Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                 18 அக்டோபர் 2017  
                                  புனித லூக்கா - நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்

என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார்.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 9-17

அன்பிற்குரியவரே, விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய். தேமா இன்றைய உலகப் போக்கை விரும்பி என்னை விட்டு அகன்று, தெசலோனிக்கா சென்றுவிட்டார். கிரேஸ்கு கலாத்தியாவுக்கும் தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்றுவிட்டனர். என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர். திக்கிக்குவை நான் எபேசுக்கு அனுப்பிவிட்டேன்.

நீ வரும்போது நான் துரோவாவில் கார்ப்புவிடம் விட்டுவந்த போர்வையையும் நூல்களையும்இ குறிப்பாகத் தோற்சுருளையும் எடுத்துவா. கன்னானாகிய அலக்சாந்தர் எனக்குப் பல தீமைகளைச் செய்தான். அவன் செயலுக்குத் தக்கவாறு ஆண்டவர் அவனுக்குப் பதிலளிப்பார். அவனிடமிருந்து உன்னைக் காத்துக்கொள். அவன் நம்முடைய போதனையை அதிகம் எதிர்த்தவன். நான் முதன்முறை வழக்காடியபோது எவரும் என் பக்கம் இருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக்குற்றம் அவர்களைச் சாராது இருப்பதாக.

நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்கவேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 145: 10-11. 12-13ab. 17-18 (பல்லவி: 11a)

பல்லவி: உம் அன்பர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்.

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ab உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி
===========================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

==========================================================================
 
நற்செய்தி வாசகம்

அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-9

அக்காலத்தில் ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லா விட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 
நற்செய்தியாளரான தூய லூக்கா விழா

இன்று திருச்சபையானது நற்செய்தியாளரான தூய லூக்காவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர்தான் மூன்றாம் நற்செய்தி அல்லது இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தி நூலையும், திருத்தூதர் பணிகள் நூலையும் எழுதியவர். அந்தியோக்கு நகரில் பிறந்த இவர் ஒரு புறவினத்தார்.

தூய பவுல் இவரைக் குறித்துச் சொல்லும்போது, இவர் ஒரு மருத்துவர் என்றும் தன்னோடு உடனுழைத்தவர் என்றும் சொல்கிறார். மேலும் தூய பவுல் செசரியா மற்றும் ரோம் நகரில் உள்ள சிறையில் இருந்த காலகட்டங்களில் லூக்கா அவரோடு உடனிருந்தார். அவருடைய இறப்புக்குப் பின்னால் லூக்கா கிரீஸ் நகருக்குச் சென்று அங்கே நற்செய்தி அறிவித்ததாகவும், பயோட்டிய என்ற இடத்தில் (
Boetia) தன்னுடைய என்பத்தி நான்காவது வயதில் இறந்தார் என்று சொல்லப்படுகின்றது.

லூக்கா அடிப்படையில் புறவினத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் எழுதிய நற்செய்தி நூல் புறவினத்தாருக்கு எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்நூலை அவர் கி.பி. 65 - 85 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதியிருக்கலாம் என்றும் திருச்சபையின் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். லூக்கா நற்செய்தியாளர் எருசலேமிருக்கு சென்று, அங்கே இருந்த அன்னை மரியாளைச் சந்தித்து, அவரிடம் வானத்தூதர் கபிரியேல் அவருக்கு தோன்றியது பற்றியும், அவர் எலிசபெத்தை சந்திக்கச் சென்றது பற்றியும், இயேசு கோவிலில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டது பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை தன்னுடைய நற்செய்தி நூலில் எழுதினார் என்றும் கூறுவார்கள்.

லூக்கா நற்செய்தியைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது தொடக்கத்தில் சொன்னது போன்று இந்நற்செய்தி இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் இந்த நற்செய்தி நூலை படித்துப் பார்க்கும்போது கடவுள் எந்தளவுக்கு இரக்கம்மிகுந்தவர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதே நேரத்தில் இந்நற்செய்தி நூல் ஆண்டவர் இயேசு கடவுளுக்கு எப்படி கீழ்படிந்து நடந்தாரோ அதேபோன்று நாமும் நம்முடைய தலைவர் இயேசுவுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்பதை நமக்கு எடுத்துக்கூறுகிறது.

