|
|
03
அக்டோபர் 2020 |
|
பொதுக்காலம்
26ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே நொந்து
கொள்ளுகின்றேன்.
யோபு நூலிலிருந்து வாசகம் 42: 1-3, 5-6, 12-17
யோபு ஆண்டவர்க்குக் கூறிய பதில்: நீர் அனைத்தையும் ஆற்ற வல்லவர்;
அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது.
"அறிவில்லாமல் ஆலோசனையை மறைப்பவன் எவன்?" என்று கேட்டீர்; உண்மையில்
நான்தான் புரியாதவற்றைப் புகன்றேன்; அவை எனக்கு விளங்கா அளவுக்கு
விந்தையானவை. உம்மைப் பற்றிக் காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்.
ஆனால் இப்பொழுது, என் கண்களே உம்மைக் காண்கின்றன. ஆகையால் என்னையே
நொந்து கொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம்
வருந்துகின்றேன்.
யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர்
அதிகமாக ஆசி வழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம்
ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும்
அவருக்கு இருந்தன. அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும்
பிறந்தனர். மூத்த மகளுக்கு எமிமா என்றும் இரண்டாவது மகளுக்குக்
கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரேன் அப்பூக்கு என்றும்
பெயரிட்டார். யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர்
நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு
அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.
அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும்,
பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறை வரை கண்டுகளித்தார்.
இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 119: 66,71. 75,91. 125,130 . (பல்லவி: 135a)
Mp3
=================================================================================
பல்லவி: உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச்செய்யும்!
66
நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம்
கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
71
எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம்
விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன். - பல்லவி
75
ஆண்டவரே! உம் நீதித்தீர்ப்புகள் நேரியவை என அறிவேன்; நீர் என்னைச்
சிறுமைப்படுத்தியது சரியே.
91
உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன;
ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. - பல்லவி
125
உம் ஊழியன் நான், எனக்கு நுண்ணறிவு புகட்டும்; அப்போது உம் ஒழுங்குமுறைகளை
அறிந்து கொள்வேன்.
130
உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு
நுண்ணறிவு ஊட்டுகிறது. - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,
உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே
மகிழுங்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24
அக்காலத்தில்
அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து,
"ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன"
என்றனர். அதற்கு அவர், "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்
போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின்
வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம்
கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.
ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ
வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன
என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.
அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, "தந்தையே,
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில்
ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார்.
"என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத்
தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும்
தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.
பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக,
"நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர்
பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள்
காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை.
நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள்
கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோபு 42: 1-3, 5-6, 12-17
"சோதனையிலும் உறுதியாக இருந்த யோபு"
நிகழ்வு
அது ஓர் உயர்நிலைப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம்
வகுப்புப் படித்து வந்தான் கிறிஸ்டோபர் என்ற மாணவன். படிப்பில்
சுமாரான மாணவனாக இருந்தாலும், இவன் ஒரு சிறிய செயலிலும்
நேர்மையாக நடந்துகொண்டான். இதனால் இவனை இவனுடைய வகுப்பு ஆசிரியருக்கு
மிகவும் பிடித்துப் போனது.
ஒருநாள் கிறிஸ்டோபர் இருந்த வகுப்பில் ஒரு தேர்வு நடந்தது. அது
முக்கியமான தேர்வும் கூட. அந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்
ஒன்றுக்குக்கூட, கிறிஸ்டோபருக்குப் பதில் தெரியவில்லை. ஆனாலும்
இவனுக்குப் பக்கத்தில் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் ஒருவன்
இருந்தான். அவன் தன்னுடைய தேர்வுத்தாளில் என்னென்ன எழுதினானோ,
அதுவெல்லாம் இவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அதனால் இவன் அந்த மாணவன்
எழுதியிருந்ததை அப்படியே ஓரிரு வரிகள் எழுதினான். பின்னர் என்ன
நினைத்தானோ தெரியவில்லை, தான் எழுதிய அந்த இரண்டு வரிகளையும்
அடித்துவிட்டு, எழுதுவதை நிறுத்திக் கொண்டான்.
