Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     17 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 28ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இயேசுவின்மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 21-30

சகோதரர் சகோதரிகளே, கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் செயலுக்கும் திருச்சட்டத்துக்கும் தொடர்பில்லை என்பது வெளியாக்கப்பட்டுள்ளது; திருச்சட்டமும் இறைவாக்குகளும் இதற்குச் சான்று பகர்கின்றன.

இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் வழியாகக் கடவுள் மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்; நம்பிக்கை கொள்வோர் அனைவரையுமே அவர் ஏற்புடையவராக்குகிறார். அவர் வேறுபாடு காட்டுவது இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.

ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின்மூலம் கடவுளுடைய அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகின்றனர்.

இரத்தம் சிந்தி மனிதருடைய பாவத்துக்குக் கழுவாய் ஆகுமாறு இயேசுவைக் கடவுள் நியமித்தார். அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவே அவ்வாறு செய்தார். கடவுள் கடந்த காலத்தில் மனிதர் செய்த பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் முறையை அவர் காட்டினார்.

இக்காலத்தில் தமது நீதியைக் கடவுள் பொறுமையோடு காட்டி வருகிறார். ஆம், அவர் நீதியுள்ளவர். இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோரைத் தமக்கு ஏற்புடையவராக்கி வருகிறார்.

அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் பெருமை பாராட்ட இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா? இல்லை; நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஏனெனில் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கையின் வாயிலாகவே எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் எனக் கருதுகிறோம். கடவுள் யூதருக்கு மட்டுமா கடவுள்? பிற இனத்தாருக்கும் அவர் கடவுள் அல்லவா? ஆம், பிற இனத்தாருக்கும் அவரே கடவுள். ஏனெனில் கடவுள் ஒருவரே. விருத்தசேதனம் பெற்றவர்களாயினும் விருத்தசேதனம் பெறாதவர்களாயினும், இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் யாவரையும் கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குகிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 130: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 7)Mp3
=================================================================================
பல்லவி: பேரன்பும் மீட்பும் உடைய ஆண்டவரையே நம்பியிரு.

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். 6 விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரை விட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆபேலின் இரத்தம் முதல் சக்கரியாவின் இரத்தம் வரை, இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காகக் கணக்குக் கேட்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 47-54

அக்காலத்தில் இயேசு கூறியது: "ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் இறைவாக்கினருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் அவர்களைக் கொலை செய்தவர்கள் உங்கள் மூதாதையர்களே. உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள்.

இதை முன்னிட்டே கடவுளின் ஞானம் இவ்வாறு கூறுகிறது: நான் அவர்களிடம் இறைவாக்கினரையும் திருத்தூதரையும் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொலை செய்வார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள்.

ஆபேலின் இரத்தம் முதல், பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை, உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.

ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்."

இயேசு அங்கிருந்து புறப்பட்டபோது மறைநூல் அறிஞரும் பரிசேயரும் பகைமை உணர்வு மிகுந்தவராய் அவரது பேச்சில் அவரைச் சிக்கவைக்குமாறு பல கேள்விகளைக் கேட்டனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 11: 47-54

"இந்தத் தலைமுறையிடம் கணக்குக் கேட்கப்படும்"


நிகழ்வு

இளைஞன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன்னுடைய இரு சக்கர வண்டியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். ஓரிடத்தில் எதிரே வந்த பேருந்து அவன்மீது மோத, வண்டி ஒருபக்கமாய், அவன் ஒரு பக்கமாய்த் தூக்கி வீசப்பட்டான். பக்கத்தில் இருந்தவர்கள்தான் அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, ஒருவழியாகக் காப்பாற்றினார்கள்.

அவனுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் (ஒரு கிறிஸ்தவர்) அவனுடைய நெஞ்சில் 'ஜீசஸ்' என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்துவிட்டு, "இப்படியொரு பக்தியான இளைஞனுக்கா இந்தமாதிரி விபத்து ஏற்படவேண்டும்...?" என்று மிகவும் வருத்தப்பட்டார். அந்த மருத்துவர்க்கு அருகில் இருந்து, அவர்க்கு உதவிசெய்துகொண்டிருந்த செவிலித்தாய் ஒருவர் இதைக் கேட்டுவிட்டு அவரிடம், "இவன் தன்னுடைய நெஞ்சில் 'ஜீசஸ்' என்று பச்சை குத்தி என்ன பயன்? இவன் செய்யாத அட்டுழியங்கள் இல்லை!" என்றார்.

