Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கிழமை நாள் வாசகம்

                 8 அக்டோபர் 2017  
 

முதல் வாசகம்

ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 5: 1-7

என் நண்பரைக் குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன். செழுமைமிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக் கொத்திக் கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைக் கொடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்; மாறாக, காட்டுப் பழங்களையே அது தந்தது.

இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்கஇ காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?

என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: "நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப் படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.''

படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல

திபா 80: 8,11. 12-13. 14-15. 18-19 (பல்லவி: எசா 5: 7a)

பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.

8 எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றைக் கொண்டு வந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர். 11 அதன் கொடிகள் கடல் வரையும் அதன் தளிர்கள் பேராறு வரையும் பரவின. பல்லவி

12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! 13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! 15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்ந்த மகவைக் காத்தருளும்! பல்லவி

18 இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். 19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி


இரண்டாம் வாசகம்

அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-9

சகோதரர் சகோதரிகளே, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.

அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.

இறுதியாக, சகோதரர் சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்.

நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.


 நற்செய்தி வாசகம்

வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: "மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக் குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார்.

தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்.

மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார்.

அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார்.

அவர்கள் அவரிடம், "அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள்.

இயேசு அவர்களிடம், "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

பொதுக்காலம் இருபத்தி ஏழாம் ஞாயிறு


அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்

அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்திருந்தார். ஊர் மக்கள் அவரது முகத்தைப் பார்த்தபோது அவரிடத்தில் தெய்வீகச் சாயல் குடிகொண்டிருந்தது தெரிந்தது. எனவே எல்லாரும் அவரிடத்தில் வந்து ஆசிபெற்றுச் சென்றனர். ஒருசிலர் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையைச் சொல்லி அதற்குத் தீர்வு பெற்றுச் சென்றனர். இன்னும் ஒருசிலர் தங்களுடைய உள்ளத்தில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் பெற்றுச் சென்றனர். இப்படியே மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர் எல்லாரையும் ஒரே இடத்தில் அமரச் சொல்லிவிட்டு, போதிக்கத் தொடங்கினார்.

அப்போது கூட்டத்திலிருந்து ஓர் இளைஞன் எழுந்து, "சுவாமி, என்னுடைய உள்ளத்தை நீண்டநாட்களாக அரித்துக்கொண்டிருந்த கேள்வி இது, நிறையப் பேரிடம் இக்கேள்வியைக் கேட்டும் அதற்கான சரியான பதில்லை. நீங்கள்தான் அதற்கு பதில்சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டு, "இறந்தபிறகு நாம் என்ன ஆவோம்?" என்று கேட்டான். அதற்கு முனிவர் ஒன்றுமே பதில் சொல்லாமல், சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அங்கே கூடியிருந்த மக்களும் முனிவர் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

சிறிது நேர இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்தார், "மகனே! நாம் இறந்த பிறகு என்ன ஆவோம் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் இறப்புக்கு முன்பாக நாம் என்ன ஆவோம் என்பது எனக்குத் தெரியும். கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வென்னும் கொடையை சரியான முறையில் பயன்படுத்தினால் அல்லது அர்த்தமுள்ள முறையில் வாழ்ந்தால், கடவுளின் ஆசிர்வாதம் நிச்சயம் நமக்கு உண்டு. அதைவிட்டுவிட்டு, நாம் இறந்தபிறகு என்ன ஆவோம் என்ற பயத்தில் வாழ்ந்தால் இந்த மண்ணக வாழ்வைக்கூட சரியான முறையில் பயன்படுத்தாத பாவியாகிவிடுவோம்" என்றார். முனிவரின் வாயிலிருந்து விழுந்த இந்த பொன்மொழிகளைக் கேட்ட இளைஞனும், ஏன் அந்த ஊர் மக்களுமே ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை அர்த்தமுள்ளவிதத்தில், பொருள் உள்ள விதத்தில் பயன்படுத்தவேண்டும். அதுதான் கடவுளுக்கு பிரியமுள்ளதாக இருக்கும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

பொதுக்காலத்தின் இருபத்தி ஏழாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் சிந்தனை "அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வோம்" என்பதாகும். நாம் எப்படி அர்த்தமுள்ள வாழ்வு வாழலாம் என்பதை குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

