|
|
10 செப்டம்பர் 2019 |
|
|
பொதுக்காலம்
23ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-15
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள்.
அவரோடு இணைந்து வாழுங்கள். அவரில் வேரூன்றியவர்களாகவும் அவர்மீது
கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட
விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்.
போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும் உங்களை யாரும்
கவர்ந்துகொள்ள விடாதீர்கள். அவை கிறிஸ்துவை அல்ல, மனித மரபுகளையும்
உலகின் பஞ்சபூதங்களையும் சார்ந்தவை. அவற்றைக் குறித்துக் கவனமாயிருங்கள்.
இறைத் தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள்
குடிகொண்டிருக்கிறது. அவரோடு இணைந்திருப்பதால் நீங்களும்
நிறைவு பெறுகிறீர்கள். ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், அனைவரும்
அவருடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர்.
நீங்கள் மனிதக் கையால் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள் அல்ல;
கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் அவர் வழியாய் விருத்தசேதனம்
செய்யப்பட்டு ஊனியல்பைக் களைந்துள்ளீர்கள். நீங்கள்
திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள்.
சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது
கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள்.
உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும்
வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை
அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார்.
நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர்
அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்.
தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம்
கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக் கொண்டு
அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச்
சென்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
145: 1-2. 8-9. 10-11 (பல்லவி: 9a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்.
1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை
என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2 நாள்தோறும் உம்மைப்
போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது
அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப்
பேசுவார்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி
நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுளிடம் வேண்டுதல் செய்வதில்
இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத்
திருத்தூதர் என்று பெயரிட்டார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
6: 12-19
அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக்
கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும்
அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத்
தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.
அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர்
அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு,
தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,
யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து
என்பவர்களே.
இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார்.
பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும்
தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான
மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள்
பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால்
தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை
வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த
மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
கடவுள் நம் குற்றங்கள் அனைத்தையும்
மன்னித்தருளினார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 2: 6-15
அவரோடு இணைந்து வாழுங்கள்.
நிகழ்வு
வயதான மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் இறைவன் மீது ஆழமான நம்பிக்கையும்
திருஅவையின் மீது அதிகமான பற்றும் கொண்டு வாழ்ந்துவந்தார். அதனால்
அவரை அவருடைய பங்குத் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்.
ஒருநாள் அதிகாலை வேளையில் அவர் பங்குத்தந்தையைப் பார்க்கவந்தார்.
வந்தவர் பங்குத்தந்தையிடம், "தந்தையே! நான் திருஅவையிலிருந்து
விலகிவிடலாம் என நினைக்கிறேன்" என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த
பங்குத்தந்தை அவரிடம், "ஐயா! உங்கட்கு என்ன ஆயிற்று...? ஏன் இப்படியெல்லாம்
பேசுகிறீர்கள்...?" என்றார் "அது ஒன்றுமில்லை தந்தையே!
கிறிஸ்து ஏற்படுத்திய இந்தத் திருஅவை ஈராயிரம் ஆண்டுகளாக இந்த
மண்ணில் இருக்கின்றது... அப்படியிருந்தும் மக்களுடைய
வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லையே... அவர்கள்
வழக்கம்போல் பாவ வாழ்க்கைதானே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி
மக்களுடைய வாழ்வில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாத திருஅவையில்
நான் இருந்தென்ன புண்ணியம்...? அதனால்தான் நான் திருஅவையிலிருந்து
வெளியேறுகிறேன் என்று சொன்னேன்" என்று வேதனையோடு சொன்னார் அந்த
வயதான மருத்துவர்.
அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுவிட்டுப் பங்குத்தந்தை
பொறுமையாக அவரிடம், "ஐயா! இந்த பூமியில் தண்ணீர் எத்தனை ஆண்டுகளாக
இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆண்டவர் இந்த உலகைப் படைத்ததிலிருந்தே
இருக்கிறது" என்று அறிவுப்பூர்வமாகப் பதில் சொன்னார் அவர்.
"மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ஆண்டவர் இந்த உலகைப் படைத்ததிலிருந்து
தண்ணீர் இங்கு இருக்கிறதுதானே! அப்படியென்றால், மனிதர்கள் எதற்குத்
தங்களுடைய கைகளையும் கால்களையும் உடலையும் அழுக்காக
வைத்திருக்கிறார்கள்...?" என்றார் பங்குத்தந்தை. இதற்கு அந்த
வயதான மருத்துவரால் பதில் சொல்லமுடியவில்லை.
பங்குத்தந்தை தொடர்ந்து அவரிடம் பேசினார், "மனிதர்கள் தங்களுடைய
கைகளிலும் கால்களில் உடலிலும் அழுக்குப்பட்ட போதிலும், அந்த அழுக்கினைப்
போக்க தண்ணீர் அவர்கட்குத் தேவைப்படுகின்றது. தண்ணீர் மட்டும்
இல்லையென்றால், அழுக்கினைப் போக்க அவர்களால் முடியாது. அதுபோன்று
மனிதர்கள் மீண்டும் மீண்டுமாகத் தவறு செய்தபோதும் அவர்கட்கு அடைக்கலம்
தருவதற்குத் திருஅவை தேவைப்படுகின்றது. திருஅவை மட்டும் இல்லையென்றால்,
நீங்களோ, நானோ, ஏன் இந்த உலகமோ எங்கு போய் அடைக்கலம்
தேடும்...?"
பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து, அவர் தன்னுடைய
முடிவை மாற்றிக்கொண்டு திருஅவையோடு இணைந்திருக்கத் தொடங்கினார்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு அடைக்கலமாக இருப்பது திருஅவையும் அதன்
தலைவராக இருக்கும் இயேசுவும்தான். இயேசுவைப் விட்டுப் பிரிந்து
நாம் எங்கே அடைக்கலம் தேடுவது? சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு
கேள்வியாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஆண்டவரோடு
இணைந்து வாழுங்கள் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். நாம்
ஏன் இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும் என்பதை இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கொலோசை மக்களைச் சிதறடிக்க நினைத்த போலி மெய்யியலாளர்கள்
கொலோசை மக்கள் ஆண்டவர் இயேசுவைப் புதிதாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட சமயத்தில் ஒருசில போலி மெய்யியலார்கள் இயேசுவைப்
பற்றித் தவறான கருத்துகளை அவர்களிடம் சொல்லி, அவர்களைத் திசை
திருப்பப் பார்த்தார்கள். இதையறிந்துதான் புனித பவுல் அவர்களிடம்,
கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து
வாழுங்கள்... போலி மெய்யியலாலும் வீணான ஏமாற்றுப் பேச்சாலும்
யாரும் கவர்ந்துகொள்ள விடாதீர்கள்" என்று அவர்கட்கு அறிவுரை
கூறுகின்றார்.
கொலோசை மக்களை எப்படிப் போலி மெய்யிலார்கள் தவறானவற்றைச்
சொல்லி திசை திருப்பப் பார்த்தார்களோ, அதுபோன்று இன்றைக்கு நம்மை
தவறான வார்த்தைகளைச் சொல்லி அல்லது கவர்ச்சிகரமான வார்த்தைகளைச்
சொல்லித் திசைதிருப்பப் பலர் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருந்து, ஆண்டவர் இயேசுவோடு
இணைந்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது.
கிறிஸ்துவோடு இணைந்திருப்பதால் கிடைக்கும் ஆசி
பவுல், கொலோசை மக்களிடம், போலி மெய்யியலார்களைக் குறித்துக்
கவனமாக இருந்து, ஆண்டவரோடு இணைந்து வாழுங்கள் என்று சொல்லும்
அதே வேளையில், அவர் அவர்களிடம், ஆண்டவரோடு இணைந்திருப்பதால்
கிடைக்கின்ற ஆசியையும் குறித்துப் பேசுகின்றார். அது என்ன ஆசி
என்றால், நிறைவு. ஆம், யாரெல்லாம் இயேசுவோடு இணைந்திருக்கின்றார்களோ
அவர்கள் நிறைவுபெறுவார்கள். இதைதான் புனித பவுல், ஆண்டவரோடு ஒருவர்
இணைந்திருப்பதால் பெறுகின்ற ஆசியாகச் சொல்கின்றார்.
