Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     16 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 28ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11

பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச் சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. ஏனெனில் பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது நீங்கள் உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள். தீர்ப்பளிக்கும் நீங்கள் அந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கான செயல்களைச் செய்கிறீர்களே!

இத்தகையவற்றைச் செய்வோருக்குக் கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழுவாதது என்பது நமக்குத் தெரியும். இவற்றைச் செய்வோர்மேல் தீர்ப்பளிக்கும் நீங்களும் இவற்றையே செய்துவருகிறீர்கள்! நீங்கள் மட்டும் கடவுளின் தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்களா? அல்லது, அவரது அளவற்ற பரிவையும் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் ஏளனம் செய்கிறீர்களா? உங்களை மனம்மாறச் செய்வதற்கே கடவுள் பரிவு காட்டுகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா?

உங்கள் கடின உள்ளம் உங்களை மனம்மாற விடவில்லை; ஆகையால் கடவுளின் சினமும் நீதித் தீர்ப்பும் வெளிப்படவேண்டிய நாளில் உங்களுக்கு வரப்போகும் தண்டனையைச் சேமித்து வைக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார்.

மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். ஆனால் தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்குப் பணியாமல், அநீதிக்குப் பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும் சீற்றமும் வந்து விழும். முதலில் யூதருக்கும் பிறகு கிரேக்கருக்கும் அதாவது, தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும்.

அவ்வாறே, முதலில் யூதருக்கும் அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது, நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும். ஏனெனில் கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் திபா -62: 1-2. 5-6. 8 (பல்லவி: 12b) MP3
=================================================================================
பல்லவி: மனிதரின் செயல்களுக்கேற்ப கைம்மாறு நீரே அளிக்கின்றீர்.

1 கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே; 2 உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். பல்லவி

5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; 6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். பல்லவி

8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46

அக்காலத்தில் இயேசு கூறியது: "ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது.

ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்."

திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, "போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்" என்றார். அதற்கு அவர், "ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
உரோமையர் 2: 1-11

கடவுள் அளிக்கும் நீதித் தீர்ப்பு

நிகழ்வு

பணக்கார இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் முன்பொரு முறை செய்த குற்றத்திற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அன்றைக்கு அவன் சார்பாக வாதாடிய வழக்குரைஞர் தன்னுடைய வாதத் திறமையால், அவனைக் குற்றத்திலிருந்து விடுவித்தார்.

இப்பொழுது அதே இளைஞன் இன்னொரு குற்றம் செய்துவிட்டான் என்பதற்காக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டான். 'இன்றைக்கு என்ன நடக்கப்போகிறதோ...?' என்று யோசித்துக் கொண்டிருந்தவன், நடுவர் இருக்கையில் இருந்தவர், முன்பு தனக்காக வாதாடிய வழக்குரைஞர்தான் என்று தெரிந்ததும் மிகவும் ஆசுவாசமடைந்தான். வழக்கு விசாராணை தொடங்கியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், நடுவர், அந்தப் பணக்காரன் இளைஞன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கேட்டு அந்த இளைஞன் அதிர்ந்துபோனான்.

தீர்ப்புக்குப் பின்னர் அந்த இளைஞன் நடுவரைச் சந்தித்தான். "அன்று நான் நிரபராதி என்று வாதாடிய நீங்கள், இன்று ஏன் நான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றீர்கள்...?" என்றான். அதற்கு அந்த நடுவர், "அன்று நான் ஒரு சாதாரண வழக்குரைஞராக இருந்தேன். அதனால் நான் உனக்காக வாதாடி உன்னை விடுவித்தேன். இன்று அப்படியில்லை. நான் ஒரு நடுவராக இருக்கின்றேன். ஆதலால் ஒரு நடுவரைப் போன்று இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, அதற்கேற்றாற்போல் தீர்ப்பு வழங்கவேண்டும். இன்றைக்கு உனக்கெதிராக வைக்கப்பட்ட வாதங்கள் நீ குற்றவாளி என்று எடுத்துக்கூறின. அதனால்தான் நான் உன்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தேன்": என்றார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வு, இயேசு இவ்வுலகிற்கு வந்தபோது மீட்பராக வந்தார். அதனால் அவர் பாவிகளைத் தேடிச் சென்றார்; பாவிகளை மன்னித்தார். அதே இயேசு மீண்டுமாக வருகின்றபோது நடுவராக வருவார். அப்பொழுது ஒவ்வொருவருடைய செயல்கட்கு ஏற்ப அவர் தீர்ப்பு வழங்குவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகம், கடவுள் அளிக்கும் தீர்ப்பு நீதி வழவாதது என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்றது. அப்படிப்பட்ட நல்ல நடுவரிடமிருந்து நாம் நல்ல தீர்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடுபவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள்

இன்றைய முதல் வாசத்தில் புனித பவுல், "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே... நீங்கள் உங்கட்கே தண்டனைத் தீர்ப்பை வருவித்துக் கொள்கின்றீர்கள்": என்று கூறுகின்றார்.