விக்டர் ஹியூகோ என்ற அறிஞர் எது வாழ்க்கை என்பதற்கு ஒரு விளக்கத்தைத் தருவார், "வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பது, அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்று" என்று. இதையே ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "நீங்கள் மிகுந்த கனிதந்து என்னுடைய சீடராக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய தந்தைக்கு மாட்சி அளிக்கிறது" என்று (யோவான் 15:8). ஆம், மனிதராகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனியை - பலனைத் - தரவேண்டும். அதுதான் அர்த்தமுள்ள வாழ்வாகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் உவமையில் நிழக்கிழார் ஒருவர் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை தொழிலாளர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு, நீண்டநாட்களுக்கு பிறகு தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து குத்தகைப் பணத்தை வாங்கிவருமாறு தனது பணியாளர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களோ குத்தகைப் பணத்தைத் தராமல், பணியாளர்களை அடித்து, உதைத்து அனுப்புகிறார்கள். நிலக்கிழார் மேலும் சில பணியாளர்களை அவர்களிடம் அனுப்புகிறபோது அவர்களையும் அவர்கள் அவ்வாறே செய்கிறார்கள். இறுதியாக அவர் தன்னுடைய ஒரே மகனை அனுப்புகிறபோது, அவர்கள் அவரைக் கொன்றுபோட்டு விடுகிறார்கள். இதனால் சினம் கொண்ட நிலக்கிழார் அந்த பொல்லாத தோட்டத் தொழிலாளர்களை அடித்து விரட்டி, உரிய காலத்தில் குத்தகையைத் தரும் பணியாளர்களிடம் திராட்சைத் தோட்டத்தை ஒப்படைக்கின்றார்.

ஒருவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரிவரச் செய்யவேண்டும், அப்படி இல்லையென்றால் அவர் சரியான தண்டனை பெறுவார் என்பதை இயேசு கூறும் இந்த கொடிய திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் உவமையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

உவமையில் வரும் திராட்சைத் தோட்டம்தான் நாம். எப்படி நிலக்கிழார் திராட்சைத் தோட்டத்தை வேலி போட்டு, பிழிவுக்குழி காவல்மாடம் அமைத்து நன்றாக பராமரிக்கிறாரோ அது போன்றுதான் கடவுளும் நமக்கு பல்வேறு வாய்ப்பு வசதிகளைத் தந்து, அருமையான சூழ்நிலைகளை அமைத்துத் தந்து, நம்மை நன்றாக வளரச் செய்கிறார். இப்படியெல்லாம் பாதுகாத்துப் பராமரிக்கும் கடவுளுக்கு நாம் தகுந்த பலனைத் தரவில்லை என்றால் அது நம்மேல் நாமே சாபத்தை வருவித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களை திராட்சைத் தோட்டத்திற்கு ஒப்பிடுகிறார். கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை வழங்கினார். அவர்களை வழிநடத்துவதற்காக இறைவாக்கினர்கள், நீதித்தலைவர்கள், அரசர்களைத் தந்தார். அப்படியிருந்தும் அவர்கள் உண்மைக் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போலிதெய்வங்களை வழிபட்டார்கள். அதனால் கடவுள் சினம்கொண்டு அவர்களை தண்டிக்கின்றார், அந்நியர்களால் நாடு கடத்தப்பட அனுமதித்தார்.

இஸ்ரயேல் மக்களை கடவுள் எந்தளவுக்கு ஆசிர்வதித்தாரோ அதுபோன்றுதான் கடவுள் நம்மையும் ஆசிர்வதித்திருக்கிறார். எனவே நாம் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவில்லை என்றால் அல்லது அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவில்லை என்றால் கடவுளது சாபத்தையும், தண்டனையையும் பெறுவது உறுதி.

அடுத்ததாக கடவுளுக்கு உகந்த அல்லது அர்த்தமுள்ள வாழ்வு வாழ நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம். தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், "உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். அவை யாவற்றையும் கடைபிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்" என்பார். நாம் நமக்கு உகந்த காரியங்களை அல்ல, கடவுளுக்கு உகந்த காரியங்களைச் செய்கின்றபோதுதான் கடவுளின் ஆசிர்வாதம் உண்டு என்பதுதான் பவுலடியாரின் ஆழமான செய்தியாக இருக்கின்றது.

