|
|
13 செப்டம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
23ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; ஆயினும் அவர் எனக்கு
இரங்கினார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 1-2,12-14
விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம்
மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும்
கிறிஸ்து இயேசுவும் இட்ட கட்டளையின்படி, கிறிஸ்து இயேசுவின்
திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம்
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும்
உரித்தாகுக! எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம்
திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்;
துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன்.
ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால்,
அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில்
ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப்
பெருகியது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
16: 1-2,5. 7-8. 11 (பல்லவி: 5a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம்
"நீரே என் தலைவர்; உம்மையன்றி
வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என்
உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும்
அவரே. பல்லவி
7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட
என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என்
கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே,
நான் அசைவுறேன். பல்லவி
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில்
எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும்
பேரின்பம் உண்டு. பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17b,17a
அல்லேலூயா, அல்லேலூயா! உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் அவர்களை
உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு
வழிகாட்ட இயலுமா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
6: 39-42
அக்காலத்தில் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது: ``பார்வையற்ற
ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும்
குழியில் விழுவரல்லவா? சீடர் குருவை விட மேலானவர் அல்ல. ஆனால்
தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போல் இருப்பர்.
நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல்
உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும்
துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?
உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையையே நீங்கள் பார்க்காமல்
இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், `உம் கண்ணில்
இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்க
முடியும்?
வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை
எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின்
கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண்
தெரியும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 6: 39-42
தீர்ப்பிடுதல் என்னும் பெருங்குற்றம்
நிகழ்வு
அடர்ந்த காடு ஒன்றில் வேடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய
மனைவி அவனைத் அருட்சாதனம்
செய்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த ஓரிரு
மாதங்களிலேயே இறந்துபோனாள். இதனால் அவனே அந்தக் குழந்தையை வளர்த்தெடுக்கவேண்டிய
நிலை ஏற்பட்டது. ஒருசமயம் அவனிருந்த காட்டில் உணவுக்கு
வழியில்லாத ஒரு நிலை வந்தது. இதனால் அவன் பக்கத்துக்
காட்டுக்கு உணவு தேடிச் செல்லவேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டான்.
உணவுதேடிச் செல்லும்போது, தன்னுடைய இரண்டு வயது மகனைக் கையோடு
தூக்கிக்கொண்டு போகமுடியாது என்பதால், என்ன செய்வதென்று யோசிக்கத்
தொடங்கினான். அப்படி அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு
ஒரு யோசனை வந்தது. அந்த யோசனையின் படி அவன் செயல்படத் தொடங்கினான்.
ஆம், அவனிடம் ஒரு நம்பிக்கைக்குரிய நாய் இருந்தது. அந்த நாயின்
பாதுகாப்பில் குசந்தையை விட்டுவிட்டுப் போனால், அது எந்தவோர்
ஆபத்தும் இல்லாமல் குழந்தையைப் பாதுகாத்துக்கொள்ளும் என்று
முடிவுசெய்துகொண்டு, வேட்டைக்குக் கிளம்பிப் போனான். அவன்
வேட்டைக்குக் கிளம்பிப் போகும்போது குளிர் மிக அதிகமாக இருந்ததால்,
மகனை வீட்டுக்குள் வைத்துவிட்டு வெளியே அவனுடைய
'நம்பிக்கைக்குரிய நாயைக்' காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றான்.
பகல் முழுவதும் உணவைத் தேடியலைத்தான். ஓரிடத்தில் அவனுக்கு ஒரு
மான் அகப்படவே அதை அவன் வேட்டையாடி, தன் வீட்டுக்கு கொண்டுவரத்
தொடங்கினான். வழியில் இருட்டிவிடவே, இனிமேலும் தன்னுடைய
வீட்டிற்குப் போவதற்கு வழியில்லை என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்த
ஒரு மரத்தடியில் தூங்கிவிட்டு, பொழுது விடிந்ததும் வீட்டிற்கு
வரத் தொடங்கினான்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவனது நம்பிக்கைக்குரிய நாயின்
வாயில் ஒரே இரத்தம். அவனுடைய குழந்தையை வேறு காணவில்லை. அவன்
ஒரு நிமிடம் திடுக்கிட்டான். 'இந்த நாய்தான் சாப்பிடுவதற்கு ஒன்றும்
கிடைக்கவில்லை என்று நம்முடைய மகனைக் கொன்று தின்றுவிட்டதுபோலும்'
என்று நினைத்துக்கொண்டு, பக்கத்தில் கிடந்த கோடாரியால் நாயை ஒரே
வெட்டு வெட்டிக் கொன்றுபோட்டான். அவன் தன் நாயை வெட்டிக்
கொன்றுபோட்ட மறுகணம், வீட்டின் ஒரு மூலையிலிருந்து அவனுடைய மகனின்
அழுகைச் சத்தம் கேட்டது. அவன் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து
போய் நின்றான்.
