Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     31 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 30ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கடவுளின் அன்பிலிருந்து எந்தப் படைப்புப் பொருளும் நம்மைப் பிரிக்கவே முடியாது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

சகோதரர் சகோதரிகளே, கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ? கடவுள் தேர்ந்துகொண்டவர்களுக்கு எதிராய் யார் குற்றம் சாட்ட இயலும்? அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் காட்டுபவர் கடவுளே.

அவர்களுக்கு யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? இறந்து, ஏன், உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் கிறிஸ்து இயேசு நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ! கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? "உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகிறோம், வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளாகக் கருதப்படுகிறோம" என மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்.

ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 109: 21-22. 26-27. 30-31 (பல்லவி: 26b) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்.

21 என் தலைவராகிய கடவுளே! உமது பெயரை முன்னிட்டு என் சார்பாகச் செயல்படும்! உமது பேரன்பின் இனிமைபொருட்டு என்னை மீட்டருளும்! 22 நானோ எளியவன்; வறியவன்; என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது. பல்லவி

26 ஆண்டவரே! என் கடவுளே! எனக்கு உதவியருளும்! உமது பேரன்பிற்கேற்ப என்னை மீட்டருளும்! 27 இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே! இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும். பல்லவி

30 என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன். 31 ஏனெனில், வறியோரின் வலப் பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 19: 38; 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, "இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்"  என்று கூறினர்.

அதற்கு அவர் கூறியது: "இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!

எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே! இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். `ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 13: 31-35

இடர்களுக்கு மத்தியில் இறையாட்சிப் பணி

மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித சிரில். செசெரியா பகுதியைச் சேர்ந்த இவரது தாய் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். தந்தையோ ஒரு புறவினத்தார்.

சிரில் தன்னுடைய தாயிடமிருந்து கிறிஸ்து இயேசுவைப் பற்றி அறிந்துகொண்டு, சிறுவயது முதலே ஒரு நல்ல கிறிஸ்தவனாக வாழ்ந்துவந்தார். ஏற்கனவே சிரிலின் தாய், தனது கணவரின் (சிரிலின் அப்பாவின்) விருப்பத்தின்படி நடவாமல், கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவது அவருக்கு கோபத்தை உண்டு பண்ணியிருந்ததால், சிரிலின் போக்கு அவருக்கு இன்னும் சினத்தை உண்டு பண்ணியது. இதனால் அவர் தன்னுடைய மகனை வீட்டிலிருந்தே துரத்திவிட்டார்.

ஆனாலும் அவர், "என்னுடைய பிறந்த வீடு என்னைத் துரத்திவிட்டாலும், விண்ணக வீடானது என்னை ஏற்றுக்கொள்ளும்" என்ற விசுவாசத்தோடு கிறிஸ்தவ மதத்தைத் தழுவிவந்தார். அவர் இப்படி கிறிஸ்தவ மதத்தைத் தழுவுவது செசரியாவின் ஆளுநருக்கு தெரியவர அவர் சிரிலை அழைத்து, கிறித்துவை மறுதலித்து, உரோமை மதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் என்னுடைய தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி சிறில் தனது நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.

அப்போது ஆளுநர், "நீ கிறிஸ்துவை மறுதலிக்கவில்லை என்று சொன்னால் உன்னை தீச்சூளைக்குள் தள்ளி கொன்றுபோடுவேன்" என்று பயமுறுத்திப் பார்த்தான். ஆனால் சிரிலோ தனது விசுவாசத்தில் இன்னும் உறுதியாய் இருந்தார்.

இதனால் ஆளுநன் அவரை கி.பி.251 ஆம் ஆண்டு வாளுக்கு இரையாக்கினான். எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தான் கொண்ட கொள்கையில் புனித சிரில் உறுதியாக இருந்தார்; தன்னுடைய விலைமதிப்பில்லாத இரத்தத்தைச் சிந்தி, சிறு வயதிலே இயேசுவுக்கு சான்று பகர்ந்தார்.

