|
|
02
அக்டோபர் 2020 |
|
பொதுக்காலம்
26ஆம் வாரம்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம் தூய காவல் தூதர்கள் நினைவுக்கு உரியது.
காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?
யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 12-21; 40: 3-4
ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:
உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக் கட்டளையிட்டதுண்டா? வைகறையைத்
தன் இடமறிய வைத்ததுண்டா? இவ்வாறு, அது வையக விளிம்பைத்
தொட்டிழுத்து, பொல்லாதவரை அதனுள்ளிருந்து உதறித் தள்ளுமே!
முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல் மண்ணகம் வண்ணம் ஏற்றிய
ஆடையாயிற்று. அப்போது, கொடியவரிடமிருந்து ஒளி பறிக்கப்படும்;
அடிக்க ஓங்கிய கை முறிக்கப்படும்.
கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா? ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?
சாவின் வாயில்கள் உனக்குக் காட்டப்பட்டனவோ? இருள் உலகின் கதவுகளைக்
கண்டதுண்டோ நீ? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா? அறிவிப்பாய்
அதிலுள்ள அனைத்தையும் அறிந்திருந்தால்!
ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ! இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?
அதன் எல்லைக்கு அதனை அழைத்துப் போவாயோ? அதன் உறைவிடத்திற்கு
நேர்வழி அறிவாயோ! ஆம், அறிவாய்; அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;
ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!
யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி: இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ?
என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி
உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவே மாட்டேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 139: 1-3. 7-8. 9-10. 13-14ab . (பல்லவி: 24b)
Mp3
=================================================================================
பல்லவி: இறைவா! என்றும் உள்ள வழியில் என்னை நடத்துவீர்.
1
ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2
நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என்
நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3
நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள்
எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. - பல்லவி
7
உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது
திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?
8
நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்!
பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!
- பல்லவி
9
நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு
அப்பால் வாழ்ந்தாலும்,
10
அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப்
பற்றிக்கொள்ளும். - பல்லவி
13
ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின்
கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே!
14ab
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான்
உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை
என் மனம் முற்றிலும் அறியும். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b, 7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்
கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச்
செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறு பிள்ளைகளுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின்
திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவை அணுகி, "விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?" என்று
கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில்
நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: "நீங்கள் மனந்திரும்பிச் சிறு
பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத்
தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு
பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்;
கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின்
திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச்
சொல்லுகிறேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
யோபு 38: 1,12-21; 40: 3-4
"கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்"
நிகழ்வு
ஒரு துறவுமடத்திலிருந்த சீடர்கள், சீன ஞானி லாவோட்ஸின்
"அறிந்தவர் பேசுவதில்லை; பேசுபவர் அறிந்ததில்லை" என்ற வார்த்தைகளைக்
குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்நேரம் பார்த்து, துறவுமடத்தின் தலைவர் அங்கு வந்தார். அவர்
அவர்களிடம், "எதைக் குறித்து இவ்வளவு தீவிரமாக விவாதித்துக்
கொண்டிருக்கின்றீர்கள்" என்று கேட்டதற்கு அவர்கள், அவரிடம்
தாங்கள் விவாதித்துக் கொண்டிருந்ததைக் குறித்து எடுத்துச்
சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், "உங்களில் எத்தனை
பேருக்கு ரோஜா மலர் எப்படி மணக்கும் என்று தெரியும்?" என்றார்.
உடனே சீடர்கள் யாவரும் எனக்குத் தெரியும் என்று சொல்லித் தங்கள்
கைகளை உயர்த்தினார்கள்.
எல்லாரையும் ஒருமுறை உற்றுப் பார்த்த துறவுமடத்தின் தலைவர் அவர்களிடம்,
"உங்களில் யாராவது ஒருவர் ரோஜா மலர் எப்படி மணக்கும் என்பதை
வார்த்தைகளில் விவரித்துச் சொல்லுங்கள்" என்றார். அவர் இப்படிச்
சொன்னதுதான் தாமதம், சீடர்கள், அது மிகவும் கடினம் என்று
சொல்லி, ஒருவர் பின் ஒருவராகப் பின் வாங்கினார்கள். இதைப்
பார்த்துவிட்டுத் துறவுமடத் தலைவர் அவர்களிடம், "அறிந்தவர்
பேசுவதில்லை; பேசுபவர் அறிந்ததில்லை என்று லாவோட்ஸ் சொன்னதாகச்
சொன்னீர்கள் அல்லவா! அது ரோஜா மலர் எப்படி மணக்கும் என்று
தெரிந்தும், அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாமல் இருக்கின்றீர்களே
அதுபோன்றுதான் நீங்கள் கேட்ட கேள்வியும்" என்றார்.
