|
|
09 செப்டம்பர் 2019 |
|
|
பொதுக்காலம்
23ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைவார்த்தை ஊழிஊழியாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 1:24 -2:3
சகோதரர் சகோதரிகளே, இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில்
நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக
வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று
நிறைவு செய்கிறேன். என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு
வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான்
திருத்தொண்டன் ஆனேன்.
நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலை முறையாக மறைந்திருந்த
இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்கள் இடையே அது அளவற்ற
மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்கக்
கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும்
கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை
அவரே அளிக்கிறார்.
கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம்.
கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு
ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.
இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு
ஏற்ப வருந்திப் பாடுபட்டு உழைக்கிறேன். உங்களுக்காகவும் இலவோதிக்கேயா
நகர மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்ற அனைவருக்காகவும்
நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்துகொள்ள
வேண்டும் என விரும்புகிறேன்.
என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால்
ஒன்றாக இணைக்கப்படவேண்டும்; இவ்வாறு கடவுளுடைய மறைபொருளாகிய
கிறிஸ்துவை யாவரும் அறிந்துணர வேண்டும்; அந்த அறிவுத் திறனால்
உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என்
விருப்பம். ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும்
கிறிஸ்துவில் மறைந்துள்ளன.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
62: 5-6. 8 (பல்லவி: 7a)
=================================================================================
பல்லவி: என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன.
5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும்
நலன் வருவது அவரிடமிருந்தே; 6 உண்மையாகவே, என் கற்பாறையும்
மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். பல்லவி
8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர்
முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்;
கடவுளே நமக்கு அடைக்கலம். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச்
செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்
பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா
என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தனர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
6: 6-11
ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார்.
அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும்
பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில்
அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்
கொண்டே இருந்தனர்.
இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை
நோக்கி, "எழுந்து
நடுவே நில்லும்!" என்றார்.
அவர் எழுந்து நின்றார்.
இயேசு அவர்களை
நோக்கி, "உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு
நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?
எது முறை?" என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி
அவர்கள் யாவரையும்
பார்த்துவிட்டு, "உமது கையை நீட்டும்!" என்று
அவரிடம் கூறினார்.
அவரும் அப்படியே செய்தார்.
அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன
செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 6: 6-11
"அவரும் அப்படியே
செய்தார்"
நிகழ்வு
அது இரவு நேரம். ஒரு குடியிருப்பின் மேல்தளத்தில் சிறுவன் ஒருவன்
மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். தென்னங்கீற்றுகளால்
வேயப்பட்டிருந்த அந்த மேல்தளத்தில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது;
சிறிதுநேரத்திற்குள்ளே தீயானது மேல்தளம் முழுவதும் பரவியது.
இதனால் அவன் தப்பிக்க வழிதெரியாமல் அங்கும் இங்கும் ஓடினான்.
இதற்கிடையில் கீழ்த்தளத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சிறுவனுடைய
தந்தை, மகன் அலறுகிற சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வெளியே
ஓடிவந்தார். வெளியே வந்தபின் மேல்தளத்தில் பார்த்தவர் ஒரு கணம்
அதிர்ந்துபோனார். காரணம், மேல்தளத்தில் தீயும் புகைமூட்டமுமாக
இருந்தன. அதற்கு நடுவில் மகன் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு,
"அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்",
"அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்" என்று கத்திக்கொண்டிருந்தான்.
"மகனே! அப்படியே மேலிருந்து கீழே குதித்துவிடு... நான் உன்னைப்
பாத்திரமாகப்
பிடித்துக் கொள்கிறேன்" என்று மகனை நோக்கிக் கத்தினார்
காட்டினார் தந்தை.
"அப்பா! நீ எங்கிருக்கின்றாய் என்றே எனக்குத்
தெரியவில்லை. அப்படியிருக்கையில் நான் எங்கு குதிப்பது?" என்று
ஒருவிதமான பயத்தோடு சொன்னான் மகன்.