மேலும் இந்த நற்செய்தி நூலைப் படித்துப் பார்க்கும்போது ஆண்டவர் இயேசு தன்னுடைய பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் ஜெபிக்கின்ற மனிதராக விளங்கினார் என்பதை நமக்கு எடுத்துரைக்கும். ஏனென்றால் தன்னுடைய பணிவாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இயேசு ஜெபித்தார். அதனை லூக்கா நற்செய்தி மிக அழுகுபட எடுத்துரைக்கின்றது.

இவர் எழுதிய திருத்தூதர் பணிகள் நூல் தொடக்கத் திருச்சபை எப்படி வளர்ந்தது, அது எப்படி தூய ஆவியால் வழிநடத்தப்பட்டது என்பதை நமக்கு மிக அழகாக எடுத்துக்கூறுகிறது. ஆகையால் தூய லூக்கா நற்செய்தியாளர் தன்னுடைய எழுத்தாற்றலால் திருச்சபைக்கு நல்கியிருக்கின்ற கொடைகள் அளப்பெரியது. அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

இந்த நல்லநாளில் இவருடைய விழா நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். லூக்கா நற்செய்தி நூல் மிகவும் தனித்துவமானது. இந்த நூலை மட்டும் ஒருவர் படிக்கின்றபோது அவர் மிகப்பெரிய ஆறுதலை, வல்லமையை பெற்றுக்கொள்வார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆகையால் நாம் லூக்கா நற்செய்தியை - அதை மட்டுமல்லாது - விவிலியம் முழுமைக்கும் கருத்தூன்றி வாசிப்போம். அவற்றிலிருந்து வாழ்விற்கான எல்லா ஆற்றலையும், வல்லமையையும் பெற்றுக்கொள்வோம்.

ஒருமுறை இளைஞன் ஒருவன் விவிலியம் வாசித்துக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த வில்லியம் ஹோண் என்ற அரசன் சிறுவனிடம், " எதற்காக இந்த விவிலியத்தை வேலைவெட்டி இல்லாதவன் போன்று வாசித்துக்கொண்டிருக்கிறாய். இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு, வேறு ஏதாவது பயனுள்ள வேலையைச் செய்யப் பார்" என்று அறிவுரை சொல்லத் தொடங்கினார்.

அதற்கு அந்த இளைஞன். " இது சாதாரண புத்தகம் கிடையாது. இந்த நூல் எனக்கு மட்டுமல்லாது நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் என்னுடைய தாய்க்கும் மிகப்பெரிய ஆறுதலாகவும் உந்து சக்தியாகவும் இருக்கிறது" என்று பதிலளித்தான்.

அதைக் கேட்ட அரசன் அந்த விவிலியத்தில் அப்படி என்னதான் இருக்கின்றது என்று வாசிக்கத் தொடங்கினான். அவன் வாசிக்க வாசிக்க அவனுடைய உள்ளத்தில் பெரிய மாற்றத்தை உணர்ந்தான். ஆம், அவனுடைய உள்ளத்தில் இருந்த கர்வம் மறைந்தது. அதோடு மட்டுமல்லாமல் எப்போதும் இல்லாத ஒரு பேரமைதியை அவனுடைய உள்ளத்தில் உணர்ந்தான். அப்போது அவன் அவனுக்குள் சொல்லிக்கொண்டான். இத்தனை நாட்களாக விவிலியத்தின் மகிமையை உணராமல் வாழ்ந்துவிட்டேனே. இனிமேல் நான் விவிலியத்தை தினந்தோறும் வாசிப்பேன், அதன்படி என்னுடைய வாழ்க்கை மாற்றியமைத்துக் கொள்வேன் என்று சூளுரைத்து அதன்படி வாழத் தொடங்கினான்.

இறைவனின் வார்த்தைகள் - விவிலியம் - எவ்வளவு ஆற்றல் வாய்ந்தது என்பதை இந்த நிகழ்வின் வழியாக உணர்ந்துகொள்ளலாம். ஆகையால் தூய லூக்கா நற்செய்தியாளரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவரைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை அவருடைய மகிமைக்காக பயன்படுத்துவோம். இறைவார்த்தையின் வல்லமையை உணர்ந்து, அதற்கேற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!