|
|
08
செப்டம்பர்
2019 |
|
|
பொதுக்காலம்
23ம் ஞாயிறு
- 3ம் ஆண்டு |
| |
|
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்?
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 9: 13-18
"கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக்
கண்டுபிடிப்பவர் யார்? நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை,
நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை.
அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண்கூடாரம்
கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. மண்ணுலகில் உள்ளவற்றையே
நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான்
கண்டுபிடிக்கிறோம்.
இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர்
யார்? நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை
அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள
இயலும்? இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன.
உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக் கொண்டனர்; ஞானத்தால் மீட்பு
அடைந்தனர்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா:
=================================================================================
90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே!
மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,
உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம்
போலவும் உள்ளன. பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில்
முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப்
பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது
ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி
வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம்
காட்டும். பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது
வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம்
தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு
வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! பல்லவி
================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
இனி அவனை நீர் அடிமையாக அல்ல, உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்
கொள்ளும்.
திருத்தூதர் பவுல் பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
9b-10,12-17
அன்பிற்குரியவரே, கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக, அவர்
பொருட்டுக் கைதியாக இருக்கும் பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்தபோது
பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். அவனை உம்மிடம்
திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது
போலாகும்.
நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால்
பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். ஆனால்
நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச்
செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும்
செய்ய நான் விரும்பவில்லை.
அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மை விட்டுச் சிறிது காலம்
பிரிந்திருந்தான் போலும்! இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை
விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்.
அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன்.
அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன்
என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்!
எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வது போல்
அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா119: 135
அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்!
உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்களுள் தம் உடைமை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க
முடியாது.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33
அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர்.
அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர்
தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும்,
ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க
முடியாது.
தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய்
இருக்க முடியாது.
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில்
உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான
பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால்
அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப்
பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால்
முடிக்க இயலவில்லை' என்பார்களே!
வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம்
பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க
முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க
மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே
தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள்
தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க
முடியாது."
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
I சாலமோனின் ஞானம் 9:
13-18
II பிலமோன் 9b-10, 12-17
III லூக்கா 14: 25-33
இயேசுவுக்காக உயிரைத் தரத் தயாரா?
நிகழ்வு
கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்த
தொடக்கக் காலக்கட்டம் அது. அந்தக் காலக்கட்டத்தில் இயேசுவின்மீது
ஆழமான அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த இயேசுவின் சீடர் ஒருவர்
இருந்தார். அவர் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்துவந்தார். இறைவனின்
அருள் அவர்க்கு அபரிமிதமாக இருந்ததால் அவர் தொட்டதெல்லாம்
பொன்னானது. ஆம், அவர் நிலம் அமோக விளைச்சலைத் தந்தது. அதில்
தனக்கென்று கொஞ்சம் எடுத்துக்கொண்டு மிச்சத்தை வரியவர்கட்குப்
பகிர்ந்து கொடுத்தார். மட்டுமல்லாமல் தன்னுடைய இல்லத்திற்கு வந்த
எல்லாரையும் அன்போடு வரவேற்று, நல்லமுறையில் உபசரித்து வந்தார்.
மொத்தத்தில் அவர் இயேசுவின் உண்மையான சீடராக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட உரோமை அரசாங்கம்
அவரைப் பிடித்துக் கொல்வதற்குப் படைவீரர்கள் சிலரை அனுப்பிவைத்தது.
அவர்களும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், இயேசுவின் சீடர் இருந்த
கிராமத்தை நோக்கி வந்தார்கள். அவர்கள் அந்த கிராமத்திற்குள் வந்தபோது
நன்றாக இருட்டிவிட்டது. அதனால் படைவீரர்களில் ஒருவர்,
'இனிமேலும் இயேசுவின் சீடரைத் தேடித் போய்க்கொண்டிருக்க
முடியாது. அதனால் இந்த இரவில் ஏதாவதோர் இடத்தில் தங்கிவிட்டு,
மறுநாள் காலையில் வந்த வேலையை முடிப்போம் என்றார். அவர் சொன்னதற்கு
எல்லாரும் சம்மதம் தெரிவிக்கவே, இரவில் தங்குவதற்கான இடத்தைத்
தேடி அலைந்தார்கள்.
அப்பொழுது எதிரில் ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் அவர்கள், இரவில்
தங்குவதற்கான இடத்தைக் கேட்டபோது, அவர் அவர்களிடம், "இங்கு ஒரு
மனிதர் இருக்கின்றார். அவர் தன்னுடைய வீட்டிற்கு யார் வந்தாலும்
அவர்களை அன்போடு வரவேற்று உபசரிப்பார். அவரிடம் போய்க் கேளுங்கள்.
நிச்சயம் அவர் இரவில் தங்குவதற்கான இடத்தைத் தருவார்" என்று
சொல்லிவிட்டு அவருடைய வீடு இருந்த திசையைச் சுட்டிக்
காட்டினார். படைவீரர்கள் பெரியவர்க்கு நன்றிசொல்லிவிட்டு, அவர்
சுட்டிக்காட்டிய வீட்டை நோக்கி நடந்துசென்றார்கள்.