ஆம், ஒருசிலவற்றை நாம் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும்
அறிந்துகொள்ள முடியாது. ஒருவேளை நாம் அறிந்திருந்தாலும், அதை
வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதுதான் உண்மை. இன்றைய முதல்
வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் தன்னுடைய அடியாரான யோபுவிடம்,
அதை அறிந்ததுண்டா? இதற்குக் கட்டளையிட்டதுண்டா? என்று
கேள்விக்கு மேல் கேள்வி கேட்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.
கடவுள் யோபுவிடம் ஏன் இப்படியெல்லாம் கேள்வி கேட்கவேண்டும்? இக்கேள்விகளுக்குப்
பின்னால் இருக்கும் உண்மை என்ன? என்பன குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
தான் அடைந்த துன்பங்களுக்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியாத
யோபு
ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய வழியில் நேர்மையாக நடந்தவர் யோபு.
இவருக்குத் துன்பங்களுக்கு மேல் துன்பங்கள் வருகின்றன.
குறிப்பாக இவரிடமிருந்த கால்நடைகள் இறந்துபோயின. இவருடைய
பிள்ளைகளும் இறந்தார்கள். இதனால் இவருடைய மனைவி இவரைக் கடவுளைப்
பழித்துரைக்குமாறு சொல்கின்றார்; இவருடைய நண்பர்களோ இவரிடம்,
நல்லவர் எவரும் துன்புறுவதில்லை; தீயவர்தான் துன்புறுவர். நீ
தீயவராய் இருப்பதால்தான் இப்படியெல்லாம் துன்புறுகின்றாய் என்று
இவர்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
உண்மையில் எந்தக் குற்றமும் செய்யாமல், ஆண்டவர் பார்வையில்
நேர்மையாக நடந்தவர் யோபு. அப்படியிருந்தும் தான் ஏன் இவ்வளவு
துன்புறவேண்டும் என்று யோபு ஒன்றும் தெரியாமல் தவிக்கின்றார்.
மட்டுமல்லாமல், ஆண்டவர் தாமே இதற்கு மறுமொழி கூறவேண்டும் என்கின்றார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஆண்டவர் யோபுக்கு மறுமொழி தருகின்றார்.
ஆண்டவர் யோபுக்குத் தந்த மறுமொழி
நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் ஒருசில நிகழ்வுகளும் சரி, உலகில்
நடக்கும் ஒருசில நிகழ்வுகளும் சரி, ஏன் நடக்கின்றன? எதற்காக
நடக்கின்றன? என்பனவற்றிற்கெல்லாம் காரணம் புரியாது. இதுபோன்றுதான்,
நேர்மையாக நடந்து வரும் தனக்கு ஏன் இவ்வளவு துன்பங்கள் என்று
காரணம் புரியாமல் தவித்தார் யோபு. அப்பொழுதுதான் கடவுள் தோன்றி
அவரிடம், "காலைப் பொழுதுக்குக் கட்டளையிட்ட துண்டா? கடலின் ஊற்றுவரை
போனதுண்டா? அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?" என்று
கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்கின்றார். ஆண்டவராகிய கடவுள்
யோபுவிடம் கேட்ட இக்கேள்விகளுக்கு யோபு, "என் வாயைப் பொத்திக்
கொள்வேன்" என்கின்றார்.
ஆம், மனிதர்களாகிய நம்மால் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள
முடியாது. இன்னும் சொல்லப்போனால், உயிரோடு இருக்கின்ற யாரும்
கடவுளை முழுமையாக அறிந்ததில்லை; கடவுளை முழுமையாக அறிந்த
யாரும் உயிரோடு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய
வாழ்க்கையில் இந்த துன்பங்களெல்லாம் ஏன் வருகின்றன? எதற்காக
நாம் இப்படித் துன்புறவேண்டும்? என்று நாம் கேள்வி எழுப்பிக்
கொண்டிருக்காமல், நன்மையே உருவான ஆண்டவர், தான் செய்யும் எதையும்
நமது நல்லதற்குத்தான் செய்வார் என்ற உணர்வோடு அவரிடம் நம்பிக்கை
கொண்டு வாழ்வதே தலைசிறந்தது.
