Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     23 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 29ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18

சகோதரர் சகோதரிகளே, உடலின் இச்சைகளுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்யும் பாவம் சாவுக்குரிய உங்கள் உடலின்மீது ஆட்சி செலுத்த விடாதீர்கள். நீங்களோ உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள்; மாறாக, இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்; கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் உங்கள் உறுப்புகளை அவரிடமே ஒப்படையுங்கள்.

பாவம் உங்கள்மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள். அதனால் என்ன? சட்டத்துக்கு உட்பட்டவர்களாய் இல்லாமல், அருளின் ஆட்சிக்கு உட்பட்டு இருப்பதால் நாம் பாவம் செய்யலாமா? ஒருபோதும் கூடாது.

எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள். முன்பு பாவத்திற்கு அடிமைகளாய் இருந்த நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் அடங்கிய ஒழுக்க நெறியை உளமாரக் கடைப்பிடிக்கிறீர்கள். பாவத்தினின்று விடுதலை பெற்ற நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை நெறிக்கு அடிமைகளாய் இருக்கிறீர்கள். அதற்காகக் கடவுளுக்கு நன்றி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 124: 1-3. 4-6. 7-8 (பல்லவி: 8a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்; 5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 24: 42a,44

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.''

அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார்.

அதற்கு ஆண்டவர் கூறியது: "தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.

ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான்.

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முதல் வாசகம்

இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 12-18

உங்களை/உங்கள் உறுப்புகளை ஆண்டவரிடம் ஒப்படையுங்கள்.

நிகழ்வு

டாட் ஹென்றி (Todd Hendry) என்ற எழுத்தாளர் எழுதிய மிகச்சிறந்த நூல் Die Empty. இந்த நூலை எழுதுவதற்கு அவர்க்கு உந்துசக்தியாக இருந்த நிகழ்ச்சியாகக் குறிப்பிடும் நிகழ்வு இது:

ஒரு சமயம் டாட் ஹென்றி ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பேச வந்திருந்த பேச்சாளர், கூட்டத்திற்கு வநதிருந்த எல்லாரையும் பார்த்து, "இந்த உலகத்திலேயே மிகவும் விலைமதிக்கப்பெறாத இடம் எது?" என்று கேட்டார். உடனே கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, "எண்ணெய் வயல்கள் நிறைய இருக்கும் வளைகுடா நாடுகள்" என்றார்.

"இது சரியான பதிலில்லை" என்று சொன்ன பேச்சாளர், மீண்டுமாக அதே கேள்வியை கூட்டத்திலிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். அப்பொழுது இன்னொருவர் எழுந்து, "வைரம் அதிகமாக இருக்கும் ஆப்பிரிக்காக் கண்டம்" என்றார். "இதுவும் சரியான பதிலில்லை" என்று சொல்லிவிட்டு, கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார். "இந்த உலகில் இருக்கக்கூடிய மிகவும் விலைமதிக்கப்பெறாத இடம், கல்லறைத் தோட்டம்... ஏனென்றால், அங்குதான் கடவுள் கொடுத்த வாழ்வையும் திறமைகளையும் சரியாகப் பயன்படுத்தாத ஏராளமான மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் மட்டும் கடவுள் தங்கட்குக் கொடுத்த வாழ்வை, திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் இந்த உலகமே விண்ணகமாக மாறியிருக்கும்."

இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுவிட்டு, டாட் ஹென்றி தொடர்ந்து சொல்வார்: "மனிதர்கள் இந்த உலகத்திலிருந்து எல்லாவற்றையும் எடுத்துவிட்டுப் போய்விடவேண்டும் என்று நினைக்கின்றார்கள். அது தவறான எண்ணம். அவர்கள் தங்களிடம் இருக்கின்ற திறமைகளை, தங்களுடைய வாழ்வை இந்த உலகிற்குச் சரியான முறையில் கொடுத்துவிட்டு, வெறுமையாய் இறக்கவேண்டும். அதுதான் சரியான செயல்."

ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை, நம் உடலை, நம் திறமைகளை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்க்கு ஏற்றாற்போல் வாழ்ந்தால் இந்த வாழ்க்கை எத்துணை அருமையாக இருக்கும்! இத்தகைய உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நம் உறுப்புகளை ஆண்டவரிடம் ஒப்படைக்க புனித பவுல் விடுக்கும் அழைப்பு

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், உங்கள் உறுப்புகளைத் தீவினையின் கருவிகளாய்ப் பாவத்திற்கு ஒப்புவிக்காதீர்கள். மாறாக கடவுளுக்கு ஏற்புடையதைச் செய்வதற்குரிய கருவிகளாய் ஆண்டவரிடம் ஒப்படையுங்கள் என்று கூறுகின்றார். புனித பவுல் இவ்வாறு கூறுவதற்கான காரணங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

நம் உடல் தூய ஆவியார் தங்கள் கோயில்

புனித பவுல் நம்முடைய உடல் உறுப்புகளை ஆண்டவரிடம் ஒப்படைக்கச் சொல்வதற்கு முதன்மையான காரணம், நம்முடைய உடல் தூய ஆவியார் தங்கும் கோயில் (1கொரி 6: 19-20) என்பதாகும். நம்முடைய உடல் தூய ஆவியார் தங்கும் கோயிலாக இருக்கின்றபோது, அதை தீய ஆவி அல்லது பாவத்திடம் ஒப்படைத்தால் அது எந்த விதத்தில் சரியாகும்? சரியாகாதல்லவா! அதனால்தான் புனித பவுல் நம்முடைய உடல் உறுப்புகளை ஆண்டவரிடம் ஒப்படைக்கச் சொல்கின்றார். இன்றைக்குப் பலர் இந்த உண்மையை உணராமல் தங்களுடைய உடலைப் பாவத்திற்குக் கையளித்து, சீரழிவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். இத்தகையோர் தங்களுடைய உடல் தூய ஆவியார் தங்கியிருக்கும் கோயில் என்ற உண்மையை உணர்வது எப்போது...?

நம் உடலால் ஆண்டவர்க்குப் பெருமை சேர்க்கவேண்டும்

நம்முடைய உடல் உறுப்புகளை ஆண்டவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்குப் பவுல் சொல்லும் இரண்டாவது காரணம், நம்முடைய உடல் உறுப்புகளால் ஆண்டவர்க்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதாகும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எத்தனையோ இறைவாக்கினர்கள் தங்களுடைய நாவில் ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்து அவர்க்குப் பெருமை சேர்த்தார்கள். ஏன், பவுல்கூட தன்னுடைய கால்களால் பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடந்து சென்று, ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தார். இப்படிப் பலர் தங்களுடைய உடலால், உடல் உறுப்புகளால் ஆண்டவர்க்குப் பெருமை சேர்த்தார்கள். நாமும்கூட நம்முடைய உடல் உறுப்புகளால் ஆண்டவர்க்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதற்காகவே, அவற்றை ஆண்டவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றார் பவுல். நாம் நம்முடைய உடல் உறுப்புகளை ஆண்டவரிடம் ஒப்படைக்கத் தயாரா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

'கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு' (உரோ 12: 1) என்பார் புனித பவுல். ஆகையால், நம்மை, நம்முடைய உடல் உறுப்புகளை ஆண்டவர்க்கு உகந்த பலியாக ஒப்புக்கொடுத்து, அவர்க்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 12: 39-48

நீங்கள் நம்பிக்கைக்குரிய பணியாளரா?

நிகழ்வு

ஒருநாள் மாவீரன் நெப்போலியனைச் சந்திக்க அதிகாரிகள் சிலர் வந்திருந்தனர். அப்படி வந்தபோது கூடவே ஒரு படைவீரனையும் தங்களோடு கூட்டிக்கொண்டு வந்தார்கள்.

"அரசே! நீங்கள் இந்தப் படைவீரனுக்குப் பதவி உயர்வு தரவேண்டும்" என்றார்கள் அவர்கள். "இவனுக்குப் பதவி உயர்வு கொடுக்கும் அளவுக்கு அப்படியென்ன நல்லது செய்துவிட்டான்?" என்று நெப்போலியன் அவர்களைத் திருப்பிக் கேட்டபோது அவர்கள், "இவன் அண்மையில் நடைபெற்ற போரில் சிறப்பாக போரிட்டு, நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்தான். அதனால் இவனுக்குப் பதவி உயர்வு தரவேண்டும் என்று கேட்கின்றோம்" என்றார்கள்.

உடனே நெப்போலியன் அவர்களிடம், "போரில் சிறப்பாகச் செயல்பட்டது சரி; அதற்குப் பின்னால் வந்த நாள்களில் இவன் தனக்குப் பணிக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தானா...?" என்று கேட்டான். அதிகாரிகள் யோசிக்கத் தொடங்கினார்கள். பின்னர் அவர்கள் நெப்போலியனிடம், "எதிரி நாட்டவரோடு போரிட்டபோது இருந்த உற்சாகமும் பிரமாணிக்கமும் அதற்குப்பின் வந்த நாள்களில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவன் தனக்குப் பணிக்கப்பட்ட பணிகளில் அதன்பிறகு நம்பிக்கைக்குரியவனாய் இல்லை" என்றார்கள்.