புனித பவுல் கூறுகின்ற இவ்வார்த்தைகள் யார்க்குப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. இவ்வார்த்தைகள், தங்களை நேர்மையாளர்கள் என்றும் பிறரைக் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பிடும் எல்லாருக்கும் பொருந்தும். உரோமையர் திருமுகம் 1: 29-32 பகுதியைக் கவனமாக வாசித்துப் பார்த்தால், இவ்வுலகத்தில் பிறந்த எல்லாரும் குற்றவாளிகள் என்பது புரிந்துவிடும். இப்படி எல்லாரும் குற்றவாளிகளாக இருக்கையில் அல்லது தங்களிடம் தவறை வைத்திருப்பவர்கள் மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடு எந்தவிதத்தில் நியாயம்...? என்பதுதான் பவுலின் கேள்வியாக இருக்கின்றது. மேலும் இப்படிப்பட்டவர்கள் தண்டனைப் பெறுவார்கள் என்பதுதான் பவுலின் கூற்றாக இருக்கின்றது.

கடவுளின் தீர்ப்பு நீதி வழுவாதது

பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடுபவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள் என்று சொன்ன புனித பவுல், யாரிடமிருந்து அத்தகைய தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள் என்பதை அழகாக எடுத்துக்கூறுகின்றார்.

இன்றைக்கு இருக்கின்ற நடுவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு தீர்ப்பிடுவதையும் அதிகாரத்திற்குப் பயந்துபோய் பொய்யான தீர்ப்புகளை வழங்குவதையும் நாம் கண்கூடாகக் காணமுடிகின்றது. ஆனால், ஆண்டவராகிய கடவுள் அப்படிப்பட்டவர் அல்ல; அவர் நீதி வழுவாதர். அவருடைய தீர்ப்பில் ஒருதலைச் சார்ப்பு என்பது கிடையவே கிடையாது. அதனால் யாரெல்லாம் மற்றவரை எந்தவொரு அடிப்படைக் காரணமுமில்லாமல் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கின்றாரோ அவர் தண்டனைத் தீர்ப்பினைப் பெறுவார் என்பதுதான் பவுலின் ஆழமான கூற்றாக இருக்கின்றது.

இந்த இறைவார்த்தையை வாசித்தும் கேட்டும் கொண்டிருக்கின்ற நாம் மற்றவரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கின்றோமா...? அல்லது இயேசுவைப் போன்று ஒருவரை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கின்றோமா...? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

'இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவர்க்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது' (திவெ 22:12) என்பார். ஆகையால், நாம் நல்ல நடுவராம் இறைவனிடமிருந்து நல்ல தீர்ப்பினைப் பெற, பிறரைத் தீர்ப்பிடாமல் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 11: 42-46

சுமையைச் சுமத்துபவர்களாக இல்லாமல், சுமையைச் சுமப்பவர்களாக இருப்போம்

நிகழ்வு

அன்பான தந்தை, அருமையான தாய் என்று ஜெஸ்ஸியின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் அவளுக்கு வந்த பக்க வாதத்தால் அவளுடைய வலது காலும் வலது கையும் செயலிழந்து போயின. இதனால் துடித்துப்போன ஜெஸ்ஸியின் பெற்றோர் அவளை இன்னும் அதிகமாகக் கவனித்துக் கொண்டார்கள். இதனால் ஜெஸ்ஸி தனக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருக்கின்றது என்ற குறையே தெரியாமல் வளர்ந்துவந்தாள்.

இப்படியிருக்கையில் கிறிஸ்மஸ் நெருங்கி வந்தது. கிறிஸ்மஸிற்கு வீட்டில் உள்ளவர்கட்குப் புத்தாடை எடுக்கவேண்டும் என்பதற்காக ஜெஸ்ஸியின் தந்தை ஒரு பெரிய துணிக்கடைக்குச் சென்று, சுமக்க முடியாத அளவுக்கு ஜெஸ்ஸிக்கும் அவளுடைய தாய்க்கும் துணிமணிகளை எடுத்து வந்தார். அவர் துணிமணிகளைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த நேரம், ஜெஸ்ஸி வீட்டின் கீழ்த்தளத்தில் அமர்ந்திருந்தாள். அவளுக்காக வாங்கிவந்த துணிமணிகளை அவளிடம் கொடுத்துவிட்டு, "அம்மா எங்கிருக்கிறாய்?" என்று கேட்டார் ஜெஸ்ஸி அப்பா. "அம்மா வீட்டின் மேல்தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றாள்" என்றாள் ஜெஸ்ஸி. "சரிம்மா! நீ இங்கேயே இரு. நான் அம்மாவிடம் சென்று அவளுக்காக வாங்கிவந்த புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு வருகிறேன்" என்றார் ஜெஸ்ஸியின் அப்பா.