மகனின் அழுகைச் சத்தம் வந்த திசையை நோக்கி அவன் நகர்ந்து
போனான். அங்கு அவனுடைய மகன் உடம்பில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல்
பத்திரமாக இருந்தான். 'மகனுடைய உடம்பில் ஒரு சிறு கீறல்கூட இல்லை.
அப்படியானால் நம்முடைய நாயின் வாயெல்லாம் இரத்தம்! அது எப்படி
வந்தது?' என்று அவன் யோசித்துககொண்டே வீட்டுக்கு வெளியில் வந்தான்.
அங்கிருந்த புதரில் ஓர் ஓநாய் உடம்பெல்லாம் இரத்தத்தோடு
செத்துக்கிடந்தது. அதைப் பார்த்த மறுகணம், அவன் பேச்சு மூச்சற்று
நின்றான். 'இந்த ஓநாயிடமிருந்து குழந்தையைக் காப்பாற்றுவதற்குதானோ
நான் வளர்த்த நாயானது இரத்தக் கரையோடிருந்தது!. இந்த உண்மை
தெரியாமல் அநியாயமாக எனது நன்றியுள்ள நாயை இப்படிக்
கொன்றுபோட்டுவிட்டேனே' என்று கதறி அழுதான்.
இந்த நிகழ்வில் வருகின்ற வேடன் எப்படி முழு உண்மையையும் தெரியாமல்,
நன்றியுள்ள நாயைக் கொன்றுபோட்டானோ, அதுபோன்றுதான் இன்று பலர்
ஒருவரைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல், அவரைக்
குறித்துத் தீர்ப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இன்றைய இறைவார்த்தை
அடுத்தவரைக் குறித்துத் தீர்ப்பிடுதல் என்பது எவ்வளவு பெரிய
குற்றம் என்பதை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
தீர்ப்பிடுதல் ஏன் பெருங்குற்றம்
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு தீர்ப்பிடுதல் என்பது மிகப்பெரிய
குற்றம் என்பதை விளக்கும் வகையில், உன் கண்ணில் உள்ள மரக்கட்டையைப்
பார்க்காமல், அடுத்தவர் கண்ணில் உள்ள துரும்பைக் கவனிப்பதேன்?
முதலில் உன் கண்ணில் உள்ள மரக்கட்டயைத் தூக்கி ஏறி, அதன்பிறகு
அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க, எளிதாய்க் கண்தெரியும்
என்கின்றார்.
மரக்கட்டை என்பது அளவில் பெரியது. அவ்வளவு பெரிய தவறை ஒருவர்
தன்னிடம் வைத்துக்கொண்டு, அடுத்தவரிடம் இருக்கும் சிறு தவறைச்
சுட்டிக்காட்டுவது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று
கேட்கின்றார் இயேசு. அடுத்ததாக, இந்த உலகத்தில் யாரும் யாரைக்
குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கையில் அடுத்தவரைக்
குறித்துத் தீர்ப்பிடுவது சரியானதாக இருக்காது. அதனால்
தீர்ப்பிடக்கூடாது என்கின்றார் இயேசு.