"மகனே! நான் இருப்பது உனக்கு
வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்... ஆனால், நீ இருப்பது எனக்கு
நன்றாகவே தெரிகின்றது. அதனால் பயப்படாமல் கீழே குதி. அப்பா உன்னைப்
பாத்திரமாகப்
பிடித்துக் கொள்கிறேன்" என்றார்.
தன் அப்பா சொன்ன இவ்வார்த்தைகட்கு கீழ்ப்படிந்து, அவர்மீது உறுதியான
நம்பிக்கை வைத்து, சிறுவன் கீழே குதித்தான். கீழே இருந்த அவனுடைய
அப்பாவோ, அவனைப் பத்திரமாகப் பிடித்துக் கீழே இறக்கினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் எப்படி தன் தந்தையின் மீது உறுதியான
நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதற்குக் கீழ்ப்படிந்து கீழே
குதித்ததனால் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டானோ, அது போன்று
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை
வைத்து, அவர் சொன்னவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடந்ததால் குணம்பெறுகின்ற
ஒருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் இயேசுவின்மீது
கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது என்பதைக் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
குற்றம் காணும் நோக்குடன் இருந்த பரிசேயக்கூட்டம்
நற்செய்தியில், இயேசு ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்திற்குச்
சென்று கற்பிக்கின்றார். இதை அவர் ஒரு வழக்கமாகவே
கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயேசு ஓய்வுநாள்
அன்று தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார் என்று
நற்செய்தியில் ஒருசில இடங்களில் வருகின்றன (லூக் 4: 15, 5:17).
இன்றைய நற்செய்தியிலும் அவர் ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச்
சென்று கற்பிக்கின்றார். ஆனால், தொழுகைக்கூடத்திலிருந்த மறைநூல்
அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசு அங்கிருந்த வலக்கை சூம்பிய ஒருவரை
குணப்படுத்துவாரா? அதன்மூலம் அவர் ஓய்வுநாள் சட்டத்தை
மீறுவாரா? என்று அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
'இயேசு வலக்கை சூம்பிய மனிதரைக் குணப்படுத்தமாட்டாரா? அவருடைய
வாழ்க்கையில் நல்லது பிறக்காதா?' என்று நினைக்காமல், அதற்கு
நேர் எதிராக மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் நினைப்பது மிகவும்
வித்தியாசமாக இருக்கின்றது. இன்றைக்கும்கூட ஒருசிலர் அடுத்தவர்
எப்போது தவறு செய்வார்? அவரை எப்படிச் சிக்கலில் மாட்டிவிடலாம்?
என்று அலைவதைக் காணமுடிகின்றது. இப்படிப்பட்டோர் தங்களுடைய
வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி, நல்லதொரு வழியில் நடப்பது சிறந்தது.
ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையினாலும் அவருடைய வார்த்தைக்குக்
கீழ்ப்படிந்து நடந்ததாலும் குணம்பெறுதல்
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவிடம் எப்படிக் குற்றம்
கண்டுபிடிக்கலாம் என்று இருக்கும்போது, கைசூம்பிய மனிதரோ ஆண்டவர்
இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதற்கெல்லாம்
அப்படியே கீழ்ப்படிந்து நடக்கின்றார். குறிப்பாக இயேசு அந்த மனிதரைப்
பார்த்து, "எழுந்து நடுவே
நில்லும்", 'உமது கையை நீட்டும்' என்று
சொல்வதற்கு அப்படியே கீழ்ப்படிந்து நடக்கின்றார். அதனால் இயேசு
அந்த மனிதரை நலப்படுத்துகின்றார்.
நற்செய்தியில் வருகின்ற இந்த வலக்கை கைசூம்பிய மனிதர் நமது
கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். இவர், இயேசு சொல்வதற்கெல்லாம்
நான் ஏன் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்றெல்லாம் இருக்கவில்லை.
