Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     19 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 28ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18

சகோதரர் சகோதரிகளே, உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை; நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது. ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் "எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது.

ஆம், இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். "உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்'' என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும், அவர் எதிர்நோக்கினார்; தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 105: 6,7. 8-9. 42-43 (பல்லவி: 8a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார். அல்லது: அல்லேலூயா.

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி

42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். 43 அவர்தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்; அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 26b,27a

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.

ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

லூக்கா 12: 8-12

வாய்ப்பை தூய ஆவியாரை நழுவவிடாதே

நிகழ்வு

அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய பேச்சாளர் வில்லியம் ஜென்னிங்க்ஸ் ப்ரயன் (William Jennings Bryan 1860 1925). ஒரு சமயம் இவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டார். அழைப்பினை ஏற்றுக்கொண்டு பேசுவதற்குச் சென்ற ப்ரயன் அருமையானதொரு சொற்பொழிவினை வழங்கினார். மக்கள் அவருடைய சொற்பொழிவைக் கேட்டு, வியந்து அவரைப் பாராட்டினார்கள்.

கூட்டம் முடிந்ததும் அவரைச் சந்திக்க வந்த ஒரு பெரியவர் அவரிடம், "ப்ரயன்! உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அற்புதமாக இருந்தது... தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதுபோல் இருந்தது" என்றார். உடனே ப்ரயன் அவரிடம், "நான் எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டேன். அதனால்தான் என்னால் இப்படியொரு சொற்பொழிவை ஆற்ற முடிந்தது" என்றார்.

"நீங்கள் சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை. சற்றுப் புரியும்படி சொல்லுங்களேன்" என்று அந்தப் பெரியவர் அவரை வேண்டி நிற்க, ப்ரயன் அந்தப் பெரியவர் புரிந்துகொள்ளும்படி சொல்லத் தொடங்கினார்: "இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவர்க்கும் பல வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. எனக்கு நான் ஒரு பேச்சாளராக மாறுவதற்கான பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அந்த வாய்ப்புகளை எல்லாம் நான் உதறித் தள்ளாமல், சரியான முறையில் பயன்படுத்தினேன். அதனால்தான் நான் ஒரு பேச்சாளராக உங்கள் முன்னம் நிற்கின்றேன்" என்றார்.

நாம் ஒவ்வொருவர்க்கும் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் உயர்ந்த இலட்சியங்களை அடையலாம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நமக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை எப்படிச் சரியாகப் பயன்படுத்தவேண்டுமோ, அதுபோன்றுதான் நாம் தந்தை, மகன், தூய ஆவியாரைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த மூவோர் இறைவனை அதிலும் குறிப்பாகத் தூய ஆவியாரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாதபோது, அல்லது அவரைப் பழித்துரைக்கின்றபோது எத்தகைய தண்டனையை நாம் பெறுவோம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தைக் கடவுளைப் புறக்கணித்த மக்கள்

நற்செய்தியில் இயேசு, "மானிட மகனுக்கு எதிராய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்" என்கின்றார். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இஸ்ரயேல் மக்களை நல்வழிப்படுத்துவதற்கு தந்தைக் கடவுள் பல்வேறு இறைவாக்கினர்களை அவர்கள் நடுவில் அனுப்பினார்; இறுதியில், அவர்கள் நடுவில் திருமுழுக்கு யோவானை அனுப்பினார். அவர்களோ அவரைக் கொலைசெய்தார்கள். மெசியாவின் முன்னோடியாக, அவர்க்காக மக்களைத் தயார்செய்த திருமுழுக்கு யோவானை யூதர்கள் கொன்றுபோட்டது மிகப்பெரிய குற்றம்; அது அவரை அனுப்பிய தந்தைக் கடவுளுக்கு எதிராக குற்றம். ஆனால், இயேசு அவர்கட்காக தந்தையிடம் "தந்தையே! இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கின்றார்கள். இவர்களை மன்னியும்" (லூக் 23: 34, திப 3:17) என்று சொல்லி, மன்றாடியதால் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இயேசுவைப் புறக்கணித்த மக்கள்

தந்தையைப் புறக்கணித்த மக்கள் அவர் மகன் இயேசுவை ஏற்றுக்கொண்டார்களா? என்றால் என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் அவரை இழிவுபடுத்தினார்கள்; அவமதித்தார்கள்; கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டார்கள். ஆனாலும் அந்த மக்கட்கு வாழ்வுதர இறுதி வாய்ப்பான தூய ஆவியார் அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவரை அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்களா? சிந்தித்துப் பார்ப்போம்.

