Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     29 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 30ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 12-17

சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.

அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப்பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 68: 1,3. 5-6ab. 19-20 (பல்லவி: 20a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவராம் நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்.

1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்; அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 3 நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். பல்லவி

5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி

19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. 20 நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17b,a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17

அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக் கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.

இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, தம் கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, "வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் வேண்டாம்" என்றார்.

ஆண்டவரோ அவரைப் பார்த்து, "வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?" என்று கேட்டார்.

அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-25

"இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை"


நிகழ்வு

கிராமப்புறப் பங்கு ஒன்றில் பங்குப்பணியாளராகப் பணியாற்றி வந்த அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் அவர் இல்லம் சந்திப்பதற்காக ஒரு மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது, அந்த இல்லத்திலிருந்து மிக அற்புதமான குரல் ஒன்று ஒலித்தது. அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் அங்கு இல்லை. 'ஒருவேளை பக்கத்து வீட்டிலிருக்கின்ற யாரோ ஒருவர் பாடுவதுதான் நமக்குக் கேட்கின்றதோ' என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

சிறிதுநேரம் கழித்து, மீண்டுமாக முன்புகேட்ட அதே அற்புதமான குரல் அவர்க்குக் கேட்டதும், அவர் கண்களை ஏறெடுத்துப் பார்த்தார். அப்பொழுது அந்த மூதாட்டியின் வீட்டு மூலையில் ஒரு கிளிக்கூண்டு இருக்கக் கண்டார். அந்தக் கிளிக் கூண்டில் ஒரு கிளி இருந்தது. அந்தக் கிளிதான் அவ்வளவு அற்புதமாகப் பாடுகின்றது என்பதை உணர்ந்தார்.

உடனே அவர் அந்த மூதாட்டியிடம், "பாட்டி! இந்தக் கிளி இவ்வளவு அற்புதமாகப் படுகின்றதே...! இதை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்...?" என்று கேட்டார். மூதாட்டி மிகவும் அமைதியான குரலில் பேசத் தொடங்கினார்: "சுவாமி! இந்தக் கிளியை என்னுடைய உறவுக்காரர் ஒருவர் என்னிடம் கொண்டுவந்து தந்தார். இந்தக் கிளியை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தபோது, இதற்கு பாடவோ, பேசவோ எதுவும் தெரியாது. அப்பொழுது நான் 'இந்தக் கிளி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கின்றது... இதைப் பாட வைத்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!' என்று யோசிக்கத் தொடங்கினேன்.

அதன்பிறகுதான் நான் இதற்குப் பாடுவதற்குக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினேன். தொடக்கத்தில் இது பாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டது; இதைப் பார்த்துவிட்டு, பேசாமல் விட்டுவிடலாம் என்று யோசித்தேன். பின்னர்தான் ;முயன்றவரை முயற்சி செய்துபார்ப்போமே' என்று 'இதற்குப் பகல்நேரத்தில் பாடல் கற்றுக்கொடுத்தால் கவனம் சிதறும்; இரவு நேரத்தில் வீட்டிலுள்ள விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு பாடல் கற்றுக்கொடுத்தால், மிக எளிதாகக் கற்றுக்கொள்ளும்' என்ற எண்ணத்தில், இரவுநேரத்தில் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு, இதற்குப் பாடல் கற்றுக்கொடுத்தேன். இவ்வாறு நான் இதற்குத் தொடர்ந்து கற்றுக்கொடுத்தபோது, இது எளிதாகக் கற்றுக்கொண்டது."

அந்த மூதாட்டி சொன்னதை மிகவும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்த அருள்பணியாளர், வியப்புடன் அந்த மூதாட்டியிடம், "பாட்டி நீங்கள் பட்ட சிரமம் வீண் போகவில்லை. இந்தக் கிளி இன்று இவ்வளவு அற்புதமாகப் பாடுகின்றது என்றால், இதற்குக் காரணம் நீங்கள்தான்" என்று சொல்லி அவரை மனதார வாழ்த்திவிட்டுச் சென்றார்.

