|
|
18 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
28ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆபிரகாம் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்; அதைக் கடவுள்
அவருக்கு நீதியாகக் கருதினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்
4: 1-8
சகோதரர் சகோதரிகளே, இதுகாறும் கூறியவை நம் இனத்தின் தந்தையாகிய
ஆபிரகாமுக்கு எப்படிப் பொருந்தும்? தாம் செய்த செயல்களினால்
அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகியிருந்தால், பெருமை பாராட்ட அவருக்கு
இடமுண்டு; ஆனால் கடவுள் முன்னிலையில் அவர் அப்படிப் பெருமை
பாராட்ட இடமே இல்லை.
ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? "ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை
கொண்டார்; அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்." வேலை
செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவது இல்லை; அது
அவர்கள் உரிமை. தம் செயல்கள் மீது நம்பிக்கை வையாது, இறைப்பற்று
இல்லாதோரையும் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுள்மீது நம்பிக்கை
வைப்போரை, அவரது நம்பிக்கையின் பொருட்டுக் கடவுள் தமக்கு ஏற்புடையோர்
எனக் கருதுகிறார்.
அவ்வாறே, கடவுள் ஒருவருடைய செயல்களைக் கணிக்காமலே, அவரைத் தமக்கு
ஏற்புடையவர் எனக் கருதுவதால் அம்மனிதர் பேறுபெற்றவர் என்று
தாவீது கூறியிருக்கிறார்: "எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,
எவரது பாவம் மறைக்கப் பட்டதோ அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த
மனிதரின் தீச்செயலைக் கருத்தில் கொள்ளவில்லையோ அவர் பேறுபெற்றவர்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா
32: 1-2. 5. 11 (பல்லவி: 7 காண்க) Mp3
=================================================================================
பல்லவி: என் புகலிடமான ஆண்டவரே, உம் மீட்பின் ஆரவாரம் ஒலிக்கின்றது.
1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப் பட்டதோ,
அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ,
எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி
5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான்
மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக் கொள்வேன்' என்று
சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
பல்லவி
11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே,
நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
திபா 33: 22
அல்லேலூயா, அல்லேலூயா! உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது
பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் தலைமுடி எல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கின்றன.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
12: 1-7
அக்காலத்தில் ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான
மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத்
தொடங்கினார்.
அவர் அவர்களிடம் கூறியது: "பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு
மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். வெளிப்படாதவாறு
மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியப்படாதவாறு மறைந்திருப்பதும்
ஒன்றும் இல்லை.
ஆகவே நீங்கள் இருளில் பேசியவை ஒளியில் கேட்கும். நீங்கள் உள்ளறைகளில்
காதோடு காதாய்ப் பேசியவை வீடுகளின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கப்படும்.
என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்: உடலைக் கொல்வதையன்றி
வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக்
காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரம் உள்ளவருக்கே
அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச்
சொல்கிறேன். இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா?
எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே. உங்கள் தலைமுடி
எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்;
சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
உரோமையர் 4: 1-8
பேறுபெற்றவர் யார்?
நிகழ்வு
முன்பொரு காலத்தில் சிற்றரசன் ஒருவன் இருந்தான். அவன் அவ்வப்பொழுது
மான் வேட்டைச் செல்வது வழக்கம். ஒருமுறை அவன் மான் வேட்டைச்
சென்றபொழுது, வழி தவறிவிட்டான். அவனுக்குள் பயம் தொற்றிக்கொண்டது.
'இந்தக் காட்டில் நரமாமிசம் சாப்பிடும் மனிதர்கள் இருக்கிறார்கள்
என்று கேள்விப்பட்டேனோ...! அவர்களிடம் நான்
மாட்டிக்கொண்டால்...! என்னுடைய நிலைமை என்னாவது...?' என்று பயந்து
பயந்து ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்தான்.
இவ்வாறு அவன் சென்றுகொண்டிருக்கும்போது ஒருசிலர் அக்காட்டு
வழியாக எதிரில் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களைப்
பார்த்ததும் ஆசுவாசமடைந்தவனாய், அவர்களிடம் சென்று, "இந்தக்
காட்டை விட்டு எப்படி வெளியேறுவது?" என்று கேட்டான். அவன் சொன்னது
அவர்கட்குப் புரியவில்லை; அவன் அவர்களிடம் சைகைகள் காட்டி விளக்கியபோதும்,
அவர்கட்கு ஒன்றும் புரியவில்லை. அவர்களோ அவனை வித்தியாசமாகப்
பார்த்தார்கள். இதனால் அவன், 'இவர்களிடம் வழிகேட்டுப் பயனொன்றும்
இல்லை... வேறு யாரிடமாவது கேட்போம்...!' என்று
நினைத்துக்கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்றான்.
