|
|
22 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
29ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஒருவரின் குற்றம் அனைவருக்கும் தண்டனைத் தீர்ப்பானதுபோல, ஒருவருடைய
ஏற்புடைய செயல் விடுதலைத் தீர்ப்பானது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
5: 12, 15b, 17-19. 20b-21
சகோதரர் சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில்
நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே,
எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.
எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர்.
ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின்
வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி
செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும்
கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள்
வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய்
நம்பலாம் அன்றோ?
ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய்
அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும்
வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின்
கீழ்ப் படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால்
பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. இவ்வாறு,
சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது; அந்த அருள்தான்
மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற
வழிவகுக்கிறது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 40: 6-7a, 7b-8. 9. 16 (பல்லவி: 8a,7a)
Mp3
=================================================================================
பல்லவி: என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரி பலியையும்
பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள்
திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.' பல்லவி
7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8
என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;
உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான்.
பல்லவி
9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில்
அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே!
நீர் இதை அறிவீர். பல்லவி
16 உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்!
நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், `ஆண்டவர் எத்துணைப்
பெரியவர்!' என்று எப்போதும் சொல்லட்டும்! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 21: 36
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்காக
எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள்
பேறுபெற்றவர்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-38
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "உங்கள்
இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.
திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது
உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு
ஒப்பாய் இருங்கள்.
தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள்
பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப்
பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல்
வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால்
அவர்கள் பேறு பெற்றவர்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
முதல் வாசகம்
ஒருவரின் குற்றம் அனைவருக்கும் தண்டனைத்
தீர்ப்பானதுபோல, ஒருவருடைய ஏற்புடைய செயல் விடுதலைத் தீர்ப்பானது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
5: 12, 15b, 17-19. 20b-21
ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு
ஏற்புடையவர்கள் ஆனார்கள்.
நிகழ்வு
இயேசுவைக் குறித்து இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனில்
வருகின்ற ஒரு நிகழ்வு.
ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே! மனிதர்களில் யார் தலைசிறந்தவர்...?"
என்று கேட்டார். உடனே இயேசு கீழே குனிந்து, தன்னுடைய இரண்டு கைகளிலும்
மண்ணை அள்ளி, "இதில் எந்தக் கையில் உள்ள மண் சிறந்தது...?"என்றார்.
அவரோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அப்பொழுது இயேசு
அவரிடம், "மனிதர் மண்ணிலிருந்தே படைக்கப்பட்டார். ஆனால், எவர்
ஒருவர் ஆண்டவர்க்கு அஞ்சி, அவர்க்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ,
அவரே தலைசிறந்தவர்"என்றார். (A Source Book of Inspiration
J. Maurus).
ஆம், எவர் ஒருவர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ,
அவரே தலைசிறந்தவர். இன்றைய முதல் வாசகம், கடவுளுக்குக் கீழ்ப்படிந்த
நடந்த ஒருவரையும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத ஒருவரையும்
குறித்து பேசுகின்றது. நாம் அவர்கள் இருவரையும் குறித்து இப்பொழுது
சிந்தித்துப் பார்த்து, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதால்
ஒருவர் பெறுகின்ற ஆசி என்ன என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத ஆதாம்
முதல் வாசகத்தில் புனித பவுல், "ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம்
இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது"
என்று குறிப்பிடுகின்றார். புனித பவுல் குறிப்பிடுகின்ற அந்த
மனிதர் வேறு யாருமல்ல, ஆதாம்தான். ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடம்,
விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணக் கூடாது என்று சொன்னார்
(தொநூ 2: 16-17) அவரோ சாத்தானால் ஏமாற்றப்பட்ட தன்னுடைய மனைவி
கொடுத்த விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டார். இதனால் அவர் கடவுளின்
கட்டளையை மீறி, அவர்க்கு எதிராகப் பாவம் செய்தார். இதன்மூலம்
சாவு வந்தது. பாவத்திற்குக் கிடைக்கும் கூலி சாவுதானே! (உரோ 6:
23). ஆம், ஆதாம் என்னும் ஒரு மனிதர் ஆண்டவரின் கட்டளையை மீறிப்
பாவம் செய்தார். இதனால் சாவு வந்தது.