"அப்பா! நீங்கள் போகவேண்டாம். நானே அம்மாவிடம் சென்று, அவளுக்காக நீங்கள் வாங்கி வந்திருக்கும் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு வருகின்றேன்" என்றாள் ஜெஸ்ஸி. "நீ எப்படி மேல்தளத்திற்குச் செல்வாய்...? அது முடியாத செயலாயிற்றே..." என்று மறுமொழி கூறிய தன் தந்தையிடம் ஜெஸ்ஸி, "அப்பா! அம்மாவிற்காக நீங்கள் வாங்கிய புத்தாடைகளை நான் ஒரு கையில் சுமந்துகொள்கிறேன். நீங்கள் என்னைச் சுமந்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால், அம்மாவிற்காக நீங்கள் வாங்கிய புத்தாடைகளை நான் கொடுத்ததாக இருக்கும்" என்றாள்.

தன் மகள் இப்படிப் பேசியதை எண்ணி ஜெஸ்ஸியின் தந்தை ஒரு கணம் மெய்சிலிர்த்துப் போனார். பின்னர் அவள் சொன்னது போன்றே அவர் செய்தது ஜெஸ்ஸியின் உள்ளத்தில் மட்டுமல்லாது, அவளுடைய தாயின் உள்ளத்திலும் மகிழ்ச்சி பிறக்கச் செய்தது.

ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொண்டால் வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும்; ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, மக்கள்மீது அதிகமான சுமைகளை ஏற்றி வைத்த திருச்சட்ட அறிஞர்களை இயேசு இன்றைய நற்செய்தியில் கடுமையாகச் சாடுகின்றார். அவர் அவர்களை எதற்காகச் சாடுகின்றார்? அவர்கள் செய்த தவறு என்ன? இயேசு அவர்களிடமிருந்து எப்படி வேறுபட்டு நிற்கின்றார்? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மக்கள்மீது சுமையைச் சுமத்திய/ஏற்றிவைத்த திருச்சட்ட அறிஞர்கள்

இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு திருச்சட்ட அறிஞர்களைப் பார்த்து, "உங்கட்குக் கேடு! ஏனென்றால் நீங்கள்தாங்க முடியாத சுமைகளை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள்' நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால்கூடத் தொடமாட்டீர்கள்" என்று சாடுகின்றார்.

திருச்சட்ட அறிஞர்கள் மக்கள்மீது சுமக்கமுடியாத சுமைகளை சுமத்துகிறார்கள் என்று இயேசு சொல்கிறாரே, அது என்ன சுமை எனத் தெரிந்துகொள்வது நல்லது. சுமை என்று இயேசு குறிப்பிடுவது 'சட்டச் சுமை'. 'மக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்', 'இதைக் கடைப்பிடிக்கக் கூடாது' என்று நூற்றுக்கணக்கான சட்டங்களை திருச்சட்ட அறிஞர்கள் மக்கள்மீது சுமத்தினார்கள். ஏற்கனவே, உரோமையர்களிடமிருந்தும் இன்னும் பலரிடமிருந்தும் வேதனைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து வந்த சாதாரண யூத மக்கட்கு இது மிகப்பெரிய சுமையாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 'மக்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும்; இதையெல்லாம் கடைப்பிடிக்கக் கூடாது' என்று சொல்லிவந்த திருச்சட்ட அறிஞர்களோ அவற்றின்படி நடக்கவில்லை. அதனால்தான் இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்.

மக்களுடைய சுமையைச் சுமந்த இயேசு

திருச்சட்ட அறிஞர்கள் இப்படி மக்கள்மீது அதிகமான சுமைகளை சுமத்தியபோது, இயேசுவோ, "பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே! நீங்கள் என்னிடம் வாருங்கள். நாங்கள் உட்கட்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத் 11: 28) என்கின்றார். இங்குதான் இயேசு மற்ற யூதத் தலைவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு நிற்கின்றார். ஆம், இயேசு மக்கள்மீது சுமைகளை ஏற்றவில்லை; மாறாக இறக்கிவைத்தார்.

ஆகையால், நாம் திருச்சட்ட அறிஞர்களைப் போன்று மக்கள்மீது சுமைகளை ஏற்றி வைக்காமல், இயேசுவைப் போன்று மற்றவருடைய சுமைகளைச் சுமப்பவர்களாக இருக்க முயற்சி செய்வோம்.

சிந்தனை

'ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்' (கலா 6:2) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவைப் போன்று மற்றவர்களுடைய சுமையைச் சுமக்க முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!