தூய ஆவியாரைப் புறக்கணித்து தங்கள்மீது தண்டனையை வருவித்து கொண்ட மக்கள்

யூதர்கள் தந்தைக் கடவுளைப் புறக்கணித்தார்கள். பின்னர் இயேசு கிறிஸ்துவைப் புறக்கணித்தார்கள். அப்படியிருந்தும் அவர்கள் நடுவில் உண்மையை வெளிப்படுத்தும் ஆண்டவர் இயேசுவைப் பற்றிச் சான்றுபகரும் தூய ஆவியார் அனுப்பப்பட்டார். அவரை அவரை ஏற்றுக்கொண்டார்களா? இல்லைவே இல்லை. தூய ஸ்தேவன் தன்னைக் கல்லால் எறிந்து கொல்ல முயன்றவர்களிடம் சொல்வதுபோன்று, அவர்கள் தூய ஆவியாரையும் எதிர்த்தார்கள் (திப 7: 51). இவ்வாறு அவர்கள் வாழ்வு பெறுவதற்கான கடைசி வாய்ப்பான தூய ஆவியாரையும் இழந்தார்கள் அல்லது அவரைப் பழித்துரைத்துப் பாவம் செய்து மன்னிக்க முடியாத தண்டனையை தங்கள்மேல் வருவித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களிடம் இருந்து நற்செய்தி எடுக்கப்பட்டு, சமாரியர்களிடமும் (திப 8) பின்னர் புறவினத்து மக்களிடமும் கொண்டு செல்லப்பட்டது (திப 10).

சுருங்கச் சொல்லவேண்டும் என்றால், மக்கள் தந்தைக் கடவுளைப் புறக்கணித்தபோது மகன் அவர்கட்காக இறைவனிடம் பரிந்து பேசினார். மகனை மக்கள் புறக்கணித்தபோது தூய ஆவியார் அங்கு துணைக்கு வந்தார். தூய ஆவியாரையும் மக்கள் புறக்கணித்தால் அவர்கட்கு உதவ யாரும் வரமாட்டார் என்பதால்தான் இயேசு, தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் அல்லது புறக்கணிப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார் என்கின்றார் இயேசு. நாம் மூவொரு கடவுளை நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் காட்டும் வழியில் நடக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும் (யோவா 3: 36) என்பார் யோவான் நற்செய்தியாளர். ஆகையால், நாம் மூவொரு கடவுளான தந்தையிடமும் மகனிடமும் தூய ஆவியாரிடமும் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உரோமையர் 4: 13, 16-19

ஆபிரகாம் நம் அனைவர்க்கும் தந்தை

நிகழ்வு

சீனாவில் பால் மோய் (Paul Moy) என்றொரு கிறிஸ்தவச் சிறுவன் இருந்தான். அவனுக்கு இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை அவன் தனக்குள் வைத்துக்கொள்ளாமல், மற்றவர்கட்கும் துணிச்சலுடன் அறிவித்தான்.

சீனாவில் கிறிஸ்தவ சமயத்திற்கு எதிராக அடக்குமுறைகள் அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்திலும், பால் மோய் என்ற இந்தச் சிறுவன் இயேசுவைப் பற்றி துணிவோடு மக்கட்கு எடுத்துரைப்பதைப் பார்த்த சீன அதிகாரி ஒருவர், அவனை நீதிபதியின் முன்பாக நிறுத்தி, தக்க தண்டனை வாங்கித் தருவதாக இழுத்துச் சென்றார்.

