|
|
28 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
30ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள்.
அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
8: 12-17
சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை;
அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப
வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின்
துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள்
வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின்
மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள்
பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே
பெற்றுக்கொண்டீர்கள்.
அதனால் நாம், "அப்பா, தந்தையே" என அழைக்கிறோம். நாம் இவ்வாறு
அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின்
பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின்,
உரிமைப்பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து
உரிமைப்பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய
துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு
மாட்சியிலும் பங்கு பெறுவோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 68: 1,3. 5-6ab. 19-20 (பல்லவி: 20a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவராம் நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்.
1 கடவுள் எழுந்தருள்வார்; அவருடைய எதிரிகள் சிதறடிக்கப் படுவார்கள்;
அவரை வெறுப்போர் அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்; 3 நேர்மையாளரோ
மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து
கொண்டாடுவர். பல்லவி
5 திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின்
காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! 6யb தனித்திருப்போர்க்குக்
கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை
வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். பல்லவி
19 ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக்
கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. 20 நம் இறைவனே மீட்பளிக்கும்
கடவுள்; நம் தலைவராகிய ஆண்டவர்தாம் இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.
பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17b,a
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால்
எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில்
விடுவிப்பது முறையில்லையா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்
கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்
நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும்
நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது
நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, தம்
கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார்.
இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர்
கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, "வேலை செய்ய ஆறு
நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்;
ஓய்வு நாளில் வேண்டாம்" என்றார்.
ஆண்டவரோ அவரைப் பார்த்து, "வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும்
ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு
போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய
இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்.
இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது
முறையில்லையா?" என்று கேட்டார்.
அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர்.
திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள்
அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உரோமையர் 8: 12-17
யாரெல்லாம் கடவுளின் மக்கள்?
நிகழ்வு
மன்னர் இரண்டாம் பிலிப்பின் தாயாரும் போர்ச்சுகல் நாட்டின் பேரரசியுமான
இசபெல்லாவின் அரசபையில் முதன்மை அமைச்சராகப் பணிபுரிந்து வந்தவர்
(புனித) பிரான்சிஸ் போர்ஜியா (1510-1572). காண்போரை வியக்கவும்
மயக்கவும் செய்யும் பேரரசி இசபெல்லாவிற்கு முன்னம் மண்டியிடாத
ஆள்கள் யாருமே கிடையாது. இதையெல்லாம் பிரான்சிஸ் போர்ஜியா மிகவும்
உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.
திடீரென்று ஒருநாள் பேரரசி இசபெல்லா இறந்துவிட, நாடே சோகத்தில்
மூழ்கியது. இதன்பிறகு பேரரசி இசபெல்லாவின் சடலத்தைச் சவப்பெட்டியில்
வைத்து, கிரேனடா என்ற இடத்தில் புதைப்பதற்காக, அரசபையில் இருந்த
முக்கியப் பிரமுகர்கள் ஊர்வலமாகச் சென்றார்கள்; பிரான்சிஸ்
போர்ஜியாவும் அந்த ஊர்வத்தில் கலந்துகொள்ளவேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டதால், அதில் கலந்துகொண்டார்.
பேரரசி இசபெல்லாவின் சடலம் கிரேனடாவை அடைந்ததும், அதைச் சுமந்துகொண்டு
வந்தவர்கள், குழிக்குள் இறக்கி வைத்து, அடக்கம் செய்ய முற்பட்டார்கள்.
அப்பொழுது அந்தச் சடலத்திலிருந்து துர்நாற்றம் மிக அதிகமாக வரவே,
அதை அவர்கள் அப்படியே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடினார்கள்.
