Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     15 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 28ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-25

சகோதரர் சகோதரிகளே, நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை.

முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் - அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் - அந்த மீட்பு உண்டு. ஏனெனில் "நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர்" என மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா!

இவ்வாறு மனிதரைத் தமக்கு ஏற்புடையவராக்கும் கடவுளின் செயல் நற்செய்தியில் வெளிப்படுகிறது. தொடக்கமுதல் இறுதிவரை இந்தச் செயல் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள்.

கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் - அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் - உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக்கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகின்றன.

ஆகவே அவர்கள் சாக்குப் போக்குச் சொல்வதற்கு வழியே இல்லை. ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின; உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று.

தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப் போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர்.

ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார்.

அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக்கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 1a) Mp3
=================================================================================
பல்லவி: வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபி 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 37-41


அக்காலத்தில் இயேசு பேசிக்கொண்டிருந்தபோது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார். உணவு அருந்துமுன்பு அவர் கை கழுவாததைக் கண்டு பரிசேயர் வியப்படைந்தார்.

ஆண்டவர் அவரை நோக்கிக் கூறியது: "பரிசேயரே, நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு உள்ளே கொள்ளையும் தீமையும் நிறைந்திருக்கின்றன. அறிவிலிகளே, வெளிப்புறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அல்லவா! உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 11: 37-41

"உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்"


நிகழ்வு

ஒரு நாட்டில் சிற்பி ஒருவர் இருந்தார். அவர் தத்ரூபமாக சிற்பங்களை வடிக்கக்கூடியவர். ஒருநாள் அரசர் அவரை அழைத்து, 'காண்பவர் வியக்கும் வண்ணம் அரண்மனையின் முன்பகுதியில் ஓர் அருமையான சிற்பத்தை வடித்துப் பொருத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்" என்றார். சிற்பியும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு சிற்பத்தை வடிக்கத் தொடங்கினார்.

ஒருமாதம் கழித்து, அரசர் 'சிற்பியிடம் கொடுத்த வேலை எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றது' என்று பார்ப்பதற்காக அவருடைய சிற்பக்கூடத்திற்குச் சென்றார். அங்கு அரண்மனையில் பொருத்துவதற்காக சிற்பி வடித்துவைத்திருந்த சிற்பத்தைப் பார்த்து வியந்துபோனார். பின்னர் அவர் அந்தச் சிற்பியிடம், "சிற்பியே! அரண்மனையில் முன் பகுதியில் பொருத்திவைப்பதற்காக நீ வடித்து வைத்திருக்கும் இந்த சிற்பத்தைக் கண்டு வியக்கிறேன். அதே நேரத்தில் உன்னிடம் இன்னொரு செய்தியையும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்" என்றார்.

"சொல்லுங்கள் அரசே!" என்று பணிந்து நின்ற சிற்பியிடம் அரசர், "இந்த சிற்பத்தை சுவற்றில் பொருத்தத்தானே போகிறோம். அப்படியிருக்கையில் சிற்பத்தின் முன்பகுதியை பகுதியை மட்டும் நன்றாகச் செதுக்கிவிட்டு, பின்பகுதியை அப்படியே விட்டுவிட்டிருக்கலாம்தானே... 'பின்பகுதி எப்படி இருக்கும்?' என்று யாராவது பார்க்கப் போகிறார்களா...? இல்லை, பார்க்கத்தான் முடியுமா...? எதற்காக நீ அதில் போய் இவ்வளவு நேரம் வீணடித்தாய்...?" என்றார். அப்பொழுது சிற்பி மிகவும் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: "அரண்மனை முன் பகுதியில் பொருத்துவதற்காக நான் வடித்திருக்கும் இந்த சிற்பத்தின் பின்பகுதி எப்படி இருக்கின்றது என்று மனிதர்கள் பார்க்கின்றார்களோ? இல்லையோ? கடவுள் பார்ப்பார். அதனால்தான் நான் இந்த சிற்பத்தின் முன்பகுதியைச் செதுக்குவதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேனோ, அவ்வளவு முக்கியத்துவத்தைப் பின்பகுதிக்கும் கொடுத்தேன்."

சிற்பியிடம் வெளிப்பட்ட இந்த உண்மையை, நேர்மையை நினைத்துப் பெருமிதம் அடைந்த அரசர், அவரை மனதார வாழ்த்திவிட்டு, பரிசுகள் பல தந்துவிட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற சிற்பியின் செயல்பாடு, வெளிப்புறத்தை மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் போதும், உட்புறத்தை, உள்ளத்தை எப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கட்கு பெரிய சாட்டையடியாக இருக்கும் என்றால் மிகையில்லை. நற்செய்தியில் இயேசு நம்முடைய வெளிப்புறம் மட்டுமல்ல, உட்புறமும் தூய்மையாக இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயர்