நீதிபதி, பால் மோயைப் பார்த்துவிட்டு, அவன் சிறுவனாக இருக்கின்றான்... அவனுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் என நினைத்துக்கொண்டு, "உன்னுடைய நல்லதுக்குச் சொல்கின்றேன். இயேசுவை மறுதலி. உன்னை விட்டுவிடுகிறேன்" என்றார். அவனோ, "அதெல்லாம் முடியவே முடியாது" என்று தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தான். தொடர்ந்து அவர் அவரிடம், "உனக்கு நிறையப் பொற்காசுகள் தருகிறேன். இயேசுவை மறுதலித்துவிட்டு" என்றார். அதற்கும் அவன் முடியாது என்று சொல்லிவிட்டான். "இயேசுவை மறுதலித்துவிடு. உனக்கு வெள்ளிக்காசுகள் என்ன, பொற்காசுகளே தருகிறேன்" என்றார். அப்பொழுதும் அவன் முடியாது என்று சொன்னான்.

இதனால் பொறுமையிழந்த அந்த நீதிபதி பால் மோயிடம், "உனக்கு என்ன தந்தால் நீ இயேசுவை மறுதலிப்பாய்?" என்றார். அதற்கு அவன், "எனக்கு இன்னோர் ஆன்மாவைத் தாருங்கள் நான் இயேசுவை மறுதலிக்கின்றேன்" என்றான். "இன்னோர் ஆன்மாவா அதை நான் எப்படித் தரமுடியும்...?" என்று நீதிபதி ஆச்சரியமாகக் கேட்க, பால் மோய் மிகவும் பொறுமையாகச் சொன்னான்: "இன்னோர் ஆன்மாவை உங்களால் தரமுடியாதல்லவா... அப்படியானால் என்னாலும் என் இயேசுவை மறுதலிக்க முடியாது. ஏனென்றால், நான் இயேசுவிடம் கொண்டிருக்கும் நம்பிக்கை உறுதியானது" என்றான். இதைக் கேட்டு அந்த நீதிபதி அப்படியே மிரண்டுபோனார்.

இதற்குப் பின்பு நீதிபதி, பால் மோயிடம் என்ன சொல்லியிலும் இயேசுவை மறுதலிக்க வைக்க முடியாது என்பதை உணர்ந்து அவனுக்குத் தண்டனையை வழங்கினார்.

பால் மோய், சிறுவனாக இருந்தாலும் இயேசுவின்மீது கொண்டிருந்த நம்பிக்கை மிகவும் பெரியது. அந்த நம்பிக்கைதான் அவனை இன்றும் நாம் நினைவுகூர்வதற்குக் காரணமாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகம் ஆபிரகாம் ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் அந்த நம்பிக்கையினால் அவர் பெற்ற பேற்றினையும் எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும் அவர், எதிர்நோக்கினார்

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாமைக் குறித்துப் பேசுகின்றபோது, ஆபிரகாம் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தனால் அல்ல, ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையினால், அவர்க்கு ஏற்புடையவர் ஆனார் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். ஆபிரகாம் ஆண்டவரிடம் எத்தகைய நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில் மிக அழகாக எடுத்துக் கூறுகின்றார்.

ஆண்டவராகிய கடவுள், ஆபிரகாமிடம் உன் வழிமரபை வானத்து விண்மீன்கள் போலவும் கடற்கரை மணலைப் போல் பெருகச் செய்வேன் என்று சொன்னபோது, ஆபிரகாமும் அவருடைய மனைவியும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனாலும், ஆபிரகாம் ஆண்டவர் சொன்னதை நம்பினார். பின்னர் அவர் நம்பியது போன்றே நடந்தது.