மாறாக, இவர் இயேசுவின் வார்த்தைகட்கு அப்படியே கீழ்ப்படிந்து
நடக்கின்றார்; அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு இருக்கின்றது.
இந்த நம்பிக்கையும் கீழ்ப்படிதலுமே அவர்க்கு நலத்தைத் தருகின்றன.
இந்த நிகழ்வைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்ற நாம், இயேசுவின்மீது
ஆழமான நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து
நடக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
'கீழ்ப்படிதலை கீழ்ப்படிந்து நடப்பதன் வழியாக மட்டுமே கற்றுக்கொள்ள
முடியும்' என்பார் டியாட்ரிச் போனஹோப்பர் என்ற அறிஞர். ஆகையால்,
நாம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
இறைவார்த்தை ஊழிஊழியாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 1:24 -2:3
"உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சிகொள்கிறேன்".
நிகழ்வு
ஓர் ஊரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரிடம், ஊசியால்
துணிகளில் சித்திர வேலைப்பாடுகளைச் செய்யும் அருமையானதொரு திறமை
இருந்தது. அந்தத் திறமையைக் கொண்டு அவர் தனக்கு நேரம்
கிடைக்கின்றபோதெல்லாம் துணிகளில் சித்திர வேலைப்பாடுகளைச்
செய்து, அவற்றைத் தனக்கு அறிமுகமானவர்களுடைய பிறந்தநாள், திருமணநாள்
மற்றும் முக்கியமான தருணங்களில் அன்புப் பரிசாகக் கொடுத்து அவர்களை
மகிழ்ச்சியில் திளைக்க வைத்து வந்தார். அவருடைய இந்த முயற்சிக்கு
அவருடைய மனைவியும் உறுதுணையாக இருந்து வந்தார்.
நாள்கள் மெல்ல நகர்ந்தன. ஒருநாள் அந்த ஆசிரியரிடம் கல்வி பயின்ற
மாணவர் ஒருவர் தற்செயலாக அவரைச் சந்தித்தார். அவர் அந்த ஆசிரியர்
தன்னுடைய ஓய்வுநேரங்களில் துணிகளில் சித்திர வேலைப்பாடுகளைக்
செய்துவருவதைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தார். அவர் ஆசிரியரிடம்,
"ஐயா! பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு நீங்கள் உங்களுடைய
பொன்னான நேரத்தை உங்களுடைய குடும்பத்தோடு செலவழிக்கலாமே, எதற்காக
நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு துணிகளில் சித்திர வேலைப்பாடுகளைச்
செய்துகொண்டிருக்கிறீர்கள்...?" என்று அன்போடு கேட்டார்.
"தம்பி நீ சொல்வது போல் நானும் ஒருசில நேரங்களில் சித்திரவேலைப்பாடுகளைச்
செய்து, நன்றாக ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைப்பேன். ஆனால்,
நான் கஷ்டப்பட்டுச் செய்துகொடுக்கின்ற சித்திர வேலைப்பாடுகளை
அன்புப்பரிசாகப் பெறக்கூடியவர்களுடைய முகத்தில் தெரிகின்ற
பூரிப்பு இருக்கின்றதே... அதைப் பார்த்தவுடன் என்னுடைய கஷ்டமெல்லாம்
பறந்துபோய்விடும். அதனால்தான் நான் என்னுடைய ஓய்வுநேரங்களில்
இப்படிச் சித்திர வேலைப்பாடுகளைச்
செய்துகொண்டிருக்கின்றேன்" என்றார் அந்த ஆசிரியர்.