துன்பங்களுக்கு மத்தியிலும் நாம் இயேசுவுக்கு சான்று பகிர்ந்து வாழவேண்டும் என்று புனித சிரில் அவருடைய வாழ்க்கை நமக்கு எடுத்துக் கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசுவிடம் ஒரு சில பரிசேயர்கள் வந்து, இங்கிருந்து போய்விடும், ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லப் பார்க்கிறான்" என்கின்றனர். ஆனால் இயேசுவோ அதற்கெல்லாம் அஞ்சாமல், "இன்றும், நாளையும் நான் பேய்களை ஓட்டுவேன், பிணிகளைப் போக்குவேன், மூன்றாம் நாளில் என்னுடைய பணி நிறைவு பெறும். இதை அந்த நரியிடம் போய் சொல்லுங்கள் என்கிறார்". இயேசு தந்தைக் கடவுள் தனக்கு அளித்த பணியை சிறப்புடன் செய்வதில் கவனமாக இருந்தார். அதனால் எப்படிப்பட்ட இடர்கள் வந்தாலும் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

யோவான் நற்செய்தி 17:4 ல் வாசிப்பது போல இயேசு தந்தை தன்னிடம் ஒப்படைத்த வேலையை செய்து முடித்து, தந்தையை மாட்சிப்படுத்துவதில் கண்ணும், கருத்துமாய் இருந்தார். அதற்காக அவர் எத்தகைய சவாலையும் துணிவுடன் எதிர்கொண்டார்.

இயேசுவின் பணியைச் செய்யும் நம்மிடம் இயேசுவிடம் விளங்கிய அத்தகைய நெஞ்சுறுதி, துணிச்சல் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பலநேரங்களில் ஒரு சாதாரண துன்பத்திற்காக எதிர் வரும் சாவாலுக்காக - இயேசுவை மறுதலிக்கத் துணிந்துவிடுகின்றோம். நற்செய்தியிலே பேதுரு, எங்கே தன்னுடைய உயிர் போய்விடுமோ என்ற அஞ்சத்தில் இயேசுவை மும்முறை மறுதலிக்கிறார். இயேசுவின் கொள்கைகளை மறந்து, அவரது போதனைகளின் படி நடந்தால் எங்கே நமக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில் வாழ்கிறபோது எல்லாம் நாம் இயேசுவை மறுதலிப்பவர்களாகவே இருக்கின்றோம். இது உண்மையான சாட்சிய வாழ்வு ஆகாது. இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிவதுதான் உண்மையான வாழ்வாக இருக்கும்.

அதேவேளையில் இயேசுவின் பணியைச் செய்கிறபோது இறைவனின் துணி நமக்கு எப்போதும் உண்டு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இறைவன் தன்னுடைய பணியைச் செய்யும் மக்களுக்கு எல்லா ஆசிரையும், அருளையும் தருவார் என்பதே விவிலியம் காட்டும் உண்மை. பிலிப்பியருக்கு எழுதப்பட்ட திருமுகம் 4:13 ல் வாசிக்கின்றோம் "எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றல் உண்டு" என்று. ஆம், இயேசுவின் அருளால் நாம் எத்தகைய பணியையும் மேற்கொள்ளலாம்.

ஆதலால் எத்தகைய இடர்வரினும் இறைவனின் பாதுகாப்பை உணர்ந்து, இறையாட்சிப் பணிபுரிவோம். இறையருள் நிரம்பப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
முதல் வாசகம்

கடவுளின் அன்பிலிருந்து எந்தப் படைப்புப் பொருளும் நம்மைப் பிரிக்கவே முடியாது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 31b-39

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது?

நிகழ்வு

பேரரசர் இரண்டாம் பிலிப்பும் (1165-1223) அவருடைய மகனும் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்கள். அவர்கள் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போதே கடுமையாக மழை பெய்யத் தொடங்கியது. அவர்களுடைய நேரத்திற்கு மழைக்கு ஒதுங்குவதற்கு ஓரிடம் கூட இல்லாமல் போனது.

இதைப் பார்த்து பேரரசரின் மகன் அவரிடம், "அப்பா! நீங்கள்தான் எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற பேரரசராயிற்றே! உங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு இந்த மழையை நிறுத்தவேண்டியதுதானே! இந்த மழையில் நனைவது எவ்வளவு கடினமாக இருக்கின்றது!" என்றான். உடனே பேரரசர் பிலிப் அவனிடம், "அப்பாவிற்கு அதிகாரமும் இருக்கின்றதுதான்... ஆனால், இந்த மழையை என்னிடம் இருக்கின்ற அதிகாரத்தைக் கொண்டு நிறுத்தமுடியாது... இதனை உண்மையிலேயே எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற ஆண்டவரால்தான் நிறுத்த முடியும்?" என்றார்.