நற்செய்தியில், பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன்னுடைய வீட்டிற்கு உணவருந்த அழைக்கின்றார். அவர் இயேசுவை எதற்காக விருந்துக்கு அழைத்தார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இதற்கு முந்தைய நற்செய்திப் பகுதிகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இதற்கு முந்தைய பகுதிகளில் இயேசுவுக்கும் பரிசேயர்கட்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். பரிசேயர்கள் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக என்னவெல்லாமோ செய்துபார்ப்பார்கள். 'இவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார்' என்று சொல்வார்கள்... 'அடையாளம் கொடும்' என்று கேட்பார்கள். எல்லாவற்றிலும் இயேசு அவர்களை மிக இலகுவாக வெற்றிகொள்வார். இத்தகைய சூழ்நிலையில் இயேசுவுக்கு எதிராக அடுத்து என்ன செய்து அவரைச் சிக்கலில் மாட்டிவிடலாம் என்ற முனைப்பில்தான் பரிசேயர் ஒருவர் அவரைத் தன்னுடைய வீட்டிற்கு உணவருந்த அழைக்கின்றார்.

பரிசேயரின் அழைப்பினை ஏற்று இயேசு அவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அங்கு இயேசு உட்பதற்கு முன்னம் கை கழுவாதைக் கண்டு அவர் வியப்படைகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவர்க்குப் பாடம் புகட்டுகின்றார்.

வெளியில் மட்டுமல்ல, உள்ளேயும் தூய்மையாக வைத்திருங்கள்

பரிசேயர்கள் மூதாதையர் மரபான தட்டுகளையுயம் கிண்ணங்களையும் வெளிப்புறத்தில் தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்; ஆனால், தங்களுடைய உள்ளத்தையோ தீமைகளால் நிரப்பி வைத்திருந்தார்கள். அவர்களுடைய உள்ளம் தீமையால் நிரம்பி வழிந்திருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டுகள்தான் இயேசுவுக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்ததும் கைம்பெண்களின் வீடுகளை அபகரித்துக் கொண்டதும் ஆகும். அதனால்தான் இயேசு அந்த பரிசேயரைப் பார்த்து, "உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்கட்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும்" என்கிறார். உட்புறத்தில் உள்ளத்தைத் தர்மமாகக் கொடுக்கவேண்டும் என்றால், உள்புறத்தில் உள்ளது தூய்மையாக இருந்தால் மட்டுமே கொடுக்க முடியும்.

எனவே, இயேசு பரிசேயர்க்குச் சொன்ன இந்த செய்தியை நமக்கும் சொல்கின்றார் என்ற உணர்வில் நமது வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை

'யூதாஸ் மரம்' என்றொரு மரமுண்டு. அதில் அருமையான மலர்கள் பூத்துக்குலுங்கும். அவற்றைப் பார்த்து மயங்கும் வண்டுகள், அந்த மலர்கள் மேல் உட்கார்ந்த சில நொடிகளில் செத்துக் கீழே விழும். காரணம் அந்த மலர்கள் எல்லாம் விசத்தன்மை வாய்ந்தவை. மனிதர்களில் சிலர் இப்படித்தான் வெளிப்பார்வை நன்றாகவும் உள்ளே விசத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் இவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் இயேசு சொல்வதுபோல் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்போம். அதன்வழியாக இறைவன் தாங்கும் இல்லிடமாக மாறி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உரோமையர் 1: 16-25

நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவர்க்கும் மீட்பு உண்டு

நிகழ்வு

சார்லஸ் ஆர். ப்ரௌன் என்றொரு குருவானவர் இருந்தார். அவர் ஆண்டவருடைய வார்த்தையை மிக அருமையாக எடுத்துரைத்து, சிறப்பான முறையில் பணிசெய்து வந்தார். அப்படியிருந்தும் அவர் இருந்த கோயிலுக்கு மக்கள் குறைவாகவே வந்தார்கள். இத்தனைக்கும் அவர் இருந்த பங்கில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. கோயிலுக்குக் மக்கள் குறைவாக வந்தது அவர்க்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. ஒருநாள் மாலையில் நடைபெற்ற திருப்பலிக்கு மிகவும் சொற்பமானவர்களே வந்திருந்ததைப் பார்த்துவிட்டு அவர் மிகுந்த வேதனையுடன், "எவ்வளவுதான் சிறப்பான முறையில் ஆண்டவருடைய வார்த்தையை எடுத்துரைத்தும் மக்களைக் கட்டியெழுப்பியும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய இல்லத்திற்கு வருவோருடைய எண்ணிக்கை கூடவே இல்லையே!" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய அறைக்குச் சென்றார்.

அவர் தன்னுடைய அறைக்குள் சென்ற சிறிதுநேரத்திற்குள் அறைக் கதவு தட்டப்பட்டது. அவர் எழுந்து வந்து, கதவைத் திறந்து பார்த்தபோது, புதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அந்த மனிதர் அருள்தந்தை பிரௌனிடம், "தந்தையே! நான் பிற சமயத்தைச் சார்ந்தவன்; அருகாமையில் இருக்கக்கூடிய ஒரு வங்கியில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன். பிற சமயத்தைச் சார்ந்தவனாக நான் இருந்தாலும், நீங்கள் ஆற்றக்கூடிய மறையுரைத் தொடர்ந்து கேட்டு வருகின்றேன். இன்றைக்கு நீங்கள் ஆற்றிய மறையுரை என்னுடைய உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. அது இத்தனை நாள்களும் நான் செய்துவந்த குற்றத்தை எனக்கு உணர்த்தி, நான் நல்லதொரு கிறிஸ்தவராக வாழவேண்டும் என்ற எண்ணத்தை என்னுடைய உள்ளத்தில் ஊட்டியிருக்கின்றது" என்றார். அந்த மனிதர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அருள்தந்தை ப்ரௌன்.

