Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                  01 அக்டோபர் 2020  

பொதுக்காலம் 26ஆம் வாரம்

=================================================================================
முதல் வாசகம் குழந்தை இயேசுவின் புனித தெரேசா கன்னியர் நினைவு
=================================================================================
 என் மீட்பர் வாழ்கின்றார்; இறுதியில் மண்மேல் எழுவார்.

யோபு நூலிலிருந்து வாசகம் 19: 21-27

யோபு கூறியது:

என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என்மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது. இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா? ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா? இரும்புக் கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.

ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன். என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும்போதே கடவுளைக் காண்பேன். நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -
=================================================================================
திபா 27: 7-8a. 8b-9abc. 13-14 . (பல்லவி: 13) Mp3

பல்லவி: வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன்.
7
ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8a
"புறப்படு, அவரது முகத்தை நாடு" என்றது என் உள்ளம். - பல்லவி

8b
ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன்.
9abc
உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். - பல்லவி

13
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14
நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================

நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12

அக்காலத்தில்

இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.

வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, "எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்" எனச் சொல்லுங்கள்.

அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
யோபு 19: 21-27

"என் மீட்பர் வாழ்கிறார்"

நிகழ்வு


ஓர் ஊரில் பண்ணையார் ஒருவர் இருந்தார். இவரிடம் கூலியாளாக ஒருவர் வேலை பார்த்து வந்தார். இந்தக் கூலியாள் பண்ணையாரிடம் நிறையக் கடன் வாங்கியிருந்ததால், அதை அடைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். இந்தக் கூலியாளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் வேறு இருந்தாள்.

ஒருநாள் பண்ணையார் தன்னிடம் வேலைபார்த்து வந்த கூலியாளை அழைத்து, "நீ என்னிடம் பட்ட கடனை அடைப்பதற்குப் பல ஆண்டுகளாக முயற்சி செய்துகொண்டு இருக்கின்றாய்; ஆனாலும், உன்னால் முடியவில்லை. அதனால் நீ உன் கடனை அடைப்பதற்கு நான் ஒரு வழி சொல்கின்றேன். உனக்கொரு மகள் இருக்கின்றாள் அல்லவா! அவளுக்கு முன்பாக ஊர்மக்களைச் சாட்சியாக வைத்து, "பண்ணையாரைத் அருட்சாதனம் செய்யவேண்டும்", "பண்ணையாரைத் அருட்சாதனம் செய்யவேண்டாம்" என்று இரண்டு சீட்டுகளை எழுதிப் போடுகின்றேன். அதில் எந்தச் சீட்டு வருகின்றதோ, அந்தச் சீட்டில் சொல்லப்பட்டதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உன்னுடைய கடனும் அடைந்துவிடும்" என்றார்.

பண்ணையார் இப்படிச் சொன்னதைக் கேட்டதும், கூலியாளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில், பண்ணையார் மிகவும் தந்திரமானவர் என்பது கூலியாளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கடனை அடைக்க அவருக்கு வேறு வழி தெரியாதததால், பண்ணையார் சொன்னதற்கு அவர் சரியென்று ஒத்துக்கொண்டார். இதன்பிறகு கூலியாள், தன் வீட்டிற்கு வந்து மகளிடம், பண்ணையார் சொன்னதைச் சொல்ல, அவர் அதிர்ந்துபோனார். ஆனாலும் அவர், "திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணையாக இருக்கும்பா" என்று தன் தந்தையிடம் சொல்லி, அந்த நாளுக்குத் தயாராக இருந்தார்.