அதற்குப் பேரரசர் மகன் அவரிடம், "ஆண்டவர் இந்த மழையை நிறுத்தி, நம்மை இதிலிருந்து காப்பாற்றவேண்டும் என்று சொல்ல, என்ன செய்யவேண்டும்" என்றான். அதற்குப் பேரரசர் அவனிடம், "ஆண்டவர்க்கு அஞ்சி, அவர் வழியில் நடந்து, அவரிடம் மனதுருக மன்றாடினால், நிச்சயம் அவர் நம்மை இந்த மழையிலிருந்து காப்பாற்றுவார்" என்றார். மறுகணம் பேரரசரின் மகன் மனதுருக இறைவனிடம் மன்றாட, மழை நின்றுபோனது. இவ்வாறு அவர்கள் இருவரும் அந்தப் பெருமழையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள்.

ஆம், கடவுள் தம் வழியில் நடக்கின்றவர்களை, தம் அடியார்களை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுவார்; அவருடைய அன்பிலிருந்து அவர்களை எதுவும் பிரித்துவிட முடியாது. இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமக்கு சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூருகின்றாது. ஆகவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நம் சார்பாக இருக்கும் கடவுள்

முதல் வாசகத்தில் புனித பவுல், கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரித்துவிட முடியாது என்று கூறுகின்றார். அவர் இவ்வாறு கூறுவதற்கான காரணங்களையும் கூறுகின்றார். இதில் மூன்று முதன்மையான காரணங்களை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்று பவுல் கூறுவதற்கு முதன்மையான காரணம், தந்தைக் கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்பதால்தான். தந்தைக் கடவுள் நம் சார்பாக இருக்கின்றார் என்பதை தூய ஆவியார் வழியாகும் (உரோ 8: 26) இயேசுவின் வழியாகவும் (உரோ 8: 34) நம் சார்பாக இருக்கின்றார் என்று புரிந்துகொள்ளவேண்டும். மேலும் இறைவாக்கினர் எரேமியா நூலில் வருகின்ற, "உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ!' (எரே 29: 11) என்ற வார்த்தைகள், கடவுள் நம் சார்பாக இருக்கின்றார். அப்படியிருக்கும்போது, கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை யாரும், எதுவும் பிரித்துவிட முடியாது என்பது உண்மையாகின்றது.

நம்மீது அன்புகொள்ளும் இயேசு

கடவுள் நம் சார்பாக இருப்பது மட்டுமல்லாமல், இயேசு நம்மை அன்பு செய்வதாலும் யாரும் அவருடைய அன்பிலிருந்து நம்மைப் பிரித்துவிட முடியாது. இயேசு யாரையும் ஆள் பார்த்து அன்பு செய்யவில்லை. அவர் பாவியாக இருந்தாலும் வறியவராக, எளியவராக இருந்தாலும் அன்பு செய்தார். இத்தகைய அறிவுக்கு எட்டாத அன்பினை (எபே 3: 18) இயேசு ஒவ்வொருவர்மீதும் மொழிகின்றபோது, யாரும், எதுவும் நம்மை இயேசுவின் அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது என்பதுதான் புனித பவுல் முன் வைக்கும் வாதமாக இருக்கின்றது.

நமக்காகப் பரிந்து பேசும் இயேசு

தந்தைக் கடவுள் நம் சார்பாக நிற்பதால் மட்டுமல்ல, இயேசு நம்மீது அறிவுக்கெட்டாத அன்பு கொள்வதால் மட்டுமல்ல, இயேசு நமக்காகப் பரிந்துபேசுவதாலும், நம்மை யாராலும் இயேசுவின் அன்பிலிருந்து பிரித்துவிட முடியாது என்று கூறுகின்றார் புனித பவுல்.

இந்த உலகத்தில் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும் சந்திக்கின்ற துன்பங்கள், சவால்கள் ஏராளம். வேதனை, நெருக்கடி, இன்னல், பட்டினி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம்மீது குற்றம் சுமத்தக் காத்துக்கொண்டிருக்கும் சாத்தான் (திவெ 12: 10) நம்மைக் கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிப்பதற்கு வழிவகை செய்யும். ஆனால், நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கும்போது, நம்மை எதுவும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து பிரிக்க முடியாது. இதுதான் உண்மை.

ஆகையால், நாம் இயேசுவின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, அவருடைய அன்பில் நிலைத்திருப்போம்.

