Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கிழமை நாள் வாசகம்

                13  அக்டோபர் 2017  
 

முதல் வாசகம்

ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 1-2

குருக்களே, சாக்கு உடை உடுத்திக் கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில் பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள் கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற் போயின. உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்; ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்; ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். மிகக் கொடிய நாள் அந்த நாள்!

ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும் நாளாக அது வரும். சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; என்னுடைய திருமலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக!

ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது. அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல், ஆற்றல்மிகு வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்  - திபா 9: 1-2. 5,15. 7b-8 (பல்லவி: 8a)

பல்லவி: உலகிற்கு ஆண்டவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். பல்லவி

5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். 15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. பல்லவி

7b ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார். 8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 12: 31b-32

அல்லேலூயா, அல்லேலூயா! இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26

அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.

இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது: "தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும். சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?

பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே. நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால் உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்? ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.

நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம் அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும் பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.

என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.

ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், "நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்" எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-----------------------------------------------------


மறையுரைச் சிந்தனை

 இயேசுவே விமர்சித்தவர்கள்

ஓர் ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளிதான் தொழிலாளி.

ஒவ்வொரு நாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர் பிடித்தவன் கடைக்கு வந்து, "முதலாளி மூளையிருக்கா? என்று முதலாளியிடம் கேட்டான். அதற்கு முதலாளியோ, "மூளை இல்லை" என்றவுடன், "என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கேட்டுவிட்டுச் செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டு "முதலாளிக்கு மூளையில்லை என்று விமர்சித்து வந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளி கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்று கூறினான்.

வழக்கம்போல கடையை மூடப் போகும் சமயம், அந்த திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், "முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்டான். அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, "இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஸ்டவசமாக உனக்குத் தான் இல்லை" என்றான். அதற்குப் பிறகு அந்த திமிர்பிடித்தவனை அந்த கடைப்பக்கமே காணவில்லை.

தன்னைத் தேவையில்லாமல் விமர்சித்துக் கொண்டிருந்த திமிர்பிடித்தவனுக்கு தகுந்த விதத்தில் பதில்கொடுத்து, அவனை கடைப்பக்கமே வரவிடாமல் செய்த அந்த கடைக்காரரது நண்பரின் சாதூர்யம் பாராட்டுக்குரியது. நம்மைத் தேவையில்லாமல் விமர்சிப்பவர்களை எப்படி முன்மதியோடு செயல்பட்டு அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு செய்த வல்ல செயல்களையும் அதன்வழியாக அவர் அடைந்த புகழினையும் பார்த்துவிட்டு, இயேசுவை பிடிக்காதவர்கள் "பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்" என்று விமர்சிக்கின்றார்கள். இயேசு தன்னை இவ்வாறு விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, அவர்களை வாயடைக்கச் செய்கின்றார். தன்னை விமர்சனம் செய்தவர்களை நோக்கி இயேசு இரண்டு விதமான வாதங்களை முன்வைத்து, அவர்களுடைய விமர்சனக் கருத்துக்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றார்.

இயேசு தன்னை விமர்சித்தவர்களுக்கு முன்பாக வைக்கும் முதல் வாதம் "தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் பாழாய் போகும்" என்பதாகும். இயேசு பெயல்செபூலை கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்றால், அது இயேசுவை விமர்சனம் செய்தவர்களின் கருத்துப்படி சாத்தான் சாத்தானுக்கு எதிராகச் செயல்படுவது போன்றாகும். இப்படிப்பட்ட செயல் ஒருபோதும் சாத்தியாமாகாது என்று சொல்லி, இயேசு தன்னை விமர்சித்தவர்களின் கருத்துகளை நீர்த்துப் போகச் செய்கின்றார்.

இயேசு தன்னை விமர்சித்தவர்களுக்கு முன்பாக வைக்கக்கூடிய இரண்டாவது வாதம் "பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களைக் ஒட்டுகிறேன் என்றால், நீங்கள் யாரைக் கொண்டு பேயை ஒட்டுகிறீர்கள்" என்பதாகும். இயேசுவின் இத்தகைய கேள்வியினால் அவர்கள் நிலைகுலைந்து போயிருக்கவேண்டும், அது மட்டுமல்லாமல் அதன்பிறகு அவரை நேரடியாக விமர்சிக்கும் தைரியம் இல்லாது போயிருக்கவேண்டும். இயேசு தூய ஆவியினால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு, எங்கும் நன்மை செய்துகொண்டு சென்றார் என்று திருத்தூதர் பணிகள் நூல் (10:38) சான்று பகர்கின்றது. அப்படியிருக்கும் அவரைத் தேவையில்லாமல் விமர்சித்தது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

நற்செய்தியில் வருகின்ற இந்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளைத் தெளிவு படுத்துகின்றது. அதில் முதலாவது உண்மை, "ஒருவரை வெற்றி கொள்ள முடியாதபோது, அவரைக் குறித்து தேவையற்ற கருத்துக்களைப் பரப்புவது ஆகும். இன்றைக்கு உலகம் முழுவதும் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இயேசுவைப் பிடிக்காதவர்கள், அவரை வெற்றிகொள்ள முடியாதவர்கள் எப்படி அவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஒட்டுகின்றான் என்று விமர்சித்தார்களோ, அது போன்று இன்றைக்கு நம்மைப் பிடிக்காதவர்கள் நமக்கெதிராக பொய் புரளிகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை நாம் எப்போதும் கவனமாகக் கையாள வேண்டும்.

நற்செய்தி வாசகம் உணர்த்தும் இரண்டாவது உண்மை "இயேசு நம்மை பாவத்தின் பிடியிலிருந்தும் சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவிக்கின்றார்" என்பதாகும். இயேசு செய்த ஒவ்வொரு செயலும் இறையாட்சி இந்த மண்ணில் மலர்ந்துவிட்டது என்று நாம் புரிந்துகொள்கின்ற அதே வேளையில் இயேசு சாத்தானின் அதன் தந்திரங்களையும் வெற்றிகொண்டு விட்டார் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று நம்மைத் தேவையற்ற விதத்தில் விமர்சிப்பவர்களை தக்க விதத்தில் கையாளுவோம், இறைவனுக்கு உகந்த வழியில் எப்போதும் நடப்போம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!