Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                         30 அக்டோபர் 2017  
                                 

முதல் வாசகம்

கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25

சகோதரர் சகோதரிகளே! இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர் நோக்குவாரா? நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காகத் தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3)

பல்லவி: ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் மகிழ்ச்சியுறுகின்றோம்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2ab அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. பல்லவி

2cd "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். பல்லவி
==================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க

அல்லேலூயா! அல்லேலூயா! தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
======================================================================================

 
நற்செய்தி வாசகம்

கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, "இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின'' என்று கூறினார்.

மீண்டும் அவர், " இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

"பெரிய மாற்றங்களுக்கு வித்திடும் சிறியவர்கள்"

வில்லி ஹோப்சும்மர் (Willi Hoffsuemme) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய ஒரு குட்டிக் கதை.

காட்டில் இருந்த ஒரு பெரிய மரத்தில், பறவை ஒன்று கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அது தக்கதொரு சமயத்தில் நிறைய முட்டைகள் இட்டு அடைகாத்து வந்தது. ஒருநாள் அது இரைதேட வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது, அதனுடைய கூட்டில் இருந்த முட்டைகள் உடைந்துபோய் கிடந்தன. இதைப் பார்த்துப் பதறிப் போன அந்த பறவை யார் இந்தக் கொடுஞ்செயலைச் செய்திருப்பார் என்று சுற்று முற்றும் பார்த்தது. மரத்தின் அடியில் உள்ள பொந்தில் இருந்த கருநாகம்தான் தனது கூட்டிலிருந்த முட்டைகளை உடைத்துக் குடித்திருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு அந்தப் பறவைக்கு வெகு நேரம் ஆகவில்லை. எனவே, அந்தப் பறவை தன்னுடைய கூட்டிலிருந்து இப்படி முட்டைகளை உடைத்துக் குடிக்கின்ற கருநாகத்திடமிருந்து எப்படியாவது முட்டைகளைக் காப்பாற்றவேண்டும் என்று மரத்தில் இருந்த குரங்கின் உதவியை நாடியது.

அது பறவையிடம், " உன்னுடைய முட்டைகளை கருநாகத்திடமிருந்து நான் பாதுகாத்துத் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு கீழே கிடந்த கற்களைப் பொருக்கி மரத்தில் இருந்த பாம்பை நோக்கி எறியத் தொடங்கியது. இதைப் பார்த்த பறவை குரங்கிடம், " நீ பாம்பைக் கற்களால் எறியும்போது அந்தக் கற்கள் கூட்டில் இருக்கின்ற முட்டைகள் மீது படும் அல்லவா, அதனால் எனக்கு சேதம் மிக அதிகமாக ஏற்படும். அதனால் கற்களை எறிகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம்" என்று பறவை குரங்கிடம் கெஞ்சிக் கேட்டதால்இ குரங்கு தன்னுடைய முயற்சியிலிருந்து பின்வாங்கியது.

அந்நேரத்தில் அவ்வழியாக யானை ஒன்று வந்தது. அதனிடம் சென்ற பறவை தன்னுடைய நிலையை எடுத்துக் கூறியது. அதற்கு யானை, "கவலைப்படதே! இந்த மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிடுகின்றேன், அப்போது இந்த மரத்தில் இருக்கின்ற கருநாகமும் செத்துப் போகும்" என்றது. அதற்குப் பறவை அதனிடம், " அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். ஒருவேளை நீ மரத்தை வேரோடு பிடுங்கினாய் என்றால், என்னுடைய கூட்டில் இருக்கின்ற முட்டைகளும் விழுந்து உடைந்து போகும் அல்லவா, அதனால் தயவு செய்து அப்படிப்பட்ட காரியத்தில் ஈடுபடவேண்டாம்" என்று பறவை யானையை மிகவும் கெஞ்சிக் கேட்டது. யானை அதற்கு சரியென்று சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றது.

பெரிய விலங்குகளால் தமக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்று உணர்ந்த பறவை, மரத்தில் இருந்த சிற்றெறும்புகளின் உதவியை நாடியது. "சிற்றெறும்புகளே! நீங்கள் மட்டும் எனது பிள்ளைகளை கருநாகத்திடமிருந்து காப்பாற்றி விட்டால், உங்களுக்கு நானும் என்னுடைய பிள்ளைகளும் எந்நாளும் நன்றிக்கடன் பட்டிருப்போம்" என்றது. பறவை சொன்ன வார்த்தைகளைக் கேட்டு சிற்றெறும்புகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து, கருநாகத்தைச் சூழ்ந்துகொண்டு, அதனைக் கடித்துக் குதறிக் கொன்றுபோட்டன. சிற்றெறும்புகள் தனக்குச் செய்த உதவிக்காக பறவையும் அதனுடைய பிள்ளைகளும் அன்றிலிருந்து சிற்றெறும்புகளுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தன.

பெரியவர்கள் அல்ல, ஒன்றுக்கும் உதவாதவர்கள், சிறியவர்கள் என்று நாம் ஒதுக்கி வைப்பவர்கள்தான் உலகத்தின் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கின்றார்கள் என்கிற உண்மையை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகு விதையானது அளவில் சிறியது. ஆனால் அது வளர்ந்து மரமாகின்றபோது வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு பெரியதாக மாறுகின்றது. அது போன்றுதான் நாசரேத்து என்னும் சிற்றூரில் விதைக்கப்பட்ட இறையாட்சி என்னும் விதையானது, மரமாக நன்றாக வளர்ந்து எல்லா நாட்டினரையும், நாட்டு மக்களையும் உள்ளடக்கும் என்கிறார் இயேசு.

மத்தேயு நற்செய்தியில் வருகின்ற கடுகு விதை உவமைக்கும், லூக்கா நற்செய்தியில் வருகின்ற கடுகுவிதை உவமைக்கு ஒரு சில வித்தியாசங்கள் இருக்கின்றன. மத்தேயு நற்செய்தியாளர் கடுகுவிதையை எல்லா விதைகளிலும் சிறியது என்று சொல்வார். ஆனால் லூக்கா நற்செய்தியாளரோ அதற்கு அழுத்தம் தராமல், மரமானது வளர்ந்து எல்லாவிதமான பறைவைகளும் உள்ளடக்கும் என்பதற்கு அழுத்தம் தருகின்றார். திருச்சபையானது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் சொந்தம் கிடையாது, எல்லா இனத்தாருக்கும், எல்லா நாட்டினருக்கும் சொந்தமானது என்பதை லூக்கா நற்செய்தியாளர் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்கின்றார்.

ஆகவே, யாரையும் சிறியவர், எளியவர் என ஒதுக்கி வைக்காமல், அவர் வழியாகவும் கடவுள் அளப்பெரிய காரியங்களைச் செய்வார் என உணர்வோம், அது மட்டுமல்லாமல், திருச்சபை எல்லாருக்கும் சொந்தமானது என்பதை உணர்ந்து குறுகிய மனநிலைக் கடந்து செயல்படுவோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!