Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கிழமை நாள் வாசகம்

                 12 அக்டோபர் 2017  
 

முதல் வாசகம்

இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. 


இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 13 - 4: 2a

"எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள்," என்கிறார் ஆண்டவர். ஆயினும், "உமக்கு எதிராக என்ன பேசினோம்?" என்று கேட்கிறீர்கள். கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவரது திருமுறைகளைக் கடைபிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்து கொள்வதாலும் நமக்கு என்ன பயன்? இனிமேல் நாங்கள், "ஆணவக்காரரே பேறுபெற்றோர்" என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா?" அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு நூல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது. "நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்" என்கிறார் படைகளின் ஆண்டவர். ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவது போல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன். அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள். "இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும்அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்," என்கிறார் படைகளின் ஆண்டவர். "ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்."

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்   - திருப்பாடல்கள் 1: 1-2. 3. 4,6

ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர் 


1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி 

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி 

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி 


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!" அல்லேலூயா 
=========================================================================

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

அக்காலத்தில் இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், "எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது" என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!"

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-----------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 விடாமுயற்சியோடு இறைவனிடம் ஜெபிப்போம்!

ஸ்காட்லாந்து நாட்டின் விடுதலைப் போராட்ட வீரராகிய ராபர்ட் ப்ருஸ் (Robert Bruce) என்பவரைக் குறித்து சொல்லப்பட்டு வரக்கூடிய ஒரு நிகழ்வு

அவர் தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த பிரிட்டிஸ் நாட்டவருக்கு எதிராகக் கலகம் செய்தார். ஆனால் அவர் பிரிட்டிஸ் இராணுவத்தினரால் கடுமையாகத் தோற்கடிக்கப்படவே, காட்டிலுள்ள ஒரு குகைக்குச் சென்று, அங்கே தனியாக வாழத் தொடங்கினார்.

ஒருநாள் அவர் குகைக்குள்ளிருந்து வெளியே பார்த்தபோது குகையின் வாசலில் ஒரு சிலந்தியானது வலை பின்னிக்கொண்டிருந்தது. அது வலை பின்னும்போது ஆறுமுறை தோற்றுப்போனாலும் ஏழாம் முறையாக எழுந்து நின்று வலை பின்னுவதில் வெற்றி கண்டது. சிலந்தியின் இத்தகைய விடாமுயற்சியைக் கண்டு வியந்துபோன ராபர்ட் ப்ருஸ் தன்னுடைய படையை மீண்டுமாக வலுப்படுத்திக் கொண்டு, பிரிட்டிஸ் இராணுவத்திற்கு எதிராகப் போர்தொடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

ராபர்ட் ப்ருசைக் குறித்து சொல்லப்படுகின்ற இந்த நிகழ்வு உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்பதை பின்னாளில் சோதித்துப் பார்க்க விரும்பிய உயிரியலாளரான டபிள்யூ. எஸ். பிரிஸ்டோவ் என்பவர், ராபர்ட் ப்ருஸ் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் குகைக்குச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடுத் தொடங்கினார். அப்போது Zygiella x Notata என்ற வகைச் சிலந்தியானது வலை பின்னுவதும் அதில் தோற்றுப் போவதும், மீண்டுமாக எழுந்து நின்று வலை பின்னுவதுமாக இருந்தது. இதனைக் கவனித்த உயிரியலாளரான பிரிஸ்டோவ் ராபர்ட் ப்ரூசைக் குறித்துச் சொல்லப்படும் அந்த நிகழ்வு உண்மைதான் என்று உறுதி செய்தார்.

விடாமுயற்சியோடு ஒரு செயலைச் செய்தோம் என்றால், அதில் நிச்சயம் ஒருநாள் வெற்றியைப் பெறலாம் என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் விடாமுயற்சியோடு மனந்தளராமல் இறைவனிடம் ஜெபிக்கவேண்டும் என்கிற பாடத்தை நமக்குக் கற்றுத் தருகின்றோம். நாம் எப்படி இறைவனிடம் மனம் தளராது, விடாமுயற்சியோடு ஜெபிப்பது என்பதை இதன்வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு மனந்தளராமல் ஜெபிக்கவேண்டும் என்பதற்கு ஓர் உவமையைச் சொல்கிறார். அந்த உவமையில் வரும் மனிதர் நள்ளிரவில் தன்னுடைய நண்பரிடம் சென்று, "நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு, என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கின்றார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை" என்று சொல்லி அவரைத் தொல்லை படுத்துகின்றார். வீட்டில் இருப்பவரோ அவர் தன்னுடைய நண்பர் என்பதற்காக அல்ல, அவருடைய தொல்லையின் பொருட்டு அவருக்கு அப்பங்களைக் கொடுக்கின்றார்.

மத்திய கிழக்காசிய நாடுகளில் விருந்தோம்பல் என்பது ஆகச் சிறந்த பண்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படக்கூடியது. தன்னுடைய வீட்டிற்கு வரக்கூடிய விருந்தாளியை கடவுளுக்கு இணையாகப் பார்க்கப்படும் மரபு இன்றைக்கும் நம்முடைய கிராமப்புறங்களில் இருக்கின்றது. ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும் வரும் மனிதரோ தொலை தூரத்திலிருந்து தன்னுடைய வீட்டிற்குக் வரக்கூடிய நண்பருக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத ஓர் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார். எனவே அவர் தன்னுடைய நண்பரிடம் இரவு வேளையில் சென்று, அவருக்காக மூன்று அப்பங்களைக் கேட்கின்றார். வீட்டின் உள்ளே இருக்கும் நண்பரோ தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளோடு படுத்துறங்கிக் கொண்டிருக்கின்றார்.

இங்கே இன்னொரு செய்தியையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். அது என்னவென்றால் பாலஸ்தின நாட்டில் இருக்கக்கூடிய குளிருக்கு தங்களையே தகவமைத்துக் கொள்ளும்விதமாக கணவன் மனைவி பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்துதான் படுத்து உறங்குவார்கள். அப்படியிருக்கும்போது படுக்கையிலிருந்து ஒருவர் எழுந்தால் அது மற்றவரையும் பாதிக்கும். ஆனால் உவமையில் வரக்கூடிய வீட்டுக்கார நண்பரோ, அப்பம் கேட்டு வந்திருக்கும் நண்பரின் தொல்லையின் பொருட்டு, தன்னுடைய மனைவி, பிள்ளைகளை எழுப்பி விட்டுவிட்டு, அவனுக்கு அப்பங்களைத் தருகின்றார்.

இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு சொல்வார், "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்" என்று. நாம் மனந்தளராது இறைவனிடம் வேண்டினோம் என்றால், இறைவன் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் தருவார் என்பதுதான் இயேசு நமகுக் கூறும் செய்தியாக இருக்கின்றது. ஒருவேளை நாம் கேட்பது கிடைக்கவில்லை என்றால், இறைவன் நாம் கேட்டதைவிட வேறொன்றை அதிகமாகத் தருவார் என்பதே உண்மை.

எனவே, நாம் இறைவனிடம் மனந்தளராது, விடாமுயற்சியோடு ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!