பொழுது இருட்டிக்கொண்டே சென்றது. இதனால் அவனுக்குள் மேலும் பயம்
வந்தது. தொடர்ந்து அவன் சென்றுகொண்டிருந்தபொழுது, யாரோ ஒருவர்
புல்லாங்குழல் வாசிப்பது போன்று இருந்தது. உடனே அவன், 'யார் இது...?
எங்கிருந்து இந்த ஓசை வருகின்றது...?' என்று கூர்ந்து கவனித்தான்.
சிறிதுநேரத்தில் அவனுக்குச் சத்தம் எங்கிருந்து வருகின்றது என்பது
தெரிந்தது. ஆதலால் அவன், சத்தம் வந்த திசையை நோக்கிச்
சென்றான். அங்கு ஓர் இளைஞன் மெய்ம்மறந்து புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தான். அரசன் அவனருகே சென்று, "இந்தக்
காட்டை விட்டு வெளியே போவதற்கு உனக்கு வழி தெரியுமா?" என்று
கேட்டான். "ஓ தெரியுமா! வாருங்கள் நான் உங்களைக்
கூட்டிக்கொண்டு போகிறேன்" என்று சொல்லிவிட்டு, அவன் அரசனை
காட்டைவிட்டு, வெளியே கூட்டிக்கொண்டு வந்தான்.
இதனால் மிகவும் மகிழ்ந்து போன அரசன் அவனிடம், "தக்க சமயத்தில்
நீ செய்த உதவி மிகப்பெரியது. இதை எந்நாளும் நான் மறக்கமாட்டேன்.
நீ செய்த இந்த உதவிக்கு கைம்மாறாக. உன்னை என்னுடைய அரண்மனையில்
விருந்தினராக வைத்து உபசரிக்கலாம் என்று நினைக்கின்றேன். என்னுடைய
அரண்மனைக்கு வருகிறாயா...?" என்றான். அந்த இளைஞனும் அதற்குச்
சம்மதம் தெரிவிக்க, இருவரும் அரண்மனைக்குச் சென்றனர். அரண்மனையில்
அவனுக்குத் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இதனால் அவன் அங்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தான்.
இப்படியிருக்கையில் ஒருநாள் அரண்மனையில் யாரும் செய்யக்கூடாத
ஒரு செயலை அந்த இளைஞன் செய்துவிட்டான். இதனால் அரசனுக்குக் கடும்சினம்
வந்தது. உடனே அவன் அரசபையைக் கூட்டி அந்த இளைஞனுக்கு என்ன தண்டனை
கொடுக்கலாம் என்று விவாதித்தான். அவையில் இருந்தவர்கள் அவனுக்குத்
தூக்குத் தண்டனை கொடுப்பதே சரியானது என்று சொல்ல, "மறுநாள் அந்த
இளைஞனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்" என்று அரசன் உத்தரவு
பிறப்பித்தான்.
மறுநாள் பிறந்தது. அரசன் அந்த இளைஞனுக்கு தூக்குத் தண்டனை
நிறைவேற்றப்படுவதைப் பார்க்க வந்தான். இளைஞனோ அரண்மனையில்
கொடுக்கப்பட்ட உடையை அணிந்திருக்காமல், முன்பு அணிந்திருந்த உடையை
அணிந்துகொண்டு, கையில் புல்லாங்குழலை வைத்துக்கொண்டு, வாசிக்கத்
தொடங்கினான். இது அரசனுக்கு முன்பு நடந்ததை நினைவூட்டின. உடனே
அவன் அந்த இளைஞனுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத்தண்டனையை
இரத்து செய்துவிட்டு, அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டான். இதன்பிறகு
அந்த இளைஞனுக்கு முன்புபோல் அரண்மனையில் சிறப்பான கவனிப்பு
கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன், முன்பொரு நாள் செய்த நன்மையின்
பொருட்டு மன்னித்து ஏற்றுக்கொள்ளப்பட்டான்; பேறுபெற்றவன் ஆனான்.
நாமும் நம்முடைய குற்றங்களை உணர்ந்து திருந்தி, இறைவனோடு ஒன்றிணைவதால்
மன்னிப்பைப் பெறுகின்றோம்; பேறுபெற்றவர்கள் ஆகின்றோம். இத்தகைய
செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து
இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
எவருடைய குற்றம் மன்னிக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்
முதல் வாசகத்தில் புனித பவுல், ஆபிரகாமைக் குறித்துப் பேசுகின்றபோது,
திருப்பாடலில் இடம்பெறுகின்ற மேற்சொன்ன வார்த்தைகளை மேற்கோள்
காட்டிப் பேசுகின்றார். திருப்பாடல் 32: 1-2 ல் இடம்பெறுகின்ற
இவ்வார்த்தைகள், தவறு செய்கின்ற ஒருவர் தன்னுடைய தவறை உணர்ந்து,
ஆண்டவரிடம் திரும்பி வருகின்றபோது; ஆண்டவர்மீது நம்பிக்கை
வைக்கின்றபோது, ஆண்டவர் அவருடைய குற்றங்களை மன்னிக்கின்றார்.
