Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கிழமை நாள் வாசகம்

                 14  அக்டோபர் 2017  
 

முதல் வாசகம்

அரிவாளை எடுத்து அறுங்கள். பயிர் முற்றிவிட்டது.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 3: 12-21

ஆண்டவர் கூறுவது: வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்; கிளர்ந்தெழுந்து யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன். அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது; திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன; அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது. திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது; ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது.

கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; வீண்மீன்கள் ஒளியை இழக்கின்றன. சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன.

ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்; எருசலேம் தூயதாய் இருக்கும்; அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.

அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்; குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்; அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும். எகிப்து பாழ்நிலமாகும்; ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்; ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்; அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள். சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்; குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்; ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
============================================================================

பதிலுரைப் பாடல்     - திபா 97: 1-2. 5-6. 11-12 (பல்லவி: 12a)

பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.

அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
----------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 இறைவார்தையைக் கேட்டு, அதன்படி நடப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்

சாது ஒருவர் சாலையோரமாகப் போய்க்கொண்டிருந்தார். அப்போது வழியிலே ஓர் ஏழை கிழிந்த ஆடையுடனும், மெலிந்த தேகத்துடனும் படுத்துக்கிடந்தான். சாது அவனருகே சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அவன் பசிக்கொடுமையால் மயங்கிக் கிடக்கிறான் என்று. எனவே அவனை எழுப்பிவிட்டு, அன்றைய பொழுதுக்காக தன்னிடம் இருந்த உணவையும், தண்ணீரையும் அவனுக்குக் கொடுத்தார். அவன் அதனை வயிறார உண்டான்.

உணவை உண்டதும், அவன் எழுந்து உட்காரத் தொடங்கினான். அப்போது அவன் சாதுவிடம், "எனக்கு தக்கநேரத்தில் உணவிட்ட நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள்" என்று கேட்டான். அதற்கு அவர், "அன்பும், தியாகமும், சேவை மனப்பான்மையும் எங்கெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் என் மதமே"என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

பிறரன்பும், சேவை மனப்பான்மையும் எங்கெல்லாம் இருக்கிறதோ அதுவே மதமே என்பதை இந்நிகழ்வானது நமக்கு அருமையாக சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு மதமும் இந்த அன்பையும், சேவையையும்தானே போதிக்கின்றாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த பெண்மணி ஒருவர், "உம்மை பெற்றெடுத்த தாய் பேறுபெற்றவள்"என்று பாராட்டுகிறார். அதற்கு இயேசு, "இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்போர் இன்னும் அதிகமாய் பேறுபெற்றோர்"என்கிறார்.

இங்கே ஆண்டவர் இயேசு மரியன்னையை குறைத்துப் பேசிவிட்டாரா? என்றால் நிச்சயமாக இல்லை. காரணம் மரியாள் இறைவார்த்தையை ஒவ்வொரு பொழுதும் தன்னுடைய வாழ்வாக்கியவள். பேறுகால நேரத்தில் எலிசபெத்துக்கு உதவியதாக இருந்தாலும் சரி, அல்லது கானாவூர் திருமணத்தில் திருமண வீட்டாரின் துன்பத்தைப் போக்கியதாக இருந்தாலும் சரி, அன்னை மரியாள் இறை திருவுளத்தை தன்னுடைய வாழ்வாக்கியவள். அதனால் அவள் இன்னும் அதிகமாகப் பேறுபெற்றவள் ஆகிறாள்.

இங்கே இன்னொரு உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது யாதெனில் இயேசுவைப் பெற்றெடுப்பதாலோ, அல்லது கிறித்தவர்களாக இருக்கிறோம் என்பதற்காகவோ மட்டும் நாம் மீட்புப் பெற முடியாது. யூதர்கள் தாங்கள், கடவுளின் அன்பு மக்கள்; கடவுளால் சிறப்பாக தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்; ஆபிராமின் வழித்தோன்றல்கள் அதனால் தங்களுக்கு நிச்சயம் மீட்பு என்று நினைத்திருந்தார்கள். ஆனால் திருமுழுக்கு யோவானோ, " ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லிப் பெருமை படாதீர்கள். கடவுள் நினைத்தால் இந்தக் கற்களிலிருந்து ஆபிரகாமுக்கு பிள்ளைகளைத் தோன்றச் செய்ய முடியும்"(மத் 3:9) என்று. அவர்கள் ஆபிரகாமின் மக்கள் என்பதற்காக மீட்புப் பெறப் போவதில்லை, மாறாக இறைவார்த்தை உணர்த்தும் பிறரன்பு, சேவை போன்ற காரியங்களைக் கடைப்பிடித்து வாழ்வதனால் மட்டுமே, இறைவன் தரும் மீட்பைப் பெற முடியும்"என்கிறார்.

பல நேரங்களில், நான் உயர்ந்த குலத்தில், வசதியான குடும்பத்தில் பிறந்துவிட்டேன். அதனால் நான் மீட்கப் படுவேன் என்று நினைக்கிறோம். இது தவறான ஒரு காரியம். இறைவார்தையைப் கடைப்பிடித்து வாழ்வோரே இறைவன் தரும் அருளைப் பெறமுடியும் என்பது திண்ணம்.

மத் 7: 21 ல் வாசிக்கின்றோம், "என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவர் எல்லாம் விண்ணரசுக்குள் நுழைய முடியாது. மாறாக விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் விருப்பத்தின்படி நடக்கின்றவரே வின்னகத்திற்குள் செல்வார்"என்கிறார். ஆம், இறைவார்த்தையைக் கேட்பதாலோ, அல்லது திருவழிபாட்டில் அன்றாடம் பங்கெடுப்பதாலோ மட்டும் ஒருவர் விண்ணகத்திற்ககுள் நுழைய முடியாது. மாறாக இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றவருக்கே அது உரித்தாகும்.

ஆதலால் நாம் எந்தப் பின்னணியிலிருந்து வந்தாலும், எப்படிப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இறைவார்த்தையை - அன்பு, தியாகம், சேவை போன்றவற்றை நமது வாழ்வில் - கடைப்பிடித்து வாழ்வோம். இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!