ஆதலால், நாம் எல்லாம் வல்ல இறைவனிடம் நம்மையே ஒப்புக்கொடுத்து,
அவருடைய வழியில் நடக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என்
வழிமுறைகள் அல்ல (எண் 55: 8) என்பார் ஆண்டவர். எனவே, நாம் கடவுளின்
திட்டங்களைக் குறித்துக் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்காமல், அவருடைய
திட்டத்திற்குப் பணிந்து நடக்க முயற்சி செய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 10: 13-16
நாம் மனம் திருந்தியவர்களா? திருந்த மறுப்பவர்களா?
நிகழ்வு
தனது வீட்டருகே இருந்த ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றத்
தொடங்கிய ஹெலன், பள்ளிக்கூடம் விட்டு, மாலை வேளையில்
வீட்டிற்குத் திரும்பி வந்ததும், தனது கணவரிடமும் பிள்ளைகளிடமும்
வீட்டில் உள்ள எல்லாரிடமும் எரிந்து எரிந்து விழுந்தார். இதைத்
தொடர்ந்து கவனித்து வந்த ஹெலனின் கணவர் கிறிஸ்டோபர், இவள் எதற்கு
பள்ளிக்கூடம் முடித்து வீட்டிற்கு வந்ததும் வீட்டில் உள்ள எல்லார்மீதும்
எரிந்து எரிந்து விழுகிறார்? என்று யோசித்தார். ஒருவேளை பள்ளி
நிர்வாகம் இவள் செய்யாத தவற்றிற்கெல்லாம் இவளைத் தண்டிக்கின்றதா?"
என்றுகூட யோசித்தார் கிறிஸ்டோபர்.
இப்படியிருக்கையில் ஒருநாள் மாலை வேளையில், ஹெலன் பள்ளிக்கூடம்
விட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்து, வழக்கம் போல் வீட்டில்
இருந்த எல்லார்மீதும் எரிந்து விழுந்தபொழுது, ஹெலனின் கணவர்
கிறிஸ்டோபர் அவரை அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்துச்
சென்று, "பள்ளியில் என்னதான் நடக்கின்றது?" என்று கேட்டார்.
அதற்கு ஹெலன், "நான் பணியாற்றும் பள்ளியில் எல்லாவற்றையும்
நான் நன்றாகத்தான் செய்கின்றேன். இருந்தும், பள்ளி நிர்வாகம்
என்மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்துகின்றது. அதனால்தான் எனக்கு
எல்லார்மீதும் கோபம் கோபமாக வருகின்றது" என்றார்.
தன் மனைவி இவ்வாறு பேசி முடித்ததும், கிறிஸ்டோபர் பேசத் தொடங்கினார்:
"ஹெலன்! நீ சொல்வதை வைத்துப் பார்க்கும்பொழுது, பள்ளி நிர்வாகத்தின்மீது
அல்ல, உன்மீது ஏதோ தவறு இருப்பது போன்று தெரிகின்றது. பள்ளி
நிர்வாகம் பள்ளியின் வளர்ச்சிக்காக எதையாவது உன்னிடத்தில் சொல்லத்தான்
செய்யும். வெறுமனே உன்னிடத்தில் குறை கண்டுபிடிப்பதற்கு,
நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அதனால் பள்ளி
நிர்வாகம், பள்ளியின் வளர்ச்சிக்காக எதையாவது உன்னிடம்
சொன்னால், அதைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொண்டு, உன்னிடம் உள்ள
தவற்றைத் திருத்துவதற்கு முயற்சி செய். அப்பொழுது யார்மீதும்
உனக்கு எரிச்சலோ கோபமோ வராது."
இதற்குப் பிறகு ஹெலன், தன்னிடத்தில்தான் தவறு இருக்கின்றது என்பதை
உணர்ந்தவராய், தன் தவற்றைத் திருத்திக்கொண்டு வாழத் தொடங்கினார்.
இந்த நிகழ்வில் வருகின்ற ஹெலன், தன்னிடத்தில்தான் தவறு இருக்கின்றது
என்பதை உணர்ந்ததும் திருந்தி நடக்கத் தொடங்கினார்; ஆனால், இன்றைய
நற்செய்தி வாசகத்தில் இதற்கு முற்றிலும் மாறாக, தவற்றை உணராமலும்,
திருந்தி நடக்காமலும் இருந்த நகர்களை ஆண்டவர் இயேசு கடிந்துகொள்கின்றார்.
