Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                 23 அக்டோபர் 2017  
                                 

முதல் வாசகம்

நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.


திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 20-25

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஆபிரகாம் ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப் பெருமைப்படுத்தினார். தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர் என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.

ஆகவே "அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். '' நீதியாகக் கருதினார்'' என்று எழுதியுள்ளது அவரை மட்டும் குறிக்கவில்லை; நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.

நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)

பல்லவி: தம் மக்களைத் தேடி வந்த இஸ்ரயேலின் ஆண்டவரைப் போற்றுவோம்.

69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். பல்லவி

71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72-73 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். பல்லவி

74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். பல்லவி


===========================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

==========================================================================
 
நற்செய்தி வாசகம்

நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார்.

பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: " செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், "நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!" என்று எண்ணினான். ஹஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, " என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்'' என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

ஆனால் கடவுள் அவனிடம், "அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

  " எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்"

ஒரு ஊரில் பெரியசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையைத் தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பரான பரமுவிடம் நடந்ததைக் கூறிப் புலம்பினார்.

சில நாட்கள் கழித்து பரமு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதைக் கண்டார். அந்தப் பை பெரியசாமியினுடையது எனத் தெரிந்துகொண்டு பரமு அதை அவரிடம் கொடுத்தார். பரமுவிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக்கொண்ட பெரியசாமி இதை வைத்து ஒரு திட்டம் தீட்ட நினைத்தார். அவர் பரமுவிடம், "நான் இந்தப் பையில் 40 தங்க நாணயங்களை வைத்திருந்தேன். இந்தப் பையில் இப்போது 30 தங்க நாணயங்களே உள்ளன, அதனால் மீதமிருக்கும் 10 நாணயங்களை திரும்பித் தரவேண்டுமென பரமுவிடம் கூறினார். பரமுவிற்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது.

பரமுவோ மிகவும் நல்லவர். பிறரது பொருட்களுக்கு ஆசைப்படாத அவரது குணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதனால் இந்தக் குழப்பத்திற்கு முடிவு கட்ட நண்பர்கள் இருவரும் ஊர்த்தலைவரிடம் சென்றனர். விவரத்தைக் கேட்ட ஊர்த்தலைவர், பெரியசாமியிடம், "நீ எவ்வளவு தங்க நாணயங்களைத் தொலைத்தாய்?" எனக் கேட்டார். அதற்கு அவர், " 40 நாணயங்கள் எனப் பொய் கூறினார். இப்போது ஊர்த்தலைவர் பரமுவைப் பார்த்து, " நீ எவ்வளவு தங்க நாணயங்களைக் கண்டெடுத்தாய்?" என்றார். அதற்கு அவர், " 30 தங்க நாணயங்கள்" என்று பதில் கூறினார்.

இருவரின் பதிலையும் கேட்ட ஊர்த்தலைவர் பெரியசாமியைப் பார்த்து, " பரமு கண்டறிந்திருப்பது வெறும் 30 தங்க நாணயங்கள் உள்ள தங்கப்பை.... நீ தொலைத்திருப்பதோ 40 தங்க நாணயங்கள் உள்ள தங்கப்பை. எனவே இது உன்னுடையதாக இருக்க முடியாது. அதனால் அந்த தங்கப் பையினை பரமுவிடமே கொடுத்துவிடு. இனி யாராவது 40 தங்க நாணயங்களைக் கொண்டு வந்தால் உனக்கு சொல்லி அனுப்புகிறேன், இப்போது நீ கிளம்பலாம்" என்றார். பின்னர் பரமுவைப் பார்த்த தலைவர், "நீ கண்டுபிடித்திருப்பது பெரியசாமியின் தங்க நாணயங்கள் கிடையாது. எனவே இதை நீ வைத்துக்கொள்ளலாம்" என்றார்.

திருடனுக்குத் தேள் கொட்டிய கதை போல், ஊர்த்தலைவரின் தீர்ப்பைக் கேட்ட பெரியசாமிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பரமு பெரியசாமியைப் பார்த்து, "இனி என் நண்பனாக இருக்க உனக்குத் தகுதி கிடையாது" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பேராசையோடு தான் கூறிய பொய்யால் தனக்கு நேர்ந்த நஷ்டத்துடன், நல்ல நண்பரையும் இழந்ததையும் எண்ணி வருத்தப்பட்டார் பெரியசாமி.

தன் நண்பரிடம் பெருந்தன்மையோடு செயல்பட்டிருக்க வேண்டிய பெரியசாமி, இப்படி பேராசையோடு செயல்பட்டதால் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதி ஆனார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் ஒருவர், "போதகரேஇ சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்" என்று கேட்கின்றார். வழக்கமாக மக்கள் யூத இரபிகளிடம் தங்களுடைய வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லுமாறு கேட்பார்கள். ஆண்டவர் இயேசுவிடமும் அம்மனிதர் அப்படித்தான் தன்னுடைய சகோதரனுக்கும் தனக்கும் ஏற்பட்டிருக்கும் சொத்துப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு கேட்கின்றார். இயேசுவோ பணம் என்றால் எப்போதுமே தள்ளியே இருப்பார். ஆனாலும் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆண்டவர் இயேசு மக்களுக்கு ஒருசில விளக்கங்களைச் சொல்கின்றார். அப்படி இயேசு சொல்லக்கூடிய செய்திதான்,   " எவ்வகை பேராசைக்கும் இருங்கள்" என்பது. இயேசு தான் சொல்லும் செய்திக்கு விளக்கம் தருவதற்காக ஓர் உவமையையும் சொல்கிறார்.

இயேசு சொல்லும் உவமையில் வரக்கூடிய மனிதரிடம் இரண்டு முக்கியமான தவறுகள் இருக்கின்றன. ஒன்று. தன்னைத் தவிர வேறு யாரைப்பற்றியும் கவலைப் படாத நிலை. உவமையில் நான், எனது என்ற சொற்கள்தான் அதிகமாக வருகின்றன. ஆம், அந்த மனிதரது நிலம் நன்றாக விளைந்திருந்த போதும் அதனைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முன்வரவில்லை. அவற்றைத் தன்னோடு வைத்துக்கொள்ள விரும்பினர். பணக்காரர் செய்த இரண்டாவது தவறு இந்த உலகைப் பற்றி நினைத்தாரோ ஒழிய மறுஉலகைப் பற்றி நினைக்கவில்லை. ஒருவேளை அவர் மறுவுலகைப் பற்றி நினைத்திருந்தால், செல்வத்தை தன்னோடு சேர்த்து வைத்திருக்கமாட்டார். அவர் மறுவுலகைப் பற்றி நினைக்காததால்தான் இப்படி நடந்து கொள்கின்றார். இதனாலே அவர் அழிந்துபோகின்றார்.

பல நேரங்களில் நாமும் கூட உவமையில் வரும் அறிவற்ற செல்வந்தரைப் போன்று அடுத்தவரைப் பற்றி நினைக்காமல், மறு உலகைப் பற்றியும் நினைக்காமல் செல்வம் சேர்க்கவேண்டும் என்ற பேராசையில் சுயநலத்தோடு வாழ்ந்து வருகின்றோம். அதனாலேயே நாம் அழிந்து போகின்றோம்.

எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம், பேராசை என்னும் சுயநலச் சேற்றில் விழுந்து போகாமல், மற்றவரைக் குறித்த அக்கறையோடு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!