இன்றைக்கு நாம் நம்முடைய நம்பிக்கை வாழ்க்கையில், எல்லாச்
சூழ்நிலையிலும் ஆண்டவரோடு இணைந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
'ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர்
மிகுந்த கணிதருவார்' (யோவா 15: 5) என்பார் இயேசு. ஆகையால்,
நாம் இயேசுவோடு இணைந்திருபோம். அதனால் மிகுந்த கனிதந்து, இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 6: 12-19
'வேண்டுவதற்காக மலைக்குச் சென்ற இயேசு'
நிகழ்வு
ஒருசமயம் குருவானவர் ஒருவர் தன்னைப் பார்க்க வந்த பெரியவரிடம்
கேட்டார், "நீங்கள் எப்போதெல்லாம் இறைவனிடம் மன்றாடுவீர்கள்?"
பெரியவர் ஒரு கணம் அமைதியாக இருந்துவிட்டு மிகவும் தீர்க்கமான
குரலில் சொன்னார், "என்னுடைய வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பங்களும்
கஷ்டங்களும் வருகின்றனோ, அப்போதெல்லாம் நான் இறைவனிடம் மன்றாடுவேன்."
இப்படிச் சொல்லிவிட்டு பெரியவர் தொடர்ந்து
பேசினார், "என்னுடைய
வாழ்க்கையில் துன்பங்களும் கஷ்டங்களும் இல்லாத நாள் இல்லை அதனால்
நான் இறைவனிடம் ஒவ்வொருநாளும் மன்றாடுவேன்." இதைக்
கேட்டுவிட்டு குருவானவர் மிகவும் வியந்துபோய்,
"இதைத் தொடர்ந்து
பின்பற்றி வாருங்கள்" என்று அவரை மனதார வாழ்த்தினார்.
மனிதருடைய வாழ்வில் துன்பங்களும் கஷ்டங்களும் இல்லாத நாளில்லை.
அதனால் ஒவ்வொருநாளும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்ற உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தி
வாசகத்தில் இயேசு வேண்டுவதற்காக மலைக்குச் சென்றார் என்று
வாசிக்கின்றோம். அவர் எதற்காக வேண்டச் சென்றார்? இயேசுவின் பணிவாழ்வில்
இறைவேண்டல் எத்தகைய பங்காற்றியது? இவற்றைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் வாழ்வில் இறைவேண்டல்
இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கி, மக்கட்கு ஆண்டவருடைய நற்செய்தியை
எடுத்துரைத்தும் அவர்களிடமிருந்த பிணியாளர்களை நலப்படுத்தியும்
அவர்களில் ஒருவராக வலம்வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில் அவர்க்கு
பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள்
வந்தன. எனவே, இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் துணிவோடு எதிர்கொள்ளவும்,
தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்வதற்கு வேண்டிய திருத்தூதர்களை
தேர்ந்தெடுப்பதற்கான வல்லமை வேண்டியும் இயேசு மலைக்குச் சென்று
இறைவனிடம் வேண்டுகின்றார். இயேசு இறைவேண்டலுடைய ஆற்றலையும் வல்லமையையும்
மிக நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் இறைவனிடம் அதிகாலையிலும்
இரவிலும், ஏன் தனக்கு நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் வேண்டி வந்தார்.