தேர்வு நேரம் முடிந்ததும், ஒவ்வொரு மாணவரும் தான் எழுதிய
தேர்வுத்தாளை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்துவிட்டுத் தங்களுடைய
இடத்தில் அமர்ந்தபொழுது, கிறிஸ்டோபர் மட்டும், தான் எழுதிய
தேர்வுத் தாளை இரண்டாகக் கிழித்து வகுப்பு ஆசிரியரிடம
கொடுத்து, "ஐயா! நான் தெரியாமல் ஓரிரு வரிகளை என்னுடைய பக்கத்தில்
அமர்ந்திருந்த மாணவரைப் பார்த்துவிட்டு எழுதிவிட்டேன். அதனால்
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றான்.
இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த வகுப்பு ஆசிரியர், வகுப்பில்
இருந்த மற்ற எல்லா மாணவர்களையும் பார்த்து, "பார்த்தீர்களா! இந்தக்
கிறிஸ்டோபர் செய்த செயலை! தேர்வில் தனக்குத் தெரியாதவற்றைப்
பார்த்து எழுதுவதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தபொழுதும், அவ்வாறு
எழுதாமல் நேர்மையாக நடந்திருக்கின்றான். இந்தக் கிறிஸ்டோபருக்குப்
படிப்பு சரியாக வராவிட்டாலும், நேர்மைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு"
என்று வெகுவாகப் பாராட்டினார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்டோபர் என்ற மாணவன் எப்படித்
தனக்குச் சோதனைகள் வந்தாலும், பக்கத்தில் இருந்த மாணவனைப்
பார்த்து எழுதாமல் இருந்தானோ, அப்படி இன்றைய முதல் வாசகத்தில்
வரும் யோபு, தனக்குப் பல்வேறு துன்பங்கள் வந்தாலும், ஆண்டவரைப்
பழித்துரைக்காமல், ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக
இருக்கின்றார். இதனால் ஆண்டவர் அவருக்கு இரண்டு மடங்கு ஆசிகளை
வழங்குகின்றார். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
யோபுக்கு வந்த துன்பங்கள்
சாத்தான் ஆண்டவரிடம் பேசியதுபோல, அவன் யோபுவை சோதிக்கின்றான்.
அதனால் யோபு தன்னுடைய செல்வத்தையும், தன் பிள்ளைகளையும் இழக்கிறார்.
மட்டுமல்லாமல், உடலில் தொழுநோய் ஏற்படுகின்றது. இதைப்
பார்த்துவிட்டு யோபுவின் மனைவி அவரைக் கடவுளைப் பழித்துரைக்குமாறு
சொல்கின்றார்; அவருடைய நண்பர்கள் அவரிடம், நீ செய்த பாவத்தினாலேயே
உனக்கு இப்படியெல்லாம் ஏற்பட்டிருக்கின்றது என்று குற்றம் சுமத்துகின்றார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் யோபு ஆண்டவர்தாமே தனக்குப் பதில்
தரவேண்டும் என்று கேட்கின்றார். இதனால் ஆண்டவர் அவருக்கு மறுமொழி
தருகின்றார்.
இருமடங்கு ஆசி தந்த ஆண்டவர்
யோபு தனக்குத் துன்பங்களுக்குமேல் துன்பங்கள் வந்தாலும், தன்
மனைவி தன்னைக் கடவுளைப் பழித்துரைக்குமாறு சொன்னாலும், தன்னுடைய
நண்பர்கள் தன்னைக் குறித்துத் தவறாகப் பேசினாலும், அவர் கடவுளைப்
பழித்துரைக்கவோ அல்லது ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவோ
இல்லை. மாறாக, அவர் ஆண்டவர்மீது கொண்டயில் நம்பிக்கை மிக உறுதியாக
இருக்கின்றார். இதனால் ஆண்டவர் அவருக்கு இரண்டு மடங்கு ஆசிகளைத்
தருகின்றார்.
யோபுவின் வாழ்க்கை நமக்கொரு மிகச்சிறந்த பாடம். எப்படியெனில்,
அவர் துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் நடுவில் ஆண்டவர்மீதுகொண்ட
நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார். அதனால் அவர் ஆண்டவரிடமிருந்து
இரண்டு மடங்கு ஆசிகளைப் பெற்றார். நாமும், நற்செய்தியில் ஆண்டவர்
இயேசு சொல்வது போல், இறுதிவரை மனவுறுதியோடு இருந்தால் மீட்புப்
பெறுவோம் (மத் 24: 13)
ஆகையால், நாம் நம்முடைய வாழ்வில் வருகின்ற துன்பங்கள், சோதனைகளைக்
கண்டு, சோர்ந்துவிடாமல், ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையில் மிக
உறுதியாக இருந்து, அவரது அருளைப் பெறுவோம்.