ஏன் இயேசு அந்த நகர்களைக் கடிந்துகொள்கின்றார் என்பதைக்
குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்
லூக்கா நற்செய்தியில் இயேசு, "மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்
மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்" (லூக் 12: 48) என்று
கூறுவார். இந்த இறைவார்த்தையை அடிப்படையாகக் கொண்டு இன்றைய நற்செய்தி
வாசகத்தை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தியில் இயேசு கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் ஆகிய
மூன்று நகர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். இயேசு ஏன் இந்த
மூன்று நகர்களையும் கடுமையாகச் சாடுகின்றார்கள் எனில், இந்த இங்கிருந்தவர்கள்
இயேசுவால் மிகுதியாகப் பயனடைந்தார்கள். வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால், இந்த மூன்று நகர்களில்தான் இயேசு
மிகுதியாக வல்ல செயல்களைச் செய்தார்; மிகுதியாகக் கடவுள்
வார்த்தையை எடுத்துச் சொன்னார். அப்படியிருந்தும் இந்த நகர்களில்
இருந்தவர்கள் உரிய பலனைக் கொடுக்கவில்லை. அதனாலேயே இயேசு இந்த
நகரில் இருந்தவர்களைக் கடிந்து கொள்கின்றார்.
திருந்தாமல் போனால் தண்டனை
இயேசு மூன்று நகர்களையும் கடிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், உங்களிடம்
செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருந்தால்,
அவர்கள் எப்பொழுதோ சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து
மனம்மாறி இருப்பார்கள் என்கின்றார். இங்கு அசிரியர்களின் தலைநகரான
நினிவேயில் யோனா இறைவாக்கு உரைத்தைக் கேட்டு, மனம்மாறியதைக் கருத்தில்
கொள்ளவேண்டும். ஓர் இறைவாக்கினர் அறிவித்த நற்செய்தியைக்
கேட்டு மக்கள், அதுவும் பிற இனத்து மக்கள் மனம்மாறினார்கள் எனில்,
ஆண்டவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு, மனம்மாறி அவர்கள் எந்தளவுக்குக்
கனிகொடுக்கும் வாழ்க்கையை வாழ்ந்திருக்கவேண்டும். அத்தகையதொரு
மாற்றம் ஏற்படாததாலேயே இயேசு மூன்று நகர்களைக் கடிந்து
கொள்கின்றார்.
ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்கின்றோம் எனில், அதற்கேற்ப
பலன் தரவேண்டும். நாம் பலன் தரும் மக்களாக இருக்கின்றோமா?
சிந்திப்போம்.
சிந்தனை
என்னிடமுல்லா கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார்
(யோவா 15: 2) என்பார் இயேசு. ஆகையால், நாம் இறைவார்த்தையைக்
கேட்டு, அதற்கேற்ப மிகுந்த கனிதருவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
தூய காவல் தூதர்கள் நினைவு
தூய காவல் தூதர்களின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
இவர்கள் யார்?
காவல் தூதர்கள் பற்றிய புரிதல் தமிழ் மரபிற்கு எளிதானது. ஏனெனில்,
நம் ஊர்க் கிராமங்களில், 'எல்லை தெய்வங்கள்' என்ற ஒரு சொல்லாடல்
உண்டு. ஊரில் இறந்தவர்களின் நினைவாக, ஊருக்கு வெளியே சின்னச்
சின்ன தூண்கள் நடப்பட்டு, இத்தூண்களுக்கு எல்லை தெய்வங்கள் என்ற
பெயரும் உண்டு. சில இடங்களில் ஒட்டுமொத்த ஆண் முன்னோர்களின் அடையாளமாக,
'கருப்பசாமியும்,' பெண் முன்னோர்களின் அடையாளமாக, 'எல்லை அம்மன்',
அல்லது 'அம்மன்' இருப்பர்.
இவர்களின் வேலை என்னவென்றால், ஊரைத் தீமையிலிருந்து காப்பாற்றுவது.
