத் தன்னுடையை
பணியைச் செய்ய அழைக்கின்றார். இதற்குப் பின்பு கிறிஸ்துவால்,
தேர்ந்தெடுக்கப்பட்டு, மீட்கப்பட்ட பவுல் கிறிஸ்துவுக்காகத் தன்னுடைய
வாழ்வை அர்ப்பணித்து வாழத் தொடங்குகின்றார்.
பாவிகளை மீட்க வந்த இயேசு
இயேசு இந்த மண்ணுலகிற்கு எதற்காக வந்தார் என்பதை நற்செய்தியின்
பல இடங்களில் காண முடிகின்றது. "நேர்மையாளரை அல்ல, பாவிகளையே
அழைக்க வந்தேன்" (மத் 9: 13) என்ற இறைவார்த்தையிலும்
"இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கின்றார்"
(லூக் 19: 10) என்ற இறைவார்த்தையிலும் இதை நாம் கண்டு கொள்ளலாம்.
இங்கு பாவிகள் என்று இயேசு கூறுவது, இந்த மண்ணுலகில் பிறந்த எல்லாரையும்தான்.
ஏனென்றால், இந்த மண்ணுலகில் பிறந்த எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில்
பாவிகள்தான்; குற்றவாளிதான். அப்படியானால், இயேசு எல்லாரையும்
மீட்பதற்காகவே இந்த மண்ணுலகிற்கு வந்தார் என்று உறுதியாகச்
சொல்லலாம்.
பவுல் தன்னை பவிகளுள் முதன்மையான பாவி என்று உணர்ந்தார். அதனால்
ஆண்டவர்க்கு உகந்தவர் ஆனார். நாம் எப்பொழுது நம்மைப் பாவி என்று
ஏற்றுக்கொண்டு இயேசு தருகின்ற மீட்பினைப் பெற்றுக்கொள்ளப்
போகிறோம்? சிந்திப்போம்.
சிந்தனை
'நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை' (திபா
51: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நம்முடைய
குற்றங்களை உணர்ந்தவர்களாய், ஆண்டவரிடம் சரணாகதி அடைவோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|