Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                 19 அக்டோபர் 2017  
                                 

முதல் வாசகம்

இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்.


திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 21-30

சகோதரர் சகோதரிகளே, கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.

இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.

ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின்மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்.

இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார்.

இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.

அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமை பாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 130: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 7)

பல்லவி: பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு.

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி

===========================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

==========================================================================
 
நற்செய்தி வாசகம்

ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54

அக்காலத்தில் இயேசு கூறியது: "ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.

இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள்.

ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.

ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.''

இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 வெளிவேடத்தனமில்லா வாழ்வு வாழ்வோம்

ஆசிரியர் ஒருவர் ஒருநாள் தன்னுடைய வகுப்பிற்கு இரண்டு அட்டைப் பெட்டிகளோடு வந்தார். அதை மாணவர்களிடம் காட்டி, "அன்பு மாணவச் செல்வங்களே! உங்களுக்கு முன்பாக இப்போது இரண்டு அட்டைப்பெட்டிகளை வைத்திருக்கிறேன். ஒன்றில் பாடப்புத்தகங்களும், இன்னொன்றில் சாக்லேட்டும் இருக்கிறது. இவற்றில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுப்பது உங்களுடைய குணத்தைத் தீர்மானிக்கும். என்றார்.

உடனே மாணவர் அனைவரும் ஆசிரியர் தங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக பாடப்புத்தகம் அடங்கிய அட்டைப்பெட்டியைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சாக்லேட் இருந்த அட்டைப்பெட்டியைத் தேர்ந்தெடுத்தான்.

இதைப் பார்த்த ஆசிரியர் மாணவர்களிடம், " உங்களிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் நான் உங்களைப் பாராட்டவேண்டும், என்னைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக பாடப்புத்தகம் இருந்த அட்டைப்பெட்டியைத் தேர்ந்தெடுத்தீர்கள். இது ஒரு போலியான செயல். நீண்ட நாட்களுக்கு இந்த போலித்தனம் நீடிக்காது. ஆனால் இந்த ஒரு மாணவன் மட்டும் சாக்லேட் இருந்த அட்டைப்பெட்டியைத் தேர்ந்தெடுத்தான். அவனது செயலை நான் உண்மையிலே பாராட்டுகிறேன். ஏனென்றால் அவன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு எது பிடித்ததோ அதைத் தேர்ந்தெடுத்தான்; அவன் உண்மையாக நடந்துகொண்டான். அதனால் அவனது செயலைப் பாராட்டுகிறேன் என்றார்.

பிறருக்காக போலித்தனமான வாழ்க்கை வாழ்வதை இக்கதை தோலுரித்துக் காட்டுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களின் வெளிவேடத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார். "உங்கள் மூதாதையர்கள் இறைவாக்கினர்களைக் கொன்றுபோட்டார்கள். நீங்களோ அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்புகிறீர்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம்? என்று கடுமையாகச் சாடுகின்றார். இறைவனால் அனுபப்பட்ட இறைவக்கினர்களையும், இறைத்தூதர்களையும் கொன்று போட்டுவிட்டு, அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை எழுப்புவதால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது என்பதுதான் இயேசுவின் வாதமாக இருக்கிறது.

பல நேரங்களில் நாமும்கூட சொல்வதும் ஒன்றும், செய்வதும் ஒன்றான போலியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கவிப்பேரரசு கூறுவார், " நீதியை குப்பையில் போட்டுவிட்டு, நீதிமன்றத்தை மட்டும் சுத்தம் செய்வதால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது" என்று. ஆம், சொல்வதும், செய்வதும் வேறுவேறாக இருக்கும்போது அது எப்படி உண்மையான வாழ்க்கையாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். சொல்லும், செயலும் இணைந்துபோகும் வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

நற்செய்தியிலே இயேசு திருச்சட்ட அறிஞர்களின் இடறலான வாழ்க்கையையும் கண்டிக்கின்றார். "திருசட்ட அறிஞர்களே! நீங்களும் இறைவனின் ஆட்சிக்குள் நுழைவது கிடையாது. மற்றவர்களையும் நுழையவிடுவது கிடையாது, என்று கண்டிக்கின்றார்.

திருச்சட்ட அறிஞர்கள் மக்களுக்கு இறைவனின் திட்டம் என்ன? அவர் மனிதர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெளிவாக போதிக்கவேண்டும். ஆனால் அவர்களோ, எங்கே தங்களைவிட சாதாரண மக்கள் இறைவனின் ஆட்சியில் முன்னால் போய்விடுவார்களோ என்று அஞ்சி இறைவனின் கட்டளைகளைப் போதிக்காது விட்டுவிடுகின்றார். அதனால் இயேசுவின் சினத்திற்கு உள்ளாகின்றார்.

நாம் ஒவ்வொருமே பிறருக்கு படிக்கல்லாக இருக்கவேண்டுமே ஒழியே தடைக்கல்லாக இருக்கக்கூடாது. மத் 18:6-8 ல் இயேசு கூறுகின்றார், "மிகச் சிறியோர்களாகிய இவர்கள் பாவத்தில் விழக் காரணமாக இருப்போரின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் ஆழ்த்துவது நல்லது" என்று.

எனவே நாம் பிறருக்கு ஒருபோதும் தடைகல்லாக இராது, முன்மாதிரியான வாழ்க்கை வாழுவோம். அத்தோடு வெளிவேடத்தைக் களைந்து, உண்மையான வாழ்க்கை வாழுவோம். இறையருள் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!