|
|
22 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
29ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள்
ஆகிவிட்டீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
6: 19-23
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு
எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு
வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை
நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள்.
அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு
உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள். நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாய்
இருந்தபோது கடவுளுக்கு ஏற்புடையவற்றைச் செய்யக் கடமைப்பட்டிருக்கவில்லை.
அப்போது நீங்கள் செய்த செயல்களை எண்ணி இப்போது நீங்களே வெட்கப்
படுகிறீர்கள். அவற்றால் நீங்கள் கண்ட பயன் யாது? அவற்றின்
முடிவு சாவு அல்லவா?
ஆனால் இப்பொழுது, நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு
அடிமைகள் ஆகிவிட்டீர்கள்; இதனால் நீங்கள் காணும் பயன் தூய
வாழ்வு. இதன் முடிவு நிலைவாழ்வு. பாவத்துக்குக் கிடைக்கும்
கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர்
கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி: திபா 40: 4a)
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.
1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி
3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில்
கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி
4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச்
செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில்
கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
பிலி 3: 8-9
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும்
குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான்
நான் இவ்வாறு கருதுகிறேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு
உண்டாக்கவே வந்தேன்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில்
தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க
வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு
திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன
நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்?
இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு
எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும்,
தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும்,
மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நீங்கள் பாவத்தினின்று விடுதலை பெற்றுக் கடவுளுக்கு அடிமைகள்
ஆகிவிட்டீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
6: 19-23
பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு
நிகழ்வு
சில ஆண்டுகட்கு முன்னம் செய்திதாளில் வந்த ஒரு செய்திக்
குறிப்பு. அந்தச் செய்திக் குறிப்பு இதுதான்: மெக்சிக்கோ
நாட்டில் இருந்த ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து நச்சு
வாயு கசிந்து, அந்த ஆலை இருந்த பகுதியிலிருந்த நூற்றுக்கணக்கானோரின்
உயிரைப் பறித்தது.
இதற்கான காரணத்தை வல்லுநர் குழு ஆய்வுசெய்து பார்த்தது. அப்பொழுது
அதிர்ச்சியூட்டும் உண்மை வெளியேவந்தது. ஆம், அந்த ஆலையிலிருந்து
லேசாக நச்சுவாயு கசிந்துகொண்டிருந்தபோது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த
யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதனால் இரவில் நச்சுவாயுக்
கசிவு அதிகமாகி, காற்றில் கலந்து, சுற்றிலும் உள்ள பகுதிகளில்
பரவி, நூற்றுக்கணக்கானோரைக் கொன்றுபோட்டது. இதை அறிந்து பலரும்
அதிர்ந்து போனார்கள்.
நச்சு வாயு மட்டுமல்ல, பாவமும் கூட தொடக்கத்திலேயே அகற்றப்படாமல்விட்டால்,
அது மனிதரைக் கொன்றுபோட்டுவிடும். இன்றைய முதல் வாசகம், பாவத்திற்குக்
கிடைக்கும் கூலி சாவு. மாறாக, ஆண்டவரோடு இணைந்திருக்கும்போது
நிலைவாழ்வு கிடைக்கின்றது என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது.
அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கட்டுபாடற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்கள்
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் உரோமையர்களிடம், ஒருகாலத்தில்
நீங்கள் உங்களுடைய உடல் உறுப்புகளை கெட்ட நடத்தைக்கும்
நெறிகேட்டிற்கும் அடிமையாக்கி, கட்டுப்பாடற்ற வாழ்க்கை
வாழ்ந்து வந்தீர்கள். அதனால் விளைந்தது சாவுதானே அன்றி
வேறொன்றில்லை என்று குறிப்பிடுகின்றார். உரோமை நகரம் பலரும் வந்து,
கூடும் இடமாக இருந்தது. இதனால் பாவமும் மலிந்தது. இதைப்
பார்த்துவிட்டுத்தான் புனித பவுல் உரோமை மக்களைப் பார்த்து,
உடல் உறுப்புகளை பாவத்திற்கும் நெறிகெட்ட தனத்திற்கும் அடிமையாக்கி
வாழ்ந்தீர்கள் என்றால், அதற்குக் கூலியாக சாவுதான் கிடைக்கும்
என்று கூறுகின்றார்.