அந்த வீட்டை அடைந்ததும் அங்கிருந்தவர் அவர்களை முகமலர்ச்சியோடு
வரவேற்றார். பின்னர் அவர்கள், "இரவில் இங்கு தங்கிகொள்ளட்டுமா?"
என்று கேட்டபோது, "தாராளமாகத் தங்கிக்கொள்ளுங்கள்" என்றார்.
பின்னர் அவர் அவர்களிடம், "தாங்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்னவோ?"
என்று கேட்டபோது, அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னார்கள்.
அவர் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட இயேசுவின் சீடர் தன்னை யார்
என்று அப்பொழுது வெளிக்காட்டிக் கொள்ளாமல், "உங்களைப் பார்க்க
மிகவும் களைப்பாக இருப்பது போல் தெரிகின்றது. முதலில்
சாப்பிட்டு ஓய்வெடுங்கள். காலையில் எல்லாவற்றையும் பேசிக்கொள்ளலாம்"
என்றார். பின்னர் அவர் அவர்கட்கு சுவையான உணவு தயாரித்துக்
கொடுக்க அவர்கள் சாப்பிட்டு ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் ஓய்வெடுக்கத் தொடங்கியதும். அவர் தன்னுடைய தோட்டத்தின்
பக்கம் சென்று, ஒரு கல்லறைக்குழி வெட்டிவிட்டு, வீட்டிற்கு வந்து
தூங்கத் தொடங்கினார். அவர்க்குத் தூக்கமே வரவில்லை. அடுத்த
நாள் பொழுது புலர்ந்ததும் படைவீரர்களிடம் அவர், "நீங்கள் தேடிவந்த
ஆள் நான்தான்" என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவர்கள்
அதிர்ந்துபோனார்கள். "உங்களைப் போன்ற நல்ல மனிதரையா நாங்கள்
கொல்வது. மாட்டோம்" என்று பின்வாங்கினார்கள். அப்பொழுது அவர்
அவர்களிடம், "இத்தனை நாட்கட்கும் நான் இந்த மறைசாட்சிப் பட்டத்திற்காகத்தான்
காத்திருந்தேன். அதனால் என்னைத் தயவுசெய்து வெட்டிக்கொல்லுங்கள்"
என்றார். அவர்கட்குக் கண்ணீர் தாரைதாராய் வந்தது. இருந்தாலும்
வந்த நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்று, படைவீரர்களில் ஒருவர்
அவரை வெட்டிக் கொலைசெய்தார். அதன்பிறகு இயேசுவின் சீடர்க்குத்
தெரிந்தவர்கள் வந்து, அவர் அவர்க்காக வெட்டிய கல்லறைக்குழியில்
அடக்கம் செய்தார்கள்.
இயேசுவின் சீடர். அவர்க்காக எதையும் இழக்கத் தயாராகவேண்டும் என்ற
செய்தியை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்கு உரியது.
பொதுக்காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று
நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசுவின் சீடராக இருப்பதற்கு
ஒருவர் என்ன செய்யவேண்டும் என்ற செய்தியைத் தாங்கிவருகின்றது.
அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் சீடர் எல்லாரையும் விட இயேசுவுக்கு முதன்மையான
இடம் தரவேண்டும்
இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் பெருந்திரளான
மக்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். இயேசுவுக்கு நன்றாக
தெரியும், தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள்
தன்னுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதற்காக அல்ல.
மாறாக, தான் அளிக்கும் உணவிற்காகத்தான் தன்னைப் பின்தொடர்ந்து
வருகிறார்கள் என்று (யோவா 6: 26). அதனால்தான்
அவர் அவர்களைப் பார்த்து, என்னைப் பின்பற்றி வருகின்றவர் தன்
உறவுகளையும் ஏன், தன் உயிரையும் மேலாகக் கருதினால் அவர் என் சீடராக
இருக்க முடியாது என்கின்றார். அப்படியானால், இயேசுவின் சீடராக
இருக்க விரும்புகின்றவர் எல்லாவற்றையும் விட, இயேசுவுக்குத் தன்னுடைய
முதன்மையான இடம் தந்து வாழவேண்டும்.
இயேசுவின் சீடர் சிலுவையைத் சுமக்கத் தயாராக இருக்கவேண்டும்
இயேசுவின் சீடர், மற்ற எல்லாரையும்
விட, ஏன், தன் உயிரையும்விட இயேசுவுக்கு முன்னுரிமை தந்து வாழ்வது
சீடத்துவ வாழ்வில் முதல்நிலை என்றால், சிலுவையைச் சுமப்பது சீடத்துவ
வாழ்வின் இரண்டாவது நிலை. இங்கு இயேசு குறிப்பிடுகின்ற
'சிலுவை' என்பதை அவர்க்காவும் அவருடைய விழுமியங்கட்காகவும்
நாம் படக்கூடிய அவமானங்கள், வேதனைகள், துன்பங்கள், என்று எடுத்துக்கொள்ளலாம்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பும் பலரும், 'இயேசுவைப் பின்பற்றினால்
துன்பமே இல்லாத இன்பமான வாழ்க்கை வாழலாம்' என்று
நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் (லூக் 9:57-58). இது ஒரு தவறான
எண்ணம். இயேசுவைப் பின்பற்றினால் நிச்சயம் துன்பம் வரும், அவமானம்
வரும், உயிரையே இழக்கக்கூடிய நிலை வரும். இதற்கெல்லம் எவர் ஒருவர்
தயாராக இருக்கின்றாரோ அவர் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்கமுடியும்.
