Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                 27 அக்டோபர் 2017  
                                 

முதல் வாசகம்
சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25a

சகோதரர் சகோதரிகளே, என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.

நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது. அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!
 


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 119: 66,68. 76,77. 93,94 (பல்லவி: 68b)

பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.

66 நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி

93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர். 94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். பல்லவி


===========================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 11: 25

அல்லேலூயா! அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
==========================================================================
 
நற்செய்தி வாசகம்

நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.

வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

இறைவனோடும் அயலாரோடும் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்வோம்!

ஒருவனுக்குத் தன்னுடைய மோசமான குணத்தைப் பற்றிக் கவலை ஏற்பட்டது. அதனால் அவன் வேதனையும் அவமானமும் அடைந்தான். எனவே ஒரு குருவானவரை அணுகி, "சுவாமி! நான் மோசமான குணம் உடையவன். அதனால் நிறையத் தொல்லைகளும், மனவேதனையும் உண்டாகின்றது. என் வாழ்க்கைத் துயரம் நிறைந்தாக உள்ளது" என்று முறையிட்டான்.

குருவானவர் அனுதாபத்தோடு அவன் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு, " சரி, அதற்கு ஏதாவது செய்யலாம். உன் மோசமான குணத்தைக் காட்டு பாக்கலாம்" என்றார். "அதை எப்படிக் காட்டுவது? கஷ்டமாயிற்றே" என்றான் வந்தவன்.

"சரி பரவாயில்லை! உன்னிடம் உள்ள பொருட்களையாவது காட்டு" என்றார் குருவானவர். அவன் தன் வசமிருந்த பணம், பேனா, கைக்கடிகாரம் என எல்லாவற்றையும் எடுத்து நீட்டினான்.

"நல்லது! இப்போது கவனி. உன்னிடமிருந்த பொருட்களையெல்லாம் - உனக்குச் சொந்தமான பொருட்களையெல்லாம் - உன்னால் காட்ட முடிந்தது. ஆனால் உன் வசமில்லாத நீ சொல்லும் மோசமான குணங்களை உன்னால் காட்ட முடியவில்லையே! ஏன்?, ஏனென்றால், உண்மையிலேயே உன்னிடம் அவை இல்லை, எங்கிருந்தோ வந்தவை. உனக்குச் சொந்தமில்லாததை உனக்கு உரியதாகச் சொந்தம் கொண்டாடுகின்றாய். இப்படிச் சொந்தம் கொண்டாடுவதை முதலில் விடு. திரும்பத் திரும்ப "நான் மோசமான குணம் உடையவன், எனக்கு மோசமான குணம் உள்ளத" என்று எண்ணுவதை முற்றாக விட்டுவிட்டு, உன் பாவங்களை குருவாகிய என்னிடத்தில் அறிக்கையிட்டுவிட்டு, கடவுளோடும் சக மனிதர்களோடும் நல்லுறவை ஏற்படுத்திக் கொள், அப்போது உன்னுடைய உள்ளத்திற்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்" என்றார்.

குருவானவர் சொன்னது போன்று அவன் தன்னுடைய பாவங்களை எல்லாம் அவரிடம் அறிக்கையிட்டுவிட்டு, கடவுளோடும் சகோ மனிதர்களோடும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு, திருந்திய மனிதனாய் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் மனிதனைப் போன்று நாம் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனந்திரும்பி இறைவனோடும் அயலாரோடும் நல்லுறவை - ஒப்புரவை - ஏற்படுத்திக்கொண்டு வாழும்போது அதிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துகொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களை சிறையில் அடிப்பார். கடைசிக் காசுவரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து போகமாட்டீர்" என்கின்றார்.

இயேசு கூறும் இவ்வார்த்தையை இரண்டு விதங்களில் எடுத்துக்கொள்ளலாம். ஒன்று அப்படியே எடுத்துக் கொள்வது, இன்றொன்று இயேசு கூற விளைவதன் உட்பொருளை எடுத்துக்கொள்வது. இரண்டு விதங்களிலும் இயேசுவின் வார்த்தைகள் ஆழமான அர்த்தம் கொண்டவையாகவே இருக்கின்றன.

முதலில் இயேசுவின் வார்த்தைகளை அப்படியே எடுத்துச் சிந்தித்துப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, நமக்கும் நமது எதிராளிக்கும் இடையே இருக்கக்கூடிய பிணக்கை, பிரச்சனையை இருவருக்கும் உள்ளாகவே பேசித் தீர்ப்பது மிக நல்லது. அதை விடுத்துவிட்டு, பிரச்னையை நடுவர் மன்றத்திற்கு எடுத்துக்கொண்டு போனால், பிரச்சனை இன்னும் பெரிதாகுமே ஒழிய, அது தீர்வதற்கான வழியே இல்லை. அதைத்தான் ஆண்டவர் இயேசு உங்களுக்கும் உங்கள் எதிரிக்கும் இடையே இருக்கின்ற வழக்கை வழியிலே தீர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

அடுத்ததாக, இயேசுவின் வார்த்தைகளில் இருக்கக்கூடிய உட்பொருள் என்னவென்று இப்போது பார்ப்போம். ஆண்டவர் இயேசு "ஆட்சியாளர் நடுவர் மன்றம" என்று சொல்வதை இறுதித் தீர்ப்பு என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாம். இறுதித் தீர்ப்புக்கு இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் உள்ளாகவேண்டும். ஆனால் அந்த இறுதித் தீர்ப்புக்கு காலங்கள் இருக்கின்றன. எனவே, குறிப்பட்ட அந்த கால இடைவெளிக்குள் கடவுளுக்கும் நமக்கும் இடையே பாவத்தினால் முறிந்துபோன உறவைப் புதுபித்துக்கொண்டு, அவரோடு நல்லுறவோடு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றுதான் இயேசு கூறுகின்றார். ஒருவேளை நாம் பாவத்தினால் கடவுளோடு நமக்கிருந்த உறவினை முறித்துக்கொண்டு விட்டு, அதனைச் சரிசெய்யாமலே, தொடர்ந்து பாவத்திலே பாவத்தில் வாழ்ந்துகொண்டிருந்தோம் என்றால், இறுதித் தீர்ப்பின்போது அதற்கான தண்டனையை "நடுவராகிய" இறைவனிடமிருந்து பெறுவது உறுதி. எனவே தான் நாம் கடவுளோடு நமக்கிருக்கும் உறவை வலுப்படுத்திக் கொள்வது தேவையாக இருக்கின்றது.

ஆகவே, பாவத்தினால் கடவுளை விட்டு விலகி இருக்கும் நாம், அவரோடு ஒப்புரவாகி, அவரது அன்பில் என்றும் நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!