|
|
05
அக்டோபர் 2020 |
|
பொதுக்காலம்
27ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக நற்செய்தி எனக்குக்
கிடைத்தது.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 6-12
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவின் பொருட்டு அருள்கூர்ந்து உங்களை அழைத்த அவரை
விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை
ஏற்றுக்கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது. வேறு
ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச்
சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத்
திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை. நாங்கள் உங்களுக்கு
அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ,
விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம்; இப்பொழுது மீண்டும் சொல்கிறேன்:
நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது
உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக! இப்படிப்
பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா?
நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும்
மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப்
பணியாளனாய் இருக்க முடியாது.
சகோதரர் சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க
விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து
வந்ததல்ல. எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை;
எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. மாறாக இயேசு
கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
=================================================================================
திபா 111: 1-2. 7-8. 9,10c . (பல்லவி: 5b)
Mp3
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றும் நினைவில்
கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.
1
நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும்
சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.
2
ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும்
அவற்றை ஆய்ந்துணர்வர். - பல்லவி
7
அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை;
அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.
8
என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும்
நீதியாலும் அவை உருவானவை. - பல்லவி
9
தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும்
நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு
உரியது.
10c
அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக்
கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும்
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எனக்கு அடுத்திருப்பவர் யார்?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37
அக்காலத்தில்
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன்,
"போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய
வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில்
நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக,
" "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும்,
முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது
நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு
கூர்வாயாக"என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாய்ச்
சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார்.
அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர்
யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.
அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலேமிலிருந்து
எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய
ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக
விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார்.
அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே
லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய்
விலகிச் சென்றார்.
ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில்
வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி,
காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி,
தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு
போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.
மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம்
கொடுத்து, "இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால்
நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.
"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர்
என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். அதற்குத்
திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு,
"நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
கலாத்தியர் 1: 6-12
"நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது
உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக"
நிகழ்வு
ஜப்பானில் உள்ள ஒரு பங்கில் பங்குப்பணியாளராக இருந்த அருள்பணியாளர்
ஒருவர், ஒருநாள் காலையில், ஒரு முக்கியமான ஆவணத்தைத் தயார்
செய்வதற்காகத் தான் இருந்த அறையின் சன்னல் கதவுகளை எல்லாம் திறந்துவைத்துவிட்டு,
ஆவணத்தைத் தயார்செய்யத் தொடங்கினார்.
அந்த நேரத்தில் இவரைப் பார்ப்பதற்குக் கிறிஸ்தவர் ஒருவர் வந்தார்.
அவர் சில நாள்களுக்கு முன்புதான் கிறிஸ்தவ மதத்தில்
சேர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும், இவர் பங்கில் வேதியராகப்
பணியாற்றி வந்தவரை அழைத்து, "இப்பொழுது நான் ஒரு முக்கியமான
ஆவணத்தைத் தயார்செய்துகொண்டிருக்கின்றேன். இந்த வேலையை முடிப்பதற்கு
எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும். நான் இந்த வேலையை
முடித்துவிட்டு வரும்வரைக்கும் வந்திருப்பவரிடம்
பேசிக்கொண்டிருங்கள்" என்றார். வேதியரும் அதற்குச் சரியென்று
சொல்லிவிட்டு வந்திருந்தவரோடு பேசத் தொடங்கினார்.