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...? சொல்வதை கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கள்" என்று மருத்துவர் அந்த செவிலித்தாயை வினவ, செவிலித்தாய் அவரிடம், "இவனை எனக்கு நன்றாகத் தெரியும். இவன் தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறானே ஒழிய, அதற்கும் இவனுடைய வாழ்க்கைக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் இவன் செய்யாத தப்பு இல்லை. அதனால்தான் என்னவோ இவனுக்கு இப்படியொரு விபத்து ஏற்பட்டிருக்கின்றது" என்று வருத்தத்தோடு சொன்னார்

எப்படியும் வாழ்ந்துவிட்டு, நெஞ்சில் இயேசு என்று பச்சை குத்துவதாலும் அல்லது இயேசுவின் திருப்பெயரைச் சொல்வதாலும் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது...? அது மிகப்பெரிய போலித்தனம் அல்லது முரண்பட்ட வாழ்க்கை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றைய நற்செய்தியில் போலியான அல்லது முன்னுக்குப் பின் முரணான வாழ்க்கை வாழ்ந்துவந்த திருச்சட்ட அறிஞர்களை ஆண்டவர் இயேசு கடுமையாகச் சாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு அவர்களை ஏன் அவ்வளவு கடுமையாகச் சாடவேண்டும்? நம்முடைய நம்பிக்கை வாழக்கை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர்களைக் கொன்றவர்களும் அவர்கட்கு நினைவுச் சின்னங்களை எழுப்பியவர்களும்!

நற்செய்தியில் இயேசு திருச்சட்ட அறிஞர்களின் போலித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்குகின்றார். திருச்சட்ட அறிஞர்களின் அல்லது யூதர்களின் முன்னோர்கள் அவர்கட்கு இறைவாக்கை எடுத்துச் சொன்ன இறைவக்கினர்களைக் கொன்றொழித்தார்கள். அவர்களின் வழிவந்தவர்களோ இறைவாக்கினர்கட்கு நினைவுச் சின்னங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் அவர்களுடைய மூதர்களின் செயலை நியாயப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

யூதர்கள், இறையடியார்கள் அல்லது இறைவாக்கினர்களின் இரத்தத்தைச் சிந்திய வரலாறு தொடக்கத்திலிருந்தே இருந்து வந்திருக்கின்றது. காயினால் கொல்லப்பட்ட ஆபேல் முதல் (தொநூ 4:8) சக்கரியா வரை (2 குறி 24: 20-22) இன்னும் சொல்லப்போனால் இயேசுவரை அவர்கள் சிந்தித்த இரத்தம் அதிகம். இதற்காக அவர்களிடம் கணக்குக் கேட்கப்படும் என்கின்றார் இயேசு. யூதர்கள் இறைவாக்கை எடுத்துச் சொன்ன இறைவாக்கினர்களையும் இயேசுவையும் கொன்றதாலோ என்னவோ அவர்கள் கி.பி. 70 ஆண்டு மிகப்பெரிய அழிவினைச் சந்தித்தவேண்டிய நிலைக்கு உள்ளனார்கள். அப்படியானால் யூதர்கட்கு ஏற்பட்ட அந்த அழிவு அவர்கள் இறைவக்கினர்களையும் இயேசுவையும் மிக மோசமாக நடத்தியதன் விளைவு என்று உறுதியாகச் சொல்லலாம்.

இறைவனுக்குக் கணக்குக் கொடுக்கத் தயாரா?

யூதர்கள் மத்தியில் இறைவாக்கை எடுத்துரைத்த இறைவாக்கினர்களைப் போன்று, நம் மத்தியிலும் குருக்கள், துறவிகள் என்று பலர் இறைவாக்கை எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை நாம் எவ்வாறு நடத்துகின்றோம்? இவர்கட்கு நாம் எவ்வாறு மதிப்பளிகின்றோம்? சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கின்றார். என்னை ஏற்றுக்கொள்கின்றவர் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கின்றார்" (மத் 10: 40) என்று சொல்லும் இயேசு, "உங்களை எவராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால், தீர்ப்பு நாளில் சோதோம் கொமொரோப் பகுதிகட்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாக இருக்கும்" (மத் 10: 14-15) என்கின்றார். ஆகையால், ஒவ்வொருவரும் இறைவாக்கினர் என்பவர் இறைவனுடைய பதிலாள் என்பதை உணர்ந்து, அவர்க்குரிய மதிப்பளிப்பதும் அவருடைய வார்த்தையைக் கேட்டு நடப்பதும் சாலச்சிறந்தது.

சிந்தனை

'ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்' (உரோ 2:6) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், நமக்கு இறைவாக்கை எடுத்துச் சொல்லும் இறையடியார்கள் மற்றும் இறைவாக்கினர்களின் குரல் கேட்டு நடப்போம்; போலியான வாழ்க்கையல்ல, உண்மையான வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உரோமையர் 3: 21-30

நம்பிக்கையினாலேயே கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும்


நிகழ்வு

வெப்பமண்டல நாடு (Tropical Country) ஒன்றில் மறைப்பரப்பு பணியைச் செய்துவந்தார் குருவானவர் ஒருவர். அவருடைய போதனையால் ஈர்க்கப்பட்டு, பலரும் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அதில் பெண் ஒருவரும் அடங்குவார்.

அந்தப் பெண் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தாள். குறிப்பாக திருவிவிலியத்தில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள் அப்படியே நடக்கும் என உறுதியாக நம்பிவந்தாள். இப்படியிருக்கையில் திடீரென்று ஒருநாள் அந்தப் பெண்ணின் இரண்டு வயது மகன் நோய்வாய்ப்பட்டு, சாவின் விளிம்புவரைச் சென்றுவிட்டான். இதைப் பார்த்து மிகவும் பதறிப்போன அந்தப் பெண் தன்னுடைய மகனைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்த மருத்துவரிடம் ஓடினாள். மருத்துவர் அந்தப் பெண்ணின் மகனைச் சோதித்துப் பார்த்துவிட்டு, "பனிக்கட்டி இருந்தால் உன்னுடைய மகனைக் குணப்படுத்த முடியும்... இல்லையென்றால் காப்பாற்ற முடியாது" என்று சொல்லிவிட்டார்.