இங்கு கடவுள் கொடுத்த உடலை, கடவுளுக்கு ஏற்புடையதாகப் பயன்படுத்தாமல்,
தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி, இறுதியில்
அழிந்து போனதற்கு ஒருவரை எடுத்துக்காட்டாகச் சொல்லவேண்டும் என்றால்,
நீதித் தலைவர்கள் நூலில் வருகின்ற சிம்சோனைச் சொல்லலாம். ஆண்டவர்
இவர்க்கு அபரிமிதமாக ஆசியையும் அளப்பெரிய ஆற்றலையும் தந்திருந்தார்.
ஆனால், இவர் பாவம் செய்து, இறுதியில் அழிந்து போனார் (நீத 16).
இந்த சிம்சோனைப் போன்றுதான் பலரும் கடவுள் தங்கட்குக்
கொடுத்திருக்கும் வாழ்வை, உடல் உறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து,
அவர்க்கு ஏற்றாற்போல் வாழாமல், பாவத்திற்குத் தங்களுடைய உடலைக்
கையளித்து, இறுதியில் அந்தப் பாவத்தாலேயே அழிந்து போகின்றார்கள்.
ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்தால் நிலைவாழ்வு
பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவு என்றால், எது ஒருவர்க்கு
வாழ்வு கொடுக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். புனித
பவுல் உரோமையர்களிடம் தொடர்ந்து பேசுகின்றபோது, ஆண்டவரோடு இணைந்து
வாழ்ந்தால் நிலைவாழ்வு கிடைக்கும் என்று கூறுகின்றார்.
ஆண்டவரோடு இணைந்து வாழ்ந்து, அதன்மூலம் அவர் தருகின்ற
நிலைவாழ்வைப் பெறுவதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதையும்
சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதற்கான பதிலை புனித பவுலே நமக்குத்
தருகின்றார். அது என்னவென்றால், நாம் நம்முடைய உடல் உறுப்புகளை
ஆண்டவரிடம் ஒப்படைத்து, அவர்க்கு ஏற்றாற்போல் வாழ்வது.
ஒருவர் ஆண்டவரிடம் தன்னையும் தன்னுடைய உடல் உறுப்புகளையும் ஒப்படைத்து
விட்டால், அவர் ஆண்டவருடைய விருப்பத்தின்படிதான் செயல்பட
வேண்டுமே ஒழிய, தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி செயல்பட
முடியாது; செயல்படக் கூடாது. மரியா, "நான் ஆண்டவரின் அடிமை;
உமது சொற்படியே நடக்கட்டும்" (லூக் 1: 38) என்று ஆண்டவரின்
விருப்பத்தின்படி நடந்தார். அதனால் எல்லாத் தலைமுறையினரும் அவரைப்
பேறுபெற்றவர் என்று சொல்லும் பேற்றினைப் பெற்றார். அதைவிடவும்
ஆண்டவரின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். அவரைப் போன்றும் நாம்
நம்முடைய உடலையும் நம்முடைய வாழ்வையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு,
அவருடைய விருப்பத்தின்படி வாழ்ந்தால், நிலைவாழ்வைப் பெறுவோம்
என்பது உறுதி.
உரோமை மக்கள் ஒரு காலத்தில் பாவத்திற்கு தங்களுடைய ஒப்புக்கொடுத்து,
அதற்குக் கூலியாக இறந்துபோனார்கள். ஆனால், அவர்கள் என்றைக்கு
பாவத்தினின்று விடுதலையடைந்து, கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்களோ,
அன்றைக்கே அவர்கள் இறைவனிடமிருந்து எல்லா ஆசியையும் பெறத் தொடங்கினார்கள்.
நாம் பாவத்திற்கு அடிமையாகி அதன் கூலியாக சாவைச் சந்திக்கப்போகிறோமா?
அல்லது ஆண்டவரிடம் நம்மை ஒப்படைத்து, அவரோடு இணைந்து வாழ்ந்து.
நிலைவாழ்வைக் கொடையாகப் பெறப் போகிறோமா? சிந்திப்போம்.
சிந்தனை
'நீங்கள் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர முடியாது' (யோவா
15: 4) என்பார் இயேசு. ஆகையால், நாம் ஆண்டவரிம் நம்மை ஒப்படைத்து,
அவரோடு இணைந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 12: 49-53
இயேசு பெற்ற இன்னொரு திருமுழுக்கு
நிகழ்வு
ஒரு சமயம் சிற்பி ஒருவர் ஒரு மலைப்பாங்கான பகுதி வழியாக
தன்னுடைய மாட்டு வண்டியில் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது
அவருடைய பார்வையில் இரண்டு பாறையில் தென்பட்டன; அவை
பார்ப்பதற்கு மிக அழகாகவும் சிற்பம் வடிப்பதற்கு உகந்ததாககவும்
இருந்தன. உடனே அவர் அந்த இரண்டு பாறைகளையும் பக்கத்தில் வேலை
பார்த்துக் கொண்டிருந்தவர்களின் உதவியுடன் தன்னுடைய
மாட்டுவண்டியில் ஏற்றினார். பின்னர் அவர் அந்த இரண்டு
பாறைகளையும் மாட்டு வண்டியில் ஏற்றுவதற்கு உறுதுணையாக இந்த
மனிதர்கட்கு நன்றி சொல்லிவிட்டு, தன்னுடைய வீட்டிற்குத்
திரும்பி வந்தார்.