சிந்தனை

'நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல், நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்' (யோவா 15: 10). ஆகையால், நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
லூக்கா 13: 31-35

அஞ்சா நெஞ்சர் ஆண்டவர் இயேசு


நிகழ்வு

அயர்லாந்தின் அப்போஸ்தலர் (திருத்தூதர்) என்று அழைக்கப்படுகின்ற புனித பேட்ரிக் தன்னுடைய உதவியாளரும் குதிரையோட்டியுமான பிரைனின் உதவியுடன் ஒவ்வோர் இடமாகச் சென்று நற்செய்தி அறிவித்து வந்தார்.

ஒருநாள் அவருடைய உதவியாளர் பிரைன் அவரிடம், "தந்தையே! இன்று நீங்கள் இந்நாட்டின் தென்பகுதியில் நற்செய்தி அறிவிக்கப்போகிறீர்கள் அல்லவா...! அதனால் இன்று ஒருநாள் மட்டும் உங்களுடைய அங்கியை நான் அணிந்துகொள்கின்றேன்... என்னுடைய உடையை நீங்கள் அணிந்துகொள்ளுங்கள்" என்றார். உடனே புனித பேட்ரிக் 'இவர் எதற்காக இப்படிக் கேட்கின்றார்? என்று ஒருநொடி யோசித்தார். பின்னர் அவர் ஆசையோடு கேட்கின்றார் என்பதற்காக, தன்னுடைய அங்கியைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, அவருடைய உடையையும் தொப்பியையும் வாங்கிப் போட்டுக் கொண்டார்.

புனித பேட்ரிக்கின் உதவியாளர் குதிரையின் பின்னால் அமர்ந்துகொள்ள, அவர் குதிரையை ஓட்டிக்கொண்டு தென்பகுதியை நோக்கிச் சென்றார். அயர்ந்து நாட்டின் தென்பகுதியில் புனித பேட்ரிக் நற்செய்தி அறிவிப்பதற்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. அதனால் அவர் மிகவும் கவனமாகக் குதிரையை ஓட்டிக்கொண்டு போனார். இடையிடையே அவருடைய உதவியாளர் அவரிடம் கேட்கின்ற கேள்விகட்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்.

ஒரு காட்டுப் பாதையில் அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று அவர்கள் கொண்டு சென்றுகொண்டிருந்த குதிரை கத்தத் தொடங்கியது. என்னவென்று புனித பேட்ரிக் அந்தக் குதிரையின் காலைப் பார்த்தபோது, அதில் எங்கிருந்தோ பறந்துவந்த ஓர் அம்பானது குத்தியிருந்தது தெரியவந்தது. உடனே அவர் குதிரையை வேகமாக ஓட்டத் தொடங்கினார். அப்பொழுது புதருக்குள் மறைந்திருந்த எதிரிகள் புனித பேட்ரிக் குதிரையின் பின்னால் உட்கார்ந்திருக்கின்றார் என்று நினைத்துக்கொண்டு அவர்மீது அம்புகளை ஒவ்வொன்றாக எய்தார்கள். இதனால் புனித பேட்ரிக்கின் உதவியாளர் வலியால் அலறினார்.

தன்னை எதிரிகள் சூழ்ந்துகொண்டுவிட்டார்கள் என்பதை அறிந்த புனித பேட்ரிக் குதிரையை இன்னும் வேகமாக ஓட்டத் தொடங்கினார். ஒருகட்டத்தில் எதிரிகள் தன்னைப் பின்தொடர்வதை நிறுத்திக்கொண்டார்கள் என்பதை உறுதிசெய்துகொண்டு, குதிரையை நிறுத்தினார். அதே நேரத்தில் தன்னுடைய உதவியாளர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை அறிந்து, மிகுந்த வேதனையுடன் அவரைக் குதிரையிலிருந்து இறக்கினார்.

"என் அன்பிற்குரிய பிரைன்! எதிரிகள் என்னை எப்படியும் தாக்குவார்கள் என்று தெரிந்து தானே நீ என்னுடைய அங்கியை வாங்கி அணிந்துகொண்டாய்! நீ எனக்காகச் செய்த இந்தத் தியாகத்திற்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? என்று கண்ணீர் சிந்தி அழுதார். அதற்கு அவருடைய உதவியாளர், "தந்தையே! உங்களைக் காக்கும் பொருட்டு நான் இறப்பது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு! நான் இறப்பதற்குள் எனக்கு ஆசி கூறுங்கள். நான் நிம்மதியாக உயிர்துறப்பேன்" என்றார். இதைக் கேட்ட புனித பேட்ரிக்கிற்கு இன்னும் அழுகை வந்தது. அவர் தன்னுடைய கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தன்னுடைய உதவியாளர்க்கு ஆசிகூற, அவர் மனநிறைவோடு உயிர்துறந்தார்.

