|
|
06 செப்டம்பர் 2019 |
|
|
பொதுக்காலம்
22ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அனைத்தும் கிறிஸ்து வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் (1: 15-20)
சகோதரர் சகோதரிகளே, இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்;
படைப்பனைத்திலும் தலைப்பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை,
கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை
தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால்
படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.
அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து
நிலைபெறுகின்றன.
திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும்
முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார்.
தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம்
கொண்டார்.
சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும்
விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும்
கடவுள் திருவுளம் கொண்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா
100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 2a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன்
அவர் திருமுன் வாருங்கள்!
-பல்லவி
3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்!
நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
-பல்லவி
4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு
அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி,
அவர் பெயரைப் போற்றுங்கள்!
-பல்லவி
5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 8: 12
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே;
என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி
காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.
புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (5: 33-39)
அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி,
"யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்;
பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ
உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!"என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி,
"மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும்
வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை
விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு
இருப்பார்கள்"என்றார்.
அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும்
கூறினார்: "எவரும் புதிய ஆடையிலிருந்து
ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை.
அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய
துண்டும் பழையதோடு பொருந்தாது.
அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி
வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச்
செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும்.
புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய
திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்;
ஏனெனில் `பழையதே நல்லது' என்பது அவர் கருத்து."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
''பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார்.
ஏனெனில் 'பழையதே நல்லது' என்பது அவர் கருத்து"(லூக்கா 5:39)
கடவுளாட்சியைப் பல உவமைகள் வழியாக விளக்கினார் இயேசு. அவர்
கூறிய உவமைகளில் அருட்சாதனம்
, மணமகன், திருமண விருந்து போன்ற உருவகங்கள்
இறையாட்சியின் பண்புகள் யாவை என எடுத்துக் கூறப் பயன்பட்டன. இயேசு
தம்மை மணமகனுக்கு ஒப்பிடுகிறார். கடவுள் நம்மோடு பகிர்ந்துகொள்கின்ற
புதிய வாழ்வை மணவிருந்தாக உருவகிக்கிறார். விருந்துக்குச்
செல்வோர் அங்கு பரிமாறப்படுகின்ற சுவையான உணவை உண்டு மகிழ்வர்;
குடிப்பதற்கு வழங்கப்படுகின்ற திராட்சை மதுவைப் பருகி ஆனந்தம்
கொள்வர். இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் நல்ல தரமான
திராட்சைச் செடிகள் வளர்ந்தன. அவற்றிலிருந்து பெறப்பட்ட பழங்களிலிருந்து
சுவையான திராட்சை மது தயாரிக்கப்பட்டது. திருமண விருந்துகளின்போதும்
பிற கொண்டாட்டங்களிலும் திராட்சை மது அருந்துவது வழக்கமாக இருந்தது.
ஆக, விழாவுக்குச் செல்வோர் நோன்பிருப்பதை நிறுத்திவிட்டு உண்டு
குடித்து மகிழ்வது இயல்பு. இயேசு விருந்துகளில் கலந்துகொண்டார்;
ஏன், சாதாரண மக்களோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் பாவிகள் என்று
கருதப்பட்டவர்களோடும் ஒரே பந்தியில் அமர்ந்து அவர் உணவு அருந்தினார்;
திராட்சை மது குடித்தார். இது பரிசேயருக்குப் பிடிக்கவில்லை.
இயேசுவும் அவர்தம் சீடர்களும் நோன்பிருக்கவில்லை என்பது பரிசேயரின்
குற்றச்சாட்டு. ஆனால் இயேசுவோ பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொள்கின்றார்.
