|
|
21 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
29ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள்
எனக் கருதப்படுவோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
4: 20-25
சகோதரர் சகோதரிகளே, கடவுளின் வாக்குறுதியைப் பற்றி ஆபிரகாம்
ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்றார்; கடவுளைப்
பெருமைப்படுத்தினார். தாம் வாக்களித்ததைக் கடவுள் செய்ய வல்லவர்
என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார்.
ஆகவே "அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.""நீதியாகக்
கருதினார்"என்று எழுதியுள்ளது அவரை மட்டும் குறிக்கவில்லை;
நம்மையும் குறிக்கின்றது; இறந்த நம் ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச்
செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் அவ்வாறே கடவுளுக்கு
ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்.
நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்;
நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்
செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- லூக் 1: 69-70. 71-73. 74-75 (பல்லவி: 68)
=================================================================================
பல்லவி: தம் மக்களைத் தேடி வந்த இஸ்ரயேலின் ஆண்டவரைப்
போற்றுவோம்.
69-70 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர்
ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார். பல்லவி
71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின்
பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். 72-73 அவர் நம் மூதாதையருக்கு
இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய
ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு
கூர்ந்தார். பல்லவி
74-75 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர்
திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
மத் 5: 3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21
அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே,
சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச்
சொல்லும்"என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு
நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?"என்று
கேட்டார்.
பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு
எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால்
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது"என்றார்.
அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: "செல்வனாயிருந்த ஒருவனுடைய
நிலம் நன்றாய் விளைந்தது. அவன், `நான் என்ன செய்வேன்? என்
விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான்.
`ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக்
கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து
வைப்பேன்'. பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு
வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு
குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு எனச் சொல்வேன்"என்று தனக்குள்
கூறிக்கொண்டான்.
ஆனால் கடவுள் அவனிடம், `அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப்
பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'
என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த்
தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உரோமையர் 4: 20-25
தாம் வாக்களித்ததை கடவுள் செய்ய வல்லவர் என்பதை உறுதியாய் நம்பிய
ஆபிரகாம்
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் ஹாரி ஐயன்சைடு (Harry Ironside)
என்றொரு மறைப்பணியாளர் இருந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய நண்பர்
பங்குத்தந்தையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த பணித்தளத்திற்குச்
சென்றார்.
அவர் அங்கு சென்றநேரம் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பானது நடைபெற்றுக்
கொண்டிருந்தது. சாதாரண உடையில் இருந்த அவர், ஞாயிறு மறைக்கல்வி
வகுப்பில் என்ன பாடம் நடத்துகிறார்கள் என்று பார்ப்பதற்காகச்
சென்றார். அப்பொழுது மறைக்கல்வி ஆசிரியை மாணவர்களிடம், "பழைய
ஏற்பாட்டைச் சார்ந்தவர்கள் எப்படி கடவுளுக்கு ஏற்புடையவர்கள்
ஆனார்கள்?" என்று கேட்டார். உடனே ஒரு மாணவன் எழுந்து,
"மோசேயின் சட்டத்தால்" என்றான். அதற்கு அந்த மறைக்கல்வி ஆசிரியை,
"சரியான பதில்" என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஹாரி ஐயன்சைடுக்குத்
தூக்கி வாரிப்போட்டது. உடனே அவர் அந்த மறைக்கல்வி ஆசிரியையை இடைமறித்து,
"மோசேயின் சட்டத்தைக் கடைப்பிடித்ததால் ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர்
ஆனார் என்று பழைய ஏற்பாட்டில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லையே!"
என்றார்.