அதனால் அவர் பேறுபெற்றவர் என்பதை எடுத்துக்கூறுகின்றன.
தாவீது அரசர் உரியாவின் மனைவியோடு தவறு பின், தன்னுடைய தவறை
உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவரோடு நம்பிக்கையினால்
ஒன்றிணைந்தார். அதனால் அவர் பேறுபெற்றவர் ஆனார். நாமும், நம்முடைய
தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் இறைவனிடம் திரும்பி வந்து,
அவர்மீது நம்பிக்கைகொண்டு வாழ்ந்தால் பேறுபெற்றோர் ஆவோம் என்பது
உறுதி.
சிந்தனை
'குற்றமுணர்ந்த உளத்தை ஆண்டவர் அவமதிப்பதில்லை' (திபா 51: 17)
என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நம்முடைய குற்றத்தை
உணர்ந்து, இறைவனுடைய மன்னிப்பைப் பெற அவரிடம் திரும்பி வருவோம்.
அதன்வழியாக பேறுபெற்றவர்களாகி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
லூக்கா 12: 1-7
"பரிசேயருடைய புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்"
நிகழ்வு
1939 ஆம் ஆண்டு, அதாவது இரண்டாம் உலகப்போர் தொடக்குவதற்கு முன்னம்
ஜெர்மனியும் ரஷ்யாவும் மோலோடோவ் ரிப்பன்ட்ரோப் (Molotov
Ribbentrop Pact) என்ற ஒப்பந்தம் செய்துகொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்
முக்கிய அம்சம், ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர்தொடுக்கக்கூடாது
என்பதுதான். இருநாடுகளும் செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்,
ஜெர்மனி ரஷ்யாவின்மீதும் ரஷ்யா ஜெர்மனியின்மீதும் தாக்குதல்
நடத்தாமல் இருந்தன.
1941 ஆம் ஆண்டு, ஜெர்மனியை ஆண்டுவந்த ஹிட்லர்க்கு என்ன யோசனை
தோன்றியதோ தெரியவில்லை, திடிரென்று ஒருநாள் அவன் தன்னுடைய படைத்தளபதியை
அழைத்து, ரஷ்யாவின்மீது தாக்குதல் நடத்தச் சொன்னான். படைத்தளபதியால்
'ஒரு நாடு இன்னொரு நாட்டின்மீது போர்தொடுக்கக்கூடாது என்ற ஒப்பந்தம்
நடைபெற்றிருக்கின்றதே... நீங்கள் அதை மீறுகின்றீர்களே!' என்று
சொல்ல முடியவில்லை. 'சொன்னால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ?'
என்று பயந்து, அவர் ஜெர்மனிப் படையை ரஷ்யாவின் மீது தாக்குதல்
நடத்தச் சொன்னார். இதனால் பதிலுக்கு ரஷ்யப் படை ஜெர்மனியின்மீது
தாக்குதல் நடத்த, இரண்டாம் உலகப்போரானது தொடங்கியது.
இந்த நிகழ்வில் வருகின்ற ஹிட்லர் எப்படி, சொன்னது ஒன்றும் செய்தது
ஒன்றுமாக இருந்தானோ, அதுபோன்று பலர் சொல்வது ஒன்றும் செய்வது
வேறொன்றுமாக இருக்கின்றார்கள். இவர்களைக் குறித்து நாம் எப்போதும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும். இன்றைய
நற்செய்தியிலும் ஆண்டவர் இயேசு சொல்வது ஒன்றும் செய்வது
வேறொன்றுமாக, வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால்,
வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்துவந்த பரிசேயர்களைக் குறித்து
எச்சரிக்கையாய் இருங்கள் என்று கூறுகின்றார். இயேசு சொல்கின்ற
பரிசேயர்களின் புளிப்புமாவு என்றால் என்ன/ இயேசுவைப் பின்பற்றுகின்றவர்கள்
அதைக் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்? என்பவற்றைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பரிசேயர்களின் புளிப்புமாவு என்றால் என்ன?
ஏராளமான பேர் தம்மைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்த இயேசு,
தன்னுடைய சீடர்கள் பக்கம் திரும்பி, "பரிசேயருடைய வெளிவேடமாகிய
புளிப்புமாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்" என்று
கூறுகின்றார்.