அடுத்தவரின் நலனுக்காக அவர்களுடைய சந்தோசத்திற்காகத் துன்புறுவதுகூட
ஒரு மகிழ்ச்சியான உணர்வுதான் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும்
இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில்
புனித பவுல் கொலோசை மக்கட்காகத் துன்புறுவதில் மகிழ்ச்சியடைவதாகக்
கூறுகின்றார். பவுலின் இத்தகைய மகிழ்ச்சிக்குக் காரணமென்ன என்பதை
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கொலோசையர்கட்காகத் துன்புறுவதில் மகிழ்ச்சி கண்ட பவுல்
யாராவது துன்புறுவதில் மகிழ்ச்சி காணமுடியுமா...? பவுல் கண்டார்.
ஆம், புறவினத்தாரின் இறைவாக்கினர் (எபே 3: 1-13) என அழைக்கப்பட்ட
பவுல், அப்புறவினத்தார்க்காகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.
அவர் அவர்கட்காகத் எத்தகைய துன்பங்களை அனுபவித்தார் என்பதை 2
கொரிந்தியர் 11: 23 -28 பகுதியில் நாம் காணலாம்.
இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம், பவுல் தான் பட்ட
துன்பங்களை நினைத்து அழுது புலம்பவோ அல்லது வருத்தப்படவோ இல்லை.
மாறாக, அவர் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். திருத்தூதர்கள்
எப்படி இயேசுவின் பொருட்டு அவமதிக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதை
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்களோ, அதுபோன்று பவுல் கொலோசையர்கட்காகத்
துன்பப்பட்டதில் மகிழ்ச்சி கண்டார்.
இயேசுவுக்காகத் துன்புறுவதில் மகிழ்ச்சி கண்ட பவுல்
ஒரு காலத்தில் பவுல் ஆண்டவரின் திருஅவையைத் துன்புறுத்தி, அதன்மூலம்
அவரைத் துன்புறுத்தி (திப 9:4) வந்தார். ஆனால், அவர் ஆண்டவர்
இயேசுவால் தடுத்தாட்கொண்ட பிறகு யாரைத் துன்புறுத்தினாரோ, அவர்க்காகத்
துன்புறுத்தத் தொடங்கினார். இன்னும் சொல்லவேண்டும் என்றால்,
கிறிஸ்து தம் உடலாகிய திருஅவைக்காக வேதனையுற்றார். அவர் பட
வேண்டிய வேதனையைத் துன்னுடைய உடலில் ஏற்றுகொண்டதன் வழியாக பவுல்
திருஅவைக்காகத் துன்புற்றார். இவ்வாறு பவுல் கிறிஸ்துவுக்காகவும்
அவருடைய திருஅவைக்காகவும் துன்புற்றார்; அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும்
செய்தார்.
கிறிஸ்துவுக்காகத் துன்புறுவோர்க்குக் கிடைக்கும் கைம்மாறு
ஆண்டவர் இயேசு, தன் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும்
துன்புறுவோர் எத்தகைய கைம்மாறு பெறுவர் என்பதைச் சுட்டிக்காட்டத்
தவறவில்லை, "என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து,
துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம்
சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! ஏனெனில் விண்ணுலகில் உங்கட்குக்
கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்" (மத் 5:11, 12) என்ற
வார்த்தைகள் மேலே சொல்லப்பட்டதை உறுதிசெய்வதாக இருக்கின்றன. பவுல்,
கிறிஸ்துவின் பொருட்டும் அவருடைய திருஅவையின் பொருட்டும் அடைந்த
துன்புங்கட்காக இறைவன் கைம்மாறு தருவதாக பிலிப்பியர்க்கு எழுதிய
மடலில் (3: 14) மிக அழகாகக் கூறுகின்றார்.
ஆகையால், நாமும் பவுலைப் போன்று கிறிஸ்துவுக்காவும் அவருடைய
திருஅவைக்காகவும் துன்புறத் தயாராகி, இயேசுவின் அன்புச் சீடர்களாவோம்.
சிந்தனை
'நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது.
அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்' (1
பேது 4: 16) என்பார் புனித பேதுரு. ஆகையால், புனித பவுலைப்
போன்று கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|