Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     26 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 29ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருக்கிறது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1-11

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது. ஏனெனில், கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது. ஊனியல்பின் காரணமாய் வலுவற்றிருந்த திருச்சட்டம் செய்ய முடியாத ஒன்றைக் கடவுள் செய்தார்.

அதாவது, ஊனியல்பு கொண்ட மனிதரைப் போன்றவராய்த் தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவு கட்டினார். ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வாறு செய்தார்.

ஏனெனில், ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும். ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்.

ஏனெனில் ஊனியல் மனநிலை கடவுளுக்குப் பகையானது; அது கடவுளின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை, இருக்கவும் முடியாது. ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.

ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.

மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6 காண்க) Mp3
=================================================================================
பல்லவி: கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எசே 33: 11

அல்லேலூயா, அல்லேலூயா! தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார்.

தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 13: 1-9

அடுத்தவரைப் பாவி என்று முத்திரை குத்துவதை நிறுத்துவோம்

நிகழ்வு

Paradise Lost என்ற அமர காவியத்தை உலகிற்கு அளித்தவர் இங்கிலாந்தை சார்ந்த ஜான் மில்டன். இவர் தன்னுடைய பார்வையை இழந்தபிறகு, இரண்டாம் சார்லஸ் என்ற அரசனின் மகன் இவரிடம் வந்து, "நீங்கள் என்னுடைய தந்தையை விமர்சித்துப் பேசியதால்தான் இப்பொழுது பார்வையிழந்து நிற்கிறீர்கள்!" என்றான்.

உடனே ஜான் மில்டன் அவனிடம், "நான் உன்னுடைய தந்தையை விமர்சித்துப் பேசியதால்தான் என்னுடைய பார்வையை இழந்தேன் என்றால், உன்னுடைய தந்தையின் தலை எதிரிகளால் துண்டிக்கப்பட்டிருக்கின்றதே! (இரண்டாம் சார்லசின் தலை பூரிடன்ஸ் என்ற குழுவினரால் துண்டிக்கப்பட்டது) அப்படியானால் அவர் யாரை விமர்சித்துப் பேசினார்...?" என்றார். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. வந்த வேகத்தில் அவன் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டான்.

அரசன் இரண்டாம் சார்லசின் மகன், ஜான் மில்டன் பார்வையிழந்ததை விமர்சிக்க வந்தபோது, ஜான் மில்டனோ அவனுடைய தந்தை தலைவெட்டிக் கொல்லப்பட்டதை விமர்சித்ததால் அவன் அவமானப்போட்டுப் போனான். பலரும் இப்படித்தான் அடுத்தவர்களை விமர்சிக்கவும் குறைசொல்லவும் தொடங்கி, கடைசியில் அவர்களே விமர்சிக்கப்பட்டும் அவமானப்பட்டுப் போவதும்தான் வாடிக்கையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அப்படியொரு நிகழ்வு வருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவைச் சிக்கலில் மாட்டிவிட வந்தவர்கள்

இயேசு கிறிஸ்து எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் சிலர் வந்து, பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றுவிட்டான் என்று கூறுகின்றார்கள். இயேசு அவர்கட்கு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், இயேசுவிடம் வந்தவர்கள் அவரிடம் அந்தச் செய்தியை ஏன் சொல்லவேண்டும் என்று தெரிந்துகொள்ளது நல்லது.

உரோமை ஆளுநனாக இருந்த பிலாத்து, தன்னுடைய அதிகாரத்திற்குள் இருந்த எருசலேம் திருக்கோவிலிலிருந்து வந்த வருமானத்தை முறைகேடாகப் பயன்படுத்திவிட்டான் என்பதற்காக யூதர்கள் அவனைக் கேள்வி கேட்டார்கள். இதனால் பிலாத்து தன்னைக் கேள்வி கேட்டவர்களையெல்லாம் கூலியாள்களைக் கொண்டு கொலைசெய்தான். இந்த செய்தியைத்தான் சிலர் இயேசுவிடம் வந்து சொல்கின்றார்கள். இதற்கு இயேசு பதில் சொல்லியாக வேண்டும். ஒருவேளை அவர் பிலாத்து செய்தது தவறு என்று சொன்னால், இயேசு உரோமை அரசாங்கத்திற்கு எதிராக இருக்கின்றார் என்றும் ஒருவேளை அவர் கொல்லப்பட்ட கலிலேயர்களிடம்தான் தவறு இருக்கின்றது என்றால் இயேசு யூதர்கட்கு எதிராகப் பேசுகின்றார் என்றும் சொல்லி அவரைச் சிக்கலில் மாட்டிவிடத் திட்டம் தீட்டினார்கள் அவரிடம் வந்தவர்கள். ஆனால், இயேசுவோ அவர்களுடைய கேள்விக்கு மறுகேள்வி கேட்டு, அவர்களுடைய திட்டத்தை முறியடிக்கின்றார்.