சிந்தனை
"உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள்.
நான் உலகின்மீது வெற்றிகொண்டு விட்டேன்" (யோவா 16: 33) என்பார்
இயேசு. ஆகையால், நாம் துன்பங்களுக்கு நடுவில், யோபுவைப் போன்று
மனவுறுதியோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 10: 17-24
"உங்களுக்கு எதுவுமே தீங்கு
விளைவிக்காது"
நிகழ்வு
கிபி ஆறாம் நூற்றாண்டில், இத்தாலியில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய
புனிதர் புனித பெனடிக்ட். இறைவேண்டலுக்கும் நோன்பிற்கும்
மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்துவந்த இவருடைய பெயர்
எங்கும் பரவியது. இதனால் பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் இவரைப்
பார்க்கவும், இவரிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுச் செல்லவும் வந்து
போனார்கள்.
இதைக் கண்ட ஃபளாரன்டியுஸ் (Florentius) என்ற துறவியின் உள்ளத்தில்
பெனடிக்ட்மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்பட்டன. இதனால் அவர் பெனடிக்ட்டை
எப்படியாவது ஒழித்துக் கட்டவேண்டும் என்று சூழ்ச்சி செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் ரொட்டியில் நஞ்சு தடவி, அதைப் பெனடிக்ட்டிடம்
கொண்டு வந்து கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். பெனடிக்ட்டும் அந்த
ரொட்டியைச் சாப்பிட முற்பட்டபோது, அவர் வழக்கமாக உணவு உண்ணும்போது
அவரோடு உணவைப் பகிர்ந்து கொள்ள வரும் ஒரு காகம் அவரிடமிருந்த
ரொட்டியைப் பறித்துக் கொண்டு மேலே பறந்தது.
பெனடிக்ட் ஒன்றும் புரியாமல் விழித்தார். "வழக்கமாக இந்தக் காகம்
நம்மிடமிருந்து உணவைப் பெறத்தானே செய்யும், இன்றைக்கு ஏன் அது
நம்மிடமிருந்து ரொட்டியை பறித்துச் சென்றது" என்று தீவிரமாக
யோசிக்கத் தொடங்கினார் பெனடிக்ட். சிறிது நேரத்தில் ரொட்டியை
மேலே தூக்கிச் சென்ற காகம் அதை ஆள் நடமாட்டம் இடத்தில்
போட்டுவிட்டு அவரிடம் திரும்ப வந்தது.
இதற்கிடையில் தனக்கு ரொட்டி கொண்டுவந்த ஃபளான்டியுஸ் என்பவரிடத்தில்
ஒரு சில மாற்றங்கள் தெரிவதை பெனடிக்ட் உணர்ந்தார். உடனே அவர்,
"என்னை இவர் கொல்வதற்குத்தான் ரொட்டியில் நஞ்சு தடவிக் கொண்டு
வந்திருக்கிறார் போலும்... அதனால் தான் வழக்கமாக என்னிடமிருந்து
உணவைப் பெறும் காகம் அதை என்னிடமிருந்து பறித்துக் கொண்டு எங்கேயோ
போட்டுவிட்டு வந்திருக்கிறது. இறைவன் என்னை காப்பாற்றுவதற்காகத்தான்
இந்தத் காகத்தை இங்கு அனுப்பி இருக்கிறார்" என்று
நினைத்துக்கொண்டு, தன்னைக் கொல்ல முயன்ற அந்தத் துறவியை அங்கிருந்து
துரத்தி விட்டார்.