குறிப்பிட்ட நாளும் வந்தது. ஊர் மக்கள் யாவரும் கூடியிருக்க, பண்ணையார் தான் ஏற்கெனவே, "பண்ணையாரை மணந்துகொள்ளவேண்டும்" என்று எழுதி வைத்திருந்த இரண்டு சீட்டுகளையும் கூலியாளின் மகள் முன்பாகப் போட்டு, அதை எடுக்கச் சொன்னான். பண்ணையாரின் தந்திரத்தை நன்கு அறிந்துவைத்திருந்த கூலியாளின் மகள், அந்த இரண்டு சீட்டுகளில் ஒரு சீட்டை எடுத்து, அதைத் தெரியாமல்போல, தனக்குப் பக்கத்தில் வைத்திருந்த வெந்நீர் இருந்த செம்புக்குள் போட்டார். இதனால் அந்தச் சீட்டில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அழிந்துபோயின.

இதைப் பார்த்துவிட்டுச் சூழ்ந்திருந்த மக்கள், "இப்படி ஆகிவிட்டதே! என்று புலம்பத் தொடங்கினார்கள். அப்பொழுது கூலியாளின் மகள் அவர்களிடம், "சீட்டு, வெந்நீருக்குள் விழுந்துவிட்டதே என்று கவலைப்படவேண்டாம்! இன்னொரு சீட்டில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதைத் தெரிந்துகொண்டால், முதல் சீட்டில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்" என்றார். ஊர் மக்கள் அதற்கு, "இது நல்ல யோசனை" என்று சொல்ல, கூலியாளின் மகள், இன்னொரு சீட்டை எடுத்து, அதில் எழுதப்பட்டிருந்த, "பண்ணையாரை மணக்கவேண்டும்" என்ற வார்த்தைகளை வாசித்துக்காட்டினார்.

அப்பொழுது கூட்டத்திலிருந்தவர்கள், "இந்தச் சீட்டில் "பண்ணையாரை மணக்க வேண்டும்" என்று எழுதப்பட்டு இருப்பதால், முதல் சீட்டில் "பண்ணையாரை மணக்க வேண்டாம்" என்றுதான் எழுதப்பட்டிருக்கும் என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள். இவ்வாறு கூலியாளின் மகள் ஆண்டவரின் அருளாலும் துணையாலும் மிகப்பெரிய சூழ்ச்சியை வெற்றிகொண்டார். முடிவில் கூலியாள் பட்ட கடனும் அடைக்கப்பட்டது.

ஆம், கடவுள் தம் அடியார்களையும், தம்மை நோக்கிக் கூவி அழைப்போரையும் ஒருபோதும் கைவிடுவதில்லை; கை நெகிழ்வதுமில்லை. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், யோவுவின் நண்பர்கள் அவர்மீது பழி சுமத்தியபொழுது, அவர் அவர்களிடம், "என் மீட்பர் வாழ்கின்றார்...இறுதியில் இந்த மண் மேல் எழுவார்" என்கின்றார். யோபு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தன் நண்பர்கள் தன்மீது பழிசுமத்தியபொழுது, "என் மீட்பர் வாழ்கிறார்" என்ற யோபு

ஆண்டவருக்கு அஞ்சி, நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து வந்த யோபுவின் உடைமைகள் அவரை விட்டுப் போயின; அவருடைய பிள்ளைகள் இறந்தார்கள். இதைப் பார்த்துவிட்டு அவருடைய நண்பர்கள் அவரிடம், நீ பாவி என்பதால்தான் உனக்கு இப்படியெல்லாம் நடக்கின்றது என்று அவர்மீது பழி சுமத்துகின்றார்கள். அப்பொழுதுதான் யோபு அவர்களிடம், "என் மீட்பர் வாழ்கின்றார் என்றும், இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்..." என்கின்றார்.

