Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     30 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 30ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.

மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டும் எனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்கவேண்டும் என்றே இப்படிச் செய்தார். தாம் முன் குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 13: 3-4. 5-6 (பல்லவி: 5a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்.

3 என் கடவுளாகிய ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்குப் பதில் அளித்தருளும்; என் விழிகளுக்கு ஒளியூட்டும். 4 அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில் ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி, `நான் அவனை வீழ்த்தி விட்டேன்' என்று சொல்லமாட்டான்; நான் வீழ்ச்சியுற்றேன் என்று என் பகைவர் அக்களிக்கவுமாட்டார். பல்லவி

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். 6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
02 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.

அப்பொழுது ஒருவர் அவரிடம், "ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார்.

அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். 'வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, 'நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார்.

ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-30

வலுவற்ற நிலையில் துணைநிற்கும் தூய ஆவியார்

நிகழ்வு

நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சொகுசுக் கப்பல் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தது. கப்பலில் இருந்திருந்தவர்கள் ஆடியும் பாடியும் மகிழ்ச்சியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். இப்படி இருக்கையில் கப்பல் பனிப்பாறையின்மீது மோத, அது மெல்ல மூழ்கத் தொடங்கியது. இந்த செய்தி முதலில் கப்பல் தளபதிக்குத்தான் தெரிய வந்தது.

உடனே அவர் பயணிகள் இருந்த பகுதிக்கு ஓடிவந்து, "உங்களில் யாருக்காவது, தூய ஆவியாரிடம் வேண்டத் தெரியுமா...?" என்று கேட்க, பயணிகள் கூட்டத்திலிருந்து ஒருவர் தன்னுடைய கையை உயர்த்தி, "எனக்குத் தெரியும்" என்றார். அப்பொழுது அந்தக் கப்பல் தளபதி, "மிகவும் நல்லது! இப்பொழுது நான் சொல்லப் போகிற செய்தியைக் கேட்டு யாரும் பதறவேண்டாம். நாம் பயணம் செய்துகொண்டிருக்கும் இந்தக் கப்பல் பனிப்பாறையின்மீது மோதி உடைந்துபோனது. இந்த இக்கட்டான நிலையில் இங்கிருந்து நாம் அனைவரும் தப்பிப்பதற்கு உயிர் கவசம் (Life Jacket) ஒன்று குறைவாக இருக்கின்றது. அதனால்தான் உங்களில் யாருக்காவது தூய ஆவியாரிடம் வேண்டத் தெரியுமா என்று கேட்டேன். இப்பொழுது நம் நடுவில் ஒருவர்க்கு தூய ஆவியாரிடம் வேண்டுவதற்குத் தெரியும் என்பதால், அவர் தூய ஆவியாரிடம் வேண்டி எப்படியும் தன்னைக் காத்துக்கொள்வார். மற்றவர்கள் இங்கே இருக்கின்ற உயிர் கவசத்தை அணிந்துகொண்டு, கடலில் குதித்து, கரைக்குச் செல்லுங்கள்" என்றார்.

கப்பல் தளபதி இவ்வாறு சொன்னதுதான் தாமதம், தூய ஆவியாரிடம் வேண்டுவதற்குத் தெரியும் என்று சொன்ன மனிதரைத் தவிர்த்து, மற்ற அனைவரும் உயிர் கவசத்தை அணிந்துகொண்டு, கடலில் குதித்து, கரைக்கு நீந்திச் சென்றார்கள். தூய ஆவியாரிடம் வேண்டத் தெரியும் என்று சொன்னவரோ சிறிதும் பதற்றமடையாமல், முழந்தாள் படியிட்டு தூய ஆவியாரிடம் உரக்க வேண்டினார்.

அவர் இவ்வாறு வேண்டிக்கொண்டிருக்கும்பொழுது, படகில் மீன்பிடிக்க அந்தப் பக்கமாய் வந்தவர்கள், கப்பல் உடைந்து கடலில் மூழ்குவதையும் அதில் ஒருவருடைய சத்தம் ஓங்கி ஒலிப்பதையும் கண்டார்கள். உடனே அவர்கள் கப்பலில் இருந்தவரை நோக்கிச் சத்தம் குடுக்க, அந்த மனிதரோ, 'தூய ஆவியார் என்னுடைய வேண்டுதலுக்கு செவிசாய்த்துவிட்டார்' என்ற மகிழ்ச்சியில் அந்தப் படகில் இறங்கி, பாதுகாப்பாகக் கரைசேர்ந்தார்.