புனித பெனடிக்ட் தன்னைக் கொல்ல முயன்ற துறவியிடமிருந்து இறையருளால்
காப்பாற்றப்பட்டது, "உங்களுக்கு எதுவுமே தீங்கு இழைக்காது" என்று
இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் வார்த்தைகளை நமக்கும்
நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இயேசு இந்த வார்த்தைகளை எத்தகைய
சூழ்நிலையில் பேசினார், இவ்வார்த்தைகள் நமக்கு என்ன உண்மையை
வெளிப்படுத்துகின்றன என்பன குறித்து நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
மகிழ்வுடன் திரும்பி வந்த எழுபத்து இரண்டு சீடர்கள்
இன்றைய நற்செய்தியில் இயேசுவால் பணித்தளங்களுக்கு
அனுப்பிவைக்கப்பட்ட எழுபத்து இரண்டு சீடர்கள், பணித்
தளங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவதை குறித்து நாம்
வாசிக்கிறோம். அவ்வாறு அவர்கள் திரும்பி வருகின்ற பொழுது
மகிழ்வுடன் திரும்பி வந்ததாகவும் நாம் வாசிக்கிறோம். அவர்கள்
மகிழ்வுடன் திரும்பி வந்ததற்கான காரணம் இன்றைய நற்செய்தி
வாசகத்தில் சொல்லப்படுகிறது.
பேய்களை ஓட்ட அதிகாரம் கொடுக்கப்பட்டுப் பணித்தளங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்ட சீடர்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட
அதிகாரத்தைக் கொண்டு பேய்களை ஓட்டியபொழுது, அவைகளும்
அவர்களுக்கு அடிபணிகின்றன. அதனாலேயே அவர்களின் மகிழ்வோடு
பணித்தளங்களிலிருந்து திரும்பி வருகிறார்கள். அப்பொழுது தான்
இயேசு "...உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது" என்று
கூறுகிறார்.
உங்கள் பெர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது
பற்றியே மகிழுங்கள்!
சீடர்கள், பேய்கள் தங்களுக்கு அடிபணிகின்றன என்று நினைத்து
மகிழ்ந்திருக்கும்போது இயேசு அவர்களிடம், "உங்கள் பெயர்கள்
விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே
மகிழுங்கள்" என்று கூறுகிறார்.
இயேசு இவ்வாறு சொல்வதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள்
இருக்கின்றன. ஒன்று, சீடர்கள் தங்களுக்குப் பேய்கள்கூட
அடிபணிகின்றன என்று அதையே நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது,
அது அவர்களுடைய உள்ளத்தில் செருக்கையும் ஆணவத்தை வரவழைக்கும்.
அதனால் இயேசு தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி
மகிழ வேண்டாம் என்கிறார். இரண்டு, ஒருவருடைய பெயர்
விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பது என்பது மிகப்பெரிய பேறு.
திருவெளிப்பாடு நூலில், "நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களை
கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பண்ணிரண்டு
திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன" (திவெ 21:14)
என்று வாசிக்கிறோம். இதன்மூலம்சீடர்கள் விண்ணகத்தில் தங்கள்
பெயர்கள் எழுதப்பட்டிருப்பதை நினைத்து மகிழும் போது அவர்களுடைய
உள்ளத்தில் ஆணவம் அல்ல, அமைதியும் மனநிறைவும் பிறக்கும்
என்பதால் அப்படி கூறுகிறார் இயேசு.
நாமும் கூட பல வேளைகளில் சீடர்களைப் போன்று ஒருசில செயல்களை
செய்து விட்டு, எல்லாம் என்னால் தான் ஆனது என்று ஆணவத்தில்
ஆடலாம். உண்மையில் ஆட்சியும் புகழும் இறைவனுக்கு உரியவை. எனவே,
நாம் மிகுந்த தாழ்ச்சியோடு இறைப்பணியைச் செய்வோம்.
விண்ணகத்தில் இயேசுவின் வழியில் நடக்கிற ஒவ்வொருவருடைய பெயரும்
எழுதப்பட்டிருக்கும் என்பதை நினைத்து மகிழ்வோம்; இயேசுவின்
உண்மையான சீடர்களாய் வாழ்வோம்.
சிந்தனை
"சீடர் குருவை விட மேலானவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப்
பெரியவர் அல்ல" (மத் 10:24) என்பார் இயேசு. ஆகவே நாம் எல்லாப்
புகழும் இறைவன் ஒருவருக்கே உரியது என்ற மனநிலையோடு
தாழ்ச்சியோடு பணி செய்வோம். நம்முடைய பெயர்கள் விண்ணகதத்தில்
எழுதப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்து மகிழ்வோம். அதன் வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|