பிரான்ஸ் போர்ஜியா மட்டும் அங்கு இருந்தார். அவர் பேரரசி இசபெல்லாவின்
சடலத்தைப் பார்த்துவிட்டு, "உலகிலுள்ள எல்லாப் பேரரசர்களும்
பெரிய பெரிய மகான்களும் மண்டியிட்டு வணங்கிய அந்தப் பேரரசிதான்
நீயா...? காண்பவரை மயக்கவும் வியக்கவும் வைத்த அந்தப் பேரரசிதான்
நீயா...? இப்பொழுது எங்கே அந்த மாட்சி...? எங்கே அந்தக் கிரிடம்...?"
என்றார்.
பின்னர் அவர் 'நிலையற்றவற்றின்மீது நம்பிக்கை வைத்து, அழிந்து
போன உமக்கும் உம்மைப் பின்தொடர்பவர்கட்கும் நான் பணிவிடை செய்ய
மாட்டேன்... நிலையான வாழ்வுதரும் ஆண்டவர்க்குத்தான் பணிவிடை
செய்வேன்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, இயேசு சபையில்
சேர்ந்து, ஆண்டவர்க்காக தன்னை அர்ப்பணித்து, அவருடைய அன்பு மகனாகவும்
1670 ஆம் ஆண்டு புனிதராகவும் மாறினார்.
நிலையற்றவற்றின்மீது நம்பிக்கை வைத்து ஊனியல்பின்படி நடந்தால்
சாவுதான் நிகழும். மாறாக, ஆண்டவரின்மீது நம்பிக்கை வைத்து, அவர்க்கு
உகந்த வாழ்க்கை வாழ்ந்தால் வாழ்வு வரும்; கடவுளின் அன்பு மகனாக,
மகளாக மாறமுடியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு
நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் நாம் கடவுளின் மக்களாக
மாறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துச்
சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஊனியல்பின் படி வாழ்ந்தால் சாவு
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், இரண்டு இயல்புகளை அல்லது
இரண்டு நிலைகளைக் குறித்துப் பேசுகின்றார். ஒன்று, ஊனியல்புக்கு
ஏற்ப வாழ்வது; இன்னொன்று, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப
வாழ்வது. முதல் ஊனியல்பின் படி நடப்பது என்றால் என்ன என்பதையும்
அதனால் என்ன நடக்கும் என்பதையும் குறித்துச் சிந்தித்துப்
பார்ப்போம்.
ஊனியல்பின் படி நடப்பது என்றால், நம்முடைய சொந்த விருப்பத்தின்படி
நடப்பது. இப்படி ஊனியல்பின்படி நடப்பவர்கள், புனித பவுல் கலாத்தியர்க்கு
எழுதிய திருமுகம் ஐந்தாம் அதிகாரத்தில் (5: 19-21)
குறிப்பிடுகின்ற செயல்களை எல்லாம் செய்துகொண்டிருப்பார்கள். இத்தகைய
செயல்களைச் செய்பவர்கள் முடிவில் செத்து மடியத்தான் வேண்டும்.
இதைத் தவிர வேறொரு நன்மையையும் அவர்கட்கு விளையப் போவதில்லை.
தூய ஆவியாரின் துணையால் வாழ்ந்தால் வாழ்வு
புனித பவுல் குறிப்பிடுகின்ற இன்னொரு நிலை தூய ஆவியாரின்
தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வது. இந்த நிலையின்படி வாழ்ந்தால், அல்லது
தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்தால் நிலைவாழ்வு வாழலாம்
என்று புனித பவுல் மிக அழகாக எடுத்துக் கூறுகின்றார்.
இங்கோர் உண்மை நான் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில்,
நாம் யாவரும் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அதன்படி
வாழவேண்டிய கட்டாயமும் இல்லை. மாறாக, நாம் தூய ஆவியாரின்
தூண்டுதலுக்கு ஏற்ப வாழக் கடமைப்பட்டிருக்கின்றோம். என்றைக்கு
நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்கின்றோமோ, அன்றைக்கு
நாம் தூய ஆவியாரின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்து
வாழ்வோம்; கடவுளின் பிள்ளைகளாகவும் இயேசுவின் பங்காளிகளாகவும்
வாழ்வோம் என்பது உறுதி.
நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு
ஏற்ப வாழ்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை
'தூய ஆவியாரின் துணையால் நாம் வாழ்கின்றோம்; எனவே அந்த ஆவி
காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' (கலா 5: 25) என்பார்
புனித பவுல். நாம் தூய ஆவியார் காட்டும் நெறியிலேயே வாழ்ந்து,
கடவுளின் அன்பு மக்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 13: 10-17
நீங்கள் குறைகளைப் பார்ப்பவரா? நிறைகளைப் பார்ப்பவரா?
நிகழ்வு
அரசர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஆறு அமைச்சர்கள் இருந்தார்கள்.
அவர்களுள் ஒருவரை முதன்மை அமைச்சராகத் தேர்ந்தெடுக்க
விரும்பினார் அரசர். அவர்களிடம், 'உங்களுள் யார்க்கு முதன்மை
அமைச்சராக விருப்பம்?' என்று கேட்டால், அவர்கள் எல்லாரும் தங்கட்கு
விரும்பம் என்றுதான் சொல்வார்கள் என்பதால், அரசர் அவர்களிடம்
ஒரு போட்டியை வைத்து, அதன்மூலம் அவர்களிடமிருந்து முதன்மை அமைச்சரைத்
தேர்ந்தெடுக்க விரும்பினார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் அரசர் அந்த ஆறு அமைச்சர்களையும் ஒரு கூடத்திற்கு
அழைத்து, அந்தக் கூடத்தின் நடுவில் ஒரு புறாவை வைத்தார். பின்னர்
அவர் அவர்களிடம், "இந்தப் புறாவைப் பற்றிச் சொல்லுங்கள்" என்றார்.
ஒருவர் மாற்றி ஒருவர் என முதல் ஐந்து அமைச்சர்களும்,
புறாவிற்கு ஒரு கண் சரியாகத் தெரியவில்லை என்றார்கள். ஆறாவதாக
இருந்த அமைச்சர் மட்டும், "புறாவின் நிறம் பால் போன்று அவ்வளவு
வெண்மையாக இருக்கின்றது" என்றார்.
இதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அரசர் அந்த ஆறாவது அமைச்சரையே
முதன்மை அமைச்சராக ஏற்படுத்தினார். மற்ற ஐந்து பேரும், "அவரை
ஏன் முதன்மை அமைச்சராக நியமித்தீர்கள்?" என்று கேட்டதற்கு,
அரசர் அவர்களிடம், "நீங்கள் ஐந்து பேரும் புறாவிடம் இருந்த
குறையைக் கண்டீர்கள். அவர் மட்டும்தான் புறாவிடம் இருந்த
நிறையைக் கண்டார். நாட்டின் முதன்மை அமைச்சராக இருக்கப்போகிறவர்
குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், அது நன்றாக இருக்காது;
நிறைகளையும் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த நாடு நன்றாக
இருக்கவேண்டும்" என்றார்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் குறைகளைப் பார்க்கக்கூடிய நல்ல
மனது வேண்டும் என்ற செய்தியை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு
நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு ஒரு நற்செயலைச்
செய்கின்றார். அது எத்தகைய எதிர்வினையை ஆற்றுகின்றது...? அது
நமக்குக் கற்றுத்தரும் பாடமென்ன...? என்பவற்றைக் குறித்து இப்பொழுது
நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பதினெட்டு ஆண்டுகளாய் கடவுளிடம் நம்பிக்கையோடு இருந்த பெண்மணி
நற்செய்தியில் இயேசு, ஓய்வு நாளின்போது பதினெட்டு ஆண்டுகளாகத்
தீய ஆவி பிடித்து, கூன் விழுந்த நிலையில் இருந்த ஒரு பெண்மணியிடமிருந்து
தீய ஆவியை ஓட்டி, அவரை நலப்படுத்துகின்றார்.