பல சமயங்களில் நம்மிடம் இருக்கும் தவறை மறைக்க அடுத்தவருடைய
தவறைப் பெரிதுபடுத்துகின்றோம். மேலும் அடுத்தவரைக் குறித்து
முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலே தீர்ப்பிடுகின்றோம். இது மிகப்பெரிய
தவறு. ஆகவே, இத்தகைய தவறை இனிமேலும் செய்யாமல் இருக்க முயற்சி
செய்வோம்; தீர்ப்பிடாது இருக்கக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
'ஒரு மனிதனின் ஒரு செயலை வைத்துக்கொண்டு அவன் நல்லவன் அல்லது
கெட்டவன் என்று சொல்வது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது'
என்பார் தாமஸ் புல்லர் என்ற எழுத்தாளர். ஆகையால், ஒருவரின் செயலை
வைத்து அவரைத் தீர்ப்ப்பிடுவது சரியானது கிடையாது என்பதாலும்
தீர்ப்பிடும் அதிகாரம் நமக்கு இல்லை, இறைவனுக்கு மட்டுமே இருக்கின்றது
என்பதாலும் யாரையும் தீர்ப்பிடாது வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; ஆயினும் அவர் எனக்கு இரங்கினார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 1-2,12-14
நம்பிக்கைக்குரியவர் என்று கருதி பவுலைத்
திருத்தொண்டில் அமர்த்திய ஆண்டவர்
நிகழ்வு
ஸ்காட்லாந்தில், நாட்டுப்புறத்தில் இருந்த ஒரு பங்கில் வயதான
குருவானவர் ஒருவர் பணிசெய்து வந்தார். அவர் அந்தப் பங்கில்
முப்பது ஆண்டுகட்கும் மேலாகப் பணிசெய்துவந்தார். 'இத்தனை ஆண்டுகள்
இந்தப் பங்கில் பணிசெய்து என்ன பயன்...? சொல்லிகொள்கின்ற
மாதிரி ஒருவரைக்கூட என்னால் ஆண்டவர் இயேசுவுக்குள் கொண்டுவரவில்லியே
மனமாற்றம் நிகழவில்லையே' என்ற வருத்தம் அவர்க்கு இருந்துகொண்டே
இருந்தது
இதற்கிடையில் ஒருநாள் அவரைப் பார்ப்பதற்கு பக்கத்து நகரில் மறைப்பணி
செய்துவந்த ஒரு பிரபல மறைப்பணியாளர் வந்தார். அவர் வயதான
குருவானவரிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தார். இருவரும்
பேசிக்கொண்டிருக்கையில், வயதான குருவானவர் அவரிடம், "இத்தனை ஆண்டுகள்
இந்தப் பங்கில் பணிசெய்தும் ஒருவரைக் கூட ஆண்டவர்க்குள் கொண்டு
வர முடியவில்லையே" என்று மிகவும் வேதனைப்பட்டார்.
அவருடைய வேதனையை உணர்ந்தவராய், வந்திருந்த அந்த மறைப்பணியாளர்
அவரிடம், "சுவாமி! இருபது ஆண்டுகட்கு முன்பாக ஒரு பெண்
கோயிலில் நடைபெறும் திருவழிபாட்டில் கலந்துகொண்டுவிட்டு உங்களைப்
பார்க்க வருவாரே... அவரை உங்கட்கு நினைவிருக்கின்றதா...?" என்று
கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டு வயதான குருவானவர் யோசிக்கத்
தொடங்கினார். "ம்ம்ம் நினைவிருக்கின்றது... அவர்க்கு ஒரு தம்பி
உண்டு, அவன் பயங்கரக் குடிகாரன் என்று அவர் சொன்னதுகூட
நினைவிருக்கின்றது" என்றார். "அந்தப் பெண்ணின் குடிகாரத் தம்பி
வேறு யாருமல்ல நான்தான். கோயிலுக்கு வந்து திருவழிபாட்டில் கலந்துகொள்ளும்
என் சகோதரி, நீங்கள் ஆற்றிய மறையுரைக் கேட்டுவிட்டு, அப்படியே
என்னிடம் வந்து சொல்லி, நான் மனம்மாறுவதற்கு வழிவகை செய்தார்.
உண்மையில் நான் இப்பொழுது எல்லாராலும் மதிக்கப்படக்கூடிய, உயர்வாக
நினைப்படக்கூடிய ஒரு குருவாக இருக்கின்றேன் என்றால், அதற்கு
நீங்களும் உங்களுடைய மறையுரைதான் காரணம்."