இதற்குப் பின்பு அந்த மறைக்கல்வி ஆசிரியை முன்பு கேட்ட அதே
கேள்வியை மீண்டுமாக மாணவர்களிடம் கேட்டார். அப்பொழுது ஒரு மாணவன்
எழுந்து, "அவர்கள் செலுத்திய பலியினால் கடவுளுக்கு ஏற்புடையவர்கள்
ஆனார்கள்" என்றார். "சரியான பதில்" என்று மறைக்கல்வி ஆசிரியை
அந்த மாணவரைப் பாராட்டினார். அப்பொழுதும் ஹாரி ஐயன்சைடு அவரை
இடைமறித்து, "வெள்ளாட்டுக் கிடாய்களின் இரத்தம் பாவங்களைப்
போக்காது என்று பழைய ஏற்பாட்டில் வருகின்றதே... அப்படியிருக்கையில்,
பலியினால் எப்படி ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும்?"
என்றார்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த மறைக்கல்வி ஆசிரியை, 'தன்னிடம்
பேசிக்கொண்டிருப்பவர் சாதாரண மனிதர் அல்ல... திரு விவிலியத்தை
நன்றாக அறிந்தவர்'என்று நினைத்துக்கொண்டு, "மோசேயின் சட்டத்தைக்
கடைப்பிடித்ததாலும் பலிசெலுத்தியதாலும் அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவராகவில்லை
என்றால், அவர்கள் என்ன செய்து கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள்?
என்று கேட்டார். அப்பொழுது ஹாரி ஐயன்சைடு மிகவும் தீர்க்கமாகச்
சொன்னார்: "பழைய ஏற்பாட்டுக் காலத்தைச் சார்ந்தவர்கள் கடவுள்மீது
கொண்ட நம்பிக்கையினால் அவர்க்கு ஏற்புடையவர்களானார்களே அன்றி,
வேறு எதனாலும் இல்லை."
ஆம், பழைய ஏற்பாட்டுக் காலத்தைச் சார்ந்தவர்கள் கடவுள்மீது
கொண்ட நம்பிக்கையினால்தான் அவர்க்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள்.
இவர்களில் தலைசிறந்தவராக இருப்பவர் ஆபிரகாம் என்றால் அது
மிகையில்லை. இன்றைய முதல் வாசகம் ஆபிரகாம் ஆண்டவர்மீது
கொண்டிருந்த நம்பிக்கை எத்தகையது, அந்த நம்பிக்கையினால் அவர்
பெற்ற பேறு எத்தகையது என்பவவற்றை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது.
நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுள் தனக்குக் கொடுத்த வாக்குறுதியில் கடுகளவுகூட ஐயம்
கொள்ளாத ஆபிரகாம்
இன்றைய முதல் வாசகத்தில், பவுல் ஆபிரகாமின் நம்பிக்கையைக்
குறித்துப் பேசுகின்றபோது, அவர் கடவுளின் வாக்குறுதியைப் பற்றி
ஐயப்படவே இல்லை; நம்பிக்கையில் அவர் மேலும் வலுப்பெற்று, கடவுளைப்
பெருமைப்படுத்தினார் என்று கூறுகின்றார்.
ஆம், ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம், உன் வழிமரபை கடற்கரை மணல்
போலவும் வானத்து விண்மீன்கள் போலவும் பெருகச் செய்வேன் என்று
சொன்னபோது, ஆபிரகாமிற்கு தொண்ணூற்று ஒன்பது வயது; சாராவுக்கோ
எண்பத்து ஒன்பது வயது. 'இந்த வயதில் நமக்குக் குழந்தை பிறக்குமா...?'
என்று ஆபிரகாம் எண்ணிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, 'கடவுள்
வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்; அதை நிச்சயம்
நிறைவேற்றுவார்'என்று நம்பிக்கையோடு இருந்தார். அதன்மூலம் அவர்
கடவுளைப் பெருமைப்படுத்தினார்.