ஆனால் பல நேரங்களில் நாம் நமக்குகந்த, நமக்கு விருப்பான காரியங்களையே செய்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் தன்னலத்தினால் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து, கடவுளின் விரும்பம் எது எனப் புரிந்துகொள்ளாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனாலேயே நாம் கடவுளுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளாமல் போய்விடுகின்றோம். இறைவாக்கினர் ஆமோஸ் புத்தகம் 5:14 ல் வாசிக்கின்றோம், "நன்மையை நாடுங்கள்; தீமையைத் தீடாதீர்கள். அப்போது படைகளின் ஆண்டவர் உங்களோடு இருப்பார்" என்று. எனவே வாழ்வின் எல்லாக் கணத்திலும் நன்மையான காரியங்களை மட்டும் நாடுவோம். அப்பொழுது நன்மையை அருளும் கடவுள் நமது நன்மையானதைச் செய்வார்.

ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கூடத்தில் சிறந்த கால்பந்தாட்ட அணி ஒன்று இருந்தது. அந்த அணி எங்கெல்லாம் போட்டிக்குச் சென்றதோ அங்கெல்லாம் வெற்றிமாலையை பரிசாகச் சூடிவந்தது. அந்தளவுக்கு அந்த கால்பந்தாட்ட அணியில் இருந்த வீரர்கள் திறமையாக விளையாண்டார்கள். அதிலும் குறிப்பாக அந்த அணியில் முன்பக்கமாக (Frontline) விளையாண்ட ஜாக்சனும், நிர்மலும் சிறப்பாக விளையாண்டு வந்தார்கள். இதனால் அந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாது, பள்ளிக்கும் நல்ல பேரும் புகழும் கிடைத்தது.

ஆனால் சிறுது நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த அந்த கால்பந்தாட்ட அணி, இறங்கு முகத்திற்கு வரத்தொடங்கியது. காரணம் முன்பக்கமாக விளையாண்டு வந்த நிர்மல் சுயநலத்தோடு ஆடத்தொடங்கினான். அவன் தன்னோடு முன்பக்கமாக ஆடிவந்த ஜாக்சனுக்கு பந்தைக் கடத்தாமல் தானாகவே கோல் அடிக்க நினைத்ததால், நிறைய நிறைய நேரங்களில் பந்து இலக்கை நோக்கிச் சொல்லாமல், தாறுமாறாகச் சென்றது. இதனால் வெற்றிபெற வேண்டிய பல நல்ல போட்டிகள் தோல்வியில் போய் முடிந்தன. இந்த உண்மை அணியின் நிர்வாகிகளுக்குத் தெரியவே இல்லை. நன்றாக விளையாண்ட அணி எதற்காக இப்படி தோல்விகளைச் சந்திக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தார்கள். சில நாட்களுக்குப் பின்னர்தான் அந்த உண்மை தெரிந்தது.

எனவே அணி நிர்வாகம் சுயநல ஆட்டம் (Selfish Game) ஆடிய நிர்மலைக் கூப்பிட்டு எச்சரித்தது. "கால்பந்தாட்டம் ஒரு தனிநபர் ஆட்டம் கிடையாது. அது குழுவாக இணைந்து ஆடவேண்டிய ஆட்டம். ஆதலால் உன்னுடைய தன்னலத்தைத் தூர எறிந்துவிட்டு, ஆட்டத்தை ஆடு. இல்லையென்றால் உன்னிடத்தில் வேறொரு ஆளை நியமிக்கவேண்டி வரும்" என்று சொல்லி எச்சரித்தது. அப்போது நிர்மல் தன்னுடைய தவற்றை நினைத்து கண்ணீர் விட்டு அழுதான். இனிமேலும் தான் அப்படி சுயநல ஆட்டம் ஆடப்போவதில்லை என்று சொல்லி வாக்குறுதி தந்தான். அதன்பிறகு அவன் முன்பைவிட சிறப்பாக ஆடி, தன்னோடு ஆடிய ஜாக்சனுக்கும் பந்தைக் கடத்திக் கொடுத்து, பல வெற்றி வாகைகளைச் சூடி பள்ளிக்குப் பெருமை தேடித் தந்தான்.

நிர்மல் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தியதுபோல, நாமும் தன்னல நாட்டங்களைத் தூர எறிந்துவிட்டு, கடவுளுக்கு உகந்தது எதுவோ, கடவுளுக்கு விருப்பமானது எதுவோ அதன்படி நமது வாழ்வை அமைத்துக்கொள்வோம். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக ஆண்டவன் அருளை நிறைவாய்ப் பெறுவோம்.

ஏழ்மையிலும் நேர்மை, கோபத்திலும் பொறுமை, தோல்வியிலும் விடாமுயற்சி, வறுமையிலும் உதவி, துன்பத்திலும் துணிவு, செல்வத்திலும் எளிமை, பதவியிலும் பணிவு இதுவே வாழ்க்கை .


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!