எங்கள் ஊராகிய நத்தம்பட்டியில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
கருப்பசாமியும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாரியம்மனும்
வீற்றிருக்கின்றனர். இறந்தவர்களின் கல்லறைகள் எங்கள் ஊரின் வடக்கு-கிழக்கு
பகுதியில் இருப்பதால், தீய ஆவிகளின் வழியாக ஊருக்கு எந்தவொரு
தீங்கும் வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை.
மற்றபடி ஊருக்கு தெற்கேயும், மேற்கேயும் தெய்வங்கள் இல்லை.
கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் சிலுவைகள் நடப்படுவது கூட, 'எல்லை
தெய்வ தூண்களின்' மரூஉவாக இருக்கலாம்.
ஆக, இருப்பவர்களை இருந்தவர்கள் காப்பாற்ற வேண்டும் என்பது இந்நம்பிக்கையின்
பின்புலத்தில் இருக்கிறது. ஏற்கனவே நம்மோடு இருந்தவர்கள் இன்று
நம்மோடு இல்லாதபோது அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். ஆக, நம்
கண்களுக்குக் காணாமல் நிற்கும் இவர்கள், நாம் காணாமல் இருக்கும்
அனைத்து நல்லது மற்றும் கெட்டது ஆகியவற்றின் தொடர்பில் இருக்கிறார்கள்.
இவர்கள், இருப்பவர்களை தீமையிலிருந்து காப்பாற்றி நன்மை நோக்கி
வழிநடத்திச் செல்பவர்கள்.
இன்றும் செல்டிக் என்ற சமய மரபில் இறந்தவர்கள் எல்லாரும் நட்சத்திரங்களாக
மாறிவிடுகிறார்கள் என்பதும், அல்லது அவர்கள் நாம் குடிக்கும்
நீர், சுவாசிக்கும் காற்று, அமரும் மண், பயன்படுத்தும்
நெருப்பு என இவற்றின் மூலக்கூறுகள் ஆகிவிடுகிறார்கள் என்பதும்
நம்பிக்கை.
யூத மரபில் வானதூதர் நம்பிக்கை பாபிலோனிய அடிமைத்தனத்தின்போதுதான்
வந்தது. இயேசுவுக்கும் இந்த நம்பிக்கை இருப்பதை நாம் நாளைய நற்செய்தியில்
பார்க்க முடிகிறது: 'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக்
கருத வேண்டாம். கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என்
விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள்'.
திருப்பாடல்களிலும் இந்த எண்ணம் சில இடங்களில் மின்னுவதை நாம்
பார்க்க முடிகிறது:
'நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு
அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி அவர்கள்
தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்' (திபா 91:11-12)
இதை உருவகம் செய்து பார்த்தாலே நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் குட்டி குட்டி வானதூதர்கள்
தம் பிஞ்சுக் கைகளால் நம் உள்ளங்கால்களைத் தாங்குகின்றனர்.
கல்லின் மேல் மோதுதல் என்பது நம் கவனக் குறைவின், மூளைக்கும்
காலுக்கும் உள்ள செயல்திறன் இணைப்பு குறைவின் விளைவு. மூளை தவறாகக்
கணக்கிட்டாலும், நம் கவனம் சிதறுண்டாலும் இந்தக் குட்டிப்பூக்கள்
நம் விரல்களை, கால்களைத் தாங்கிப் பிடித்துக்கொள்கின்றனர்.
இந்த உருவகம் நமக்குச் சொல்லும் பாடம் மிகவும் முக்கியமானது.
என்ன?
நாம் கால் வைக்கும் இடத்தை, நாம் தேர்ந்தெடுக்கும் பாதையைப் பற்றி
மிகக் கவனமாக நாம் இருக்க வேண்டும்.
தேவையற்ற இடங்களில், தேவையற்ற செயல்களில் நாம் ஈடுபடும்போது,
நாம் இந்த குட்டி தேவதைகளையும் காயப்படுத்துவிடுகிறோம்.
நாளைய முதல் வாசகத்தில் (காண். விப 23:20-23) யாவே இறைவன்
மோசேக்குத் தரும் செய்தியும் இதுவே:
'இதோ, நான் உனக்கு முன் என் தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு.
அவர் சொற்கேட்டு நட. அவரை எதிர்ப்பவனாய் இராதே.'
நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கு முன்னும், காவல் தூதர்களின்
பிஞ்சுக் கரங்கள் இருப்பதாக நினைத்து எடுத்து வைத்தால், எந்தப்
பாதையும் நல்ல பாதையே.