நம்பிக்கையினால் மட்டுமே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியும்
இன்றைய முதல் வாசகத்தின் முற்பகுதியில் ஆபிரகாமின் நம்பிக்கையைக்
குறித்துப் பேசிய பவுல், இரண்டாவது பகுதியில், "இறந்த நம் ஆண்டவர்
இயேசுவை உயிர்த்தெழச் செய்தவர்மீது நம்பிக்கை கொண்டிருக்கும்
நாமும் அவ்வாறே கடவுளுக்கு ஏற்புடையவர்கள் எனக் கருதப்படுவோம்"
என்று கூறுகின்றார். அப்படியானால் நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்தால் மட்டுமே அவர்க்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியும் என்பது
உறுதியாகின்றது. ஆதலால், நாம் ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை
வைத்து, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்து, அவர்க்கு ஏற்புடையவர்களாக
வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
'நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவர்க்கும் மீட்பு உண்டு'(உரோ 1:
16) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் நற்செய்தியாம் நம் ஆண்டவர்
இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 12: 13-21
பொருளாசையே எல்லாத் தீமைகட்கும் ஆணிவேர்
நிகழ்வு
ஒரு சிற்றூரில் இருந்த ஒரு பெரியவரும் அவருடைய பேரனும் ஒருநாள்
மாலைவேளையில் காலார நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். இடையிடையே
பேரன் பெரியவரிடம் (தாத்தாவிடம்) பல கேள்விகளைக் கேட்டான். எல்லாக்
கேள்விகட்கும் அவர் மிகப் பொறுமையாகப் பதிலளித்து வந்தார்.
இடையில் ஒரு மைதானம் வந்தது. அந்த மைதானத்தில் பேரனுடைய வயதை
சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்துவிட்டு அவன், "தாத்தா! இந்த உலகத்தில் பிறந்த எல்லாரும்
மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்குத்தானே பிறந்தார்கள். பிறகு
எதற்கு ஒருசிலரைத் தவிர பலரும் கவலையோடு இருக்கின்றார்கள்?" என்று
கேட்டான்.
பெரியவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைத் தன்
பேரனிடம் சுட்டிக்காட்டி அவனிடம், "தம்பி! இவர்கள் இப்பொழுது
மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் அல்லவா!
இன்னும் கொஞ்ச நேரத்தில் இவர்களிடம் இருக்கும் மகிழ்ச்சி எப்படிப்
பறிபோகின்றது என்று பார்!" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய சட்டைப்
பையில் வைத்திருந்த சில்லறைக் காசுகளை எடுத்து, அவர்கள் முன்னம்
வீசினார். அவற்றைப் பார்த்ததும் அதுவரைக்கும் மிகவும் மகிழ்ச்சியாக
விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தங்கட்கு முன்னம் விழுந்த
சில்லறைக் காசுகளைப் எடுக்கவேண்டும் என்ற முனைப்பில் ஒருவரை ஒருவர்
பிடித்து இழுத்துக்கொண்டும் தள்ளிவிட்டுக் கொண்டும் சில்லறைக்
காசுகளை எடுத்தார்கள். இதனால் கொஞ்ச நேரத்தில் அந்த இடம்
போர்க்களமானது.
இதற்குப் பின்பு பெரியவர் தன்னுடைய பேரனிடம் பேசத் தொடங்கினார்;
"தம்பி! இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த
இவர்கள். இப்பொழுது மிகவும் வருத்தத்தோடும் உம்மென்றும் இருக்கின்றார்களே!
இதற்குக் காரணம் என்னவென்று சொல்?" "இவர்கட்கிடையே ஏற்பட்ட சண்டைதான்
இவர்கள் இப்படி வருத்தத்தோடு இருப்பதற்குக் காரணம்" என்றான் பேரன்.
"அதுசரி, இவர்களிடம் சண்டை வருவதற்குக் காரணம் என்ன? அதைச்
சொல்" என்றார் பெரியவர். "அதிகமான சில்லறைக் காசுகளை எடுக்கவேண்டும்
என்ற பேராசைதான் இவர்கள் இப்படி மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்குக்
காரணம்" என்றான் பேரன். "மிகச் சரியாகச் சொன்னாய். மகிழ்ச்சியாக
இருக்கப் பிறந்த மனிதர்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கக் காரணம்,
அவர்களிடம் இருக்கும் பேராசைதான்" என்று முடித்தார் பெரியவர்.
