Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     25 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 29ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்?

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7: 18-25a

சகோதரர் சகோதரிகளே, என்னுள், அதாவது வலுவற்ற என் ஊனியல்பில், நல்லது எதுவும் குடிகொண்டிருக்கவில்லை என எனக்குத் தெரியும். நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன். நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.

நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமையைத்தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கிறேன். நான் கடவுளின் சட்டத்தைக் குறித்து உள்ளூர மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால், என் உறுப்புகளில் வேறொரு சட்டத்தைக் காண்கிறேன்; என் மனம் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை அது எதிர்த்துப் போராடுகிறது; என் உறுப்புகளில் இருக்கும் அந்தப் பாவச் சட்டத்திற்கு என்னைக் கட்டுப்படுத்துகிறது. அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்கு உள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார்; அவருக்கு நன்றி!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 119: 66,68. 76,77. 93,94 (பல்லவி: 68b) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும்.

66 நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 68 நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்; எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி

93 உம் நியமங்களை நான் எந்நாளும் மறவேன்; ஏனெனில், அவற்றைக்கொண்டு என்னைப் பிழைக்க வைத்தீர். 94 உமக்கே நான் உரிமை; என்னைக் காத்தருளும்; ஏனெனில், உம் நியமங்களையே நான் நாடியுள்ளேன். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.

வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 12: 54-59

காலத்தின் குரல்கேட்டு கடவுளோடு ஒப்புரவாவோம்

நிகழ்வு

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வேளை. அந்தக் காலை வேளையில் இலண்டன் மாநகரின் ஒரு முக்கியமான சாலையில், மக்கள் எல்லாரும் கோயிலுக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரே ஒரு மனிதர் மட்டும் எதையோ இழந்தவர் போன்று அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தார்.

அப்பொழுது கோயில் மணி ஒலித்தது. அது அவருடைய உள்ளத்தில் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. ஒரு காலத்தில் கோயிலே கதியெனக் கிடந்தேன்... இன்றைக்கு கோயில் மணி அடித்தபின்னும் கோயிலுக்குப் போகாமலும் கடவுளை நினையாமலும் இருக்கின்றேன்!' என்று எண்ணிப் பார்த்தார். அப்பொழுது ஒரு சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்' என்று அவர் திரும்பிப் பார்த்தபோது, பெண்ணொருவர் நான்கு சக்கர வண்டியில் வந்துகொண்டிருந்தார். அவர் அந்த மனிதருடைய அருகில் வந்ததும், கோயிலுக்குப் போகிறேன்... வண்டியில் இடம் இருக்கின்றது... என்னோடு வருகின்றீர்களா...? என்று கேட்டார். அந்த மனிதர் ஒரு கணம் யோசித்தார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வண்டியில் ஏறிக்கொண்டார்.

அவர் வண்டியில் ஏறிக்கொண்டதும் வண்டி மெல்லக் கிளம்பியது. அந்தப் பெண்மணி தான் யாரென்று அவரிடம் அறிமுகம் செய்துகொண்டார். அந்த மனிதரும் தன்னை ராபர்ட் ராபின்சன்' என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் தன்னுடைய பெயர் ராபர்ட் ராபின்சன் என்று சொன்னதும், வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த அந்தப் பெண்மணி, "ஓ மிகப்பெரிய கவிஞரான ராபர்ட் ராபின்சன் நீங்கள்தானா..?. உங்களுடைய கவிதை நூலைத்தான் வாசித்துக் கொண்டு வருகின்றேன். இதோ நீங்கள் எழுதிய கவிதை நூல்" என்று அந்த நூலை அவர்க்குக் காட்டினார்.

ராபர்ட் ராபின்சன் அந்த நூலை பொறுமையாகப் பார்த்தார். அப்பொழுது அந்தப் பெண்மணி அவரிட்ம், "ஆமாம், உங்கட்கு கடவுள்மீது அளவுகடந்த நம்பிக்கை உண்டே! அப்படிப்பட்ட நீங்கள் இந்த ஞாயிற்றுக்கிழமையில் கோயிலுக்குச் செல்லாமல், வேறு எங்கோ சென்றுகொண்டிருந்ததுபோன்று தெரிந்ததே" என்றார் அந்தப் பெண்மணி. "ஆமாம். வேறோர் இடத்திற்குத்தான் போய்க்கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் கடவுளுக்கும் எனக்கும் ஒரு சின்னச் சண்டை. அதனால்தான் நான் கோயிலுக்கும் போகாமல் அவரைப் பற்றி நினையாமலும் இருக்கின்றேன்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு, அவர் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேசினார்: "நான் அன்பு செய்யும் என் கடவுளை விட்டு ஒருநாள் விலகினாலும் விலகுவேன்' என்று இந்தக் கவிதை நூலில் எழுதி இருக்கின்றேன். நான் எழுதியது போன்றே நடந்துவிட்டது." அவர் இப்படிச் சொன்ன அடுத்த நொடி அந்தப் பெண்மணி, " இதோ என் இதயம். இதை எடுத்து உம்முடைய முத்திரை இடும்' என்றும் இதில் எழுதியிருக்கின்றீர்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் கடவுளோடு ஒப்புரவாகுங்கள்" என்றார்.