இந்தப் பெண்மணியைக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
உடல் நலம் குன்றிய ஒருவர் அல்லது உடல் குறைபாடோடு இருக்கின்ற
ஒருவர் பதினெட்டு ஆண்டுகள் கடவுளிடம் நம்பிக்கையோடு இருப்பதை
நம்மால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா...? முடியாது அல்லவா!
ஒன்று அவர் 'கடவுள் எனக்கு இப்படிச் செய்துவிட்டாரே!' என்று
அவரைப் பழித்துரைத்துக் கொண்டிருக்கவேண்டும். இல்லையென்றால்
அவர் கடவுளை மறந்துபோயிருக்க வேண்டும். ஆனால், நற்செய்தியில்
வருகின்ற பெண்மணியோ பதினெட்டு ஆண்டுகளாக வாரம் தவறாமல்
தொழுகைக்கூடத்திற்கு வருவதாக நற்செய்தியில் நாம்
வாசிக்கின்றோம். அப்படியானால், அந்தப் பெண்மணி ஆண்டவரிடம் எந்தளவுக்கு
நம்பிக்கையும் நல்லுறவும் கொண்டிருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை
செய்து பார்த்துக் கொள்ளலாம்.
நல்லது மட்டுமே செய்த இயேசு
தொழுகைக்கூடத்திற்கு வரும் இயேசு அந்தப் பெண்மணியைக் கண்டு,
"அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று
கூறி, தம் கைகளை அவர்மீது வைக்க, அவர் நிமிர்ந்து எழுந்து, கடவுளைப்
போற்றிப் புகழ்கின்றார். இயேசு சென்ற இடங்களிலெல்லாம் நன்மை
செய்துகொண்டு சென்றவர் (திப 10:38) அப்படிப்பட்டவர் பதினெட்டு
ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து, கூன் விழுந்த நிலையில் இருந்த
இந்தப் பெண்மணியைக் கண்டு அவரை நலப்படுத்துகின்றார். இத்தனைக்கும்
அது ஓய்வுநாள்! ஓய்வுநாளில் குணப்படுத்தினால் பரிசேயக் கூட்டம்
தனக்கெதிராகச் செயல்படும் என்றெல்லாம் இயேசு நினைத்துக்
கொண்டிருக்காமல், நன்மையை மட்டும் செய்கின்றார்.
நிறையைப் பார்க்காமல் குறையை மட்டுமே பார்த்த தொழுகைக்கூடத் தலைவர்
இயேசு அந்தப் பெண்மணியை நலப்படுத்தியிருக்கின்றார். அதை
நினைத்து தொழுகைக்கூடத் தலைவர் இறைவனுக்கு நன்றி செலுத்தாமல்
இயேசுவுக்கு எதிராக முறையிடத் தொடங்குகின்றார். அப்பொழுது இயேசு,
உங்களிடம் இருக்கும் கழுதைக்கும் மாட்டிற்கும் நீங்கள்
கொடுக்கும் முக்கியத்தை ஆபிரகாமின் மகளான இவளுக்குக்
கொடுக்காது இருப்பது ஏன்? என்று வேதனைப்படுகின்றார்.
நற்செய்தியில் வரும் தொழுகைக்கூடத் தலைவரைப் போன்று பலர் நிறைகளைப்
பார்க்காமல், குறைகளை மட்டும் பார்த்துக்கொண்டு, விலங்குகட்குக்
கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்கட்குக் கொடுக்காமல்
வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இயேசுவைப் போன்று மனிதர்களின்
தேவையை உணர்ந்து, அதை நிறைவேற்ற முன்வருவது நல்லது.
சிந்தனை
'நன்மை செய்வதில் நீங்கள் மனம் தளரவேண்டாம்' (2 தெச 3:13) என்பார்
புனித பவுல். ஆகையால், பிறர் நம்மைக் குறை கூறுவார்களே என்று
நினைத்துக் கொண்டிருக்காமல், மனந்தளராமல் நன்மை செய்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|