அன்று இரவு அவர் தன்னுடைய மாட்டுவண்டியில் ஏற்றிக்கொண்டு வந்த
இரண்டு பாறைகளையும் தன்னுடைய சிற்பக்கூடத்திற்குள் இறக்கி
வைத்து, அவற்றைச் செதுக்கத் தொடங்கினார். இதில் முதலாவது பறை,
சிற்பி தன்னுடைய உளியைக்கொண்டு செதுக்கத் தொடங்கியதும், "ஐயோ!
எனக்கு வலிக்கின்றது... என்னை ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று
கத்தத் தொடங்கியது. இதனால் சிற்பி அந்தப் பாறையைச் செதுக்குவதை
விட்டுவிட்டு, இரண்டாவது பாறையைச் செதுக்கத் தொடங்கினார்.
இரண்டாவது பாறை முதல் பாறையைப் போன்று இல்லாமல், சிற்பியின்
கையில் தன்னையே ஒப்படைத்தது. சிற்பி அதனைச் செதுக்கியபோது
அதற்குக் கடுமையாக வலித்தது. ஆனாலும், தான் படும் வலிகள்
நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு, அமைதியாக இருந்தது.
ஒரு மாதம் கழித்து, இரண்டாவது பாறையிலிருந்து ஓர் அழகிய
சிற்பம் பிறந்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு சிற்பி மிகவும்
மகிழ்ச்சியடைந்தார். 'நான் உருவாக்கியிருக்கும் இந்தச் சிற்பம்
மற்றெல்லாச் சிற்பங்களை விடவும் மிகவும் அழகாக இருக்கின்றது.
அதனால் இதை ஊருக்கு நடுவில் மக்கள் பார்வைக்கு வைத்தால்,
அவ்வழியாக வருவோர் போவோர் இந்தச் சிற்பத்தைப் பார்த்து
இரசித்துவிட்டுச் செல்வார்கள்' என்று யோசித்தார்.
அதனடிப்படையில் அவர் அந்தச் சிற்பத்தைக் கொண்டுபோய் ஊரின்
நடுவில் வைத்தார். அப்பொழுது அவருடைய மனதில், 'இந்தச்
சிற்பத்தை கொஞ்சம் உயரத்தில் வைத்தால், அது பார்ப்பதற்கு
இன்னும் நன்றாக இருக்குமே' என்ற இன்னொரு யோசனையும் பிறந்தது.
உடனே அவர் பதினைந்து அடி உயரத்தில் ஒரு மேடை அமைத்து, அதன்மேல்
தான் செதுக்கிய சிற்பத்தை வைத்தார். மேலும் மக்கள் மேலே சென்று
பார்ப்பதற்கு வசதியாக தன்னிடம் இருந்த இன்னொரு பாறையைத் துண்டு
துண்டுகளாக வெட்டி, அவற்றைப் படிக்கட்டுகளாகப் பதித்தார்.
இப்பொழுது ஊரின் நடுவில் வைக்கப்பட்டிருந்த சிற்பத்தைப்
பார்பதற்காகப் பலரும் மேலே ஏறிச் சென்று வந்தனர்.
அப்பொழுதுதான் படிக்கட்டுகளாய் மாறிப்போன அந்த முதல் பாறை,
"சிற்பி என்னைச் செதுக்கத் தொடங்கியதுபோன்று அவருடைய கையில்
என்னை ஒப்படைத்து, வலிகளைப் பொறுத்திருந்தால், இன்றைக்கு
நானும் அந்தச் சிற்பம்போல் மக்களால் உயர்வாக
மதிக்கப்பட்டிருப்பனே...! இப்பொழுது மக்களால் இப்படி
மிதிபட்டுச் சாகின்றேனே...!" என்று மிகவும் வருத்தப்பட்டது.
