Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     11 செப்டம்பர்  2019  
                                    பொதுக்காலம் 23ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரியவற்றை ஒழித்துவிடுங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-11

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவைபற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.

ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக் கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன. இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள்.

ஆனால் இப்பொழுது நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றிவிடுங்கள். பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள்.

ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்.

புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 145: 2-3. 10-11. 12-13ab (பல்லவி: 9a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ab உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 6: 23ab

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
  ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.

இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள்.

இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள்.

இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரியவற்றை ஒழித்துவிடுங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-11

"மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்"

நிகழ்வு

அது ஒரு கிராமத்துப் பங்கு. அந்தப் பங்கில் இளங்குரு ஒருவர் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்தார். அந்தப் பங்கில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். ஆனால், கோயிலுக்கு வெகு சொற்பமானவர்கள்தான் வந்தார்கள். இது அந்த இளங்குருவிற்கு மிகுந்த வேதனையைத் தந்தது. ஆதலால், அவர் பங்கு மக்களை கோயிலுக்கு வரவைப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தார்; திருப்பலியின் முக்கியத்துவத்தையும் நற்கருணை விருந்தில் கலந்துகொள்வதால் கிடைக்கக்கூடிய ஆசியையும் அவர்கட்கு எடுத்துச் சொன்னார். அப்படியிருந்தும் மக்கள் கோயிலுக்கு வருவதாக இல்லை.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த இளங்குரு தன்னுடைய ஆன்ம குருவிடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார். 'நான் சொல்வது போன்று செய்... நிச்சயம் கோயில் நிரம்பி வழியும் அளவுக்கு மக்கள் வருவார்கள்" என்று ஆன்மகுரு அந்த இளங்குருவிற்கு ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தார்.

இதற்குப் பின்பு வந்த ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது அவர் மக்களிடம், "அன்பார்ந்த மக்களே! ஒரு முக்கியமான விசயத்தை உங்களிடம் நான் சொல்லப்போகிறேன். இனிமேல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து முழுத் திருப்பலி காண்பவர்கட்கு பத்துக் கிலோ கோதுமை பரிசாகத் தரப்படும்" என்றார். இதைக் கேட்டு மக்கள் 'முழு திருப்பலி காண்பதால் பத்துக் கிலோ கோதுமையா...? நன்றாக இருக்கின்றதே! என்று அடுத்த ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலிக்கு கோயில், அதை ஒட்டியிருந்த மண்டபம் நிரம்பி வழியும் அளவுக்கு வந்தார்கள்.

அப்பொழுது பங்குத்தந்தை அவர்களைப் பார்த்துச் சொன்னார்: "இத்தனை நாள்களும் பரலோக இராஜ்ஜியம் என்ற விண்ணகத்தைக் குறித்துப் போதித்துக்கொண்டிருந்தேன்... அப்பொழுதெல்லாம் வராத நீங்கள், பத்துக் கிலோ கோதுமை பரிசாகத் தரப்படும் என்று சொன்னதும் இப்படிக் கோயில் நிரம்பி வழியும் அளவுக்கு வந்திருக்கிறீர்களே! இப்பொழுது உங்களுடைய நாட்டம் படைத்தவர்மீது அல்ல, பத்துக்கிலோ கோதுமையில்தான் இருக்கின்றது என்று நன்றாகப் புரிகின்றது. கிறிஸ்துவர்களாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் இருப்பதற்கு நீங்கள் வெட்கப்படவேண்டும்." இப்படிச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அவர் அவர்களிடம், "முதலில் ஆண்டவர்க்கு உரியவற்றையும் மேலுலகு சார்ந்தவற்றையும் நாடுகள். அப்பொழுது எல்லாம் சேர்த்துக் கொடுக்கப்படும்."

பங்குத்தந்தை சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு எல்லாரும் வெட்கித் தலைகுனிந்து நின்றார்கள். அதேநேரத்தில் தங்களுடைய தவறை நினைத்து மனம்வருந்தி, 'இனிமேலும் இப்படிப்பட்ட தவறினைச் செய்ய மாட்டோம்' என்று ஒருமித்த குரலில் உறுதிபூண்டார்கள்.