பவுலடியாரின் திருமுகங்களைப் படித்துப் பார்க்கும்போது,
புளிப்பு மாவு என்பது பரத்தமை அல்லது தீமையின் வடிவாக இருக்கின்றது
(1 கொரி 5: 6-8) என்பதை அறிந்துகொள்ளலாம். மேலும் அது அளவில்
சிறிதாக இருந்தாலும் மாவு முழுவதையும் புளிக்க வைத்துவிடும் (கலா
5:9) என்பதால், புளித்த மாவு என்னும் தீமையை, வெளிவேடத்தை, இன்ன
பிறவற்றை ஒருவருடைய வாழ்விலிருந்து அகற்றிவிடவேண்டும் என்று
அவர் குறிப்பிடுகின்றார். விடுதலைப் பயண நூலிலோ மோசே தன் மக்களைப்
பார்த்து, "ஏழு நாட்களாக உங்கள் வீடுகளில் புளித்த மாவே காணப்படக்கூடாது"
(விப 12: 19) என்று குறிப்பிடுகின்றார். இவை எல்லாவற்றையும்
வைத்துப் பார்க்கின்றபோது, புளிப்பு மாவு என்பது தீமையின் அடையாளமாக
இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், பரிசேயர்களின் வெளிவேடமாகிய
புளிப்பு மாவைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று
சொல்கின்றார் என்றால், அவர்கள் பரிசேயர்களைப் போன்று, சொல்வது
ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கக்கூடாது என்பதால்தான்.
மக்களின் அங்கீகாரத்தைப் பெற வெளிவேடம் போட்ட பரிசேயர்கள்
பரிசேயர்கள் எதற்காக வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்
எனில், அவர்கள் மக்களிடமிருந்து பாராட்டையும் அங்கீகாரத்தையும்
பெற விரும்பினார்கள். அதனால்தான் அவர்கள் வெளிவேடம் போட்டார்கள்.
சீடர்கள் அப்படி மக்களுடைய பாராட்டப் பெறவதற்காக வெளிவேடம் போடக்கூடாது
என்பதைக் குறித்துக்காட்டவே இயேசு அவர்களிடம் இவ்வாறு
சொல்கின்றார். மேலும் இத்தகைய வெளிவேடத்தனமான வாழ்விற்குப்
பின்னால் எது ஒளிந்திருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், 'மக்கள் தங்களைப் பற்றி அப்படி
நினைத்து விடுவார்களோ, இப்படி நினைத்துவிடுவார்களோ' என்ற பயம்
அல்லது அச்சம்தான் வெளிவேடம் பரிசேயர்கள் வெளிவேடம் போடுவதற்குக்
காரணமாக இருந்தது என்று சொல்லலாம். இதைத் தான் இறைவார்த்தை,
"பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சி நடப்பவர், கண்ணியில்
சிக்கிக்கொள்வார்' (நீமொ 29: 25) என்று கூறுகின்றது.
ஆகவே, இயேசுவின் சீடர்கள் பிறர்க்கு நல்லவர்களாய்த் தங்களைக்
காட்டிக் கொள்ள, வெளிவேடத்தனமான வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளக்கூடாது
ஆண்டவர்க்கு அஞ்சி நடந்தால் யார்க்கும் அஞ்சத் தேவையில்லை
ஆண்டவர் இயேசு எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நிறைவாக, மனிதர்கட்கு
அல்ல, ஆண்டவருக்கு அஞ்சி வாழுங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
ஒருவர் ஆண்டவர்க்கு ஏன் அஞ்சி வாழவேண்டும் என்றால், அவர்க்குத்தான்
ஒருவரை நரகத்தில் தள்ள அதிகாரம் இருக்கின்றது; மனிதர்கட்கு இல்லை.
எனவே, இயேசுவின் சீடர்கள், மனிதர்கள் இப்படி நினைப்பார்களோ, அப்படி
நினைப்பார்களோ என்று அவர்கட்கு அஞ்சி, போலியான வாழ்க்கை வாழாமல்,
எல்லா அதிகாரமும் கொண்டிருக்கும் ஆண்டவர்க்கு அஞ்சி, அவர்க்கு
உண்மையுள்ளவராக நடந்தால், வேறு யார்க்கும் அஞ்சி நடக்கத்
தேவையில்லை. இந்த உண்மையை உண்மையை உணர்ந்து, அவர்கள், நாம் உண்மையான
வாழ்க்கை வாழ்வது நல்லது.
சிந்தனை
'ஆண்டவர்க்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவர்க்குத் தாம்
தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்றுத் தருவார்' (திபா 25: 12)
என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் மனிதர்க்கு அல்ல,
ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போம். அதன்வழியாக அவர் நமக்குக்
காட்டும் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|