Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     14 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 28ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும்.

இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழிமரபினர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப் பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம்.

பிற இனத்தவராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 98: 1. 2-3ab. 3cd-4 (பல்லவி: 2a)MP3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3ab இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

3cd உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32

அக்காலத்தில் மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: ``இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். தீர்ப்புநாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள்.

ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா!''


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 11: 29-32

இயேசு தந்த அடையாளம்!

நிகழ்வு

அது ஒரு சனிக்கிழமை மாலைநேரம். ஒரு சிற்றூரில் இருந்த தாத்தாவும் அவருடைய எட்டு வயதுப் பேரனும் வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஒரு குளத்தில் மீன்பிடிக்கச் சென்றார்கள். தாத்தா குளத்தில் தூண்டிலைப் போட்டு மீன்களைப் பிடித்துத் தர, பேரன் அவற்றை வாங்கி, தன்னுடைய கையோடு எடுத்துச்சென்றிருந்த பாத்திரத்தில் போட்டுக்கொண்டே இருந்தான். இடையிடையே அவன் தான் தாத்தாவிடம், "தாத்தா! இந்த மீன்களெல்லாம் இரவில் எங்கே போய்த் தூங்கும்...? அந்திவானம் இவ்வளவு சிவப்பாக ஊர்ப்பது ஏன்...?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.

பொழுது சாயத் தொடங்கியதும், தாத்தா பேரனிடம் "தம்பி! நேரமாகிவிட்டது வீட்டிற்குப் போகலாமா...?" என்றதும், பேரன் அதுவரைக்கும் பிடித்து வைத்திருந்த மீன்களைப் போட்டு வைத்திருந்த பாத்திரத்தை தூக்கிக்கொண்டு தாத்தாவோடு வீட்டுக்குப் போனான்.

அன்றிரவு வானில் விண்மீன்கள் பூத்துக் கிடந்தன. அதைப் பார்த்துவிட்டு பேரன், "தாத்தா! பகலில் இந்த விண்மீன்கள் எல்லாம் எங்கே போயிருந்தன...?"என்று கேட்டான். தாத்தா அதற்குப் பொறுமையாக விளக்கம் அளித்தார். பின்னர் அவன் அவரிடம், "தாத்தா! நீங்கள் எப்பொழுதாவது கடவுளைப் பார்த்தாதுண்டா...? என்றான். தாத்தா மிகவும் அமைதியாக, "தம்பி! இப்பொழுதெல்லாம் நான் எங்கும் எதிலும் கடவுளைத்தான் பார்க்கிறேன். தவழ்ந்து வரும் தென்றல் காற்றில், சலசலத்து ஓடும் நீர்ச்சுனையில், உயர்ந்தோங்கி வளர்ந்திருக்கும் மரங்களில், பறந்து விரிந்திருக்கின்ற மலைகளில், உன்னில், என்னில் இப்படி எங்கும் எதிலும் கடவுளைத்தான் காண்கிறேன்" என்றார்.

இந்த நிகழ்வில் வரும் பெரியவர் சொன்னத்தைப் போன்றுதான், எங்கும் எதிலும் கடவுள் இருக்கின்றபோது... நம் கண்முன்னே ஓராயிரம் அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கின்றபோது 'கடவுள் இல்லவே இல்லை', 'இருந்தால் அவரை எங்கட்குக் காட்டுங்கள்' என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது?

நற்செய்தியில், யூதர்கள் இயேசுவிடம் அடையாளம் ஒன்றைக் கேட்கின்றார்கள். இயேசு அதற்கு என்ன பதிலளித்தார்? லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது? என்பவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினார் யோனாவின் அடையாளம்

யூதர்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்டபோது, அவர் அவர்களிடம், "யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது" என்கின்றார். யோனாவின் அடையாளம் என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு பற்றியதாகும். யோனா எப்படி மீனின் வயிற்றில் மூன்று நாள் அல்லும் பகலும் இருந்துவிட்டு, வெளியே வந்தாரோ (யோனா 1:17) அதுபோன்று தான் பூமியின் வயிற்றில் இருந்துவிட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்பதை இயேசு அடையாளமாகச் சொல்கின்றார்.

தொடக்கக்காலத் திருஅவையில் இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்புதான் அதிகமாக வலியுறுத்திச் சொல்லப்பட்டன. புனித பவுல் இதனை, "தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் (இயேசு) வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது" என்று கூறுவார். புனித பேதுரும் இதே கருத்தினைத்தான் வலியுறுத்திக் கூறுவார் (திப 2:22 f) இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், இயேசு தன்னுடைய பாடுகள், இறப்பு, உயர்ப்பு ஆகியவற்றை அடையாளமாகக் கொடுத்தது மிகப்பொருத்தம் என்று சொல்லலாம்.