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த இயேசு கிறிஸ்து
புனித பவுல், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காத ஒருவரைக்
குறிப்பிட்டுவிட்டு அதற்கு மாற்றாக, அதாவது கடவுளுக்குக்
கீழ்ப்படிந்து நடந்த ஒருவரைக் குறித்துப் பேசுகின்றார். அவர்தான்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுளுக்குக்
கீழ்ப்படிந்து, அவருடைய திருவுளத்தை நிறைவேற்றி வந்தார். இன்னும்
சொல்லப்போனால், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையே அல்லது
அவருடைய திருவுளத்தை நிறைவேற்றுவதையே தன்னுடைய உணவாகக் கருதி
வாழ்ந்தார் (யோவா 4: 34). இவை எல்லாவற்றிற்கும் உச்சக்கட்டமாக,
தான் தந்தைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறேன் என்பதற்குச்
சான்று பகரும் வகையில், இயேசு சிலுவையில் தன்னுடைய இன்னுயிரையே
தந்தார். இதன்மூலம் அவர் பலரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகும்படி
செய்தார்.
கீழ்ப்படிந்து நடப்பதால் கிடைக்கும் ஆசி
ஆதாமின் கீழ்ப்படியாமை சாவை இவ்வுலகில் வரவழைத்தது; ஆண்டவர் இயேசுவின்
கீழ்ப்படிதல் பலரையும் கடவுளுக்கு ஏற்புடையதாக்கியது என்று
சிந்தித்துப் பார்த்த நாம், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றோமா...?
அவருடைய கட்டளைகளின் படி நடக்கின்றோமா...? என்று சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
சபை உரையாளர் நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம்,
"இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகின்றேன்; கடவுளுக்கு
அஞ்சி நட; அவருடைய கட்டளைகட்குக் கீழ்ப்படி; இதற்காக மனிதர் படைக்கப்பட்டிருக்கின்றனர்."
(சஉ 12: 13). எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை!
மனிதர்கள் யாவரும் படைக்கப்பட்டிருப்பது வேறு எதற்கும் அல்ல,
ஆண்டவர்க்கு அஞ்சி, அவர்க்குக் கீழ்ப்படிந்து நடக்கவே. இந்த உண்மையை
உணராமல்தான் பலரும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காமல், தங்களுடைய
விருப்பம் போல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்;
பாவம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் பாவத்தின்
கூலி சாவு என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
சிந்தனை
'ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதிருப்பாரானால் கடவுளும்
அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்' (நீமொ 28: 9) என்கிறது
நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வழியில் நடப்போம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 12: 35-38
"உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்.
நிகழ்வு
முன்பொரு காலத்தில் இங்கிலாந்து நாட்டில் ஏதெல்ரெட் என்றோர்
அரசன் இருந்தான். அவன் 'எதிரி நாட்டுப்படை தன் நாட்டின்மீது படையெடுத்து
வருமே! அதற்காகத் தன் நாட்டுப் படையைத் தயார்படுத்த வேண்டுமே'
என்ற எண்ணம் கடுகளவுகூட இல்லாமல் மிகவும் மெத்தனமாக இருந்தான்.
இதனால் அவன் எதற்கும் தயாரில்லாதவன் என்பதைக் குறிக்கும் வகையில்
'Ethelret the Unready' என்று அழைக்கப்படலானான்.
இதற்கிடையில் அவனைக் கூர்ந்து கவனித்து வந்த தானேஷ் என்ற அரசன்,
இங்கிலாந்து நாட்டின்மீது படையெடுத்து வந்து, அந்நாட்டின் பல
இடங்களைக் கைப்பற்றி, அவனையும் கைதுசெய்து இழுத்துக்
கொண்டுபோய்ச் சிறையில் அடைத்தான்.
வாழ்க்கையில் எதற்கும் தயாரில்லாமல், ஏனோதானோ என்று இருப்பவர்கட்கு
கடைசியில் இப்படியொரு நிலைமைதான் ஏற்படும் என்ற செய்தியை எடுத்துச்
சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி
வாசகம் மானிடமகனுடைய இரண்டாவது வருகைக்கு ஒவ்வொருவரும் எப்படித்
தயாராக இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச்சொல்வதாக இருக்கின்றது.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆயத்தமாக இருக்கவேண்டும்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மானிடமகனுடைய இரண்டாம் வருகையைக்
குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபோது அதற்காக ஒவ்வொருவரும்
தயாராக இருக்கவேண்டும் என்று பேசுகின்றார். நற்செய்தியில் இயேசு
கூறுகின்ற 'உங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள்',
'விளக்குகள் எரிந்து கொண்டிருக்கவேண்டும்' என்ற வார்த்தைகள்,
நாம் ஒவ்வொருவரும் மானிடமகனுடைய வருகைக்குத் தயாராக இருக்கவேண்டியதன்
அவசியத்தை எடுத்துச்சொல்வதாக இருக்கின்றன.