தொடர்ந்து அந்த மனிதர் பேசினார்: "தந்தையே! நான் அருகாமையில் இருக்கும் வங்கியில் பணியாற்றிக்கொண்டு வருகிறேன் என்று சொன்னேன் அல்லவா! என்னிடம் ஒப்படைக்கப்படும் பணத்திலிருந்து அவ்வப்பொழுது சிறிது பணத்தை எடுத்துக்கொண்டு, அதைத் தவறாகப் பயன்படுத்தி வந்தேன். இன்றைக்கு நீங்கள் ஆற்றிய மறையுரை நான் அப்படியெல்லாம் செய்யக்கூடாது, எடுத்த பணத்தைக் திரும்பிக் கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஊட்டியிருக்கின்றது. இப்பொழுது நானாகச் சென்று, வங்கி மேலாளரிடம் என்னுடைய தவறை ஒத்துக்கொண்டால், அவர் என்னை வேலையிலிருந்து தூக்கிவிடுவார். நீங்கள்தான் அவரிடம் எனக்காகப் பரிந்துபேசவேண்டும்."

அவர் சொன்னதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அடுத்தநாள் காலை ப்ரௌன் அந்த மனிதர் பணியாற்றி வந்த வங்கிக்குச் சென்றார். பின்னர் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு வங்கி மேலாளரிடம் சென்று, நடந்தவற்றையெல்லாம் கூறி, "இந்த மனிதர் செய்த குற்றத்தை மன்னித்துக்கொள்ளுங்கள். இவர் வங்கியிலிருந்து தவறுதலாக எடுத்திருக்கும் பணத்தை ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திருப்பிச் செலுத்துவிடுவார்" என்றார். அருள்தந்தை ப்ரௌன் அவர்க்காகப் பரிந்து பேசியதும் வங்கி மேலாளர் அந்த மனிதர் செய்த குற்றத்தை மனதார மன்னித்தார்.

இதற்குப் பின்பு அந்த மனிதர் அருள்தந்தை பிரௌனிடம், 'பாவம் செய்துவந்த என்னை உங்களுடைய போதனையின் வழியாக ஆண்டவர் இயேசு தொட்டு, புதுவாழ்வு தந்திருக்கின்றார். இனிமேல் நான் ஆண்டவர் இயேசுவை என் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவர்மீது நம்பிக்கைகொண்டு புதுவாழ்வு வாழ்வேன்" என்றார். இதைக்கேட்ட அருள்தந்தை ப்ரௌன், "இத்தனை நாள்களும் நான் அறிவித்து வந்த நற்செய்தி வீண்போகவில்லை" என்று ஆறுதல் அடைந்தார்.

இந்த நிகழ்வில் வருகின்ற மனிதர் ஆண்டவருடைய நற்செய்தியை அருள்தந்தை ப்ரௌன் வழியாகக் கேட்டு புது வாழ்வையும் மீட்பையும் பெற்றுக்கொண்டார். அதைப் போன்று நாமும் ஆண்டவருடைய நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தால், மீட்படைவோம் என்பது உறுதி. இன்றைய முதல் வாசகம் ஆண்டவருடைய நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு வாழ்வதால் ஒருவர் பெறுகின்ற ஆசியை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பிக்கையும் மீட்பும்

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், "நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்பட மாட்டேன்" என்று சொல்லிவிட்டு, "நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவர்க்கும் அந்த மீட்பு உண்டு" என்று கூறுகின்றார்.

இங்கு நற்செய்தி என்று சொல்லப்படுவது வேறெதுவும் அல்ல, ஆண்டவர் இயேசுவே. ஆம், ஆண்டவர் இயேசுவின்மீது யாரெல்லாம் நம்பிக்கைகொண்டு அவருடைய விழுமியங்களின்படி வாழ்கின்றார்களோ, அவர்கட்கு மீட்பு நிச்சயம் உண்டு. அதே நேரத்தில் யூதர்களைப் போன்று ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளாமல், அவரை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்தால் இன்றைய முதல் வாசகத்தில் பவுல் சொல்வதுபோன்று கடவுளின் சினம்தான் நம்மீது வெளிப்படும்.

ஆகையால், நாம் கடவுளின் சினத்தை அல்ல, அவர் தரும் மீட்பினைப் பெற ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழத் தயாராவோம்.

சிந்தனை

'அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவர்க்கும் அவர் கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தார்' (யோவா 1: 12) என்பார் யோவான். ஆகையால், நாம் நற்செய்தியாம் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, தந்தை கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினையும் இறையருளையும் நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!