அவர்கள் பழைமையில் ஊறிப்போய், புதிதாக மலர்ந்திருக்கின்ற காலத்தில்
புகுவதற்கு இன்னும் தயாராக இல்லை என அவர்களுக்குச்
சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், திராட்சை மது எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அவ்வளவு தரத்திலும்
சுவையிலும் சிறந்ததாக இருக்கும் என்னும் அனுபவ உண்மை வழியாக இயேசு
கடவுளாட்சி பற்றிய ஆழ்ந்த கருத்தினை எடுத்துரைக்கிறார். பரிசேயரும்
பிறரும் பழைய திராட்சை மதுவே நல்லது என்பதில் ஓரளவு உண்மை உள்ளது
என இயேசு ஒப்புக்கொள்கின்றார். ஏனென்றால் சில பொருள்கள் பழையவை
ஆகும்போது நல்ல குணமுடையவையாக மாறக் கூடும். ஆனால் பழைய பொருள்கள்
எல்லாமே நல்லவையாக இருப்பதில்லை. பழைய கந்தைத் துணி உடுப்பதற்கு
ஏற்றதாக இருப்பதில்லை. வாடிப்போன பழைய காய்கறிகள் சமையலுக்கு
நல்லவை அல்ல. அதுபோலவே இயேசுவும் பரியேரின் பழைய போக்குகள்
கைவிடப்பட வேண்டும் என்கிறார். இயேசு கொணர்கின்ற புதிய
பார்வையும் கண்ணோட்டமும் சிந்தனைப் பாணியும் பழைமையில் ஊறிய பரிசேயருக்கு
அபத்தமாகப் பட்டன. அவர்கள் பழையதே போதும், அதுவே நல்லது என ஊறிப்போன
போக்கிலேயே நிலைத்துநிற்க விரும்பினார்கள்; சட்டத்தின்
பிடியில் மக்களை அமுக்கிவைக்கப் பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ
ஒரு புதிய பார்வையைக் கொணர்ந்தார். இயேசு கொணர்ந்த புதிய
பார்வை யாது? கடவுள் எல்லா மனிதரையும் அன்புசெய்கின்றார்; பாவிகளைத்
தேடிச் செல்கின்றார்; எந்த மனிதருக்குமே அவர் தம் அன்பையும்
இரக்கத்தையும் அளித்திட மறுப்பதில்லை; மனம் திரும்பி அவரைத்
தேடிச்செல்வோரை அவர் இருகரம் விரித்து வரவேற்கக்
காத்திருக்கிறார். - இதுவே இயேசு கொணர்ந்த புதிய பார்வை; புதிய
செய்தி (காண்க: லூக் 5:31-32). இப்புதிய பார்வையையும் புதிய அணுகுமுறையையும்
நாம் ஏற்று நம் வாழ்வோடு இணைக்கும்போது பழைய பார்வையும் பழைய
அணுகுமுறையும் தாமாகவே மறைந்து போகும்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
கொலோசையர் 1: 15-20
"அனைத்தும் அவரால் படைக்கப்பட்டன"
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மிகப்பெரிய அறிவியலாரும்
புவிர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவருமான ஐசக் நியூட்டனுக்கு நண்பர்
ஒருவர் இருந்தார். அவர் திருவிவிலியம் சொல்லக்கூடிய 'படைப்பு
அடைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை' என்பதை நம்பாதவர். மாறாக,
அது தானாக உண்டானது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை
கொண்டிருந்தார்.
ஒருநாள் நியூட்டன் தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் மாதிரி சூரியக்
குடும்பத்தை (Solar System) வடிவமைத்துவிட்டு அமர்ந்திருந்தார்.
அப்பொழுது அவருடைய நண்பர் அந்த ஆய்வுக்கூடத்திற்குள்
நுழைந்தார். நியூட்டன் வடிவமைத்து வைத்திருந்த மாதிரி சூரியக்
குடும்பத்தையும், அதிலிருந்த கோள்களையும் விண்மீன்களையும்
பார்த்துவிட்டு அப்படியே வியந்துபோய் நின்றார்.
"நண்பரே! இவ்வளவு அற்புதமான சூரியக் குடும்பத்தை யார் வடிவமைத்தது...?
பார்ப்பதற்கு இவ்வளவு அற்புதமாக இருக்கிறதே!" என்றார் நியூட்டனின்
நண்பர். அதற்கு நியூட்டன் அவரிடம், "இதை யாரும் வடிவமைக்கவில்லை...
தானாகவே உருவானது" என்றார். "என்ன விளையாடுகிறீர்களா...? இவ்வளவு
அற்புதமான மாதிரி சூரியக் குடும்பம் எப்படித் தானாக உருவாகும்...
நீங்கள்தானே இதனை வடிவமைத்தீர்கள்? சொல்லுங்கள்?" என்றார்.
நியூட்டன் சிரித்துக்கொண்டே அவரிடம், "அண்ட சராசரம் எவ்வளவு
பெரியது... அதுவே தானாக உருவாகியிருக்கும்போது, சாதாரண மாதிரி
சூரியக் குடும்பம் தானாக உருவாகியிருக்காதா என்ன?" என்றார்.
