Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                 26 அக்டோபர் 2017  
                                 

முதல் வாசகம்

 நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 19-23

சகோதரர் சகோதரிகளே! நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள்.

அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள். நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய் இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை.

அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப் படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின் முடிவு சாவு அல்லவா?

ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு. பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா 40: 4a)

பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


===========================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

பிலி 3: 8-9

அல்லேலூயா! அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.

==========================================================================
 
நற்செய்தி வாசகம்

அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 " மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன்"

கிராமப்புறங்களில் இன்றைக்கும் சொல்லப்படக்கூடிய கதை இது.

தருமமே செய்ய விரும்பாத கிழவி அவள். இறக்கும் தருவாயில் யாராவது குடிதண்ணீர் கேட்டாலும் தர மறுப்பவள். வயதான காலத்திலும், தன் சொந்த உபயோகத்திற்காக, உரலில் நெல்லை உலக்கையால் குத்திக் கொண்டிருந்தாள்.

அப்போது, "அம்மா, பிச்சை போடுங்க" என்று ஒரு குரல் கேட்டது. கிழவி முதலில் வாயாலே, "போ போ" என்று விரட்டினாள். வந்த பிச்சைக்காரன் போகவில்லை. தன் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியபடி கேட்டுக் கொண்டிருந்தான். கோபமான கிழவி, உலக்கையைத் தூக்கி, "போ போ" என்று விரட்டினாள். வேறு வழியில்லாமல் பிச்சைக்காரன் நகர்ந்தான்.

சிறிது நேரம் கழித்து கிழவி மரணமடைந்தாள். எனவே, அவள் நடுத்தீர்ப்புக்காக மேலே எடுத்துச் செல்லப்பட்டாள்.

அரியணையில் வீற்றிருந்த கடவுள் பேதுருவிடம், "கிழவி ஏதாவது தர்மம் செய்திருக்கின்றாளா?" என்று கேட்டார். உடனே பேதுரு தன் பேரேட்டைப் புரட்டியபடி, "ம்ம் ஏதுமில்லை... ஆ... ஒரு சமயம் பிச்சைக்காரனை உலக்கையால் துரத்தும்போது, அதில் ஒட்டியிருந்த ஒரு மணி அரிசி பிச்சைப் பாத்திரத்தில் விழுந்தது" என்றார். "அப்படியா... அப்படியானால் ஒரு மணி அரசிக்கு ஈடாக ஒரு கண நேரம் இறைதரிசனம், அதன்பிறகு இவரை நரகத்திற்கு அனுப்பி வையுங்கள்" என்றார் கடவுள்.

ஒவ்வொருவரும் அவருடைய செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கப்படும் என்கின்ற உண்மையை இந்தக் கதையானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு " மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்" என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தையை தொடக்கத்தில் நாம் படிக்கின்றபோது அது சற்று அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கின்றது. ஆனால், உண்மையில் இயேசு என்ன கூற விளைகின்றார் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

யூதர்கள் தீ என்பதை இறுதித் தீர்ப்போடு தொடர்புபடுத்திப் பார்த்ததாக விவிலிய அறிஞராகிய வில்லியம் பார்க்லே என்பவர் கூறுவார். அந்த வகையில் பார்க்கின்றபோது இயேசு இந்த உலகத்திற்கு இறுதித் தீர்ப்பினை வழங்க வந்தார் என்பதாக நாம் புரிந்துக்கொள்ளலாம். யோவான் நற்செய்தி 5:22 ல் இவ்வாறு வாசிக்கின்றோம், "தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்பு கொடுப்பது போல மகனுக்கும் மதிப்புக் கொடுக்கவேண்டுமென தீர்ப்பளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தீர்ப்பளிக்கும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதை இவ்வார்த்தைகள் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

கடவுள் எல்லா மக்களுக்கும் தீர்ப்பளிப்பார் என்று நினைத்த யூதர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதால், தாங்கள் செய்யும் குற்றங்களை கடவுள் கண்டுகொள்ளமாட்டார்; பொறுத்துக்கொள்வார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவோ தான் ஆள்பார்த்து செயல்படாதவர் என்பதை பல நிகழ்வுகள் வழியாகவும் போதனைகளின் வழியாகவும் நிரூபித்துக்கட்டுகின்றார். எனவே நாம் இயேசுவிடமிருந்து நல்லதொரு தீர்ப்பினைப் பெறவேண்டும் என்றால், நாம் அவருக்கு உகந்த நல்ல வாழ்க்கை வாழவேண்டும்.

யூத குலத்தில் பிறப்பதனாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறப்பதனால் மட்டும் இறுதித் தீர்ப்பு நடக்கின்றபோது நாம் இயேசுவிடமிருந்து சலூகைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய வாழ்க்கை இறைவனுக்கு உகந்ததாக இருக்கின்றபோது மட்டுமே நாம் இறைவனிடமிருந்து, அவர் மகன் இயேசுவிடமிருந்து நல்லதொரு தீர்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை, ஆதலால் இறைவன் தங்கள் மீது (தீர்ப்பிடுவதில்) பரிவு காட்டுவார் என்று யூதர்கள் நினைத்து வாழ்ந்து வந்தார்கள். அப்போதுதான் திருமுழுக்கு யோவான் அவர்களைப் பார்த்து, ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர்" என்கிறார். (மத் 3:9)

ஆகவே, நாம் யாராக இருந்தாலும், எந்தக் குடியில் பிறந்தாலும் நம்முடைய வாழ்க்கை இறைவனுக்குப் பிரியமுள்ளதாக இருக்கச் செய்யவேண்டும். இறைவனுக்குப் பிரியமுள்ளதாக நம்முடைய வாழ்க்கை இருக்கவேண்டும் என்றால், நாம் ஆண்டவர் இயேசு போதித்த போதனைகளின் படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் இறைவனிடமிருந்து நல்லதொரு தீர்ப்பினை பெறமுடியும்.

எனவே, இறைவனின் கடைக்கண் பார்வை நம்மீது பட நாம் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!