நம் வீட்டில் இறந்த நம் முன்னோர்களே தங்கள் கரங்களால் நம்மைத்
தாங்குகிறார்கள் என்பதும் நல்ல புரிதலே.
- Rev. Fr. Yesu Karunanidhi
காவல் தூதர்கள்(2 அக்டோபர் 2020) திருநாள்
தூதர்கள் என்பவர்கள் மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட
உயிரிகள். ஆகவே, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே பாலமாக அவர்கள்
செயல்படுகிறார்கள். இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப
23:20-23), ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு தூதர்களை அனுப்புகிறார்.
அவர்கள் இரண்டு பணிகளைச் செய்கின்றனர்: (அ) வழியில் பாதுகாப்பை
உறுதி செய்கின்றனர், (ஆ) கடவுள் அவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள
இடத்திற்கு அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கின்றனர். நற்செய்தி
வாசகத்தில் (காண். மத் 18:1-5,10), சிறு பிள்ளைகளுக்கு இடறலாக
இல்லாமலிருப்பது குறித்து எச்சரிக்கின்ற இயேசு, 'இவர்களது வானதூதர்கள்
என் தந்தையின் திருமுன் எப்போதும் இருக்கிறார்கள்' எனச்
சொல்கிறார்.
காவல் தூதர்களின் உடனிருப்பு என்பது நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட
அனுபவம்.
விபத்திலிருந்து நாம் காப்பாற்றப்பட்டது, நம் தேர்வு பயம்
நீங்கியது, நாம் சரியான முடிவு எடுக்க முடிந்தது என பல நிகழ்வுகளை
நம் காவல் தூதர்களோடு நாம் இணைத்துப் பார்க்கிறோம்.
நம் உள்ளத்தில் ஒலிக்கும் குரலாகவும் காவல் தூதர் இருக்கிறார்.
இதையே எசாயா, 'நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம்
சென்றாலும், 'இதுதான் வழி. இதில் நடந்துசெல்லுங்கள்' என்னும்
வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (காண். எசா
30:21).
நமக்குக் காவல் தூதர்கள்போல வாழ்வில் வருகின்ற நம் பெற்றோர்,
உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், மற்றும் பணியாளர்களை நினைத்து நன்றி
நவில்வதோடு, நாமும் மற்றவர்களுக்குக் காவல் தூதர்கள்போல இருந்து
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வரலாம்.
Rev. Fr. Yesu Karunanidhi
=================================================================================
தூய காவல் தூதர்கள் நினைவு
மறையுரைச் சிந்தனை
கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் காட்டுவழியாக பயணம்
மேற்கொண்டார். அது ஓர் அடர்ந்த, கொடிய மிருகங்கள் வாழக்கூடிய
காடு. அவர் தன் பயணத்தைத் தொடர்கையில் திடிரென்று இருள்சூழ்ந்து
கொண்டது; மழைபெய்யும் அறிகுறிகள் வேறு தென்பட்டன. இடிமுழக்கத்துடன்,
காட்டுவிலங்குகளின் சத்தமும் ஒருசேர அவரை பீதிக்கு உள்ளாக்கியதால்,
அவருக்குள்ளே ஒருவிதமான பய உணர்வு ஏற்பட்டது. முடிவில் அவர்
மயங்கி கீழே விழுந்தார்.
அவர் மீண்டும் கண்விழித்துப் பார்த்தபோது, அவர் செல்லவேண்டிய
இடத்தை அடைந்திருந்தார். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.
என்ன நிகழ்ந்தது என அவர் சிந்தித்த போது அவருக்கு ஒரு அசரீரி
ஒலி கேட்டது.
"மகனே நீ உன் பயணத்தைத் தொடர்ந்தபோது, அதன் பாதுகாப்பை என்னிடம்
ஒப்படைத்துச் செபித்தாய், அக்கணம் முதலே நான் உன்னைப் பின்தொடர்ந்து
வந்தேன். நீ பயணித்த பாதையின் பாதச்சுவடுகளை உற்றுப்பார், உன்பின்னே
மேலும் இரு பாதப்பதிவுகளைக் காணலாம். நான்காகத் தொடர்ந்த பாதச்சுவடுகள்
நீ மயங்கிய இடத்திலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளதை காண்பாய்.
நீ நிலைகுலைந்து, மயங்கி, நிலத்தில் விழ நான் இடமளிக்கவில்லை.