இயேசுவின் சீடர் எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கத்
தயாராகவேண்டும்
இன்றைய நற்செய்தியில் இறுதியில்
இயேசு கூறுகின்றார், "உங்களுள் தம் உடைமைகளையெல்லாம்
விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்கமுடியாது." ஆம், இயேசுவின்
சீடர் தன்னிடம் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கத்
தயாராகவேண்டும். அதற்குக் காரணம் எவரும் இரு தலைவர்கட்குப் பணிவிடை
செய்ய முடியாது (மத் 6: 24) என்பதால்தான்.. ஒருவர் தன்னிடம் இருக்கின்ற
பணம், பொருள், வசதி வாய்ப்புகள் இவற்றின்மீதும் பற்று
வைத்துகொண்டு, இயேசுவின் மீதும் பற்று வைத்துக்கொண்டிருந்தால்
அவர் யார்க்கும் உண்மையாக இருக்க முடியாது என்பதால்தான் இயேசு,
தம் உடைமைகளை விட்டுவிடாத எவரும் என்னுடைய சீடராக இருக்க
முடியாது என்கின்றார்.
ஒவ்வொன்றும் ஒரு விலையிருக்கின்றது. அதுபோன்றுதான் இயேசுவின்
சீடராக இருப்பதற்கும் ஒரு விலை இருக்கின்றது. அந்த விலையை அல்லது
அதற்கான வெகுமதியை நாம் கொடுக்காவிட்டால் நிச்சயமாக இயேசுவின்
சீடராக இருக்கமுடியாது. எத்தனையோ புனிதர்களும் மறைசாட்சிகளும்
இறையடியார்களும் இயேசுவின் சீடராக இருப்பதற்கான விலையை, தங்களுடைய
உயிரை, உடலை, உடைமையைக்க் கொடுத்தார்கள். நாமும் அதுபோன்று நம்முடைய
உயிரை, உடைமையை, உடலைக் கொடுத்தோம் எனில், இயேசுவின் உண்மையான
சீடராக இருப்போம் என்பது உறுதி.
சிந்தனை
'இயேசுவின் சீடரராக இருப்பது
என்பது, அவரிடம் கற்பதும் அவரைப் பின்தொடர்வதும் ஆகும். ஆனால்,
அதற்காக நாம் கொடுக்கும் விலையோ மிகவும் உயர்ந்ததாக இருக்கும்'
என்பார் பில்லி கிரஹாம் என்ற மறைப்போதகர். ஆகையால், இயேசுவின்
வழியில் நடக்கின்ற நாம் சீடத்துவத்தின் மகத்துவத்தை உணர்ந்து
இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
=================================================================================
திருப்பலி முன்னுரை
=================================================================================
இறைவனைப் புகலிடமாகக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை அறிந்து
கொள்ள இன்றைய பொதுக்காலம் 23ம் ஞாயிறு அழைக்கின்றது. இறைவனைப்
பின்பற்றி வாழ இவ்வுலகப் பற்றுகளைக் கைவிட்டு, சிலுவையைத்
தூக்கிக்கொண்டு பின்தொடர அழைக்கின்றார் இறைமகன் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் திட்டத்தைக் கணிக்க இயலாது.
ஆனால் அவரின் திருவுளத்தை நிறைவேற்ற முயலும் போது இறைத் திட்டங்கள்
நம்மில் நிறைவேறும் என்கிறது சாலமோனின் ஞான நூல் வார்த்தைகள்.
இறைவனுக்கு உகந்தவற்றைக் கற்றுக் கொள்ள, ஞானம் பெற்றுக்கொள்ள
இறைவனை நோக்குவோம்.
இன்றைய நற்செய்தியில், என்னைப் பின்பற்ற விரும்புகிறவர் தம் உயிரைக்
கூட இறைவனை விட மேலான ஒன்றாகக் கருத கூடாது என்கிறார் இறைமகன்
இயேசு. இவ்வுலக வாழ்வில் வரும் வசந்தம் இறைஆசி என்றும் எதிர்ப்படும்
தடைகள் இறை சாபம் என்றும் பிதற்றாமல், சிலுவையைச் சுமக்காமல்
இயேசுவைப் பின்பற்ற இயலாது என்பதை மனதில் கொள்ளவேண்டும். இவற்றை
மேற்கொள்ள இறைவனின் ஞானமும் தூய ஆவியின் உடனிருப்பும் வேண்டி
இப்பலியில் இணைவோம்.
=================================================================================
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
|
|