யோபுவின் நண்பர்கள் யோபுவின்மீது பழி சுமத்தியபொழுது அல்லது அவருக்குத் துன்பம் வந்தபொழுது, அவர் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை. மாறாக அவர் ஆண்டவர்மீது மிக உறுதியான நம்பிக்கை கொண்டவராய், மேலே உள்ள வார்த்தைகளை உதிர்க்கின்றார். யோபுவின் வாழ்க்கையில் துன்பங்கள் வந்ததுபோன்று, நம்முடைய வாழ்க்கையிலும், நாம் ஒரு தவறு செய்யாத பொழுதும் துன்பங்கள் வரலாம். இத்தகைய தருணங்களில் நாம் மனம் சோர்ந்துபோய்விடாமல் அல்லது இறைவனைப் பழித்துரைத்துக் கொண்டு இராமல், அவர்மீது நம்பிக்கையோடு வாழ்வதே சிறந்தது.

ஆகையால், நாம் யோபுவைப் போன்று எத்தகைய துன்பங்கள் வந்தாலும், ஆண்டவரில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, அவரது அன்பில் நிலைத்திருப்போம்.

சிந்தனை

"இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்" (திபா 34:6) என்பர் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நம்முடைய இக்கட்டான வேளையில் மட்டுமல்லாமல், எல்லா வேளையிலும் யோபுவைப் போன்று ஆண்டவரைத் துணைக்கு அழைத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 குழந்தை இயேசுவின் புனித தெரேசா கன்னியர் நினைவு

மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 01)


இன்று திருச்சபையானது புனிதையும், மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியுமான தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.

குழந்தைத் தெரசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசித்து வந்த லூயிஸ் மார்டின் என்பவருக்கு கடைசி மகளாகப் பிறந்தாள். தெரசாவின் குடும்பம் மிகவும் பக்தியான குடும்பம். இவருடைய சகோதரிகள் இருவர் ஏற்கனவே கார்மேல் மடத்தில் சேர்த்து துறவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களைப் பார்த்து வளர்ந்த தெரசா தானும் கார்மேல் மதத்தில் சேர்ந்து துறவியாக வாழவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு துறவுமடத்தில் சேர்வதற்கான போதிய வயது வராத காரணத்தினால் அவர் துறவு மடத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு தெரசாவும், அவருடைய பெற்றோரும் ரோம் நகரில் அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் லியோவின் குருத்துவ வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றார்கள். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது தெரசா எழுந்து, கார்மேல் மடத்தில் துறவியாகச் சேரவேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு வயது பதினைந்து மட்டுமே. குழந்தைத் தெரசாவிடம் இருந்த ஆர்வத்தை பார்த்த திருத்தந்தை அவர்கள், அவரை கார்மேல் மடத்தில் துறவியாக சேர்த்துக்கொள்ளப்படுவார் என்ற ஒப்புதல் அளித்தார். அன்று குழந்தைத் தெரசா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

1890 ஆம் ஆண்டு தெரசா கார்மேல் கன்னியர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். அங்கே ஒரு சாதாரண வாழ்க்கையை, அசாதாரண முறையில் வாழ்ந்துகாட்டினார். ஆம், தெரசா கன்னியர் மடத்தில் செய்த அனைத்தையும் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் செய்தார். இது அவரை மற்ற துறவிகளிடமிருந்து பிரித்துக்காட்டியது. ஒருநாள் இவரைச் சந்தித்த இல்லத் தலைவி அக்னேஸ், துறவு மடத்தில் நீ சந்திக்கின்ற ஒவ்வொரு அனுபவத்தையும் தொகுத்து ஒரு புத்தகமாக வடிக்கச் சொன்னார். இல்லத் தலைவியின் வேண்டுகோளுக்கு இணங்க தெரசா தன்னுடைய துறவற வாழ்க்கையில் சந்திக்க அனுபத்தை எல்லாம் "ஓர் ஆன்மாவின் கதை" (The Story of Soul) என்ற புத்தகமாகப் படைத்தார்.

"ஓர் ஆன்மாவின் கதை" என்ற அந்தப் புத்தகத்தில் தெரசா குறிப்பிடும் மிக முக்கியமான காரியம் "சிறிய வழி" (Little Way) என்பதாகும். அதாவது நாம் செய்யும் சிறு செயலாக இருந்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால், அதன்வழியாக ஓர் ஆன்மாவை மீட்டெடுக்க முடியும் என்பதே குழந்தைத் தெரசா உணர்ந்தும் உண்மையாகும். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை "To Pick up a pin for love can convert a soul" என்பதாகும்.