மனம்மாறாவிட்டால் யாவரும் அழியவேண்டியதுதான்

இயேசுவிடம் வந்த சிலர், பிலாத்து பலிசெலுத்திக் கொண்டிருந்தவர்களைக் கொன்ற செய்தியைச் சொன்னதும், அவர் அவர்களிடம் சீலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேர் இறந்த செய்தியைச் சொல்லி, "மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்று கூறுகின்றார்.

இயேசுவிடம் வந்தவர்கட்கு இரண்டு உள்நோக்கங்கள் இருந்திருக்கும். ஒன்று அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்பது. இன்னொன்று பலிசெலுத்திக்கொண்டிருந்த பிலாத்துவால் கொல்லப்பட்ட அந்தக் கலிலேயர்கள் பாவிகள் என்று நிரூபிப்பது. இத்தகைய உள்நோக்கங்களோடு வந்தவர்களிடம் இயேசு, அவர்கள் மட்டுமல்ல, மனம்மாறாவிட்டால் நீங்களும் அழிந்துபோவீர்கள் என்று சொல்வது நமக்கு ஒரு முக்கியமான செய்தியை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றது. அது என்னவென்று பார்ப்போம்.

பிறரைத் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், நம்முடைய வாழ்வை சரிசெய்வோம்

இயேசு தன்னிடம் வந்தவர்களிடம் எடுத்துரைக்கும் மிக முக்கியமான செய்தி, மற்றவர்களை அவர்கட்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலையை, துன்பத்தைக் கொண்டு தீர்ப்பிட்டுக் கொண்டிருக்காமல், உங்களுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, மனம்மாறுங்கள் என்பதுதான். ஏனென்றால் பலர்க்கு அடுத்தவரை, அவர்க்கு ஏற்பட்டிருக்கும் நோய் நொடியைக் கொண்டு, இழப்பைக் கொண்டு தீர்ப்பிட்டுக்கொண்டிருப்பது ஒரு பொழுதுபோக்காக இருக்கும். யோபுவின் நண்பர்கள் அவர் பாவம் செய்ததால்தான் அவர்க்கு அப்படியொரு துன்பம் ஏற்பட்டது என்று சொல்வதைப் போன்று, பலரும் அடுத்தவரைக் குற்றம் சாற்றுவதுதான் வாடிக்கையாக இருக்கின்றது. இந்நிலையில்தான் இயேசு ஒவ்வொருவரும் மனமாறவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றார்.

ஆகையால், நாம் பிறரைப் பாவிகள் என்று முத்திரை குத்தும் போக்கினை விட்டுவிட்டு, நம்முடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, மனம்மாறத் தயாராவோம்.

சிந்தனை

'பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்பொழுதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்' (மத் 7: 1) என்பார் இயேசு. ஆகையால், பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடும் போக்கினை விட்டுவிட்டு, நம்முடைய வாழ்வைச் சரிசெய்து, கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உரோமையர் 8: 1-11

கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போர்க்கு கிடைக்கும் ஆசி

நிகழ்வு

வாழ்க்கையில் எல்லா உறவுகளையும் சொத்து சுகங்களையும் இழந்து, நிம்மதியின்றித் தவித்த பெண்ணொருத்தி இருந்தார். ஒருநாள் அவர் ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து, வாழ்க்கையில் தான் பட்ட பாடுகளையும் துன்பங்களையும் எடுத்துச் சொன்னார். அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த மனநல மருத்துவர் தன்னிடம் இருந்த ஒரு திருவிவிலியத்தை அவரிடம் எடுத்துக் கொடுத்து, "இதை ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் ஒதுக்கி ஒரு மாதத்திற்குப் படித்து வாருங்கள்... அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை என்னிடம் வந்து சொல்லுங்கள்" என்றார்.

அந்த மனநல மருத்துவர் தன்னிடம் இவ்வாறு சொன்னதைக் கேட்ட பெண்மணி சற்று கோபத்தோடு, "உங்களிடம் வந்தால் என்னுடைய துன்பத்திற்குத் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தால், நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே...!" என்றார். அதற்கு அந்த மனநல மருத்துவர் அவரிடம், "முதலில் இதை வாசியுங்கள். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்பதை ஒரு மாதம் கழித்து வந்து சொல்லுங்கள்" என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

மனநல மருத்துவர் தன்னிடம் கொடுத்த திருவிவிலியத்தை அந்தப் பெண்மணி எடுத்து வாசிக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் அதை ஒவ்வொருநாளும் ஒருநேரம் ஒதுக்கி வாசிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், அவர் அதை வாசிக்க வாசிக்க அவருடைய மனம் இலகுவானது; அவருடைய துன்பங்கள் மெல்ல மறையத் தொடங்கின. இதனால் அவர் அதை இன்னும் ஆர்வத்தோடு வாசித்து, மனநல மருத்துவர் கொடுத்த அந்த ஒருமாதம் முடிந்ததும் அவரைப் போய்ச் சந்தித்தார்.