கிறிஸ்தவர்கள் என்றால், இவ்வுலகு சார்ந்தவர்களாய் வாழக்கூடாது. மாறாக, தங்களுடைய பெயர்க்குக் ஏற்றாற்போல் மேலுலகு சரந்தவர்களாய், ஆண்டவர்க்கு உகந்தவர்களாய் வாழவேண்டும் என்ற அழைப்பினைத் தரும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் பவுல் கொலோசை மக்களைப் பார்த்து, "மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்" என்றோர் அழைப்பைத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


இவ்வுலகு சார்ந்தவற்றை நாடுதலும் அதற்குக் கிடைக்கும் தண்டனைகளும்

புனித பவுல் கொலோசை மக்களிடம், 'நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு நாடுங்கள்' என்று சொல்கின்றாரே, அப்படியானால் கீழுலகு அல்லது இவ்வுலகு சார்ந்தவை எவை, மேலுலகு எவை என்ற தெளிவு நமக்கு இருக்கவேண்டும். இப்பொழுது இவ்வுலகு சார்ந்தவை எவை? அவற்றின் படி நடப்பதால் ஒருவர்க்குக் கிடைக்கும் தண்டனை என்ன? இவற்றைக் குறித்துப் பார்ப்போம்.

புனித பவுல் இவ்வுலகு சார்ந்தவையாக, பரத்தமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு... என்று அடுக்கிக் கொண்டே போகின்றார். இவையும் இவற்றோடு சேர்ந்தவையும் உலகு சார்ந்த வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்க்கை வாழ்வோர் கடவுளின் சினத்திற்கு ஆளாவர் என்கின்றார் பவுல். சோதோம், கொமோராவில் இருந்தவர்கள் இப்படித்தான் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இதனால் அவர்கள் கடவுளின் சினத்திற்கு ஆளானார்கள் (தொநூ 19). நாம் இத்தகையோரைப் போன்று இருக்கின்றோமா? என்று நம்மை நாம் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்ப்பது நல்லது

மேலுலகு சார்ந்தவற்றை நாடுதலும் அதற்குக் கிடைக்கும் வெகுமதியும்

உலகப் போக்கிலான வாழ்க்கையையும் அதனால் விளையும் அழிவுகளையும் குறித்துப் பேசிய புனித பவுல், தொடர்ந்து மேலுலகு சார்ந்த வாழ்க்கையையும் அதனால் ஒருவர் பெறுகின்ற ஆசியையும் குறித்துப் பேசுகின்றார்.

மேலுலகு சார்ந்தவற்றை நாடுதல் என்பதை, புனித பவுல், தூய ஆவியாரின் கனிகளாகச் சொல்கின்ற அன்பு, பரிவு, பொறுமை, நம்பிக்கை, அமைதி, கனிவு... (கலா 5: 22, 23) போன்ற பண்புகளைக் கடைப்பிடித்து, புனித இயல்பை அணிந்துகொண்டு, மறுகிறிஸ்துவாக வாழ்தல் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய வாழ்க்கையை நாம் வாழ்கின்றபோது கடவுளை முழுமையாய் அறிய முடியும் என்கின்றார் அவர். கடவுளை முழுமையாய் அறிதல் என்பது எத்தகைய பெரிய பேறு!. இத்தகைய பேற்றினை நாம் பெற, மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது மிகவும் இன்றியமையாததது.

சிந்தனை

'ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவர்க்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்பொழுது இவையனைத்தும் உங்கட்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நாம் கடவுளுடைய ஆட்சியை, அதாவது மேலுலகு சார்ந்தவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
முதல் ஆண்டு

லூக்கா 6: 20-26

மானிட மகன் பொருட்டு மக்கள் உங்களை இகழும்போது...

நிகழ்வு

ஊர் ஊராகச் சென்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்த இறையடியார் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஓர் ஊரில் போதித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய போதனையைக் கேட்டு ஒருசிலர் கொதித்தெழுந்து, அவர்மீது காரி உமிழ்ந்தார்கள்; தங்களுடைய கைகளில் கிடைத்த கற்கள், மரக்கட்டைகளைக் கொண்டு அவரைக் கடுமையாகத் தாக்கினார்கள்; அவருடைய ஆடையை உரிந்துகொண்டு அவரை அரைநிர்வாணமாக்கினார்கள். இவற்றுக்கு நடுவில் அந்த இறையடியார் சிரித்துக்கொண்டே இருந்தார்.

இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்த பெரியவர் ஒருவர் அவரிடம், "இவர்கள் உங்களை இவ்வளவு தாக்குகின்றார்கள். இந்த இக்கட்டான தருணத்தில் நீங்கள் வணங்கக்கூடிய உங்கள் கடவுள் ஏன் ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டி, உங்களை மீட்கவரவில்லை?" என்று கேட்டார். அதற்கு அந்த இறையடியார், "இப்பொழுதுகூட அவர் அதிசயத்தை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றார். ஆம், இந்த இக்கட்டான வேளையிலும் நான் விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றேனே... அதுவே ஓர் அதிசயம்தான்" என்றார்.