ஆனால், உயரே இருந்த சிற்பமோ, 'அப்பொழுது வலிகளைத் தாங்கிக்
கொண்டதால்தான் இப்பொழுது உயர்ந்த இடத்தில் இருக்கின்றேன்'
என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
எவர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் வரும் துன்பங்களையும்
வலிகளையும் தாங்கிக்கொள்கின்றாரோ, அவர் உயர்ந்த இடத்திற்குச்
செல்வார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமக்கு
கவனத்திற்கு உரியது. நற்செய்தியில் இயேசு தான் பெறவிருந்த
இன்னொரு திருமுழுக்கைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு
பெறவிருந்த அந்த இன்னொரு திருமுழுக்கு என்ன? அதை அவர்
பெறவேண்டியதன் அவசியம் என்ன? என்பவற்றைக் குறித்து
சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு பெற்ற இரத்தத் திருமுழுக்கு
நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், "நான் பெறவேண்டிய ஒரு
திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன
நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றேன்" என்றார்.
இயேசு பெறவிருந்த இன்னொரு திருமுழுக்கு வேறொன்றும் இல்லை; அது
கல்வாரியில் அவர் படவிருந்த, பட்ட சிலுவைச்சாவுதான். இயேசு
அச்சிலுவைச்சாவை அடைவதற்கு முன்னம் கெத்சமனியில் மிகுந்த
மனவேதனை அடைந்தார். இருந்தாலும் இறைவனின் திருவுளம்
நிறைவேறவேண்டும் என்பதற்காக சிலுவைச் சாவை அல்லது இரத்தினால்
ஆன திருமுழுக்கை ஏற்றுக்கொண்டார். இயேசு யோர்தான் ஆற்றில்
திருமுழுக்கு யோவானிடமிருந்து பெற்ற தண்ணீரால் ஆன திருமுழுக்கு
அவர் தன்னுடைய பணியைச் தொடங்கிவிட்டார் என்பதன் அடையாளமாக
இருந்தது என்றால், அவர் கல்வாரி மலையில் பெற்ற இரத்ததினால் ஆன
திருமுழுக்கு, அவர், தந்தைக் கடவுள் தனக்குக் கொடுத்த பணியைச்
செய்துவிட்டார் என்பதன் அடியாளமாக இருக்கின்றது.
இயேசு கல்வாரி மலையில் பெற்ற இரத்ததினால் ஆன திருமுழுக்கினை
நாமும் பெறுவதற்கு முன்வரவேண்டும். ஏனென்றால், இயேசுவின்
சீடர்கள் அவரைப் போன்று இருக்கவேண்டும், அவர் வழியில்
நடக்கவேண்டும். அப்பொழுதான் இயேசு கொண்டுவர நினைத்த உண்மையான
அமைதி சாத்தியப்படும்.
சிந்தனை
'பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு
நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை' (எபி 12: 4) என்று
எபிரேயர்களைப் பார்த்துக் கூறுவார் அந்நூலின் ஆசிரியர். எனவே,
நாம் இயேசுவைப் போன்று பாவத்திற்கு எதிரான போராட்டத்தில்
இரத்தம் சிந்தும் அளவுக்குத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
லூக்கா 12: 49-53
தூய ஆவி என்னும் தீயை மூட்டவே வந்தேன்
ஒருமுறை மாவீரன் நெப்போலியன் அடர்ந்த காடு வழியாக தன்னுடைய
குதிரையில் மின்னல் வேகத்தில் பறந்துகொண்டிருந்தான். மறுகணமே
உலகத்தின் மறுபக்கம் சென்றுவிடும் அளவுக்கு குதிரையின் வேகம்
இருந்தது.
அப்போது திடிரென்று தூரத்தில் ஒர் அகன்ற பாதாளம் அவனுடைய கண்ணுக்குத்
தென்பட்டது. அவன் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து நின்றான்.
போகிற வேகத்தில் குதிரையை அப்படியே விட்டுவிட்டாலோ அல்லது அதனை
நிறுத்தினாலோகூட பாதாளத்தில் பாய்வது உறுதி. எனவே இந்நேரத்தில்
என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
உடனே அவனது உள்ளத்தில் ஒரு நெருப்பு கனன்று எரிந்தது. இந்த
பாதாளத்தை என்னால் எளிதாகக் கடக்க முடியும் என்ற உத்வேகம் அவனுக்குள்
பிறந்தது. ஆதலால் குதிரையை இன்னும் வேகமாக ஓட்டினான். தனக்கு
முன்னால் இருக்கும் பாதாளத்தைப் பார்க்காமல், அதன் மறு கரையையே
பார்த்து ஓட்டினான்.
குதிரை போன வேகத்தில் பாதாளத்தின் பாதிதூரம் வரைக் கடந்தது.
நெப்போலியன் அந்த குதிரையில் இருந்துகொண்டே, ஒரு தாவு தாவி,
பாதாளத்தின் மீதி தூரத்தைக் கடந்து உயிர் தப்பினான்.