அப்பொழுது தான் நியூட்டனின் நண்பர், 'இந்த உலகமும் இதில் வாழ்பவையும்
தானாக உண்டாகவில்லை... இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்திருக்கின்றார்'
என்ற உண்மையை உணர்ந்துகொண்டு, அத்தனை நாள்களும் உண்மை தெரியாமல்
நியூட்டனோடு வாதிட்டதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.
இந்த அண்ட சராசரமும் இதில் உள்ள யாவும் இறைவனால் படைக்கப்பட்டவை
என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
இன்றைய முதல் வாசகமும், இந்த உலகம் யாரால், எதற்காகப் படைக்கப்பட்டது
என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. அது குறித்து
இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவே படைப்பனைத்திலும் தலைப்பேறு
திருஅவை வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலக்கட்டத்தில், ஒருசிலர்
'இந்த உலகம் தீயது.. .இயேசு உண்மையான மானிட உடலைக் கொண்டிருக்கவில்லை'
என்பது போன்ற தவறான போதனைகளை மக்கள் மத்தியில் பரப்பி வந்தார்கள்.
இப்படிப்பட்ட சமயத்தில்தான் புனித பவுல் அவர்கட்குப் பதிலளிக்கும்
விதமாக இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளை எழுதுகின்றார்.
'இயேசு உண்மையான மானிட உடலைக் கொண்டிருக்கவில்லை' என்ற
கூற்றுத் தவறானது என்று சொல்லும் பவுல், 'இயேசு படைப்பனைத்திலும்
தலைப்பேறு' என்று எடுத்துக் கூறுகின்றார். இயேசு படைப்பனைத்திலும்
தலைப்பேறு என்றால், அவர்தான் முதலில் படைக்கப்பட்டவர் என்று
பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, இந்த உலகம் படைக்கப்பட்டதற்கு
முன்னமே அவர் இருந்தார் என்று பொருள்கொள்ளவேண்டும்.
அனைத்தும் அவரால் படைக்கப்பட்டன
'இயேசு படைப்பனைத்திலும் தலைப்பேறு' என்று சொன்ன பவுல், தொடர்ந்து
சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை,
கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை... அனைவரும் (அனைத்தையும்) அவரால்
படைக்கப்பட்டனர்" என்பவையாகும்.
பவுலின் இவ்வார்த்தைகள் 'அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது
எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை' (யோவா 1:3) என்ற நற்செய்தியாளர்
யோவானின் வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுபவையாக இருக்கின்றன.
மேலும் அவை, இயேசுதான் இந்தப் படைப்பிற்குத் தலைவர்- அதிபதி என்பதையும்
நினைவூட்டுபவையாக இருக்கின்றன.
அனைத்தும் அவர் வழியாய் அவர்க்காக படைக்கப்பட்டன
அனைத்தும் அவர்க்காகப் படைக்கப்பட்டன என்று பவுல் கூறுகின்ற இவ்வார்த்தைகள்
மிகவும் சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இவ்வுலகில் உள்ள எல்லாமும்
அவரால், அவர்காகப் படைக்கப்பட்டன. அப்படியானால், இப்புவியில்
உள்ள ஒவ்வொன்றும் ஏன், ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பத்தை
நாடாமல், இறை விருப்பத்தை நாடக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.
இன்றைக்குப் பலர் எல்லா அதிகாரமும் சுதந்தரமும் தங்கட்கு இருக்கின்றது
என்று நினைத்துக்கொண்டு இறைவிருப்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு,
தங்களுடைய விருப்பத்திற்கு முதன்மையான இடத்தைக் கொடுத்துத்
தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோர்
தாங்கள் ஏன், எதற்காகப் படைப்பப்பட்டார்கள் என்பதை உணர்ந்து,
இறைவிருப்பத்தின் படி நடந்து, தங்களுடைய வாழ்வால் இறைவனுக்குப்
பெருமை சேர்ப்பது நல்லது.