மாறாக, நான் உன்னை என் கரங்களில் தாங்கிக் கொண்டேன். அதன்பின்
உன்னால் நடந்து உன் பயணத்தைத் தொடர முடியாததால், என் தோள்களில்
உன்னைச் சுமந்துவந்தேன். அந்த இரண்டு பாதச்சுவடுகளும் உன்னுடையதல்ல,
உன்னைச் சுமந்த என்னுடையதே. உனக்குத் தெரியாமலே நான் உன்னுடன்
பயணித்தேன் என்றது" அந்த அசரீரி.
நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக்
கட்டளையிட்டுள்ளார் என்ற இறைவார்த்தையை (திபா 91:11) உறுதி
செய்வதாக இருக்கிறது மேலே சொல்லப்பட்ட நிகழ்வு. ஆம், இறைத்தூதர்கள்
நம்மை பாதுகாக்கக்கூடியவர்கள்; நமக்குத் துணையாய் இருப்பவர்கள்,
நம்மோடு வழிநடப்பவர்கள். அப்படிப்பட்ட சிறப்புகளுக்குச் சொந்தக்காரர்களான
காவல் தூதர்களின் விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம்.
திருச்சபையின் தந்தையர் என அழைக்கப்படுகின்ற அகுஸ்தினார், அக்வினாஸ்,
எரேனியு போன்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதர் இருக்கிறார்
என்று சொல்வார்கள். ஆனால் விவிலியத்திலே அதற்கான ஆதாரம்
கிடையாது. "இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்.
கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின்
திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன்" (மத்தேயு 18:10) என்னும் இயேசுவின் வார்த்தைகள்தான்
காவல்தூதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான மையக் கருவாக இருக்கின்றது.
இந்த காவல்தூதர்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தும்
வாக்குறுதி 'உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை'
என்பதுதான். காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள், நம்மை என்றும்
வழிநடத்துகிறார்கள். மேலும் இவர்கள் கடவுளின் செல்லப்பிள்ளைகளைக்
காப்பாற்றுபவர்களாகவும் (2 அரசர்கள் 6:13-17), தகவல்களை வெளிப்படுத்துபவர்களாகவும்
(லூக் 1:11-20), வழிகாட்டுபவர்களாகவும் (மத் 1:20-21), பராமரிப்பவர்களாகவும்
(1 அர 19:5-7), பணிவிடை செய்பவர்களாகவும் (எபி 1:14) வலம் வருகின்றனர்.
ஆதலால் இவ்வளவு பணிகளை நமக்காக செய்துவரும் காவல் தூதர்களை
நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்; அவருக்கு என்றும்
பிரமாணிக்கமாய் இருக்கவேண்டும்.
சிறுவன் ஒருவன் விடுமுறைக்கு தன்னுடைய பாட்டியின் வீட்டிற்குச்
சென்றிருந்தான். பாட்டியின் வீட்டில், ஒரு அறையில் கடவுளின்
படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழே, "கடவுள் உன்னை
கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று எழுதியிருந்தது.
இது சிறுவனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலைத் தந்தது. "கடவுள் என்னைக்
கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றால், என்னால் சேட்டைகள் செய்ய
முடியாது, நான் ஒழுக்கமுடையவனாக அல்லவா வாழவேண்டும்" என்று தன்னுடைய
பாட்டியிடம் முறையிட்டான் அவன். அதற்கு அவனுடைய பாட்டி,
"கடவுள் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அது விளக்கமல்ல,
மாறாக கடவுள் உன்னை சிறு நொடிப்பொழுதும் கைவிடாமல் பாதுகாத்து
அன்பு செய்கிறார் என்பதே இதன் அர்த்தம்" என்று விளக்கமளித்தார்.
ஆம், காவல் தூதர்கள் நம்மோடு இருக்கிறார்கள் என்றால் கடவுள் எப்போதும்
கண்காணித்துக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தமல்ல, மாறாக அவர்
நம்மை சிறுபொழுதும் பிரியாமல் பாதுகாத்து அன்பு செய்கிறார் என்பதே
அர்த்தம்.
எனவே நம்மை காவல் தூதர்கள் வழியாக பராமரித்து வரும் இறைவனுக்கு
நன்றி செலுத்துவோம். அத்தோடு காவல்தூதர்களின் உடனிருப்பை உணர்வோம்;
இறைவழியில் நடந்து, இறையருள் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|