நம்பிக்கையினால் எல்லார்க்கும் தந்தையான ஆபிரகாம்

புனித பவுல், ஆபிரகாம் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையினால் அவர்க்கு ஏற்புடையவர் ஆனார் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, இன்னொரு செய்தியையும் சொல்கின்றார். அதுதான் அவர் தன்னுடைய நம்பிக்கையினால் எல்லார்க்கும் தந்தையானார் என்பதாகும். ஆபிரகாம் திருச்சட்டக் கடைப்பிடித்து அதன்மூலம் ஆண்டவர்க்கு ஏற்புடையவராக மாறியிருந்தால், அவர் யூதர்கட்கு மட்டுமே தந்தையாக மாறியிருப்பார். ஆனால், அவர் நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்படையவர் ஆனார். இதனால் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும் எல்லார்க்கும் அது யூதராக இருந்தாலும் புறவினத்தாராக இருந்தாலும் அவர் தந்தையாகின்றார்.

நாம் ஆபிரகாமைப் போன்று ஆண்டவரிம் நம்பிக்கை கொண்டு, அவர் வழியில் நடந்தோமெனில், ஆபிரகாம் நமக்கும் தந்தையாவார் என்பது உறுதி.

சிந்தனை

நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியாது (எபி 11: 6) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு அவர்க்கு ஏற்புடையவராகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
நற்செய்தி (லூக் 12:8-12)

ஏற்றுக்கொள்பவர்

ஒரு சில மாணவர்கள் என்னிடம் வந்து சொல்வதுண்டு, 'ஃபாதர் என்னை யாருமே இங்கே ஏற்றுக்கொள்வதில்லை. நான் பேசும்போது யாரும் கேட்பதில்லை. நான் இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.'

சில இடங்களில் நாம் சில மனிதர்களால் கண்டுகொள்ளப்படாதபோது நமக்கு வருத்தமாக இருக்கிறது. நம்மை அறியாமலேயே நாம் மற்றவர்களின் அங்கீகாரத்தைத் தேடுகிறோம். நாமே பலரைப் பல நேரங்களில் பல இடங்களில் கண்டுகொள்ளாமலும் இருக்கிறோம்.

விருந்திற்கு நம்மை ஒரு வீட்டிற்கு அழைத்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். விருந்திற்குச் செல்லும் வீட்டின் கதவு பூட்டியிருந்தால், அல்லது நாம் சென்றபோது அங்கிருப்பவர்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தால் நாம் நிராகரிக்கப்பட்டதாக அங்கே உணர்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு அவரை மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பற்றிப் பேசுகின்றார்: 'மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் ஏற்றுக்கொள்வார்.' இயேசுவின் சமகாலத்திலும் இயேசுவுக்குப் பின்னும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். அவரை ஏற்றுக்கொண்டால் சமூக, அரசியல், பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்தனர். இந்தப் பின்புலத்தில்தான் லூக்கா தன்னுடைய குழுமத்திற்கு எழுதும்போது, இயேசுவை ஏற்றுக்கொள்தலை வலியுறுத்துகின்றார்.

தொடர்ந்து, 'எல்லாப் பாவமும் மன்னிக்கப்படும். ஆனால், தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறார்' என்கிறார் இயேசு.

தூய ஆவியாரைப் பழித்துரைத்தல் என்றால் அவருடைய தூண்டுதல்களைப் புறக்கணித்தல்.

எடுத்துக்காட்டாக, நான் கோபப்படும் போது, என்னுள் கேட்கின்ற ஆவியின் குரல், 'கோபப்பட வேண்டாம்' என்று சொல்கிறது. நான் அந்தத் தூண்டுதலை உதறித் தள்ளிவிட்டால், அப்படியே அடுத்தடுத்து செய்தால் அந்த ஆவியின் குரலை நான் அமுக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன். என் மனம் கடினப்பட்டுப் போய்விடும். இந்தப் பாவம்தான் மன்னிக்கப்பெறாது.

ஆக, எனக்கு வெளியே இருக்கும் இயேசுவையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு உள்ளே கேட்கும் ஆவியின் தூண்டுதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எப்படி?

அ. திறந்த கண்கள் கொண்டிருத்தல்

ஆ.திறந்த மனம் கொண்டிருத்தல்

இ. மனத்தால் மற்றவரைப் பார்த்தல் - மூளையால் அல்ல

Rev. Fr. Yesu Karunanidhi
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!