தான் தயாரித்துக்கொண்டிருந்த ஆவணத்தை மிக மும்முரமாகத் தயாரித்துக்கொண்டிருந்தாலும்,
வெளியே வேதியர், வந்திருந்த கிறிஸ்தவரோடு பேசுவது அருள்பணியாளருக்கு
அப்படியே கேட்டது. அந்த வேதியர் வந்திருந்த கிறிஸ்தவரிடம்
கிறிஸ்துவின் போதனைக்கும், திருஅவையின் போதனைக்கும் முரணான
செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர் கிறிஸ்தவராகி
சில நாள்களே ஆகியிருந்ததால், வேதியர் சொல்வது அனைத்தும் உண்மையென
அவர் மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே வேதியர்
சொன்ன நகைச்சுவைகளுக்கும் அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
ஆவணம் தயார்செய்கின்ற வேலை முடிந்ததும், அருள்பணியாளர் தன்னுடைய
அறையை விட்டு வெளியே வந்து, வந்திருந்தவரிடம் வந்த நோக்கத்தைக்
கேட்டுத் தெரிந்துகொண்டு, அதை நிறைவேற்றிவிட்டு அவரை அனுப்பி
வைத்தார். பின்னர் வேதியரை அழைத்த அருள்பணியாளர்,
"வந்திருந்தவரிடம் நீங்கள் பேசியதெல்லாம், என்னுடைய அறையின் இருந்து,
ஆவணத்தைத் தயார்செய்துகொண்டிருந்தபொழுது அவ்வப்பொழுது என்
காதில் விழுந்தது. நீங்கள் ஏன் வந்திருந்தவரிடம் கிறிஸ்துவின்
போதனைக்கும் திருஅவையின் போதனைக்கும் முரணான கருத்துக்களைப்
பேசினீர்கள்" என்றார். அதற்கு வேதியர், "நான் கிறிஸ்துவின் போதனைக்கும்,
திருஅவையின் போதனைக்கும் எதிராகப் பேசினாலும், வந்திருந்தவர்
மகிழ்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்தார் அல்லவா! அதைப் பாருங்கள்!"
என்றார்.
இதைக் கேட்டு கடுஞ்சினம்கொண்ட அருள்பணியாளர், "ஒருவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகக்
கிறிஸ்துவின் போதனைக்கும் திருஅவையின் போதனைக்கும் முரணான கருத்துகளைப்
பேசுவீர்களா...! இனிமேலும் இப்படியொரு செயலில் ஈடுபடாதீர்கள்"
என்று கடிந்துகொண்டார் (-Hilbert Wiesen)
இந்த நிகழ்வில் வருகின்ற வேதியர் எப்படி அருள்பணியாளரைப்
பார்க்க வந்திருந்த கிறிஸ்தவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக உண்மைக்குப்
புறம்பான கருத்துகளைச் சொன்னாரோ, அப்படிக் கலாத்தியாவில் இருந்த
இறைமக்களிடம் ஒருசில போலிப் போதகர்கள், பவுல் அறிவித்த நற்செய்திக்கு
முரணான நற்செய்தியை அறிவித்து வந்தார்கள். அதை அறிய வரும் பவுல்,
"நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியின்று மாறுபட்ட ஒன்றை யாராவது
உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக!" என்கின்றார்.
புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? அவர்
எத்தகைய சூழ்நிலையில் இத்தகைய வார்த்தைகளை எழுதினார்? என்பன
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூறிய போலிப் போதகர்கள்
"உங்களை விட்டு நான் சென்ற பிறகு ஓநாய்கள் உங்களுக்குள்
நுழையும் என்பது எனக்குத் தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாது
தாக்கும்" என்று புனித பவுல் எபேசு நகரில் இருந்த மூப்பர்களிடம்
கூறுவார் (திப 20: 29). அவர் சொன்ன இந்த வார்த்தைகள் கலாத்தியாவில்
இருந்த திருஅவையில் அப்படியே நடந்தன.
புனித பவுல் தன்னுடைய உடன்பணியாளரான பர்னபாவோடு கலாத்தியாவில்
நற்செய்தி அறிவித்து (திப 16:6), அங்கிருந்தவர்களைத் தனது
மூன்றாவது திருத்தூதுப் பயணத்தில் உறுதிப்படுத்தினார் (திப
18:23). இப்படி இருக்கையில், சிலர் பவுல் அறிவித்த
கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியைத் திரித்துக் கூறத் தொடங்கினார்கள்.
இதனால்தான் பவுல் அவர்களிடம், "நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியின்று
மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும்
அவர் சபிக்கப்படுக" என்கின்றார்.
புனித சொல்லும் இந்த வார்த்தைகள் நம்முடைய கவனத்திற்கு உரியவை.