தன்னுடைய தலைவர் புனித பேட்ரிக்கின் அங்கியை அணிந்தால் எப்படியும் கொல்லப்படுவோம் என்று தெரிந்தும்கூட, அஞ்சா நெஞ்சத்தோடு அவருடைய அங்கியை வாங்கி அணிந்துகொண்டு இறுதியில் எதிரிகளால் கொல்லப்பட்ட புனித பேட்ரிக்கின் உதவியாளருடைய துணிச்சலும் அஞ்சா நெஞ்சமும் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. நற்செய்தியில் இயேசுவைக் கொல்வதற்காக சூழ்ச்சி நடக்கின்றது. அதை அவர் எப்படி எதிர்கொண்டார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஏரோதிடமிருந்து வந்த அச்சுறுத்தலை அஞ்சா நெஞ்சத்தோடு எதிர்கொண்ட இயேசு

நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற பரிசேயர் சிலர், "இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கின்றான்" என்று சொல்கின்றபோது, இயேசு அவர்களிடம், பேய்களை ஓட்டி, பிணிகளைப் போக்கி, மூன்றாம் நாள் என்னுடைய பணி நிறைவுபெறும் என்பதை அந்த நரியிடம் கூறுங்கள் என்று மிகவும் துணிச்சலாகக் கூறுகின்றார்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வில் வந்த எதிர்ப்புகளைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கவில்லை. மாறாக, அவர் மிகவும் துணிவோடும் அஞ்ச நெஞ்சத்தோடும் ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றி வந்தார் (யோவா 2: 4; 7;30) இன்றைய நற்செய்தியில் அவர் ஏரோதை நரி எனச் சொல்வது நமது கவனத்திற்கு உரியது. திருவிவிலியத்தைப் பொறுத்தளவில் நரி என்றால் (நெகே 4:3) அழிவின் சின்னமாகச் சுட்டிக் காட்டப் படுகின்றது. இங்கு இயேசு ஏரோதை அழிவினை சின்னமாகக் குறிப்பிடுவதற்கு நிறையத் துணிச்சல் வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் அவர் மிகுந்த துணிச்சலோடு ஏரோதை நரியென்று சொல்லிவிட்டுத் தன்னுடைய பணியைத் தொடர்ந்து செய்கின்றார்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், இயேசுவிடம் இருந்த அதே துணிவோடும் அஞ்சா நெஞ்சத்தோடும் இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

'அஞ்சாதே ஏனெனில், நான் உன்னோடு இருக்கின்றேன் (எசாயா 43: 5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவன் நம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வோடு, இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

நம் சார்பாக

சின்ன வயதில் பள்ளிப்பருவத்தில் சக மாணவனின் தோளில் (பல நேரங்களில் அவன் என்னைவிட உயரமாகவே இருப்பான்) கை போட்டுக்கொண்டு நடப்பதுண்டு. யாராவது கேட்டால், 'இவன் என் கூட்டாளி' என்று கெத்தாக பதில் சொல்வேன். 'இவன் என் கூட இருக்கிறான்' - என்பதன் அர்த்தம் புரியாமலேயே பள்ளிப்பருவம் கடந்து போனது.

நாம் பேசும் அல்லது பழகும் ஒவ்வொரு நபர், ஏன் நாம் நம் தொலைபேசியில் சேமித்து வைத்திருக்கும் தொலைபேசி எண்கூட மறைமுகமாக நமக்கு இதைத்தான் சொல்கிறது: 'இவர் என் சார்பாக இருக்கிறார்' அல்லது 'இவர் என்னோடு இருக்கிறார்' அல்லது 'அவரோடு நான் இருக்கிறேன்.'

அருட்திரு. மைக்கேல் ஆலோசனை, சே.ச., என் பாப்பிறைப் பாசறை அதிபர், நண்பர், வழிநடத்துநர். அவரின் மின்னஞ்சலில் எப்போதும் உரோ 8:31 அவரின் கையெழுத்தோடு இணைந்துவரும். இவ்வளவு நாட்கள் புரியாத அதன் அர்த்தம் நாளைய முதல் வாசகத்தை (உரோ 8:31-39) வாசித்துக்கொண்டிருக்கும்போது புரிந்தது.