ஆம், நல்லதொரு செயலுக்காக நாம் படுகின்ற சிரமங்களும் துன்பங்களும் நிச்சயம் ஒருநாள் பலன்தரும். அந்தப் பலன் நாம் பட்ட சிரமங்கள் மற்றும் துன்பங்களோடு ஒப்பிடும்போது, பல மடங்கு உயர்ந்ததாக இருக்கும். இத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகமும்கூட, இதே செய்தியைத்தான் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

துன்பங்கள் இன்பமான வாழ்விற்கு நுழைவாயில்

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், "இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை" என்று கூறுகின்றார். புனித பவுல் கூறுகின்ற இச்சொற்களில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, நாம் படுகின்ற துன்பங்கள். இன்று, எதிர்காலத்தில் நாம் அடைய இருக்கின்ற மாட்சி. இவை இரண்டையும் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் சீடர்களாக அவர் வழியில் நாம் நடக்கின்றபோது துன்பங்கள் கட்டாயம் இருக்கும் (யோவா 16:33). இந்தத் துன்பங்கட்கு அஞ்சி, நாம் இயேசுவின் வழியில் நடக்கவில்லையென்றால், நாம் இயேசுவின் சீடர்களாக இருக்கவே முடியாது. ஆனால், இந்தத் துன்பங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு, இயேசுவின் வழியில் நடந்தால், நிச்சயம் நமக்கு வெகுமதி அல்லது மாட்சி கிடைக்கும். அந்த மாட்சி நாம் அடைந்த துன்பங்களோடு ஒப்பிட முடியாத அளவுக்கு மிகவும் உயர்ந்ததாக இருக்கும். இதைத்தான் புனித பவுல் இங்கு வலியுறுத்திக்கூறுகின்றார். ஆகையால், நாம் எதிரே இருக்கும் மாட்சியை நம் கண்முன்னால் வைத்து, துன்பங்களைத் தாங்கிக்கொண்டு துணிவுடன் முன்னேறிச் செல்வோம். நிச்சயம் நமக்கான மாட்சியை ஆண்டவர் தருவார்.

சிந்தனை

'கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்' (யோவா 12: 24) என்பார் இயேசு. ஆகையால், நாம் கோதுமை மணியைப் போன்று மடிவதற்கும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளவும் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 13: 18-21

இறையாட்சி புளிப்புமாவுக்கு ஒப்பாகும்

நிகழ்வு

இரண்டு பணக்கார இளைஞர்கள் ஒரு கிராமத்துச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் விவசாயி ஒருவர் தன்னுடைய காலணிகளை வரப்போரமாய்க் கழற்றி வைத்துவிட்டு, சற்றுத் தள்ளி வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய இரண்டு காலணிகளைப் பார்த்ததும், அந்தப் பணக்கார இளைஞர்களில் ஒருவன் மற்றவனிடம், "இந்த மனிதர் தன்னுடைய காலணிகளை இங்கு கழற்றி வைத்துவிட்டு அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அதனால் இவருடைய காலணிகளை ஒளித்து வைத்துவிட்டு மறைந்து கொள்வோம். இவர் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இங்கு வருவாரல்லவா! அப்பொழுது என்ன செய்கின்றார் என்று வேடிக்கை பார்ப்போம்" என்றான்.

அதற்கு மற்ற இளைஞன் அவனிடம், "அப்படியெல்லாம் செய்யக்கூடாது. இவரைப் பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. இவர் அணிந்திருந்தும் சட்டையைப் பார் எப்படிக் கிழிந்திருக்கின்றது என்று! இப்படிப்பட்டவரிடம் விளையாடினால், அது நமக்குத்தான் பாவமாய் அமையும். அதனால் இவருடைய இரண்டு காலணிகளிலும் நம்மிடம் இருக்கின்ற வெள்ளிக்காசுகளில் ஒவ்வொன்று வைப்போம். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று மறைந்திருந்து பார்ப்போம்" என்றான். இரண்டாவது இளைஞன் சொன்ன யோசனை முதல் இளைஞனுக்குப் பிடித்துவிட, இருவரும் ஆளுக்கொரு வெள்ளிக்காசுகளை எடுத்து, அந்த விவசாயியின் காலணிகளில் ஒவ்வொன்றாக வைத்தார்கள்.

