Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கிழமை நாள் வாசகம்

                 16 அக்டோபர் 2017  
                            

முதல் வாசகம்

பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும்.

இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப் பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம்.

பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
====================================================================

 
பதிலுரைப் பாடல் - திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 2a)

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி
===========================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

==========================================================================
 
நற்செய்தி வாசகம்

யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ``இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்.

ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 அவ நம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்கு

ஓர் ஊரில் கிறிஸ்தவ மதத்தைச் சாந்த பக்தியான ஒரு பாட்டி இருந்தாள். ஓவ்வொரு நாளும் தூங்கச்செல்வதற்கு முன்னதாக விவிலியம் வாசித்துவிட்டுத்தான் தூங்குவாள். ஒரு நாள் தான் வாசிக்கும் விவிலியப் பகுதி உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க விரும்பினாள்.

அன்றைக்கு அவள் வாசித்த பகுதியில் "கடுகளவு நம்பிக்கை இருந்தால், இம்மலையைப் பார்த்து பெயர்ந்து, அங்கே போ என்று சொன்னால், அது போகும்" என்று எழுதி இருந்தது. எனவே அந்தப் பகுதியை சோதித்துப் பார்க்க விரும்பினார். ஆதலால் தன்னுடைய வீட்டிற்குப் பின்னால் இருக்கும் பெரியமலை நகர்ந்து போகவேண்டும் என்று நினைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டாள்.

அடுத்த நாள் காலை வேளையில் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தாள். அப்போதுதான் முந்தின நாள் இரவில் தான் நினைத்த காரியம் என்ன ஆயிற்று என்று பார்க்க ஆர்வமாய் விரைந்தாள். வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மலை எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக பின்புறம் இருக்கக்கூடிய ஜன்னலைத் திறந்து பார்த்தாள். ஆனால் அந்த மலை அப்படியே இருந்தது. அப்போது அவள் தனக்குள் சொல்லிக்கொண்டாள், "இந்த மலை எப்படியும் இங்கிருந்து போகாது என்றுதான் நினைத்திருந்தேன். அதுபோலவே அது இங்கிருந்து போகவில்லை" என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

மூதாட்டி வெளிப்புறத்தில் மலை அங்கிருந்து போய்விடும் என்று நம்பினாள். ஆனால் தனக்குள் அது எப்படி அங்கிருந்து போகும் என்றுதான் நினைத்திருந்தாள். அவள் நினைத்ததுபோல அம்மலை அங்கிருந்து போகவில்லை.

வயதான இந்த மூதாட்டியைப் போலவே நாமும், உள்ளுக்குள் நம்பிக்கை இல்லாமலே ஜெபிக்கின்றோம், எதையும் இறைவனிடம் கேட்கின்றோம். அதனால்தான் ஒன்றையுமே பெறாது போகின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யூதர்கள் ஆண்டவர் இயேசுவிடம் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். விவிலியத்திலே 'அடையாளம்' கேட்பது என்பது கடவுளை சோதனைக்கு உட்படுத்துவதற்கு - நம்பாததற்குச் - சமமானது. இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் அடையாளம் கேட்டு ஆண்டவரைச் சோதித்ததால் அவர்கள் கடவுளின் சாபத்திற்கு உள்ளானார்கள் என்று விடுதலைப் பயண நூலில் படிக்கக் கேட்கின்றோம்.

எசாயா புத்தகம் 7 வது அதிகாரத்தில் எசாயா இறைவாக்கினர் ஆகாசு மன்னனிடம், அடையாளம் ஒன்றைக் கேள் என்றது சொன்னபோது, அவன் அடையாளம் கேட்க மறுக்கின்றான். காரணம் அவனது நம்பிக்கை, அடையாளம் கேட்பது ஆண்டவரைச் சோதனைக்கு உட்படுத்துவதற்குச் சமமாகும் என்பதாகும்.

நற்செய்தியில் யூதர்கள், பரிசேயர்கள் ஆண்டவர் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் காட்டும் என்று கேட்கிறபோது அவர்கள் இயேசு இதுவரை செய்த நன்மைகளை, வல்ல செயல்களை நம்பவில்லை என்றே தெரிகிறது. அதனால் இயேசு, "இத்தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். ஆனால் அவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் தரப்படமாட்டாத" என்று சொல்கிறார். அதாவது யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்ததுபோல மானிட மகனும் மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தபின் உயிர்த்தெழுவார், இதுவே மிகப் பெரிய அடையாளமாக இருக்கும் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது.

நாமும் பலவேளைகளில் யூதர்களைப் போன்று, பரிசேயர்களைப் போன்று இயேசுவை நம்ப மறுக்கின்றோம். உரோ 10:9 ல் வாசிக்கின்றோம் "இயேசுவே ஆண்டவர் என்று நம்பி அறிக்கையிடுவரை தவிர மீட்புப் பெறுவோர் யார்" என்று.
ஆகவே, எல்லா வல்ல இறைவனை முழுமையாய் நம்புவோம். இறையருள் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!