இன்றுக்கும் ஒருசிலர் திருஅவையின் போதனைக்கும், கிறிஸ்துவின்
போதனைக்கும் எதிராகப் பேசி மக்களைத் திசை திருப்பிக்
கொண்டிருக்கின்றார்கள். இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருந்து,
கிறிஸ்துவின் போதனையில் உறுதியாக இருப்பது நல்லது.
சிந்தனை
"புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப் போல்
உங்களை நான் அனுப்புகிறேன்"என்பார் இயேசு (மத் 10: 3). ஆகையால்,
நாம் ஓநாய்கள் போன்று இருக்கும் போலிப் போதகர்களிடமிருந்து இறைமக்களைக்
காத்து, அவர்களை கிறிஸ்துவின் விழுமியங்களின் படி வழிநடத்தி,
நாமும் அதன்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 10: 25-37
"நீரும் அடுத்திருப்பவராய் இரும்"
நிகழ்வு
யூத இரபியான மோசஸைப் பற்றிச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது.
அன்று இரபி மோசஸ் வழக்கமாகப் போதிக்கும் தொழுகைக்கூடத்தில் ஒரு
விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் மக்கள் அனைவரும் அங்குத்
திரளாகக் கூடியிருந்தார்கள். தொழுகை நடக்கும் நேரம் வந்தது.
இரபி மோசஸ் அங்கு வரவில்லை.
நேரம் கடந்துகொண்ட போனது. இரபி மோசஸ் அப்பொழுதும் வராததால்,
தொழுகைக் கூடத்தில் இருந்தவர்கள், "நாம் தொழுகையைத் தொடங்குவோம்.
இரபி மோசஸ் இடையில் வந்து தொழுகையில் கலந்துகொள்ளட்டும்" என்று
பேசி முடிவெடுத்துவிட்டு, தொழுகையைத் தொடங்கினார்கள். தொழுகை
பாதி நடந்திருக்கும், அப்பொழுது இரபி மோசஸ் தொழுகையில் வந்து
கலந்துகொண்டார். பின்னர் தொழுகை வழக்கம் போல் தொடர்ந்தது.
தொழுகை நடந்து முடிந்ததும், எல்லாரும் இரபி மோசஸிடம்
வந்தார்கள். அவர்கள் அவரிடம், "இன்றைக்கு நம்முடைய
தொழுகைக்கூடத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்று
உங்களுக்கு நன்றாகவே தெரியும். பிறகு எதற்குத் தொழுகைக்கு
இவ்வளவு தாமதமாக வந்தீர்கள்?" என்றார்கள். அதற்கு அவர்,
"இன்றைக்கு நம்முடைய தொழுகைக்கூடத்தில் விழா ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கின்றது என்று எனக்கு நன்றாகவே தெரியும்;
ஆனால், வரும் வழியில் ஒரு குடிசை வீட்டிலிருந்து குழந்தை ஒன்று
அழுகின்ற சத்தம் கேட்டது. என்னால் அந்தக் குழந்தையை அப்படியே
அழவிட்டுவிட்டுத் தொழுகைக்கூடத்திற்கு வரமுடியவில்லை; அந்தக்
குழந்தையின் தாய் வெளியே எங்கோ போயிருந்தது தெரிந்தது. அதனால்
நான் அந்த வீட்டினுள்ளே சென்று, தாலாட்டுப் பாடி, குழந்தையைச்
சாந்தப்படுத்தி, தூங்க வைத்தேன். குழந்தை நன்றாக உறங்கிவிட்டது
என்று தெரிந்ததும், அங்கிருந்து கிளம்பி வந்தேன். அதனால்தான்
தாமதம்" என்றார்.
இப்படிச் சொல்லிவிட்டு அவர் அவர்களிடம், "தொழுகை
முக்கியம்தான்; ஆனால், அழுதுகொண்டிருக்கும் குழந்தையை அமைதிப்
படுத்துவது அல்லது தேவையில் உள்ள ஒருவருக்கு உதவுவது அதைவிட
முக்கியம்" என்றார்.
இந்த நிகழ்வில் வருகின்ற இரபி மோசஸ் அழுதுகொண்டிருந்த
குழந்தையை அமைதிப்படுத்தி அல்லது தேவையில் உள்ளவருக்கு உதவி
செய்து நல்ல சமாயரியராய், அடுத்திருப்பவராய் விளங்கினார்.