இறைவேண்டலுக்குப்பின் திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்த இயேசு
பணிவாழ்வில் வந்த எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்வதற்கான
ஆற்றல் வேண்டி இயேசு இறைவனிடம் வேண்டியது ஒரு பக்கம் இருந்தாலும்,
அவர் ஒவ்வொரு பணியையும் தொடங்குவதற்கு முன்னமும் இறைவனிடம்
வேண்டிவந்தார். இன்றைய நற்செய்தியில் இயேசு திருத்தூதர்களைத்
தேர்ந்தெடுக்கும் முன்னம் இறைவனிடம் இரவு முழுவதும்
வேண்டுகின்றார்.
திருத்தூதர்களைத் தேர்ந்தெடுப்பது எத்துணை முக்கியமானதொரு பணி
என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவர் இறைவனிடம்
இரவுமுழுவதும் வேண்டுகின்றார். இன்னும் ஒருசில முக்கியமான தருணங்களில்
அவர் இறைவனிடம் வேண்டுவதாக நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.
தன் நண்பர் இலாசரை உயிர்ப்பிக்கின்றபோதும் தன்னுடைய சிலுவைச்
சாவை எதிர்கொள்வதற்கு முன்னம் கெத்சமணித் தோட்டத்திலும் அவர்
இறைவனிடம் மன்றாடியதாக நற்செய்தி நூல்களில் நாம்
வாசிக்கின்றோம். அப்படியானால் இயேசு இறைவேண்டலின் வல்லமையை எந்தளவுக்கு
உணர்ந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்
கலவையான திருத்தூதர்கள் குலாம்
இயேசு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றபோது, இஸ்ரயேலில் உள்ள
பன்னிரு குலங்களை அடையாளப்படுத்துகின்ற விதமாகப் பன்னிரு
திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இந்தப் பன்னிருவரும்
ஒரே மாதிரி இல்லாமலும் ஒரே வகையான தொழிலைச் செய்கிறவர்களாகவும்
இல்லாமல், ஒரு கலவையாக இருப்பதுதான் இதிலுள்ள சிறம்பம்சமாக இருக்கின்றது.
இயேசுவின் திருத்தூதர்கள் குலாமில் ஏழு பேர் மீனவர்கள் (யோவா
21: -3), ஒருவர் வரிதண்டுபவர், இன்னொருவர் இனத்துக்காகப்
போராடியர், மற்ற மூன்று பேர் என்ன வேலை செய்து வந்தார்கள் என்பது
பற்றிய சரியான குறிப்பு இல்லை. இவற்றையெல்லாம் வைத்துப்
பார்க்கின்றபோது, திருஅவை எல்லா மக்கட்குமானது; எல்லாரும் இதில்
உறுப்பினராகலாம் என்ற செய்தியை மிக அழுத்தம் திருத்தமாக எடுத்துச்
சொல்கின்றது. இயேசுவின் திருத்தூதர்கள் குலாமில் முதலில் யூதர்கள்தான்
இருந்தார்கள் (திப 13: 44) திருஅவை படிப்படியாக வளர்ந்துவந்தபோது
எல்லா மக்களையும் உள்ளடக்கியதாக மாறியது. அதனால்தான் புனித பவுல்
கலாத்தியர்க்கு எழுதிய மடலில்,
"இனி உங்களிடையே யூதர் என்றும்
கிரேக்கர் என்றும் ஆண் என்றும் பெண் என்றும் அடிமைகள் என்றும்
உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்து இயேசுவில்
நீங்கள் ஒன்றாய் இருக்கிறீர்கள் என்கின்றார் (கலா 3: 28).
ஆதலால், இயேசுவின் சீடர்கள் குலாமில் எல்லார்க்கும் இடமுண்டு;
எல்லார்க்கும் சிறப்பான அழைப்பு உண்டு என்பதை உணர்ந்து, அவருடைய
பணியைச் செய்ய நாம் ஒவ்வொருவரும் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும்.
சிந்தனை
'இறைவனிடம் முழந்தாளிட்டு மன்றாடுகின்ற எவரும், வாழ்க்கையில்
இடறி விழுவதில்லை' என்கிறது ஒரு பழமொழி. ஆகையால், நாம் இயேசுவைப்
போன்று இறைவனிடம் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|