Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கிழமை நாள் வாசகம்

                 11  அக்டோபர் 2017  
 

முதல் வாசகம்

ஆமணக்கு செடிக்காக நீ வருந்துகிறாய்; நினிவே மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 4: 1-11

அந்நாள்களில் யோனா கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார். "ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க நினைப்பீர்; பிறகு உம் மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும். ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக் கொள்ளும். வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது" என்று வேண்டிக்கொண்டார்.

அதற்கு ஆண்டவர், "நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?" என்று கேட்டார். யோனாவோ நகரை விட்டு வெளியேறினார்; நகருக்குக் கிழக்கே போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே அமைத்துக் கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக அதன் நிழலில் அமர்ந்திருந்தார்.

கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே முளைத்தது. அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறுநாள் பொழுது விடியும் நேரத்தில் ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று. கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. "வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது" என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.

அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி, "ஆமணக்குச் செடியைக் குறித்து நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?" என்று கேட்டார்.

அதற்கு யோனா, "ஆம், முறைதான்; செத்துப்போகும் அளவுக்கு நான் சினங் கொள்வது முறையே" என்று சொன்னார்.

ஆண்டவர் அவரை நோக்கி, "அந்தச் செடி ஓர் இரவில் முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம் காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த கால்நடை களும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?" என்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
===================================================================

பதிலுரைப் பாடல்    திபா 86: 3-4. 5-6. 9-10 (பல்லவி: 15b)

பல்லவி: என் தலைவரே! நீரே பேரன்பும் உண்மையும் கொண்டவர்.

3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். பல்லவி

5 என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி

9 என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். 10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! பல்லவி
        ==========================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உரோ 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். அல்லேலூயா.
==================================================================

நற்செய்தி வாசகம்

ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4

அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.

அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்" என்று கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 முக்காலத்துக்குமான ஜெபம்

ஒரு சமயம் கார்ல் மாக்சின் மகள் தன்னுடைய நண்பரிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் மிகத் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களுடைய பேச்சு திடிரென்று மதத்திற்குத் தாவிது.

அப்போது கார்ல் மாக்சின் மகள் தனது நண்பரிடம், "நான் எந்தவொரு சமயச் சூழலிலும் வளர்க்கப்படவில்லை; கடவுள் பற்றிய நம்பிக்கைகூட எனக்குக் கிடையாது. ஆனால் சில நாட்களுக்கு முன்பாக ஒரு ஜெர்மன் புத்தத்தில் ஜெபம் ஒன்றைப் படித்தேன். அந்த ஜெபத்தைப் படிக்கும்போது எனக்குள்ளே ஒரு பரவசம் ஏற்பட்டது. அந்த ஜெபத்தில் வருகின்ற கடவுள் மட்டும் இன்றைக்கும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால், அந்தக் கடவுளை நான் நிச்சயம் நம்புவேன்" என்றார்.

அதற்கு அவருடைய நண்பர் அவரிடம், "அது என்ன ஜெபம்" என்று கேட்டார்.