'பனிக்கட்டிக்கு நான் எங்கே போவது...?' என்று யோசித்த அந்தப் பெண், 'குருவானவரிடம் சென்று என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி, அவரை இறைவனிடம் மன்றாடச் சொன்னால், அவர் இறைவனிடம் மன்றாடி பனிக்கட்டியைப் பெற்றுத் தருவார். அதைக் கொண்டு என்னுடைய மகனை எளிதாகக் குணப்படுத்திவிடலாம்' என்று நம்பிக்கையோடு குருவானவரை நோக்கி ஓடினாள். குருவானவரை அடைந்ததும், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "சுவாமி! நீங்கள் என் மகனுக்காகப் பனிக்கட்டி வேண்டுமென்று இறைவனிடம் உருக்குமாக வேண்டினால், அவர் வானத்திலிருந்து பனிக்கட்டிகளைக் கொட்டோ கொட்டு என்று கொட்டுவார். அவற்றை எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் கொடுத்தால், அவர் என்னுடைய மகனை எளிதாகக் குணப்படுத்தி விடுவார்" என்றாள்.

குருவானவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். அவர் அந்தப் பெண்ணிடம் ஏதாவது சொல்லி அனுப்பிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப் பெண் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். சிறிதுநேரத்தில் வானம் இருண்டு மழை கொட்டோ கொட்டெனக் கொட்டியது; அதுவும் சாதாரண மழையல்ல, ஆலங்கட்டி மழை. அவள் மிகவும் பூரித்துப்போய் தனக்கு முன்பாகக் கிடந்த ஆலங்கட்டிகளை அள்ளிக்கொண்டு மருத்துவரிடம் ஓடினாள். மருத்துவர் அவள் கொடுத்த ஆலங்கட்டிகளை, அவளுடைய மகனின் உடலில் வைக்க, அவனிடமிருந்த நோய் நீங்கியது.

'நம்புகிறவர்க்கு எல்லாம் நிகழும்' (மாற் 9: 23) என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப, இந்த நிகழ்வில் வருகின்ற பெண்மணி தன்னுடைய மகனுக்காகப் பனிக்கட்டி வேண்டி, இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடினார். அவர் மன்றாடியது போன்று பனிக்கட்டி கிடைத்தது. நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடுகின்றபோது அல்லது அவரிடம் நம்பிக்கையோடு இருக்கின்றபோது, அவர்க்கு ஏற்புடையவர்களாவோம். இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்லும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நம்பிக்கை கொள்வோர் கடவுளுக்கு ஏற்புடையோர் ஆகின்றனர்

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் யார் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவார் என்ற கேள்விக்குப் பதில் தருகின்றார். கடவுளுக்கு ஏற்புடையவர் வேறு யாருமல்ல, அவர்மீது நம்பிக்கை கொள்பவரே ஆவார்.

இங்கு இயேசுவின்மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கை எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் புனித யாக்கோபு சொல்வது போன்று 'பேய்கள்கூட கடவுளை நம்பி அஞ்சி நடுங்குகின்றன (யாக் 2: 19). அந்தத் பேய்கள் அல்லது சாத்தான்கள் கொள்ளக்கூடிய நம்பிக்கை போன்று நம்முடைய இருக்கக்கூடாது. நம்முடைய நம்பிக்கை செயல்வடிவம் பெறவேண்டும் (யாக 2:17). அப்பொழுதுதான் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறமுடியும். இல்லையென்றால், நம்மால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறமுடியாது.

இயேசு எல்லார்க்குக்கும் கடவுள்

ஒருவர் இயேசுவின்மீது கொள்ளும் (நற்செயல்களில் வெளிப்படும்) நம்பிக்கையினாலேயே கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் என்று சொன்ன புனித பவுல், அடுத்ததகாச் சொல்லக்கூடிய செய்திதான் இயேசு எல்லார்க்கும் கடவுள் என்பதாகும்.

இந்த உலகத்தில் பிறந்த எல்லாரும் பாவிகள். ஏனெனில், எல்லாரும் கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தவர்கள். ஆகையால், பாவிகளை மீட்க இந்த உலகிற்கு வந்த இயேசு, நாமும் பாவிகள் என்ற வகையிலும் நம்மை மீட்க அவர் வந்தார் என்ற வகையிலும் அவர் எல்லார்க்கும் கடவுள் ஆகின்றார் என்பது உண்மையாகின்றது. எனவே, பாவிகள் யாவரையும் மீட்க வந்த இயேசுவின்மீது நாம் நம்பிக்கை கொண்டோம் எனில், கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம் என்பது உறுதி.

சிந்தனை

'நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்' (எபி 11:2) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக, அவர் மகன்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!