"என்றோ ஒருநாள் நம்பிக்கைகுரியவனாய் இருந்தான் என்பதற்காக இவனுக்குப் பதவி உயர்வு கொடுக்க முடியாது; இறுதிவரைக்கும் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் பதவி உயர்வு கொடுக்கப்படும்" என்றான் மாவீரன் நெப்போலியன்.

ஆம், நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நாம் இறுதிவரைக்கும் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதான் நமக்கு இறைவனிடமிருந்து ஆசி கிடைக்கும். இன்றைய நற்செய்தி வாசகம், நம்மை நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ அழைப்புத் தருகின்றது நாம் எப்படி நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக இருப்பது என்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே!

நற்செய்தியில் இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரிய பணியாளர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இவ்வுவமை நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தி, நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! அல்லது நாம் ஒவ்வொருவர்க்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதாகும். அந்தப் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்ட பணிகளாக இருக்கலாம் அல்லது நாம் வகிக்கக்கூடிய தந்தை தாய், கணவன் மனைவி, சகோதரன் சகோதரி என்ற பொறுப்பாக இருக்கலாம். அந்தப் பொறுப்பு அல்லது பணி கடவுள் நமக்காகவே கொடுத்திருக்கும் சிறப்பான பொறுப்பு என்று உணர்ந்து வாழவேண்டும்.

பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தால் ஆசி

இயேசு சொல்லும் இவ்வுவமை நமக்கு எடுத்துச் சொல்லும் இரண்டாவது செய்தி, நாம் ஒவ்வொருவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கவேண்டும் என்பதாகும்.

இயேசுவின் இரண்டாம் வருகை தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த உவமையானது, யாரெல்லாம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருக்கின்றார்களோ அவர்கட்கு ஆசி கிடைக்கும் என்று கூறுகின்றது. இங்கு ஆசி என்று சொல்வதை மேலான பொறுப்பு என்றுகூடச் சொல்லலாம். தலைவராம் இயேசு யாரும் நினையாத நேரத்தில் வருவார். ஆகவே, அவர் வருகையில் நாம் அனைவரும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கும் பட்சத்தில், அவர் நம்மை உயர்ந்த பொறுப்பில் அமர்த்துவார் என்பது உறுதி. இது குறித்து புனித பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறும்போது, "பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படலாம் அன்றோ" (1 கொரி என்று குறிப்பிடுவார். ஆகையால், நாம் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க முயற்சி செய்வோம்.

பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருந்தால் தண்டனை

யாரெல்லாம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்கின்றார்களோ, அவர்கள் தங்களுடைய பதவிகளில் உயர்வடைவார்கள் என்று சொன்ன இயேசு, நிறைவாக, யாரெல்லாம் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருக்கின்றார்களோ, அவர்கட்கு தண்டனை கிடைக்கும் என்று கூறுகின்றார்.

இயேசு சொல்லும் இந்த உவமையில் ஒரு முக்கியமான செய்தியும் அடங்கி இருக்கின்றது. அது என்னவென்றால், பொறுப்பில் இருப்பவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வறியவர்களை நல்லமுறையில் கவனித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால், அவர்களுடைய குரல் ஆண்டவரை மிக விரைவாக எட்டும், அதுவே பொறுப்பில் இருப்பவர்கட்கு வினையாய் அமைந்துவிடும். காயின் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆபேலை நல்லமுறையில் கவனித்திருக்க வேண்டும்; ஆனால், அவனே ஆபேலைக் கொன்றுபோட்டதால், அது அவனுக்கு வினையாய் அமைகின்றது. நற்செய்தியில் இயேசு சொல்லும் இவ்வுவமையில், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாமல் இருப்பவர்களை தலைவர் கொடுமையாகத் தண்டிப்பார் என்று கூறுகின்றார்.

ஆகையால், நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் பொறுப்பற்றவர்களாய் இருப்பதை விடுத்து, பொறுப்புள்ளவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன்' (மத் 25: 23) என்கின்றது இறைவார்த்தை. நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில், அது சிறிதாக இருந்தாலும், அதில் நம்பிக்கைக்குரியவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!