இன்றைய நற்செய்தி வாசமும் நாம் நல்ல சமாரியராக,
அடுத்திருப்பவராக வாழ அழைப்புத் தருகின்றது. நாம் எப்படி நல்ல
சமாரியராக, அடுத்திருப்பவராக வாழலாம் என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
பிறரன்பு, இறையன்புக்கு இணையான கட்டளை என்பதை உணர மறுத்தவர்கள்
இன்றைய நற்செய்தி வாசகம், திருச்சட்ட அறிஞர் ஒருவர்
இயேசுவிடம், "நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன
செய்யவேண்டும்?" என்று கேள்வி கேட்பதோடு தொடங்குகின்றது.
வழக்கமாக இயேசு தன்னிடம் கேள்வி கேட்பவரிடம் திரும்ப ஒரு
கேள்வியைக் கேட்டு, பதில் அளிப்பார். இன்றைய நற்செய்தி
வாசகத்திலும் அதுதான் நடக்கின்றது. நிலைவாழ்வை உரிமையாக்கிக்
கொள்ள நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்ட திருச்சட்ட
அறிஞரிடம் இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதி
இருக்கின்றது?" என்று கேட்க, அவர் அதற்கான பதிலைச் சொல்ல,
இயேசு அவரிடம், "அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்"
என்கிறார். ஆனால்; திருச்சட்ட அறிஞர் தன்னை நேர்மையாளர் எனக்
காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று
கேட்டதும்தான், இயேசு அவரிடம் நல்ல சமாரியர் உவமையைச்
சொல்கின்றார்.
இயேசு சொல்லும் நல்ல சமாரியர் உவமையில் வருகின்ற குருவும்
லேவியும், கள்வர்கள் கையில் அகப்பட்டுக் குற்றுயிராய்க் கிடந்த
மனிதருக்கு உதவி செய்யாமல் தங்கள் வழியில் செல்கின்றார்கள்.
இவர்கள் இறையன்புக்கு இணையான, "உன்மீது நீ அன்புகூர்வது போல்
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்ற கட்டளையை
நன்றாக அறிந்திருப்பார்கள். இருந்தாலும் அவர்கள் அடிபட்டுக்
கிடப்பவருக்கு உதவாமல் தங்கள் வழியில் செல்கின்றார்கள்.
பிறரன்பு, இறையன்புக்கு இணையானது என்பதை உணர்ந்த சமாரியர்
உவமையில் வரும் குருவும் லேவியும் குற்றுயிராய்க் கிடந்த
மனிதருக்கு உதவி செய்யாமல் சென்றபொழுது, யூதர்களால் வெறுத்து
ஒதுக்கப்பட்ட சமாரியர், தனது உயிருக்கு ஆபத்து வந்தாலும்
பரவாயில்லை என்று அடிபட்டுக் கிடந்தவருக்கு உதவுகின்றார்.
இவ்வாறு சமாரியர். நல்ல சமாரியராக மாறுகின்றார். இயேசு இந்த
உவமையைச் சொல்லிவிட்டுத் திருச்சட்ட அறிஞரிடம்
அடுத்திருப்பவராகச் செயல்பட்ட நல்ல சமாரியரைப் போன்று
செயல்படும் என்கின்றார்.
இயேசு திருச்சட்ட அறிஞருக்கு யார் அடுத்திருப்பவர் என்பதற்கான
விளக்கத்தைத் தந்தது மட்டுமல்லாமல், அவரே அடுத்திருப்பவராக
இருக்க வேண்டும் என்கிறார். ஆகையால், நாம் இறையன்பும்
பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர்ந்து,
அடுத்திருப்பவர்களாய் வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
"அன்பே திருச்சட்டத்தின் நிறைவு"(உரோ 13: 10) என்பார் புனித
பவுல். ஆகையால், நாம் அன்பே திருச்சட்டத்தின் நிறைவு என்பதை
உணர்ந்து, தேவையில் உள்ள யாருக்கும் உதவி செய்து, நல்ல
சமாரியர்களாக, அடுத்திருப்பவர்களாக வாழ்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|