Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 கிழமை நாள் வாசகம்

                 10 அக்டோபர் 2017  
 

முதல் வாசகம்


நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டார்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி'' என்றார்.

அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார்.

நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்'' என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக் கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். "இதனால் அரசரும் அரசவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீயவழிகளையும், தாம் செய்துவரும் கொடும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.''

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
======================================

பதிலுரைப் பாடல்

திபா 130: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 3)

பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி
=================================================================

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
====================================================================

 நற்செய்தி வாசகம்

மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார்.

மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்'' என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
------------------------------------------------------------------

மறையுரைச் சிந்தனை

 இறைவார்த்தையைக் கேட்பதற்கு முக்கியத்துவம் கொடுப்போம்

மகான் ஒருவர் ஒருநாள் குடும்பஸ்தன் ஒருவனை கடைவீதியில் சந்தித்தார். அவன் எப்போதும் வேலை வேலை என்று அலைபவன். மகான் அவனிடத்தில், "எப்போது பார்த்தாலும், கடை கடையென்று அலைகிறாயே! சிறுதுநேரம் கோவிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு வரலாமே!" என்று சொன்னார். அதற்கு அவன், "குருவே! இப்போதுதான் கடையில் நன்றாக வியாபாரம் நடக்கின்றது. நான் தனியாளாக இருந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்தநேரத்தில் எப்படி வருவது; அதற்கென்று ஒரு நேரம் வரும். அப்போது வருகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

நாட்கள் சென்றன. இப்போது அவனது கடையில் ஏழு, எட்டுப் பேர் பணியாட்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தற்செயலாக மகான் அவனைச் சந்தித்து அதே கேள்வியைக் கேட்டார், அதற்கு அவன், "ஐயா! என்னுடைய கடையில் வியாபாரம் நன்றாக ஓடுகிறது. எனக்குக் கீழே ஏழு, எட்டுப் பேர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி, எப்படி என்னுடைய கடையை விட்டுவருவது. என்னுடைய மூத்தமகன் வளரட்டும், அவனுக்கு தொழில் கற்றுக்கொடுத்துவிட்டு, அதன்பின்னர் கோவிலுக்குச் வருகிறேன்" என்றான்.

மாதங்கள், வருடங்கள் பல உருண்டோடின. காலஓட்டத்தில் இப்போது அவன் அந்நகரிலே பெரிய பணக்காரனாக மாறியிருந்தான். அவனுடைய கடையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடிரென்று ஒருநாள் மகான் அவனைச் சந்தித்தார். செல்வச்செழிப்பில் ஆளே மாறியிருந்தான். அப்போது மகான் மீண்டுமாக அவனைப் பார்த்து, அதேகேள்வியைக் கேட்டார். அதற்கு அவன், "குருவே! இப்போது எல்லாம் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் என்னுடைய மூத்த மகனுக்கு தெரிகின்ற தொழில் ரகசியம், என்னுடைய இளையமகனுக்குத் தெரியவில்லை. ஆதலால் அவனுக்கு தொழில் சொல்லிக்கொடுத்துவிட்டு, நீங்கள் சொல்கின்ற எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் வருகின்றேன்" என்றான். மகான் அவனிடம் ஒன்றும் பேசாமல் வந்துவிட்டார்.

இப்படி ஒவ்வொருமுறையும் மகான் அவனைச் சந்திக்கும்போதும், அவன் ஏதாவது காரணத்தைச் சொல்லி, நழுவிக்கொண்டே இருந்தான். கடைசி வரைக்கும் அவன் கோவிலுக்கும் செல்லாமல், இறைவனை வழிபடாமல் இறந்துபோனான்.

கடவுளை மறந்து, உலக காரியத்தில் ஈடுபட்டு, மடிந்துபோகும் இந்த மனிதனைப் போன்றுதான் நாமும் இருக்கின்றோம். இத்தகைய பின்னணியில், இன்றைய நற்செய்தி வாசகம் "இறைவார்த்தைக்கு - இறைவனுக்கு - முக்கியத்துவம் கொடுத்து வாழ அழைக்கின்றது.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மார்த்தா, மரியாளின் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே மார்த்தா பற்பல காரியங்கள் புரிவதில் தன்னையே ஈடுபடுத்திக் கொள்கிறாள். மரியாவோ, இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவரது வார்த்தையை கேட்பதில் தீவிரம் காட்டுகிறாள். இறுதியில் மார்த்தா இயேசுவிடம் வந்து மரியா தனக்கு உதவுமாறு சொல்ல, இயேசு அவரிடம், "மார்த்த நீ பற்பல காரியங்களில் ஈடுபடுகிறாய். ஆனால் தேவையானது ஒன்று. இறைவார்த்தையைக் கேட்பதுதான் அது" என்று பதிலளிக்கிறார்.

இங்கே மரியாளின் செயலை ஏன் இயேசு பாராட்டுகிறார் என்று சிந்தித்துப் பார்க்கும்போது, விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய கருத்து, இயேசு எருசலேம் நகரை நோக்கி பாடுகள்பட சென்றுகொண்டிருந்தார். அத்தகைய வேளையில் அவர் மனக்கலக்கம் அடைந்திருந்தார். எனவே அவர் யாராது தனக்கு ஆறுதலாக இருக்கமாட்டார்களா என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தார். இயேசு எதிர்பார்த்த துணை, ஆறுதல் மரியாளிடமிருந்து கிடைத்தது. அதனால்தான் இயேசு அவரது செயலைப் பாராட்டுகிறார்.

குடும்பத்தில் கூட அதைச் செய்யவேண்டும், இதை வாங்கித் தரவேண்டும் என்றுதான் நினைக்கின்றோமே ஒழிய, சிறுது நேரம் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் மனம் திறந்து பேச மறுக்கின்றோம். மரியாளைப் போன்று சிறுது நேரம் இயேசுவின் காலடியில், நமது அன்புக்குரியவர்களின் காலடியில் அமர்ந்து பேசினால், அது நமது வாழ்வையே வளமாக்கும்.

திபா 48:1 ல் படிக்கின்றோம், "மக்களினங்களே நீங்கள் அனைவரும் ஆண்டவருக்குச் செவிகொடுங்கள்" என்று. நாம் மரியாவைப் போன்று இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருக்குச் செவிகொடுப்போம். இறையருள் பெறுவோம்.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!