தெரசா தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடும் இன்னொரு உண்மை யாதெனில், அவர் நான்கு சுவர்களுக்குள் இருந்துகொண்டு பல்வேறு நாடுகளில் மறைப்பணி செய்துகொண்டு வந்த குருக்களுக்காகச் ஜெபித்தார்; உலக மக்களுக்காகச் ஜெபித்தார். அந்த ஜெபத்தின் வழியாக அவர் ஆன்மாக்களை இறைவன்பால் கொண்டு வந்து சேர்த்தார். இவ்வாறு அவர் துறவு மடத்தில் வாழ்ந்த ஒன்பது ஆண்டுகளில் ஏராளமான ஆன்மாக்கள் மனந்திரும்பக் காரணமாக இருந்தார். இப்படிப்பட்ட புனிதை தன்னுடைய இருபத்தி நான்காம் வயதில் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.

இவருடைய வாழ்வைப் பார்த்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1999 ஆம் ஆண்டு இவரை மறைபரப்பு நாடுகளுக்குப் பாதுகாவளியாக ஏற்படுத்தினார்.

தூய குழந்தைத் தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவருடைய வாழ்வைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், அவருடைய வாழ்க்கை நமக்கு எத்தகைய செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இவருடைய வாழ்க்கை உணர்த்தும் உண்மை ஒன்றே ஒன்றுதான். அது மீட்பை, இறைவனின் அருளைப் பெற பெரிய பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதில்லை, மாறாக சிறிய காரியங்களைச் செய்தாலும், அதை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்தால் அதுவே போதுமானதாகும் என்பதாகும். ஆண்டவர் இயேசுகூட நம்மை பெரிய பெரிய காரியங்களைச் செய்யச் சொல்லவில்லை. மாறாக பசித்தோருக்கு உணவிடச் சொல்கிறார், தாகமாக இருப்போருக்கு தண்ணீர் தரச் சொல்கிறார், நோயாளியைக் கவனிக்கச் சொல்கிறார், சிறையில் இருப்போரைப் பார்க்கச் சொல்கிறார்..... (மத் 25:40) இப்படிச் செய்வதனால் நாம் விண்ணரசைப் பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதியும் தருகிறார். எனவே நாம் சிறிய சிறிய காரியங்களை குழந்தைத் தெரசாவைப் போன்று இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இயேசுவின் அன்புக்கு உரியவர்களாவோம்.

இறுதியாக ஒரு நிகழ்வைச் சொல்லி நிறைவு செய்வோம். ஒருமுறை பத்திரக்கையாளர் ஒருவர் எட்மன்ட் ஹிலாரியிடம், "உங்களோடு பணிசெய்யும் குழுவை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், "சின்னதாகவோ, பெரிதாகவோ செயல்பட்டுக்கொண்டே இருப்பவர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன்" என்றார். தொடர்ந்து அவர் அவரிடம்,. சிறிய முயற்சிகளில் சிறப்பாகச் செய்தவர்கள் பெரிய முயற்சிகளில் பரிமளிப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதனால்தான் நான் சிறிய விசயங்களில் பொறுப்புள்ளவர்களாக இருப்பவர்களை, பெரிய விசயங்களுக்கு பொறுப்பாளர்களாக அமர்த்துகிறேன்" என்றார்.

இதனை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். வெற்றி என்பது உடனே கிடைத்துவிடகூடிய ஒன்று அல்ல, அது படிப்படியாக கிடைப்பது. நாம் சிறிய சிறிய காரியங்களை முனைப்போடு செய்தால் பெரிய பெரிய காரியங்கள் நமக்கு ஒருநாள் கைகூடும்.