சிந்தனை
'ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே' (மத் 6:
13) என்பார் இயேசு. ஆகையால், படைப்பிற்கெல்லாம் தலைவராக இருக்கும்
எல்லா வல்ல இறைவனின் இயேசுவின் வல்லமையை நாம் உணர்ந்தவர்களாய்,
அவர்க்கு ஊழியம் செய்பவர்களாகவும் அவருடைய விருப்பத்தின்படி
நடப்பவர்களாகவும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
லூக்கா 5: 33-39
ஏன் வழிபடுகின்றோம் என்று
தெரியாமலேயே வழிபடுபவர்கள்
நிகழ்வு
ஒரு சமயம் யூத இனத்தைச்
சார்ந்த படைவீரர்கள், எதிர் நாட்டவரோடு போர்த்தொடுத்துக்
கொண்டிருந்தார்கள். அவர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும்போதே
ஓய்வுநாள் தொடங்கிவிட்டது. ஓய்வுநாளில்
எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்பதால் யூத இனத்தைச்
சார்ந்த படைவீரர்கள் அனைவரும் போர் புரிவதிலிருந்து
பின்வாங்கி, ஒரு குகைக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.
இதற்காகவே காத்திருந்தவர்கள் போல் எதிரி நாட்டவர் குகைக்குள்
ஒளிந்திருந்த எல்லா யூதப் படைவீரர்களையும் துப்பாக்கியால்
சுட்டு வீழ்த்தினார்கள். அவர்களோ எந்தவோர் எதிர்ப்பும் காட்டாமல்,
ஓய்வுநாள் சட்டத்தை மீறக்கூடாது என்பதற்காக பரிதாபமாக செத்து
மடிந்தார்கள்.
சில விசயங்களை ஏன் பின்பற்றுகின்றோம். எதற்காகப் பின்பற்றுகின்றோம்
என்று தெரியாமலேயே பின்பற்றும் மனிதர்களைப் போன்றுதான் இந்த யூதப்படைவீரர்கள்
இருந்தார்கள் என்பதை நினைக்கும்போதே, வேடிக்கையாகவும் வேதனையாகவும்
இருக்கின்றது. நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி எழுகின்றது.
அதற்கு இயேசு என்ன பதிலளித்தார் என்பதைத் தெரிந்துகொண்டு, இன்றைய
சூழலில் நாம் எப்படி அர்த்தமுள்ள விதமாக நோன்பு மேற்கொள்ளலாம்
அல்லது வழிபாடு செய்யலாம் என்பதைக் குறித்து சிந்தித்துப்
பார்ப்போம்.
பாவப்பரிகார நாளில் நோன்பு
ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார
நாளில் நோன்பிருக்கவேண்டும் (லேவி 25) என்பது மோசே இஸ்ரயேல் மக்கட்குக்
கொடுத்த சட்டமாகும். வேறு சில காரணங்கட்காகவும் இஸ்ரயேல் மக்கள்
நோன்பிருந்தார்கள். அதெல்லாம் எப்போதாவதுதான் நடந்தது. ஆனால்,
சட்டக் காவலர்கள் அல்லது சட்டத்தை மிக நுணுக்கமாகக் கடைப்பிடிக்கின்றவர்கள்
என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பரிசேயர்கள் வாரம் இருமுறை
நோன்பிருக்கத் தொடங்கினார்கள் (லூக் 18: 12) அதையே இயேசுவின்
சீடர்கள் கடைப்பிடிக்கவேண்டும் என்று இயேசுவிடம் எடுத்துக்
கூறுகின்றார்கள். அதைத்தான் நாம் இன்றைய நற்செய்தியில்
வாசிக்கின்றோம்.
இயேசு, அவர்கள் கேட்ட கேள்விக்கு மூன்றுவிதமான உவமைகளைப் பயன்படுத்திப்
பதிலளிக்கின்றார். அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது
முன்பாக பரிசேயர்கள் எதற்காக வாரத்தில் இரண்டு முறை
நோன்பிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். யூதர்கள்
நோன்பினை பல காரணங்கட்காக மேற்கொண்டாலும் முதன்மையான காரணம்,
மெசியாவின் வருகைக்காகத் தங்களையே தயார்செய்வதற்குத்தான். ஆனால்,
பரிசேயக்கூட்டம் அந்த உண்மையை உணர்ந்துகொள்ளாமல், தங்களைப் பற்றித்
தம்பட்டம் அடிப்பதற்காக நோன்பிருந்தார்கள் (மத்6: 16). இத்தகைய
பின்னணியில்தான் அவர்கள் இயேசுவிடம், உம்முடைய சீடர்கள் ஏன்
நோன்பிருக்கவிருக்கவில்லை என்ற கேள்வியைக் கேட்கின்றார்கள்.