உரோமை நகர திருஅவைக்கு எழுதும் திருமடலில் ஒரு பெரிய சொற்போரை நடத்திக் கொண்டிருக்கும் பவுல் ஒரு கட்டத்தில் நிறுத்தி, 'இதற்கு மேல் நாம் என்ன சொல்வோம்?' என்று தான் இவ்வளவு தூரம் மூச்சு விடாமல் பேசியதை ஒரே வரியில் சொல்கின்றார்: 'கடவுள் நம் சார்பாக இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?'

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவர்களின் வார்த்தைகளில் எனக்குப் பிடித்தது இதுதான்: 'உன் மகிழ்வையும், இருப்பையும், இயக்கத்தையும் என்றும் மாறாத ஒன்றில் கட்டு - அது கடவுளாகவோ, கருத்தியலாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். ஆனால் ஆட்கள் மற்றும் இடங்களின் மேல் கட்டாதே. பின்னவர்கள் மாறக்கூடியவர்கள். முன்னவைகள் மாறாதவைகள்'.


வேதனை, நெருக்கடி, இன்னல், பட்டினி, ஆடையின்மை, இடர், சாவு, வாழ்வு, வானதூதர், ஆட்சியாளர், நிகழ்வன, வருவன, வலிமை மிக்கவை, உன்னத்தில் உள்ளவை - இவை எல்லாம் மாறக்கூடியவை.

மாறுகின்ற படைப்புப் பொருட்களை விடுத்து, மாறாத படைத்தவரைப் பற்றிக்கொள்வது எவ்வளவு நலம்.

அகுஸ்தினார் அடிக்கடி புலம்புவதும் இதற்காகத்தான். 'படைப்புப் பொருட்கள் படைத்தவராகிய உன்னிடமிருந்து என்னை தூர இழுத்துவச்சென்றனவே' என்று அழுகின்றார்.

பட்டினத்தாரின் ஒரு பாடலும் இந்தக் கருத்தியலை ஒத்தே இருக்கிறது:

'பிறந்தன இறக்கும். இறந்தன பிறக்கும்.
தோன்றின மறையும். மறைந்தன தோன்றும்.
பெருத்தன சிறுக்கும். சிறுத்தன பெருக்கும்.
உணர்ந்தன மறக்கும். மறந்தன உணரும்.
புணர்ந்தன பிரியும். பிரிந்தன புணரும்.
அருந்தின மலமாம். புனைந்தன அழுக்காம்.
உவப்பன வெறுப்பாம். வெறுப்பன உவப்பாம்.
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும்
... ... ...
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொன் அம்பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!'

(கோயிற்றிருவகவல் - 1)
'கடவுள் என் சார்பில் இருக்கிறார்' என்ற உணர்வு ஆழமாக இருந்ததால்தான் இயேசுவால் ஏரோதுவை நரி என்று அழைக்கவும், அவனுக்கு சவால் விடவும் (காண். லூக் 13:31-35) முடிகிறது.

இந்த ஒரு உணர்வு என்னிடம் ஆழமாக இருந்தது என்றால் நான் என் வாழ்வில் நிகழும் எல்லாவற்றிலும் சமநிலையை எளிதாக உணர முடியும்.

இந்த உணர்வு மனிதர் தரும் பாராட்டை நம்பியிருக்காமல் என் மனதிற்கு நிறைவு தரும் ஒன்றில் நான் ஊன்றியிருக்க உதவி செய்யும்.

இந்த உணர்வு நம்மிடமிருக்கும் தாழ்வு மனப்பான்மை போக்கி நம்மை எல்லாவிடத்திலும் நேர்முகமாக மற்றவர்கள்முன் நிமிர்ந்து நிற்கத் துணை வரும்.

'கடவுள் நம் சார்பாக' என்று சொல்வதால் மட்டும் இவை நடந்துவிடாது. இது ஒரு மாய மந்திரம் அல்ல. நாம் யார் சார்பாக இருக்கிறோமோ அவரின் எண்ணங்களும், சொற்களும், செயல்களும் நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

இந்தக் கருத்தையொட்டிய திபா 124 நம் செபத்தில் இணைத்துப் படிக்கலாம்:
'ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் ... ... ... ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!'

Fr. Yesu, Madurai.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!