ஆகவே தூய குழந்தை தெரசாவைப் போன்று சிறிய சிறிய காரியங்களை இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்வோம். இறைவன் நம்மை பெரிய காரியங்களுக்கு பொறுப்பாளராக உயர்த்துவார்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
குழந்தை இயேசுவின் புனித தெரேசா கன்னியர் நினைவு

மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 01)


"உம் நற்செய்தியை உலகின் ஐந்து கண்டங்களுக்கும் சென்று போதிக்க வேண்டும் என்கிற தணியாத ஆவல் உள்ளது; உமது மீட்பின் சிலுவையை, உம்மை அறியாத நாடுகளில் நிறுவவும் விரும்புகிறேன்; உமது திருப்பெயரின் மகிமையை மக்களுக்கு உணர்த்த எவ்வளவோ விரும்புகிறேன்; என் இறைவாக்கு பணி ஐந்து கண்டங்களில் மட்டுமல்லாது, தனித்திருக்கும் தீவுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பது என் ஆவல்; என் பணி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அல்லாது, உலக முடிவு வரை தொடர வேண்டும் என்று அதிகமாய் விரும்புகிறேன்". இது புனித குழந்தை தெரசா தம் வாழ்வின் இறுதிநாட்களில், தனது வாழ்க்கை குறிப்பேட்டில் எழுதியவை.

இவை எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் மேல் கழிந்த பின்னர், கடந்த 2008 மே 31 முதல் ஜூன் 14 வரை விண்வெளியில் பயணம் செய்த கர்னல் ரோள்கரன், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், நியூகேள்ளி என்ற இடத்தில் உள்ள கார்மல் கன்னியர் இல்லச் அருட்சகோதரிகளைச் சந்திக்கச் சென்றார். இந்த அமெரிக்கர் தம் விண்வெளிப் பயண வெற்றிக்காகச் செபிக்கும்படி அந்த அருட்சகோதரிகளைக் கேட்டுக்கொண்டார். அப்போது விண்வெளியில் தான் வைத்துவிட்டு வர ஏதாவது புனிதப் பொருள் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அருட்சகோதரிகள் புனித குழந்தை தெரசாவின் இறுதி விருப்பத்தை தெரிவித்து, அப்புனிதையின் நினைவுப் பொருள் ஒன்றினை விண்வெளி வீரரிடம் கொடுத்தனர். இப்பொழுது புனித தெரசாவின் புனித நினைவுப் பொருள் 57,35, 843 மைல்கள் உயரத்தில் இடம்பெற்றிருப்பதாகக் செய்திகள் கூறுகின்றன.

திருச்சபையால் "மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலி" என்று அழைக்கப்படும் புனித குழந்தை தெரசாவின் எல்லா கண்டங்களிலும், ஏன் எல்லா இடங்களிலும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற கனவு இவ்வாறு நிறைவேறுகிறது.
இன்று திருச்சபையானது புனித குழந்தை தெரசாவின் நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் அவரது வாழ்வும், இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்களும் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை பணிக்காக அனுப்புகிறார். அப்படி அனுப்புகிறபோது ஒருசில அறிவுரையும் சொல்கிறார். அவற்றில் முதலாவது "ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போன்று உங்களை நான் அனுப்புகிறேன்" என்பது ஆகும். இங்கே ஓநாய்கள் என்பது நற்செய்திப் பணியில் நாம் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள், துன்பங்களைக் குறிப்பதாக இருக்கிறது. இறைவார்த்தையை அறிவிக்கின்றபோது பலர் நம்மைத் துன்புறுத்தலாம், இகழ்ந்து பேசலாம், இல்லாதது, பொல்லாதது எல்லாம் சொல்லலாம். அவற்றையெல்லாம் நாம் துணிவோடு தாங்கிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக இயேசு "பணப்பையோ, வேறு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம்" என்று கூறுகின்றார். காரணம் நற்செய்திப் பணி என்பது இறைவனை நம்பி, இறைவனின் மகிமைக்காகச் செய்யப்படவேண்டிய ஒன்று. எனவே அத்தகைய பணியில் நாம் பணத்தை நம்பிச் செயல்பட்டால், நமது பணி பொருளற்றதாகிவிடும். பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதியமடல் 4:13ல் கூறுவார், "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு." என்று. நாம் கடவுளை மட்டும் நம்பி பணிசெய்கிறபோது வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை என்பதுதான் இயேசுவின் கருத்தாக இருக்கின்றது.