நேரமானதும், விவசாயி தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு, தான் கழற்றி வைத்திருந்த காலணிகளை அணிந்து கொள்வதற்காக அங்கு வந்தார். முதலில் வலது காலில் காலணியை போட்டுக்கொள்ளத் தொடங்கினார். அதில் ஏதோ வித்தியாசமாகத் தென்படவே, கீழே உற்றுப் பார்த்தார். அங்கு சூரிய வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருந்த வெள்ளிக்காசு ஒன்று கிடந்தது. அதைக் கண்டு வியப்படைந்த அவர், 'யாராவது தவறுதலாகக் கீழே போட்டுவிட்டாரா...?' என்று சுற்றுமுற்றும் யாருமே இல்லை. யாரும் அங்கு இல்லாததால், அவர் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, "இறைவா! என்னுடைய பிள்ளைகள் நீண்ட நாள்களாக சந்தையிலிருந்து பழங்களை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவர்கட்குப் பழங்களை வாங்கிக்கொடுக்கும் அளவுக்குக் என்னுடைய கையில் காசில்லை. ஆனால், இன்றைக்கு அதற்கொரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இதற்காக இறைவா உமக்கு நன்றி' என்றார்.

இதை மறைவிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இரண்டு இளைஞர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். இதற்குப் பின்பு அந்த விவசாயி தன்னுடைய இடது காலில் இரண்டாவது காலணியை அணிந்தார். அதிலும் ஏதோ தென்படவே குனிந்து பார்த்தார். அங்கேயும் ஒரு வெள்ளிக்காசு கிடப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து, "இறைவா! என்னுடைய வீட்டுப் பிள்ளைகட்கு மட்டுமல்ல, என்னுடைய அண்டை வீட்டுப் பிள்ளைகட்கும் பழங்களை வாங்கித் தருவதற்கு நீர் இன்னொரு வெள்ளிக்காசினைத் தந்திருக்கின்றீரே! இதற்காகவும் உமக்கு நன்றி' என்று சொல்லிவிட்டு, அந்த வெள்ளிக்காசையும் எடுத்து தன்னுடைய சட்டையில் போட்டுக்கொண்டு சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கினார் அந்த விவசாயி.

அந்த இரண்டு இளைஞர்களும் அவர் பின்னாலேயே சென்றார்கள். விவசாயி சந்தைக்குச் சென்று, அங்கிருந்த ஒரு பழக்கடையில் தன்னிடம் இருந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் கொடுத்து ஒரு பெரிய சாக்குமூட்டை நிறைய பழங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சுமந்துகொண்டு வந்தார். வீட்டுக்கு வந்ததும் தன் வீட்டுப் பிள்ளைகட்குக் கொஞ்சம் பழங்களைக் கொடுத்துவிட்டு, மீதிப் பழங்களை அண்டை வீட்டிலிருந்த சிறுவர் சிறுமியர்க்குக் கொடுத்தார். அவர்கள் தாங்கள் பெற்ற பழங்களை தாங்கள் மட்டும் உண்ணாமல், தங்களுடைய நண்பர்கட்கும் தோழிகட்கும் கொடுத்தார்கள். இதனால் அந்த விவசாயி இருந்த தெருவில் இருந்தவர்கள் அனைவரும் பழங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த அந்த இரண்டு இளைஞர்களும், 'நாம் செய்ததோ ஒரு சிறு உதவி. அது இத்தனைப் பேரைப் போய்ச்சேரும் என்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கின்றது' என்று சொல்லிக்கொண்டு தங்களுடைய வீடு திரும்பினார்கள்.