அவர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார் என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு இவ்வுலகிற்கு துக்கத்தை அல்ல, மகிழ்ச்சியைக்
கொண்டுவந்தார்
தன்னிடம் கேள்விகேட்ட பரிசேயக்
கூட்டத்திற்குப் பதிலளிக்கும் விதமாய் இயேசு பயன்படுத்தும் முதல்
உவமைதான், மணமகன் மணவீட்டார் உவமையாகும். யூதர்களின் திருமண
விழா ஒரு வாரத்திற்கு நடைபெறும். அந்த ஒரு வாரம் முழுவதும்
மணமகனை வாழ்த்துவதற்கும் சந்திப்பதற்கும் உறவினர்கள், நண்பர்கள்
வந்துகொண்டே இருப்பர். இதனால் மணவிருந்தினரோடு மணமகன் எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்கள் துக்கம்
கொண்டாடுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த உண்மையை உவமையாகக்
கையாளும் இயேசு, 'மணமகனாகிய நான் மணவிருந்தினராகிய சீடர்களோடு
இருக்கும்போது அவர்கள் துக்கம் கொண்டாடுவதற்கு வாய்ப்பே இல்லை"
சொல்கின்றார். இவ்வாறு இயேசு இந்த உலகிற்கு மகிழ்ச்சியைக்
கொண்டுவந்தவராக (லூக் 10: 21; யோவா 10: 21. 17:13) எடுத்துக்கூறுகின்றார்.
இயேசு இவ்வுலகிற்கு புதிய சாசனத்தைக் கொண்டுவந்தார்
தன்னிடம் கேள்விகேட்ட பரிசேயர்கட்கு
பதிலளிக்கும் வண்ணமாக இயேசு பயன்படுத்தும் இரண்டாவது மற்றும்
மூன்றாவது உவமைதான், புதிய ஆடை புதிய துணி, புதிய தோற்பை
புதிய திராட்சை இராசமாகும்.
மோசேயின் சட்டம் சட்டங்களை அதிகம் முன்னிலைப்படுத்தியது. ஆனால்
இயேசுவோ சட்டங்களை அல்ல, அன்பையும் இரக்கத்தையும் முன்னிலைப்படுத்தினார்.
அதனால்தான் அவர் புதிய துணியை பழைய ஆடையோடு ஒட்டுபோட்டால் அது
கிழிந்துபோகும்; பொருந்தாது என்கின்றார். புதிய தோற்பையில் பழைய
திராட்சை மதுவை ஊற்றினாலும் இதே நிலைதான் ஏற்படும் என்கின்றார்.
இவ்வாறு இயேசு தன்னிடம் நோன்பு குறித்த கேள்வியைக் கேட்ட பரிசேயக்கூட்டத்திடம்
பழைய சட்டங்களை, தான் கொண்டுவந்த அன்பு நெறியோடு ஒப்பிடவேண்டாம்
என்று சொல்கின்றார்.
நற்செய்தியில் வருகின்ற பரிசேயர்களைப் போன்று பலரும் இன்றைக்குத்
தங்களை நல்லவர்கள் போன்று காட்டிக்கொள்வதற்கும் அடுத்தவர்மீது
தேவையில்லாத்தையும் திணிப்பதற்கும் இருக்கின்றார்கள். நாமும்
கூட சில சமயங்களில் தேவையில்லாத கருத்துகளை அடுத்தவர்மீது
திணிக்க முயற்சிக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய இறைவார்த்தைமூலம்
நாம் சிந்தித்தது போன்று, யார்மீதும் எதையும் திணிக்காமல் இருக்க
முயற்சி செய்வோம். அதே நேரத்தில் எதையும் அர்த்தமில்லாமல் பின்பற்றுவதையும்
தவிர்ப்போம்.
சிந்தனை
'எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது என்பது வழிபாடு
கிடையாது. அதற்குப் பெயர் சிலைவழிபாடு.' என்பார் ஓர் அறிஞர்.
ஆகையால், இவ்வார்த்தையை உள்வாங்கியவர்களாய் பொருள் உணர்ந்து
வழிபடுவோம்; யார்மீதும் எதையும் திணிக்காதிருப்போம். இறைவனுக்கு
உகந்த வழியில் நடந்து, இறையருள் நிறைவாகப் பெறுவோம்.
|
|