கார்ல் மாக்ஸ்சின் மகளோ, "விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்ற ஜெபம்தான்" என்று ஜெர்மன் மொழியில் மெதுவாக சொல்லத் தொடங்கினார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அனுதினமும் சொல்லக் கூடிய "விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே" என்கிற ஜெபம் சாதாரண ஜெபம் கிடையாது. அது எல்லாருக்கும் பிடித்தமான ஜெபம், இயேசு கற்பித்த ஜெபம், எக்காலத்துக்குமான ஜெபம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, "எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத் தாரும்" என்று கேட்கின்றார்கள். இயேசுவும் அவர்களுக்கு விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்கிற ஜெபத்தைக் கற்றுத் தருகின்றார். வழக்கமாக யூத இரபிக்கள் தங்களுடைய சீடர்களுக்கு ஜெபிக்க கற்றுத் தருவார்கள். திருமுழுக்கு யோவானும் கூட தன்னுடைய சீடர்களுக்கு ஜெபிக்கக் கற்றுத் தந்திருக்கின்றார். அந்த வகையில் இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கச் சொன்னதால் அவர் "விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே" என்கிற ஜெபத்தைக் கற்றுத் தருகின்றார். இயேசு சீடர்களுக்குக் கற்றுத் தரும் ஜெபம் ஒரு ஜெபம் எப்படி இருக்கவேண்டும், எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இயேசு சீடர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கும்போது கடவுளைத் "தந்தையே" என அழைக்கச் சொல்லித் தருகின்றார். ஜெபத்தில் நாம் யாரோ ஒருவரிடமோ அல்லது எங்கோ இருக்கின்ற ஒருவரிடமோ பேசவில்லை, மாறாக நம்முடைய தந்தையோடு பேசுகின்றோம் என்கிற உணர்வினை ஆண்டவர் இயேசு ஏற்படுத்துகின்றார்.

அடுத்ததாக இயேசு "உமது பெயர் தூயதென போற்றப் பெறுக; உமது ஆட்சி வருக என்று சொல்லி ஜெபிக்க சொல்லித் தருகின்றார். கடவுளுடைய பெயரை அறிந்தோர் அவர்மீது நம்பிக்கை வைப்பர், ஆண்டவர் அவர்களைக் கைவிடுவதில்லை என்கிறது திருப்பாடல் 9:10. ஆண்டவர் இயேசு இதனை அறிந்தவராய், ஆண்டவருடைய திருப்பெயரை சொல்லி வணங்கச் சொல்லி, அவரிடமிருந்து நிறைவான ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். இவ்வாறு இயேசு தான் கற்றுக்கொடுக்கும் ஜெபத்தில் இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவரை வணங்கிவிட்டு அதன்பிறகு நம்முடைய தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டச் சொல்கின்றார்.

இயேசு கற்றுத் தரும் ஜெபத்தில் வரக்கூடிய இரண்டாம் பகுதி நம்முடைய தேவைகளுக்காக மன்றாடுகின்ற ஒரு பகுதியாக இருக்கின்றது. இதில் வரக்கூடிய மூன்றுவிதமான வேண்டுதல்கள் முக்காலத்திற்குமான வேண்டுதல்களாக இருக்கின்றன.

எங்கள் அன்றாட உணவை நாள்தாரும் எங்களுக்குத் தாரும் என்கிற வேண்டுதல் நிகழ்காலத்திற்கு உரிய வேண்டுதலாக இருக்கின்றது. இறைவன் நமக்கு அனுதின உணவினை அளித்திடுமாறு ஜெபிப்பதன் வழியாக, அவர் நமக்கு ஒவ்வொருநாளும் உணவினைத் தந்திடும்படியாக ஜெபிக்கின்றோம்.

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் என்கிற வேண்டுதல் இறந்த காலத்திற்கான வேண்டுதலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் நம்முடைய பகைவர்கள், எதிரிகள் நமக்கெதிராகச் செய்த குற்றங்களை நாம் மன்னிப்பதால் இறைவன் நம்முடைய குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்று ஜெபிக்கின்றோம்.

நிறைவாக வரக்கூடிய எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும் என்கிற வேண்டுதல் எதிர்காலத்திற்கான வேண்டுதலாக இருக்கின்றது. வருங்காலத்தில் நமக்கு எந்ததொரு துன்பமும் வரக்கூடாது என்பதற்காக இயேசு நமக்கு ஜெபிக்கச் சொல்கிறார்.

ஆகையால், இயேசு கற்றுத்தருகின்ற இந்த உன்னதமான, முக்காலத்திற்குமான ஜெபத்தினை நாம் உருக்கமாகச் சொன்னால் போதும், கடவுளிடமிருந்து ஆசியைப் பெற்றுக் கொள்வது உறுதி.

எனவே, இயேசு கற்றுக் கொடுத்த ஜெபத்தினை உணர்ந்து சொல்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!