ஆம், நாம் செய்கின்ற உதவி சிறிதாக இருந்தாலும், அது பலருக்கும் போய்ச் சேரும் என்ற உண்மையை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய இறைவார்த்தையும் சிறிய அளவில் தொடங்கப்படும் ஒருசெயல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறையாட்சியும் புளிப்பு மாவும்

நற்செய்தியில் இயேசு இறையாட்சியை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகின்றார். பெண் ஒருவர் சிறிதளவு புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைக்க மாவு முழுவதும் புளிப்பேறுகின்றது. அதுபோன்றுதான் அன்பினால் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் இறையாட்சியும் நாசரேத்து என்ற சிறிய ஊரில் தொடங்கித்தான் இன்று உலகம் முழுவதும் பறந்து விரிந்திருக்கின்றது. ஆகையால், நாம் செய்யும் நற்செயல் சிறியளவில் இருக்கின்றதே என்று நினைக்காமல், அந்தச் சிறிய நற்செயலையும் தொடர்ந்து செய்வோம். அது மெல்ல மெல்லப் பரவி, உலகெங்கிலும் உள்ள மக்கட்கெல்லாம் நன்மை தரும்.

சிந்தனை

சிறிய விதையிலிருந்துதான் பெரிய விருட்சம் தோன்றுகின்றது. நாம் சிறியளவு உதவி செய்தாலும், அதைத் தொடர்ந்து செய்வோம். அதன்வழியாக இம்மண்ணில் இறையாட்சி மலர்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
லூக்கா 13: 18-21

 இறையாட்சி கடுகுவிதைக்கு ஒப்பாகும்

ஆபிரகாம் லிங்கன் சிறுவனாக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வு இது.
அவர் ஒருமுறை பழைய புத்தகக் கடைக்குச் சென்றபோது அங்கே தி லைப் ஆப் வாஷிங்டன் என்ற புத்தகத்தைப் பார்த்தார். ஆனால் அவரிடம் அப்புத்தகத்தை வாங்குவதற்கான போதிய பணம் இல்லை. அதனால் மூன்று நாட்கள் அங்கேயே வேலைபார்த்து அந்தப் புத்தகத்தை வாங்கிகொண்டுவந்தார்.

ஒருசில நாட்களுக்குப் பிறகு அவருக்கு நெருங்கிய உறவுக்காரப் பெண்மணியாகிய மிசஸ்.கிராபோர்டு என்பவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார்: இனிமேல் நான் குழி தோண்டுதல், மண்வெட்டி பிடித்து வேலைபார்த்தல், கூலி வேலை செய்தல் போன்ற வேலைகளை ஒருபோதும் செய்யப்போவதில்லை என்று. அதற்கு அப்பெண்மணி, அப்படியானால் நீ என்ன செய்யப்போகிறாய் என்றுக் கேட்டார்.

நானோ அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக ஆகப்போகிறேன். அதற்காக என்னையே நான் புத்தகங்கள் படித்தும், கடினமாக உழைத்தும் தயார் செய்யப்போகிறேன் என்றார்.

ஆபிரகாம் லிங்கன் சிறுவதிலேயே தான் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக ஆகப்போகிறேன் என்று இலட்சியக் கனவு கண்டார். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சிறுவயது முதலே அவர்கொண்ட கனவும், அதற்காக அவர் உழைத்த உழைப்பும்தான் அவரை அமெரிக்காவின் தலைசிறந்த குடியரசுத் தலைவர் ஆக்கியது.
சிறிய தொடக்கம் அல்லது சிறு வயது முதலே நாம் உழைக்கின்ற உழைப்பு மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை இந்நிகழ்வானது நமக்கு அருமையாக எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். கடுகுவிதை மண்ணில் விதைக்கப்படும்போது அளவில் சிறியதுதான். ஆனால் அது வளர்ந்து, வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவிற்கு மிகப்பெரிய மரமாகிவிடுகிறது. புளிப்பு மாவும்கூட சிறிதளவுதான் கலக்கப்படுகின்றது. ஆனால் அதுவோ ஒட்டுமொத்த மாவையும் புளிப்பேறச் செய்துவிடுகிறது. இதைபோன்றதுதான் இறையாட்சியும். நாசரேத்து என்ற சிறிய கிராமத்தில் விதைக்கப்பட்ட இறையாட்சியின் விதையானது வளர்ந்து, அகில உலகெங்கும் பரவும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