"உங்களுடைய நிலைமையைப் பார்த்தால் பாதாளத்தில் நரகத்தில் இருப்பதைப் போன்று இருக்கின்றது. அப்படியிருக்கையில் விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றீர்கள் என்று சொல்கிறீர்களே... ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?" என்று அந்தப் பெரியவர் கேட்க, பதிலுக்கு இறையடியார், "நான் விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கிறேன் என்று சொன்னேனே, அது வெளிப்புறத்தில் அல்ல, என்னுடைய உட்புறத்தில்... என்னுடைய உள்ளத்தில்" என்றார்.

பெரியவர் தொடர்ந்து அவரிடம், "உங்களுடைய உள்ளத்தில், விண்ணகத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றேன் என்று சொல்கிறீர்களே, அதற்குக் காரணமென்ன?' என்று கேட்டார் பெரியவர். "நான் என்னுடைய வாழ்வின் எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவரின் திருவுளத்தின்படியே நடக்கின்றேன். அதனால் நான் என்னுடைய வாழ்க்கையில் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும், வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் விண்ணகத்தில் இருப்பதைப் போன்றுதான் உணர்கின்றேன். என் ஆண்டவரும் என்னை எந்தச் சூழ்நிலையும் கைவிட்டு விடாமல் என்னை அன்பு செய்துவருகின்றார்" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற இறையடியார், இயேசுவின் பொருட்டுத் துன்பத்தை அனுபவித்தபோதும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில் இயேசு யாரெல்லாம் பேறுபெற்றோர் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். இதில் இயேசுவின் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுவோர் எந்தவிதத்தில் பேறுபெற்றோராக இருக்கின்றார்கள் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் பொருட்டு இகழப்படுத்தல்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு யாரெல்லாம் பேறுபெற்றோர் என்பது பற்றிப் பேசுகின்றார். இந்தப் பேறுபெற்றோர் பட்டியலில் இடம்பெறக்கூடிய ஒரு வகையினர்தான் இயேசுவின் பொருட்டு இழந்து, வெறுத்து, ஒதுக்கப்பட்டுத் துன்பங்களைச் சந்திக்கக்கூடியவர்கள். இந்த உலகத்தின் பார்வைக்கு இயேசுவின் பொருட்டு இழந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் இழிவாகக் கருதப்பட்டாலும், இயேசுவின் பார்வையில் அவர்கள் பேறுபெற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.

இயேசுவின் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் பேறுபெற்றவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம், அவர்கள் இந்த உலகப் போக்கின்படி வாழாமல், ஆண்டவர்க்கு உகந்த வாழ்கின்றார்கள் என்பதால்தான். யோவான் நற்செய்தியில் இயேசு மிக அழகாகக் கூறுவார், "நான் உலகைச் சார்ந்தவர்வனாய் இல்லாதுபோல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கின்றது (யோவா 17: 12). உண்மைதான். இந்த உலகத்தால் இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் உலகப்போக்கின்படி வாழாமல், இயேசுவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்கின்றார்கள். அதனால்தான் அவர்கட்கு அவ்வாறெல்லாம் நடக்கின்றது. ஆனால், மனிதர்களால் அவர்கள் இகழ்ந்து ஒதுக்கப்பட்டாலும், இயேசுவால் பேறுபெற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள். அதுதான் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது.
இயேசுவின் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கட்கு விண்ணுலகில் கைம்மாறு மிகுதியாகும்

தன் பொருட்டு இகழ்ந்து ஒதுக்கப்படுகின்றவர்கள் குறித்து இயேசு சொல்லக்கூடிய இன்னொரு முக்கியமான அம்சம், அவர்கள் விண்ணகத்தில் பெறுகின்ற மிகுதியான கைமாறாகும் என்பதாகும். இவ்வார்த்தைகள் லூக்கா நற்செய்தியில் இடம்பெறாவிட்டாலும் மத்தேயு நற்செய்தியில் (மத் 5: 11, 12) மிகத் தெளிவாக இடம்பெறுகின்றது. ஆகையால், இயேசுவின் வழியில் நடந்து, அவர் பொருட்டு வெறுப்பையும் இகழ்ச்சியையும் ஏற்கக்கூடியவர்கள் கலங்கத் தேவையில்லை. ஏனெனில் விண்ணுலகில் இறைவன் அவர்கட்குத் தருகின்ற கைம்மாறு மிகுதியாகவும்.

சிந்தனை

'உலகம் உங்களை வெறுக்கிறது என்றால், நீங்கள் வியப்படைய வேண்டாம்' (1 யோவா 3: 13) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் எத்தகைய இடர்வரினும் ஆண்டவர்க்குச் சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!