ஆம், இவ்வுலகில் மனிதரிடம் இருக்கும் மகிழ்ச்சியை எடுத்துக்கொள்ளும்
ஒரு திருடன் இருக்கின்றான் என்றால், அவனுக்குப் பெயர்தான்
பேராசை. பேராசையோடு வாழ்பவர்கள் எப்படி மகிழ்ச்சியை இழக்கின்றார்கள்
என்பதை மேலே உள்ள நிகழ்வு மிக அருமையாக எடுத்துக் கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகமும் பேராசையோடு இருக்கும் மனிதன் எப்படி
அழிந்துபோகின்றான் என்பதைக் குறித்துப் பேசுகின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு என்ன பாகம் பிரிப்பவரா?
நற்செய்தியில் இயேசு மக்கள் கூட்டத்திடம்
பேசிக்கொண்டிருக்கையில், கூட்டத்திலிருந்து ஒருவர் அவரிடம்,
"போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரர்க்குச்
சொல்லும்" என்கின்றார். இவ்வாறு கேட்ட அந்த மனிதரிடம் இயேசு
பேசியதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அந்த
மனிதர் ஏன் இயேசுவிடம் இதைச் சொல்லவேண்டும் என்று குறித்துச்
சிந்தித்துப் பார்ப்போம்.
வழக்கமாக யூத இரபிகள் குடும்பங்களில் ஏற்படும் பல்வேறு விதமான
சிக்கல்களைத் தீர்த்து வைப்பது வழக்கம். இயேசு, மக்களால் ஓர்
இறைவாக்கினரைப் போன்று, போதகரைப் போன்று கருதப்பட்டதால், அந்த
மனிதர் இயேசுவிடம் இப்படியொரு சிக்கலைச் சொல்கின்றார். இயேசு
அந்த மனிதரிடம் உடனடியாகச் சொல்லும் வார்த்தைகள், என்னை உங்கட்கு
நடுவராகவோ பாகம் பிரிப்பவரகவோ அமர்த்தியவர் யார்?" என்பதாகும்.
இயேசு அவரிடம் அவ்வாறு சொல்லக் காரணம், அவர் பேராசையோடு இருந்தார்
என்பதால்தான். பேராசையோடு இருப்பவரிடம் என்ன பேசினாலும் பயனில்லை
என்பதால்தான் இயேசு அவரிடம் அவ்வாறு சொல்கின்றார்.
எல்லாத் தீமைகட்கும் ஆணிவேரானா பொருளாசை
இயேசு பேராசையோடு இருந்த மனிதர்க்குப் பதிலளித்துவிட்டு,
"எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்"
என்கின்றார். அதற்கு அவர் ஓர் உவமையையும் சொல்கின்றார்.
பேராசைக்கு இடங்கொடாதவாறு இருக்கவேண்டும் என்று இயேசு சொல்லக்
காரணம், அதுதான் எல்லா வகையான தீமைகட்கும் ஆணிவேர் என்பதால் ஆகும்.
இதைப் புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில்
மிக அழகாகச் சொல்கின்றார். (1 திமொ 6: 10).
இன்றைக்குப் பலர் பணம், பொருள் சேகரிக்கவேண்டும் என்ற
முனைப்பில் கடவுளை மறந்து, குடும்பத்தை மறந்து, மாடாய் உழைக்கின்றார்கள்.
ஆனால், அவர்கள் எதற்காக உழைத்தார்களோ அது கிடைத்தபிறகு அதை அனுபவிக்க
முடியாத வேடிக்கை மனிதர்களாய் மாறிப்போய்விடுகின்றார்கள்.
ஆகையால், நாம் உலகச் செல்வத்தின் நிலையாமை உணர்ந்து, நிலையான
செல்வமாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது.
சிந்தனை
'நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே
எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி
இருக்கவேண்டும்'(1 திமொ 6: 17) என்பார் புனித பவுல். ஆகையால்,
நாம் நிலையற்ற செல்வத்தில் அல்ல, நிலையான செல்வத்தில் நம்பிக்கை
வைத்து, இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|