மூன்றாவதாக இயேசு, "நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும், இவ்வீட்டிற்கு அமைதி உரித்தாகுக எனச் சொல்லுங்கள்" என்கிறார். ஆம், இயேசுவின் சீடர்களாக இருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவரும் அமைதியின் தூதுவர்களாக மாறவேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம். அதனை அவர் வாழ்வின் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார். "உலகம் தரமுடியாத அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் எனச் சொல்லும் இயேசு, தான் உயிர்த்த பின்பு "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" எனச் சொல்கிறார். இவ்வாறு இயேசு அமைதியின் அரசராக விளங்கினார். அவரது பணியைத் தொடரும் நாமும், நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு அமைதியை, அன்பை வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆகவே புனித குழந்தை தெரசாவின் நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் அவரைப் போன்று நற்செய்தியின் தூதுவராக அமைதியின் தூதுவராக விளங்குவோம். நற்செய்திப் பணியில் எதிர்வரும் சவால்களை துணிவோடு எதிர்கொள்வோம். இறையருள் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================


குழந்தை இயேசுவின் புனித தெரேசா(1 அக்டோபர் 2020) திருநாள்

மௌனப் புன்னகையாள்



'வானிலிருந்து ஆசிகளை ரோசா மலர்களாக அள்ளித் தெளிக்கும் எங்கள் சின்ன ராணி குழந்தை தெரசா' என்று எங்கள் இளங்குருமட அதிபர் அருள்திரு. ஹெர்மஸ் மொடுதகம் அவர்கள் திருப்பலியில் கண்களை மூடிக்கொண்டு மன்றாடும் சின்னராணியின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

இளங்குருமடத்தில் நாங்கள் இருந்த அந்த ஆண்டு (1998-1999), சின்னராணி பற்றிய இரண்டு புத்தகங்களை நாங்கள் எங்கள் ஆன்மீக வாசிப்பிற்காக எடுத்திருந்தோம்: ஒன்று, 'ஓர் ஆன்மாவின் வரலாறு' - இது சின்னராணியின் தன்வரலாற்று நூல். இரண்டு, 'மௌனப் புன்னகையாள்' - இது சின்னராணி பற்றிய வரலாற்று நூல். மேற்காணும் இரண்டு நூல்களிலும், 'சின்ன வழி' அல்லது 'சிறிய வழி' என்பதுதான் அதிகம் பேசப்பட்டது.

சின்னராணியின் சின்ன வழி அல்லது சிறிய வழி பற்றி இன்று நாம் சிந்திப்போம்.

இன்று, நாம் பெரிய வழி பற்றியே பேசுகிறோம். இருவழிச் சாலை, நான்கு வழிச் சாலை, ஆறு வழிச் சாலை, என்பவை வளர்ந்து எட்டு வழிச் சாலையாக மாறிக்கொண்டு வருகின்றன. நம் இணைய வேகமும் 2, 3, 4, 5ஜி என அகன்று கொண்டே வருகின்றது. வாகனம் ஓடும் வழியும், இணையதள தரவு நகரும் வழியும் பெரியதாகவும் அகலமாகவும் இருந்தாலும், நம் உள்ளம், உடல்நலம், மனநலம் ஆகியவை சிறியதாகிக்கொண்டே வருகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.