"காலம் மிகவும் கடந்து விட்டது. இதற்கு மேல் நான் கடவுளோடு ஒப்புரவாகி என்ன பயன்?" என்று ராபர்ட் ராபின்சன் கேட்க, "கடவுளோடு ஒப்புரவாக இந்த ஞாயிற்றுக்கிழமையைவிட நல்ல நாள் எங்கே கிடைக்கப்போகின்றது" என்று அந்தப் பெண்மணி சொன்னதும், ராபர்ட் ராபின்சன் என்ற அந்த கவிஞர் கடவுளோடு ஒப்புரவாகத் தொடங்கினார். அதற்குப் பின்பு அவர் கடவுளைவிட்டு விலகியதே இல்லை.

நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும்; அவர் குரல் கேட்டு அவரோடு ஒன்றித்து வாழவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் நாம் கடவுளைவிட்டு விலகி நிற்காமல், அவரோடு ஒன்றித்து வாழவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயற்கையின் குரலைக் கேட்கத் தெரிந்த நாம், கடவுளின் குரலைக் கேட்கத் தெரிந்துகொள்வோம்!

நற்செய்தியில் இயேசு மக்கள்கூட்டத்தைப் பார்த்து, "நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கத் தெரிந்த நீங்கள், இக்காலத்தை ஆராய்ந்து பார்க்காமல் இருப்பது எப்டி?" என்று கடிந்து கொள்கின்றார்.

ஆண்டவராகிய இயேசு மக்களைத் தேடி வந்தார்; தன்னுடைய மக்கள் மனம்மாறி தன்னிடம் திரும்பி வரவேண்டும் என்று மிகவும் விரும்பினார் (மத் 23: 37). ஆனால், அவர்கள் அவருடைய குரலைக் கேளாமல், அவர்க்கு மதிப்பும் அளிக்காமல் வாழ்ந்து வந்தார்கள். அதனால்தான் இயேசு மக்களைப் பார்த்து, இயற்கையில் தோன்றும் அறிகுறிகளைப் பார்த்துவிட்டு, இது இப்படி நடக்கும் என்று சொல்லத் தெரிந்த நீங்கள், காலத்தில் தெரியும் கடவுளின் குரலைக் கேளாமல் இருக்கின்றீர்களே! என்று வருந்துகின்றார்.

இன்றைக்கும் கூட கடவுள் நம்மிடம் பல வழிகளில் பேசுகின்றார். எனவே, நாம் கடவுளின் குரலினைக் கேட்டு, அவரோடு ஒப்புரவாவதே சாலச் சிறந்த செயல்.

சிந்தனை

'இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!' (2 கொரி 6:2) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இதுவே தகுந்த நாள் என்றும் இன்றே மீட்பு நாள் என்றும் உணர்ந்து, கடவுளுக்கு உகந்த வழியில் நடந்து, அவரோடு ஒன்றித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உரோமையர் 7: 18-25

உள்மனப் போராட்டம்

நிகழ்வு

அமெரிக்காவில் மெல் ட்ரோட்டர் (Mel Trotter) என்றொருவர் இருந்தார். அவருடைய தந்தை மதுபானக்கடை ஒன்றை நடத்தி வந்தார். மதுபானக் கடையை நடத்தி வந்ததனால் என்னவோ மெல் ட்ரோட்டரின் தந்தை குடிக்கு அடிமையானார். தந்தை எப்படியோ, அப்படியே மகனும்' என்பதுபோல் மெல் ட்ரோட்டர் தன் தந்தையைப் பார்த்துவிட்டு அவரும் குடிக்கு அடிமையானார். இதனால் அவர் எந்தவோர் இடத்திலும் சரியாக வேலை செய்ய முடியவில்லை; ஒவ்வொரு நிறுவனமாக அவர் மாறிக்கொண்டே இருந்தார்.

தன்னால் ஓரிடத்திலும் நிலையாக இருக்க முடியவில்லை என்பதை உணர்ந்த மெல் ட்ரோட்டர், இனிமேல் ஒருபோதும் குடிக்கக்கூடாது என்று முடிவு செய்தார். சில மாதங்கட்கு எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் அவருடைய நண்பர்கள் குடித்துக் கும்மாளம் போடுவதைப் பார்த்துவிட்டு அவர்க்கு ஆசைவந்துவிட்டது. இதனால் அவர் மீண்டுமாகக் குடிக்கத் தொடங்கி, குடிக்கு அடிமையானார். ஆதலால், நன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து அவர் வெளியே துரத்தி அடிக்கப்பட்டார்.