இவ்வாறு பேசிவிட்டு அந்த மறைப்பணியாளர் தொடர்ந்து அவரிடம்
பேசினார்: "'யாரையும் ஆண்டவர் இயேசுவுக்குள் கொண்டுவர முடியவில்லையே'
என்று இனிமேலும் நீங்கள் நினைக்காதீர்கள். மிகப்பெரிய குடிகாரனும்
பாவியுமாகிய என்னையே நீங்கள் மாற்றி ஆண்டவர்க்குள் கொண்டுவந்திருகிறீர்களே!
இதைவிட வேறென்ன வேண்டும்?"
எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்த வயதான
குருவானார், "இத்தனை நாள்களும் யாரையும் ஆண்டவர்க்குள் கொண்டுவர
முடியவில்லேயே' என்று எனக்கிருந்த வருத்தம் இப்பொழுது உன்னால்
நீங்கியது. ஆண்டவர்க்கு நன்றி" என்று சொல்லி அவரை வாழ்த்தி அனுப்பி
வைத்தார்.
ஒருகாலத்தில் ஒரு பெரிய குடிகாரராக இருந்த அந்த இளம் மறைப்பணியாளரை
ஆண்டவர் வயதான குருவானவர் வழியாக தொட்டு, அவரைத் தன்னுடைய
திருப்பணியில் அமர்த்துவதற்குத் திருவுளம் கொண்டார். அதுபோன்று,
திருஅவையை மிகவும் துன்புறுத்திய (பாவியாகிய) பவுலை ஆண்டவர் இயேசு
தன்னுடைய திருப்பணியில் அமர்த்தத் திருவுளம் கொண்டதைக்
குறித்து இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம் அதைப் பற்றி
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருஅவைத் துன்புறுத்திய பவுலைத் திருஅவைக்காகத் துன்பங்களை ஏற்கப்
பணித்த இயேசு
திமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் தன்னிலை விளக்கத்தை அளிக்கின்றார்.
கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்த காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களைப்
பிடித்துச் சிறையில் அடைப்பதும் அவர்களைக் கடுமையாகச் சித்ரவதை
செய்தும் கொல்வதுமாக இருந்தார் பவுல். அவரை ஆண்டவர் இயேசு தடுத்தாட்கொண்டு
(திப 9) தன்னுடைய திருப்பணியில் அமர்த்தினார். இது குறித்துப்
பேசுகின்ற பவுல், ஆண்டவர் என்னைத் தன்னுடைய திருப்பணியில் அமர்த்தியதற்கு
முக்கியமான காரணம், 'நான் நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன்' என்று
அவர் கருதியதால்தான் என்கின்றார்.
பவுலை ஆண்டவர் தடுத்தாட்கொண்ட பிறகு அவர்க்காகவும் அவருடைய
திருஅவைக்காகவும் அதிலும் குறிப்பாக புறவினத்து மக்கட்காகத்
துன்புறவும் தொடங்கினார் (திப 22:21ff). இவ்வாறு அவர் ஆண்டவர்க்கு
நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.
நம்முடைய செயலினால் அல்ல, தம்முடைய அருளால் மீட்கும் இறைவன்
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் சொல்கின்ற, திருஅவைத்
துன்புறுத்திய தன்னை ஆண்டவர் தடுத்தாட்கொண்டு, அவருடைய திருப்பணியில்
அமர்த்தினார் என்று சொல்கின்ற வார்த்தைகள் நமக்கு ஓர் உண்மையை
மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. அது என்னவென்றால், நாம்
மீட்படைவது நம்முடைய செயல்களால் மட்டுமல்ல, ஆண்டவருடைய அருளாலும்தான்
என்பதாகும். ஆண்டவர் தன்னுடைய அருளால் பவுலைத் தேர்தெடுத்தார்;
தம்முடைய கருவியாகப் பயன்படுத்தினார். நாமும் கூட நம்முடைய செயல்களால்
அல்ல, அவருடைய அருளால்தான் மீட்கப்படுகின்றோம் என்பது உண்மை.
இப்படியிருக்கையில் நாம் எதைக்குறித்தும் பெருமை பாராட்டத் தகுதியற்றவர்கள்
என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.
சிந்தனை
'நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத்
தேர்ந்துகொண்டேன்' (யோவா 15: 16) என்பார் இயேசு. ஆகையால், தன்னுடைய
அருளால் நம்மைத் தேர்ந்துகொண்ட இயேசுவுக்கு, புனித பவுலைப்
போன்று நம்பிக்கைக்குரியவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|