இப்பொழுது அந்தப் பெண்மணியின் முகம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது. அதைக் பார்த்துவிட்டு, அந்த மனநல மருத்துவர் அவரிடம், "நான் சொன்னதைக் கடைப்பிடித்தீர்களா...?" என்று கேட்க, அவர் அவரிடம், "ஆமாம், நீங்கள் சொன்னதுபோன்றே செய்தேன். என்னிடம் இருந்த துன்பம், மனக்கவலைகள் அத்தனையும் மாயமாக மறைந்து போயின... அதுசரி, என்னுடைய நிலைமை இதுதான்; இந்தத் திருவிவிலியத்தை வாசிக்கச் சொன்னால், எல்லாம் சரியாகிவிடும் என்று உங்கட்கு எப்படிச் சரியாகத் தெரிந்தது?" என்றார். உடனே அந்த மனநல மருத்துவர் அவரிடம், "நான் என்னுடைய வாழ்க்கையில் திருவிவிலியத்தைப் பல ஆண்டுகளாக வாசித்து வருகின்றேன்; அதன்மூலம் நான் ஆண்டவரோடு இணைந்திருக்கின்றேன் என்பது உணர்கிறேன். என்றாவது ஒருநாள் நான் திருவிவிலியத்தை வாசிக்க முடியாமல் போனால், என்னிடம் ஆற்றல் இல்லாது போவதை உணர்கின்றேன். நீங்கள் என்னிடம் வந்தபோது ஆண்டவரோடு இணைந்திராததை உணர்ந்தேன். அதனால்தான் உங்களிடம் திருவிவிலியத்தைக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன்" என்றார்.

திருவிவிலியத்தை வாசிப்பதனாலும் அதனைத் தியானிப்பதனாலும் அவற்றின்மூலம் ஆண்டவரோடு இணைந்திருப்பதனாலும் கிடைக்கும் ஆசி மிகவும் அளப்பெரியது. அத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் ஆண்டவரோடு இணைந்திருப்பதால் கிடைக்கும் ஆசி எத்தகையது என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவரோடு இணைந்திருப்போர்க்குத் தண்டனைத் தீர்ப்புக் கிடையாது

ஆண்டவரோடு இணைந்திருப்போர்க்கு கிடைக்கும் முதலாவது ஆசியாகப் பவுல் சொல்வது, தண்டனைத் தீர்ப்பு கிடையாது என்பதாகும். இதற்கு முக்கியமான காரரணம், தூய ஆவியாரின் சட்டம் பாவம், சாவு என்பனவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று விடுவித்து விட்டது என்பதுதான். அதனால்தான் புனித பவுல் ஆண்டவரோடு இணைத்திருபோர்க்கு தண்டனைத் தீர்ப்பு என்பது கிடையாது என்று கூறுகின்றார்.

நாம் ஆண்டவர்மீது நம்பிக்கைகொண்டு, அவருடைய வார்த்தையை வாசித்து, அதனைத் தியானித்து, அதன்படி நடந்து, அதன்மூலம் ஆண்டவரோடு இணைந்திருந்தால், புனித பவுல் சொல்கின்ற ஆசி நமக்கும் கிடைக்கும் என்பது உறுதி.

ஆண்டவரோடு இணைத்திருந்திருப்போர்க்கு வாழ்வும் அமைதியும் கிடைக்கும்

ஆண்டவரோடு இணைந்திருப்போர்க்குக் கிடைக்கும் இரண்டாவது ஆசியாகப் புனித பவுல் சொல்வது, வாழ்வும் அமைதியுமாகும். இதை அவர், ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போர்க்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும் என்ற வார்த்தைகளில் குறிப்பிடுகின்றார். ஆவிக்குரிய மனநிலை என்பதும் ஆண்டவரோடு இணைந்திருப்பதும் வேறு வேறு அல்ல; இரண்டு ஒன்றுதான். ஆவிக்குரிய மனநிலையைக் கொண்டிருப்பவர் ஆண்டவரோடு இணைந்திருப்பார்; ஆண்டவரோடு இணைந்திருப்பவர் ஆவிக்குரிய மனநிலையைக் கொண்டிருப்பார். நாம் ஆண்டவரோடு இணைந்து, ஆவிக்குரிய மனநிலையைக் கொண்டிருந்தால், அவர் தருகின்ற வாழ்வும் அமைதியும் நமக்கு நிச்சயம் கிடைக்கும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

சிந்தனை

'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்' (பிலி 4:4) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஆண்டவரோடு வார்த்தையின்படி நடந்து, அவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!