'பெரிதினும் பெரிது கேள்' எனச் சொல்லும் இந்த உலகத்தின் சப்தங்களின் நடுவில், 'சிறிதினும் சிறிது கேள்' எனக் கற்பிக்கிறாள் மௌனப் புன்னகையாள்.

'சிறிய வழியில்' நடப்பது எப்படி?

சின்னராணியின் வார்த்தைகளிலேயே கேட்போம்.

1. 'அன்பு செய்வோம். ஏனெனில், அதற்காகவே நம் இதயங்கள் படைக்கப்பட்டன.'

2. 'சிறிய தியாகம் செய்வதற்கான வாய்ப்பையும்கூட நழுவவிட வேண்டாம்.'

3. 'அன்பு அனைத்தையும் வெல்லும்.'

4. 'நாம் அடையும் அனைத்தும் அன்பு இல்லையேல் வெறுமையே.'

5. 'நம்பிக்கை, நம்பிக்கை மட்டுமே நம்மை அன்புக்கு இட்டுச் செல்லும்.'

6. 'கடவுளின் பார்வையில் எதுவும் சிறியது அல்ல. நீ செய்வதனைத்தையும் அன்புடன் செய்து பழகு.'

7. 'உன் ஆன்மாவில் கடவுள் செயலாற்றுவதற்கு ஆண்டுகள் தேவையில்லை. ஒரு நொடி போதும்.'

8. 'கனிவு மட்டுமே நமக்கு வழிகாட்டும் விண்மீன்.'

9. 'நீ கடவுளின் பிள்ளை என்ற அறிவில் நீ மகிழ்ந்தால் அதுவே போதும்.'

10. 'நம்மைச் சுற்றியுள்ள பொருள்களில் அல்ல, மாறாக, நம் ஆன்மாவின் அடித்தளத்தில்தான் மகிழ்ச்சி குடிகொள்கிறது.'

11. 'எல்லா மலர்களும் ரோஜா ஆக விரும்பினால், வசந்தகாலம் தன் அழகை இழந்துவிடும்.'

12. 'கடவுளின் விருப்பம் நிறைவேற்றுவதில்தான் புனிதம் அடங்கியுள்ளது.'

13. 'அன்பு செய்யும் ஒருவர் கணக்குப் பார்ப்பதில்லை.'

14. 'உனக்கு அடுத்திருப்பவரின் குறைகளைப் பொறுத்துக்கொள்வதில்தான் அன்பு அடங்கியுள்ளது.'

15. 'உண்மை ஒன்றே எனக்கு ஊட்டம் தரும்.'

16. 'ஒவ்வொரு பொழுதாக வாழ்! ஒவ்வொன்றையும் இனிமையாக வாழ்!'

17. 'சிறுமலரும் நம்மிடம் பேசினால், கடவுள் அதற்குச் செய்த யாவற்றையும் நமக்குச் சொல்லும்!'

18. 'என் செபத்திலும் தியாகத்திலும்தான் என் வலிமை உள்ளது.'

19. 'ஒவ்வொருவரோடும் வாக்குவாதம் செய்வதைவிட, அவர்களின் கருத்தில் அவர்களை விட்டுவிடுவதே நலம்.'

20. 'இறைவேண்டலின் ஆற்றல் அளப்பரியது.'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 18:1-5), 'விண்ணரசில் பெரியவர்' என்று ஆபிரகாம், யாக்கோபு, மோசே, தாவீது, சாலமோன் போன்ற மாபெரும் மனிதர்களை முன்வைக்காத இயேசு, ஒரு சிறுபிள்ளையை முன்நிறுத்துகிறார். 'சிறியவர் ஆவதே பெரியவர் ஆவது' என்பது இயேசுவின் இனிய அறிவுரை.

பெரியவர் ஆகியே பழக்கப்பட்ட நாம் சிறியவர் ஆக முயற்சிக்க சின்னராணி பரிந்து பேசுவாராக!

Rev. Fr. Yesu Karunanidhi
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!