இங்கே நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு காரியம். நாம் எடுக்கின்ற இந்த முயற்சி சிரியதுதானே, அல்லது நாம் சிறியவராகத் தானே இருக்கின்றோம் நம்மால் எப்படி பெரிய காரியங்களைச் செய்யமுடியும் என்று கலங்கத் தேவையில்லை. ஏனென்றால் ஒன்றுமில்லாமையிலிருந்து உலகைப் படைத்த இறைவனால் வறிய - எளியவர்களாகிய நம்மைக் கொண்டு மிகப்பெரிய காரியங்களைச் செய்யமுடியும்.

இஸ்ரயேல் மக்களை அச்சுறுத்திய பெலிஸ்தியனாகிய கோலியாத்தை கடவுள் சிறுவனாகிய தாவிதைக் கொண்டுதான் கொன்றொழித்தார். இஸ்ரயேல் மக்களை ஆயரென ஆள்வதற்கு யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாகக் கருதப்பட்ட பெத்லகேமிலிருந்துதான் மெசியாவைத் தோன்றச் செய்கிறார் (மீக்கா 5:2). ஆதலால் சிறியவற்றிலிருந்து மிகப்பெரிய காரியங்களை தோன்றச் செய்யும் இறைவனால் சிறியவர்களாக நம்மாலும் மிகப்பெரிய காரியங்களைச் செய்வார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

ஆனால் பலநேரங்களில் நாம் ஒன்றுமில்லாதவர்கள், எளியவர்கள் நம்மால் என்ன செய்துவிட முடியும் என்ற பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; இறைவனின் மேலான கருணையில் நம்பிக்கை வைக்காது இருக்கின்றோம். ஒரு சிறிய சுக்கான் மிகப்பெரிய கப்பலையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுபோல, சிறியவர்களாகிய நம்மாலும் மிகப்பெரிய காரியங்களைச் செய்யமுடியும், மிகப்பெரிய மாற்றத்தை இந்த பூமிதனில் கொண்டுவர முடியும்.

எனவே அதிசயங்களை செய்யக்கூடிய இறைவனின் கரங்களில் நாம் சரணடைவோம். இறைவன் சிறியவர்களாக நம் வழியாக அதிசயங்களைச் செய்வார். இறையருள் நிரம்பத் தருவார்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
லூக்கா 13: 18-21

பேறுகால வேதனை

'இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம்' (காண். உரோ 8:18-25)

டென்மார்க் நாட்டில் 1000 க்கு 10 என்ற விகிதத்தில் குழந்தை பிறப்பு இறப்பதால் அந்த நாடு தன் குடிமக்களை வார நாட்களிலும் விடுமுறை எடுத்து ஊர் சுற்றி குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிப்பதாக இன்றைய காலை செய்தியில் சொன்னார்கள்.

தாய்மை அடைவது - இது ஏதோ தவறு என்றே கற்பிக்கிறது நம் தமிழ் ஊடகங்களில் வெளிவரும் நெடுந்தொடர்கள்.

'தவறு செய்யலாம். ஆனால் தாய்மை அடைந்துவிடக்கூடாது' என்று மற்றொரு பக்கம் ஒரு புரட்சி சித்தாந்தம் பரவிக்கொண்டிருக்கிறது.