இதற்கிடையில் அவர் மிகவும் அன்புசெய்த அவருடைய ஒரே மகன் இறந்துபோனான். இதனால் வாழ்க்கையை வெறுத்துப்போன அவர் மிக்சிக்கன் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவுசெய்து, அந்த ஆற்றை நோக்கி நடந்துசென்றார். வழியில் ஒரு மதுபானக் கடை அவருடைய கண்ணில்பட்டது. அதைப் பார்த்ததும், நாம்தான் சாகப்போகிறோமே! சாகின்றபோது காலில் காலணி எதற்கு?' என்று அதைக் கழற்றி, மதுபானக் கடைக்காரரிடம் கொடுத்து, ஒரு புட்டி மது வாங்கி, அதைக் குடித்துக்கொண்டே மிக்சிக்கன் ஆற்றுக்குள் இறங்கினார். அந்த நேரம் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அவரைக் காப்பாற்றி, நன்றாக அறிவுரை சொல்லி அவரை அவருடைய வீட்டில் கொண்டுபோய்விட்டனர்.

இதற்குப் பின்பு அவர் தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். "கடவுள் எனக்கு இந்தப் புவியில் வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்புக் கொடுத்திருக்கின்றார். அதனால் இதனை நல்லமுறையில் பயன்படுத்துவேன்" என்று முடிவுசெய்து, குடிப்பழக்கத்தை அறவே விட்டு, குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டோர்களுடைய மறுவாழ்விற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.

மெல் ட்ரோட்டரின் வாழ்க்கை நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதுதான் எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றோமோ அதை திரும்பத் திரும்பச் செய்வது. இத்தகைய போராட்டில் அவர் தொடர்ந்து போராடி இறுதியில் வெற்றிபெற்றார். இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல் தனக்குள் நடந்த போராட்டத்தைப் பற்றியும் அதை அவர் எப்படி வெற்றிகொண்டார்/ நாம் அந்தப் போராட்டத்தில் எப்படி வெற்றிகொள்ளலாம் என்பதைக் குறித்தும் எடுத்துச் சொல்கின்றார். நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நன்மை செய்ய நினைத்தும் அதை செய்ய முடியாத நிலை

பவுல் தனக்குள் நடக்கும் போராட்டத்தைக் குறித்துச் சொல்கின்றபோது, நன்மை செய்ய விரும்புகின்றேன். ஆனாலும் அதை என்னால் செய்ய முடியவில்லை; தீமையையே செய்கின்றேன் என்று குறிப்பிடுகின்றார் இதிலிருந்து நாம் இரண்டு உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, செய்ய நினைத்ததைச் செய்ய முடியாமை. இரண்டு, செய்ய விரும்பாதைச் செய்தல். இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்பதைக் குறிப்பிடும்போது. புனித பவுல், தனக்குள் குடிகொண்டிருக்கும் பாவம்தான் காரணம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இடத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம் கூறுகின்ற, "உங்கள் உள்ளம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது; எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" (மத் 26: 41) என்ற சொற்களை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

ஆம், நம்முடைய வாழ்வில் ஏற்படும் தீமைக்கும் நன்மைக்குமான போராட்டத்தில் வெற்றிபெற, நாம் விழித்திருந்து இறைவனிடம் மன்றாடுவது மிகவும் இன்றியமையாதது.

ஆண்டவரோடு இணைந்திருந்தால் போராட்டத்தில் வெற்றி

தனக்குள் ஏற்பட்ட போராட்டத்தை புனித பவுல் எப்படி வெற்றிகொண்டார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கின்றபோது, ஆண்டவர் இயேசுவோடு இணைந்திருந்ததன் பயனாக, கடவுள் தன்னை விடுவித்தார் என்று கூறுகின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் தனக்குள் ஏற்படும் போராட்டத்தை, தன் சொந்த ஆற்றலால் மட்டும் வெற்றிகொள்ள முடியாது... ஆண்டவர் இயேசுவின் வல்லமையால், தூய ஆவியாரின் துணையால்தான் வெற்றிகொள்ள முடியும். புனித பவுல் ஆண்டவரோடு இணைந்திருந்ததாலும் தூய ஆவியாரின் துணையாலும் வெற்றிகொண்டார். நாம் ஆண்டவரோடு இணைந்திருக்கின்றோமா? தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

'தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சையை நிறைவேற்ற மாட்டீர்கள்' (கலா 5: 16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்ந்து, நமக்குள் நமக்குள் நடக்கும் போராட்டத்தில் வெற்றிகொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!