தூய ஆவியார் நம்முடைய வலுவற்ற நிலையில் நமக்குத் துணை நிற்கின்றார் என்ற உண்மையை இந்த கதை நமக்கு மிக அருமையாக எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துரைக்கின்றது. ஆகையால், நாம் தூய ஆவியார் நமக்கு எந்தெந்த வகையில் துணை நிற்கின்றார் என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நமக்குத் துணைநிற்கின்றார்

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் தூய ஆவியாரைக் குறித்துப் பேசுகின்றபோது, அவர் நம்முடைய வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்.

மனிதர்களாகிய நாம் வலுவற்றவர்கள், நம்முடைய சொந்த வல்லமையால் மட்டும் நம்மால் இவ்வுலகில் வாழ்ந்துவிட முடியாது. அதற்கு இறைவல்லமையானது தேவைப்படுகின்றது. இந்த நிலையில்தான் தூய ஆவியாரின் துணை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தூய ஆவியாரைக் குறித்துப் பேசுகின்றபோது, அவரைத் துணையாளர் (யோவா 16:7) என்று சொல்வார். ஆம், தூய ஆவியார் துனையாளராக இருக்கும்போது நமக்கென்ன கவலை!

நமக்காகப் பரிந்து பேசுகின்றார்

அடுத்ததாக, தூய ஆவியார் துணையாளராக இருப்பது மட்டுமல்லாமல், நமக்காகப் பரிந்துபேசுகின்றவராகவும் இருக்கின்றார். எவ்வாறு எனில், எதற்காக, எப்படி இறைவனிடம் வேண்டவேண்டும் என்று தெரியாமல் இருக்கும் நமக்கு, அவர் நம்முடைய சொல்வடிவம் பெறாத, பெருமூச்சுகளின் வாயிலாகப் பரிந்துபேசுகின்றார். ஏற்கனவே ஆண்டவர் இயேசு, தந்தையின் வலப்பக்கம் இருந்து நமக்காகப் பரிந்துபேசுகின்றபோது (எபி 7: 25), இப்பொழுது தூய ஆவியாரும் நமக்காகப் பரிந்துபேசுவதால், நமக்குக் கூடுதல் ஆசிதான்.

நம்மோடு ஒத்துழைக்கின்றார்

புனித பவுல் தூய ஆவியாரைக் குறித்துக் குறிப்பிடும் மிக முக்கியமான செய்தி, தூய ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கின்றார் என்பதாகும். தூய ஆவியார் நாம் புரிகின்ற இறையாட்சிப் பணிகளில், அன்புப் பணிகளில் நம்மோடு ஒத்துழைக்கின்றார் என்பது எவ்வளவு பெரிய பேறு! ஆகையால், நாம் தூய ஆவியாரை நமக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அவருடைய தூண்டுதலுக்கு ஏற்ப வாழ முற்படுவோம்.

சிந்தனை

'தூய ஆவியாரைத் தனக்குள் கொண்டிருப்பவர் எப்பொழுது முன்னேறிச் செல்வார்' என்பார் சகோதரர் லாரன்ஸ். ஆகையால், நாம் நமக்குத் துணையாக இருக்கும் தூய ஆவியார்க்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 13: 22-30

இடுக்கமான வாயில் வழியாக வருந்தி நுழைய முயல்வோரே மீட்புப் பெறுவர்.

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வளர்ந்து பெரியவனாகும்போது பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவன் அதற்கு என்ன செய்வதென்று யோசிக்கத் தொடங்கினான்.

இதற்கு நடுவில் அவன் படித்துவந்த பள்ளிக்கூடத்திற்குப் போகும் வழியில் ஓர் அடுக்கு மாடிக் கட்டடத்திற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அந்த வேலைகளைக் கண்காணிப்பபதற்காக ஒருவர் ஒவ்வொருநாளும் ஒரு விலையுயர்ந்த நான்கு சக்கர வண்டியில் வந்து இறங்குவார். அவரைப் பார்த்த அந்தச் சிறுவனுக்குள், 'இந்த மனிதரிடம் யோசனை கேட்டால், நாம் பணக்காரராக மாறுவதற்கான யோசனைகளைச் சொல்வார்' என்று முடிவுசெய்து கொண்டு அவரிடம் சென்றான்.

அவரிடம் சென்றதும், வளர்ந்து பெரியவனான பிறகு பெரிய பணக்காரனாக மாறவேண்டும் என்ற தன்னுடைய வெளிப்படுத்தினான். அந்த மனிதர் அவனிடம் இருந்த உயர்ந்த இலட்சியத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்து போய் அவனிடம் பேசத் தொடங்கினார்:

"தம்பி நான் ஒரு கட்டடக் கலைஞன். என்னுடைய வேலையெல்லாம் பெரிய பெரிய கட்டங்களைக் கட்டியெழுப்பி அவற்றை விலைக்கு விற்பதுதான். தொடக்கத்தில் நான் இந்தப் பணியைத் தொடங்கியபோது எனக்கு நானே ஒருசில விதிமுறை வகுத்துக்கொண்டேன். நான் வகுத்துக்கொண்ட விதிமுறைகள் இவைதான்: 'மற்றவர்களை விடக் கடினமாகவும் சிறப்பாகவும் உழைக்கவேண்டும். வேலைக்கு எல்லார்க்கும் முன்னம் வந்துவிட்டு, எல்லாரும் போனபின்புதான் போகவேண்டும். நான் பார்க்கக்கூடிய வேலைகள் மற்றவரால் கவனிக்கப்படவேண்டும்; அதனால் என்னிடம் வேலை பார்ப்பதர்கட்கு சிவப்பு நிற உடையைக் கொடுத்துவிட்டு, நான் நீலநிற உடையை அணிந்துகொண்டேன். இதனால் மக்களுடைய கவனத்தையும் பாராட்டையும் பெற்றேன். இவைதான் தம்பி என்னுடைய வெற்றிக்குக் காரணம்."

அந்த மனிதர் சொன்னதைக் கேட்டு வியந்துபோய் நின்ற சிறுவன், வளர்ந்து பெரியவனான பின்பு, என்ன செய்தால், அதை எப்படிச் செய்தால் பெரியவனாகலாம்' என்பதைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் அந்த மனிதர்க்கு நன்றிசொல்லிவிட்டு, அங்கிருந்து இடம்பெயர்ந்தான்.

ஒரு மனிதர் தன்னுடைய வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு, மற்றவரைப் போன்று வாழ்ந்துகொண்டிருந்தால் அடைய முடியாது... தனக்கொன்று ஒரு பாதையை அதுவும் கடினமான பாதையை வகுத்துக்கொண்டு, அதற்கேற்ப வாழ்கின்றபோதுதான் முடியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு ஒருவர் மீட்புப் பெறுவதற்கு எத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும்

நற்செய்தியில் ஒருவர் இயேசுவிடம், "மீட்புப் பெறுவது சிலர் மட்டும்தானா?" என்று கேட்கின்றபோது, இயேசு அவரிடம் மீட்புப் பெறுவது சிலர் அல்லது பலர் என்று சொல்லிக் கொண்டிருக்காமல், மீட்புப் பெறுவதற்கு என்ன வழி என்று சொல்கின்றார். ஆம், யூதர்கள் தாங்கள் யூதர்களாகப் பிறந்ததாலேயே மீட்புப் பெற்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் (நம்மிடம் இருக்கும் ஒருசிலர்க்கும் அந்த நினைப்பு உண்டு) ஆனால், இயேசு அவர்களிடம் ஒருவர் யூதராகப் பிறந்துவிட்டால் மட்டும் மீட்புப் பெற்றுவிட முடியாது, ஆண்டவர் அனுப்பிய அவருடைய மகன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் மீட்பு பெறமுடியும் என்று தெளிவாகச் சொல்கின்றார். இயேசு யூதர்கள் நடுவில் மூன்றாண்டுகள் பணிசெய்தார். அப்படியிருந்தும் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை; நம்பவும் இல்லை. அதனால் இயேசு தரவிருந்த மீட்பினை அவர்கள் இழந்து போனார்கள்.

தாழ்ச்சியோடு இருக்கவேண்டும்

தன்னிடம் நம்பிக்கை கொள்பவர் மீட்புப் பெறுவர் என்று சொன்ன இயேசு, தாழ்ச்சியோடு இருக்கின்றவரும் மீட்புப் பெறுவர் என்று கூறுகின்றார். யூதர்கள், 'தாங்கள்தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; உயர்ந்தவர்கள்' என நினைத்துக் கொண்டு மற்றவர்களை மிகவும் இழிவாகக் கருதி ஆணவத்தோடு இருந்தார்கள். ஆனால், புறவினத்து மக்கள் இதற்கு முற்றிலும் மாறாகத் தாழ்ச்சியோடு இருந்தார்கள் (லூக் 18: 11-14). அதனைத்தான் இயேசு கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்' என்று சொல்லி தாழ்ச்சியோடு இருப்பவரே மீட்புப் பெறுவார் என்று அழகாகக் கூறுகின்றார்.

இறைவார்த்தையைச் சிந்தித்துப் பார்க்கும் நாம், இயேசுவிடம் நம்பிக்கைக் கொண்டும் தாழ்சியோடும் இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

'மனித மனம் எப்போதும் எளிதானதையே தேர்ந்தெடுக்கின்றது. ஆனால், யார் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றானோ அவனே சாதனை புரிவான்' என்பார் வெ, இறையன்பு எழுத்தாளர். ஆகையால், நாம் கடினமான அல்லது இடுக்கமான பாதையைத் தேர்ந்து, அதில் வருந்தி நுழைய முயற்சி செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!