புறவினத்தார் இறையடியார்களை நம்பியபோது, யூதர்கள் இயேசுவை நம்பாமல் இருத்தல்

இயேசு தன்னிடம் அடையாளம் கேட்டவர்களிடம் தொடர்ந்து பேசும்போது, தீர்ப்பு நாளில் நினிவே நகர மக்களும் தென்னாட்டு அரசியும் உங்கட்கு எதிராக எழுந்து கண்டனம் செய்வார்கள் என்கின்றார். அது ஏன் என்ற காரணத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

நினிவே நகர மக்கள் யாவே இறைவனைக் குறித்து அறிந்திராதவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் யோனா யாவே இறைவனைப் பற்றிச் சொல்கின்றபோது, அவர்கள் தங்களுடைய குற்றங்களை உணர்ந்து மனம்மாறுகின்றார்கள். தென்னாட்டு அரசியும் ஒரு புறவினத்தார்தான். அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தார் (1 அர 10). இயேசுவோ, இறைவாக்கினர் யோனாவை விட, சாலமோன் அரசரைவிடப் பெரியவர். அப்படியிருந்தும் யூத்ர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் போனதால் (லூக் 13: 34-35; யோவா 12: 35-41) அவர்கட்கு எதிராக நினிவே மக்களும் தென்னாட்டு அரசியும் எழுந்து கண்டனம் செய்வார்கள் என்கிறார் இயேசு.

யூதர்களைப் போன்று நமக்கும் பல்வேறு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியிருந்தும் நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி, ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழவில்லை என்றால், அந்த நம்பிக்கையின்மையினாலேயே நாம் நமக்கான அழிவைத் தேடுவோம் என்பது உறுதி.

சிந்தனை

'இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்' (உரோ 10:9) என்பார் பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஆண்டவர் நம்பி, அவர்மீது கொண்ட நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உரோமையர் 1: 1-7

இயேசுவே அந்த நற்செய்தி

நிகழ்வு

மிகப்பெரிய மறைப்பணியாளரான சி.ஹச். ஸ்பர்கியோன் (C. H. Spurgeon) சொல்லக்கூடிய நிகழ்வு.

குறிப்பிட்ட ஒரு நகரில் குருவானவர் ஒருவர் இருந்தார். அவர் ஏழை எளிய மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஒரு சமயம் அவருடைய பங்கில் இருந்த ஓர் ஏழைப் பெண்மணி பணத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றார் என்று கேள்விப்பட்டு, அவர்க்கு உதவுவதற்காக கையில் கொஞ்சம் பணமும், சந்தையிலிருந்து அரசி பருப்பும் வாங்கிக்கொண்டு\, அவர்க்குக் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார்.

அவர் அந்தப் பெண்மணியினுடைய வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், அவருடைய வீடானது பூட்டியிருந்தது. 'ஒருவேளை இவர் கதவை அடைத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே இருக்கின்றாரோ...?' என்று நினைத்துக்கொண்டு குருவானவர் அந்தப் பெண்மணியின் வீட்டுக் கதவை ஓங்கித் தட்டினார். திறக்கவில்லை. மீண்டுமாகத் தட்டினார். அப்பொழுதும் திறக்கவில்லை. 'ஒருவேளை இவர் வெளியே போய்விட்டார் போலும்' என்று நினைத்துக் கொண்டு குருவானவர் தன்னுடைய இல்லத்திற்குத் திரும்பி வந்துவிட்டார்.

இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, குருவானவர் அந்தப் பெண்மணியை கோயிலில் பார்த்தார். "இரண்டு நாள்கட்கு முன்னம், நான் உன்னுடைய வீட்டிற்கு கையில் கொஞ்சம் பணத்தோடும் அரிசி பருப்போடும் வந்து உன் வீட்டுக் கதவைத் தட்டினேன்... நீதான் திறக்கவில்லை. அதனால் நான் அப்படியே என்னுடைய இல்லத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டேன்" என்றார். "ஐயகோ! அன்று நீங்கள்தான் என்னுடைய வீட்டுக் கதவைத் தட்டினீர்களா...? நான் ஏதோ வீட்டின் உரிமையாளர்தான் வாடகைப் பணத்திற்காகக் கதவைத் தட்டுகின்றார் என்று நினைத்துக் கொண்டு கதவைத் திறக்காமலே இருந்துவிட்டேன்" என்று சொல்லி மிகவும் வருந்தினார்.

இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு, மறைப்பணியாளரான சி.ஹச். ஸ்பர்கியோன் தொடர்ந்து கூறுவார், "இந்த நிகழ்வில் வருகின்ற குருவானவர்தான் ஆண்டவர் இயேசு. குருவானவர் எப்படி அந்த ஏழைப் பெண்ணுக்கு வாழ்வுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க வந்தாரோ, அதுபோன்று ஆண்டவராகிய இயேசு, நமக்கு வாழ்வளிக்கும் நற்செய்தியைக் கொடுத்து வருகின்றார். நாம்தான் அந்த ஏழைப் பெண்மணியைப் போன்று, கதவு தட்டப்படும் ஓசையைக் கேட்டபின்பும் கதவைத் திறக்காமல் இருக்கின்றோம்."

ஆண்டவருடைய நற்செய்தி நம்மைத் தேடி வருகின்றது. நாம்தான் நற்செய்தியையும் நற்செய்தியான ஆண்டவரையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், நற்செய்தியான இயேசுவை புறவினத்தவர்க்கு அறிவிக்க கடவுள் புனித பவுலைத் தேர்ந்துகொண்டதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி தருவதாக வாக்குறுதி தந்த இறைவன்

புனித பவுல் உரோமையர்க்கு எழுதிய திருமடலில், ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர்கள் வழியாக மக்கட்கு நற்செய்தி தருவதாக வாக்குறுதி தந்ததையும் அந்த நற்செய்தி வேறு யாருமல்ல, இயேசுதான் என்பதையும் எடுத்துக் கூறுகின்றார்.

ஆதாமும் ஏவாவும் ஆண்டவரின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ணத் தொடங்கிய சமயத்திலேயே, நற்செய்தி வரும் என்று ஆண்டவராகிய கடவுளால் அறிவிக்கப்பட்டது (தொநூ 3: 15). இறைவாக்கினார் எசாயா, மீக்கா போன்றோர் இதை இன்னும் உறுதிப்படுத்தினர். இவ்வாறு ஆண்டவரால் அறிவிக்கப்பட்டு, இறைவாக்கினர்களால் உறுதிப்படுத்தப்பட்ட நற்செய்தியானது, இயேசுவின் வழியாக நிறைவேறியது. ஆம், இயேசு மானிடர் யாவர்க்காகவும் பிறந்து, பாடுபட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் (1 கொரி 15: 1-4). இதுவே நற்செய்தியானது, இந்த நற்செய்தியின்மீது நம்பிக்கைகொள்வோர், அதை உறுதியாகப் பற்றிக்கொள்வோர் மீட்பு அடைவர். இதுதான் உண்மை.

நற்செய்தியாம் ஆண்டவர் இயேசுவைப் புறவினத்தார்க்கு அறிவித்த பவுல்

கடவுள் மக்கட்குத் தருவதாகச் சொன்ன நற்செய்தி இயேசுவில் நிறைவேறியது என்று சொன்ன புனித பவுல், அந்த நற்செய்தியைப் புறவினத்து மக்கட்கு அறிவிப்பதற்காக கடவுள் ஒரு பணியாளராக, திருத்தூதராக, நற்செய்தியை எடுத்துச் சொல்பவராகத் தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் என்று கூறுகின்றார்.

கிறிஸ்தவர்களைக் கொல்வதற்காக தமஸ்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பவுலைத் தேர்ந்தெடுத்த இயேசு, அவரைத் தன்னுடைய நற்செய்தியைப் புறவினத்து மக்கட்கு அறிவிக்கச் செய்தார். மேலும் பவுல் தாம் எதற்காகக் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டோம் என்பதை உணர்ந்து, ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்து, அவரின் உண்மையான நற்செய்திப் பணியாளராக, திருத்தூதராக மாறினார்.

அன்று பவுலைத் தன்னுடைய நற்செய்தியை அறிவிக்க அழைத்த இறைவன் இன்று நம்மையும் அவருடைய நற்செய்தியை அறிவிக்க அழைக்கின்றார். நாம் அவருடைய நற்செய்தியை அறிவிக்கத் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

'நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்' (மத் 28: 19) என்று இயேசு தன் சீடர்க்கு அன்புக்கட்டளை கொடுப்பார். அந்தக் கட்டளையை நமக்கும் தந்திருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவருடைய நற்செய்தியை எல்லார்க்கும் அறிவித்து, எல்லாரையும் அவருடைய சீடர்களாக்கி, இறையருளை நாம் நிறைவாகப் பெறுவோம்.
'இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்' (உரோ 10:9) என்பார் பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஆண்டவர் நம்பி, அவர்மீது கொண்ட நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!