இந்த பாதாளத்தை என்னால் கடக்க முடியும் என்று அவனது உள்ளத்தில்
கனன்று எறிந்த நெருப்புதான் தீதான் - அவன் அந்த அகன்ற பாதாளத்தைக்
கடக்க உதவி புரிந்தது. நமது உள்ளத்திலும் தூய ஆவி என்னும்
நெருப்பு தீ கனன்று எரிந்தால் எப்படிப்பட்ட காரியத்தையும்
செய்துவிட முடியும் என்பதையே இந்நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு "மண்ணுலகில் தீயை
மூட்டவே வந்தேன்" எனப் போதிக்கின்றார். உலகிற்கு அமைதியைக்
கொண்டுவந்தேன், அன்பைக் கொண்டுவந்தேன் எனச் சொன்ன இயேசு, "தீயை
மூட்டவே வந்தேன்" எனச் சொல்வது நமக்கு வித்தியாசமாக இருக்கின்றது.
இருந்தாலும் தீ என்பதை நாம் ஆண்டவர் இயேசு தரும் தூய ஆவியாக
புரிந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
திப 2:3 ல் இவ்வாறு வாசிக்கின்றோம், "பெந்தகொஸ்தே நாளில்
நெருப்பு போன்ற நாவுகள் அவர்கள்மீது இறங்கிவர, அவர்கள் தூய ஆவியைப்
பெற்றுக்கொண்டு இறைவாக்கு உரைத்தார்கள்" என்று. எனவே தீ என்பதை
தூய ஆவியாகப் புரிந்துகொண்டு தூய ஆவியின் பண்புகள் ஒருசிலவற்றை
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தூய ஆவியின் பண்புகளில் முதலாவதாக உயிர்தருதல்: எசேக்கியேல்
புத்தகம் 37:14 ல் வாசிக்கின்றோம் "என் ஆவியை உங்கள் மீது
பொழிவேன். நீங்கள் உயிர்பெறுவீர்கள்" என்று. ஆம், தூய ஆவி உலர்ந்துபோய்
கிடந்த எலும்புகளுக்கு உயிர்தந்தது. தொடக்கத்தில் மண்ணுலகம்
வெறுமையாக இருந்தபோதுகூட அதற்கு வடிவம் தந்தது. இவ்வாறாக தூய
ஆவியானவர் உயிர்தருபவராக இருக்கின்றார்.
இரண்டாவதாக தூய ஆவி வல்லமை தருவதாக இருக்கின்றது. திப 1:8 ல்
வாசிக்கின்றோம், "தூய ஆவி உங்கள் மீது வரும்போது நீங்கள் கடவுளின்
வல்லமையைப் பெற்றுக்கொண்டு யூதேயா, சமாரியா முதல் உலகின் கடையெல்லை
வரை எனக்கு சான்று பகர்வீர்கள்" என்று. ஆம், தூயஆவி நம் ஓவ்வொருவருக்கும்
வல்லமையைத் தருகின்றது. திருத்தூதர்கள், இறையடியார்கள் இவர்கள்
யாவரும் பல்வேறு அற்புதங்களை, அதிசயங்களைச் செய்வதற்கு இந்த
தூய ஆவிதான் வல்லமையையும், அருளையும் தந்தது. நமக்கும் தந்துகொண்டிருக்கிறது
என்பது ஆழமான உண்மை.
மூன்றாவதாக தூய ஆவியானவர் நமக்கு ஒற்றுமையைத் தருகின்றார். எபே
4:3 ல் வாசிக்கக் கேட்கின்றோம், "தூய ஆவிதரும் ஒற்றுமையைக்
காத்துக்கொள்ளுங்கள்" என்று. தூய ஆவி நமக்கு ஒற்றுமைத் தருகின்றார்.
தொடக்க திருச்சபையில் யூதர்களாக, புறவினத்தாராக பிளவுபட்டுக்
கிடந்த மக்களையெல்லாம் தூய ஆவியானவர்தான் பெந்தகோஸ்தே நாளில்
ஒரே தாயின் பிள்ளைகளாக ஒன்று சேர்க்கின்றார். பல்வேறு இனக்குழுக்களாக
பிரிந்துகிடக்கும் நம்மையும் கூட இயேசுவில் ஒரே குடும்பமாக இணைப்பது
இந்த தூய ஆவிதான்.
ஆதலால் இயேசு மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன் என்று சொல்வது உயிரை,
வல்லமையை, ஒற்றுமையைத் தரும் இந்த தூய ஆவியைக் குறித்துத்
தான். நாம் திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட தூயஆவியின் தூண்டுதலுக்கு
ஏற்ப வாழுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|