பொதுவாக யூதர்களுடைய திருமண விழாக்கள் இரவுநேரத்தில்தான் நடக்கும்.
ஏனென்றால், மணமகன் வருவதற்கு வெகுநேரம் ஆகலாம். அதன்பின்னர்தான்
திருமண விருந்தானது நடைபெறும். எனவே, திருமண விருந்து முடிவதற்கு
எப்படியும் நள்ளிரவுகூட ஆகலாம். அதன்பின்னர்தான் திருமண
விருந்துக்குச் சென்றவர்கள் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பிவர
முடியும். போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தக்காலத்தில்
திருமண விருந்துக்குச் செல்லக்கூடிய தலைவர் தன்னுடைய
வீட்டிற்குத் திரும்பிவர எப்படியும் இரண்டாம் அல்லது மூன்றாம்
சாமவேளை கூட ஆகலாம். அந்த நேரத்திலும் விழிந்திருந்து, தலைவரை
வரவேற்கும் பணியாளர்தான் பேறுபெற்றவர் என்று
குறிப்பிடுகின்றார் இயேசு.
இந்த உண்மையை நாம் இயேசுவின் இரண்டாம் வருகையோடு ஒப்பிட்டால்
இன்னும் தெளிவாக உண்மை விளங்கும். மானிடமகன் எந்த நேரத்திலும்
வரலாம். அவர் வருகின்றபோதுபோது நாம் தயாராக இருந்தால் பேறுபெற்றவர்கள்
ஆவோம் என்பது உறுதி.
ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக பதற்றமோ பயமோ கொள்ளத்
தேவையில்லை
மானிடமகனுடைய வருகைக்காகத் தயாராக இருக்கவேண்டும் என்று
சிந்தித்துப் பார்த்த நாம், இதையொட்டி இன்னோர் உண்மையையும்
நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், மானிடமகனுடைய வருகைக்காக
நாம் பதற்றமோ பயமோ கொள்ளத் தேவையில்லை என்பதாகும். இதையே வேறு
வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், 'அன்றன்றைய பணிகளை அன்றன்றே
செய்தல்' என்று நிகழ்காலத்தில் வாழ்ந்தோமெனில், திடீரென மானிடமகன்
வருகின்றபோது அவரை நினைத்து நாம் கலங்கத் தேவையில்லை.
ஆயத்தமாக இருப்போர்க்கு ஆண்டவர் தரும் வெகுமதி
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லும் மிக முக்கியமான செய்தி,
தலைவர் வரும்போது எந்தப் பணியாளர் விழித்திருக்கின்றாரோ அல்லது
தயாராக இருக்கின்றாரோ அவர்க்கு தலைவரே வந்து பணிவிடை செய்வார்
என்பதாகும்.
வழக்கமாக பணியாளர்கள்தான் தலைவர்கட்குப் பணிவிடை செய்யவேண்டியிருக்கும்.
ஆனால், மானிடமகனைக் குறித்து இயேசு சொல்லும் இந்த உவமையில், தலைவரே
விழிப்பாய் இருக்கும் பணியாளர்க்குப் பணிவிடை செய்வார் என்று
கூறுகின்றார். இதன்மூலம் இயேசு கூறிய, "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு
அல்ல, தொண்டு ஆற்றுவதற்கு வந்தார்"(மத் 20: 28) என்ற சொற்கள்
நிறைவேறுகின்றன. இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியதை இங்கு
நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இயேசுவே நமக்குப் பணிவிடை செய்வது என்பது எத்துணை பெரிய பேறு.
அந்தப் பேற்றினை நாம் பெற்றுக்கொள்வதற்கு, நாம் அவருடைய வருகைக்காக,
அவருக்கு உகந்தவற்றைச் செய்து தயாராக இருக்கவேண்டும். இயேசு
சொல்லும் ஊதாரி மைந்தன் உவமையில் வரும் தந்தை, தன் இளைய மகன்
எப்போது வருவான் என்று அவனை வரவேற்கக் காத்துக் கொண்டிருப்பார்
(லூக் 15: 11-32). அவரைப் போன்று நாம் ஆண்டவர் இயேசுவை வரவேற்கத்
தயாராகவும் காத்துக்கொண்டும் இருக்கவேண்டும். அப்படி நாம் இருந்தோம்
எனில், பேறுபெற்றவர்கள் ஆவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்து
இல்லை.
சிந்தனை
'இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு
உரிமையாளர்க்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து தம்
வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள்' (மத் 24: 43)
என்பார் இயேசு. ஆகையால், நாம் எந்த நேரத்திலும் வரக்கூடிய மானிடமகனுடைய
வருகைக்காகத் தயாராக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|