தாய்மை அடைவதை ஓரு நோய் போல நினைத்து அதற்கு மருந்து, பக்குவம், பயிற்சி என்று கல்லா கட்டுகிறது மருத்துவ உலகம்.

'பேறுகால வேதனை' - நாளைய முதல் வாசகத்தில் தூய பவுலடியார் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகின்றார்.

பேறுகால வேதனை நிறைய இடங்களில் உருவகமாக விவிலியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு எடுத்துக்காட்டுகள்:

'நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பல இடங்களில் பஞ்சமும் நிலநடுக்கமும் ஏற்படும். இவையனைத்தும் பேறுகால வேதனையின் தொடக்கமே.' (மத் 24:7-8)

'பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றபின்பு உலகில் ஒரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை மறந்துவிடுகிறார்.' (யோவா 16:21)

மற்ற வேதனைக்கும் பேறுகால வேதனைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்ன?

மற்ற எல்லா வேதனைகளும் மகிழ்ச்சியில் முடிவதில்லை. உதாரணத்திற்கு, புற்றுநோய் அல்லது கைகால் உடைந்து போதல் தரும் வேதனை. இந்த வேதனையால் நமக்கு மகிழ்ச்சி வருவதில்லை. மாறாக, இந்த வேதனை முடிந்ததே என மகிழ்ச்சி வருகிறது. ஆனால் பேறுகால வேதனையில்தான் துன்பமும், மகிழ்ச்சியும் இணைந்து வருகிறது.

பெண்கள் அனுபவிக்கும் பேறுகால வலியை அனுபவிக்க வாருங்கள் என்று லண்டனில் ஒரு மருத்துவமனை தொடர் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, செயற்கையாக இந்த வலியை ஆண்களுக்கு ஊட்டுகிறது. நான்கு கட்டமாகத் தரப்படும் வலியில் 100ல் 1 ஆண் மட்டுமே நான்காம் கட்ட வலியைத் தாங்கிக் கொள்ள முடிகிறதாம். உண்மையில் பெண்கள்தாம் பலசாலிகள்.

நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலும்கூட நமக்கு பேறுகால வேதனையைத்தானே தருகிறது. என்னிடம் உதவி கேட்டு வரும் ஒருவருக்கு நான் 500 ரூபாய் தருகிறேன் என்றால் ஒரே நேரத்தில் எனக்கு துன்பமும், இன்பமும் இருக்கிறது - துன்பம், ஏனென்றால் என் பணம் என்னை விட்டுப் போகிறது. இன்பம், ஏனென்றால் மற்றவரின் தேவையை என்னால் நிறைவு செய்ய முடிகிறது.

மேலும் பேறுகாலம் போல அல்லது தாய்மை அடையும் காலம் போல வாழ்வை வாழ்தல் மிக நல்லது. எப்படி? வளைகாப்பு என்ற நிகழ்வில் பேறுகாலத்திற்கு தயாராய் இருக்கும் பெண்ணின் கைகளில் வளைகளை நிரைப்புவார்கள். எதற்காக? நான் நினைக்கும் காரணம் இதுதான்: இந்தப் பெண்ணின் இருப்பை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வெளியில் இருக்கும் மற்றவருக்கும் கண்ணாடி சிணுங்கல்கள் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. உள்ளே இருக்கும் குழந்தை இந்த சிணுங்கல் கேட்டு மகிழும். வெளியே இருக்கும் வளர்ந்தவர்கள் இந்தப் பெண்ணின் இருப்பை நினைத்து அவரை மதிப்பர். அவருக்கு பணிவிடை செய்ய தயாராயிருப்பர்.

நாம் எழுப்பும் சின்னச் சின்ன சிணுங்கல்களும், நம் உள்ளே இருக்கும் நம் மனம் என்னும் குழந்தைக்கு உற்சாகமாகவும், நம் வெளியில் இருப்பவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்தவதாகவும் இருக்கலாமே!

Fr. Yesu, Madurai.
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!