|
|
12 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
27ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அரிவாளை எடுத்து அறுங்கள். பயிர் முற்றிவிட்டது.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 3: 12-21
ஆண்டவர் கூறுவது: வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்; கிளர்ந்தெழுந்து
யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்; ஏனெனில்
சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க
நான் அங்கே அமர்ந்திருப்பேன். அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர்
முற்றிவிட்டது; திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில்
ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன; அவர்கள் செய்த
கொடுமை மிகப் பெரிது. திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு
வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது; ஏனெனில், ஆண்டவரின்
நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது.
கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; வீண்மீன்கள் ஒளியை இழக்கின்றன.
சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து
அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன.
ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும்
அவரே. நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய
சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்;
எருசலேம் தூயதாய் இருக்கும்; அன்னியர் இனிமேல் அதைக் கடந்து
செல்லமாட்டார்கள்.
அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்; குன்றுகளிலிருந்து
பால் வழிந்தோடும்; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி
வழியும்; ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்;
அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும். எகிப்து பாழ்நிலமாகும்;
ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்; ஏனெனில், அவர்கள் யூதாவின்
மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்; அவர்களின் நாட்டிலேயே
குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். யூதாவோ என்றென்றும் மக்கள்
குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும்
மக்கள் குடியிருப்பார்கள். சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே
செய்வேன்; குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்; ஆண்டவராகிய நான்
சீயோனில் குடியிருப்பேன்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா
97: 1-2. 5-6. 11-12 (பல்லவி: 12a)Mp3
=================================================================================
பல்லவி: நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான
தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச்
சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம்.
பல்லவி
5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள்
மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன;
அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி
11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும்
விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்;
அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
லூக் 11: 28
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர்
அதிகம் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர்
அதிகம் பேறுபெற்றோர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
11: 27-28
அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து
பெண் ஒருவர், "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம்
தாய் பேறுபெற்றவர்" என்று குரலெழுப்பிக் கூறினார்.
அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும்
அதிகம் பேறுபெற்றோர்" என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 11: 27-28
"உம் தாய் பேறுபெற்றவர்"
நிகழ்வு
ஒரு தாய் தன்னுடைய இடுப்பில் கைக்குழந்தையை வைத்துகொண்டு, தலையில்
அழுக்குத்துணிகள் இருந்த வாளியை வைத்துக்கொண்டு துணி துவைப்பதற்காக
ஆற்றங்கரைக்குச் சென்றாள்; ஆற்றங்கரையை வந்தடைந்ததும், குழந்தையை
கரையோரமாக உட்கார வைத்துவிட்டு, துணி துவைக்கத் தொடங்கினாள்.
அவள் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது பலாப்பழக் குலை ஒன்று
ஆற்றில் அடித்துக்கொள்ளப்பட்டு வந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு,
'அந்தப் பலாபழக் குலையை எப்படியானது எடுத்துவிடவேண்டும்' என்ற
எண்ணம் ஏற்பட்டது.
உடனே அவள் துணி துவைப்பதை விட்டுவிட்டு ஆற்றில் அடித்துக்கொள்ளப்பட்டு
வந்த பலாப்பழக் குலையை எடுக்க ஆற்றுக்குள் நீந்திச் சென்றாள்.
அன்றைக்குக் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், அவள் அந்தப்
பலாப்பழக் குலையை எடுக்க மிகவும் சிரமப்பட்டாள். ஒருவழியாக பலாப்பழக்
குலையை எடுத்த பூரிப்பில் அவள் கரையில் இருந்த குழந்தையைப்
பார்த்தாள். அந்தோ பரிதாபம்! கரையில் இருந்த குழந்தை அங்கு இல்லவே
இல்லை; ஆற்றில் அடித்துக் செல்லப்பட்டிருந்தது. அவள் தன்னுடைய
குழந்தையை எவ்வளவோ தேடிப்பார்த்தாள். அது அவளுக்குக் கிடைக்கவே
இல்லை.
இப்படி அந்தத் தாய், பலாப்பழத்திற்கு ஆசைப்பட்டு, குழந்தையை ஆற்றில்
விட்டதால் அந்த இடத்திற்கு 'பிள்ளையை விட்டுவிட்டு பலாபழத்தைப்
பிடித்தவள் ஓடை' என்று இன்றளவும் அழைக்கப்படுகின்றது. இந்த இடம்
தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கின்றது.
பலாபழத்திற்கு ஆசைப்பட்டு பிள்ளையை ஆற்றில் விட்டுவிட்ட அந்தத்
தாயைப் போல், இன்றைக்கும் எத்தனையோ தாய்மார்கள் பணத்திற்கும்
பொருளுக்கும் ஆசைப்பட்டு, தீய நாட்டங்களால் பிள்ளைகளை
'அம்போ'வென விட்டுவிடும் அவலநிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
இப்படிப்பட்ட தாய்மார்கட்கு நடுவில், மிகவும் பேறுபெற்ற தாயாக
மரியா விளங்குகின்றார். அவர் எப்படி பேறுபெற்ற தாயாக விளங்குகின்றார்
என்பதை இன்றைய இறைவார்த்தையின் வழியாக சிந்தித்துப்
பார்ப்போம்.
பெற்றெடுத்தனால் மட்டுமல்ல
நற்செய்தியில் இயேசு வல்லமையோடு பேசிக்கொண்டிருப்பதைப்
பார்த்துவிட்டு, ஒரு பெண்மணி, "உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி
வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்" என்கின்றார். அதற்கு இயேசு அவரிடம்,
"இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம்
பேறுபெற்றவர்" என்கின்றார். இங்கு அந்தப் பெண்மணியின் வார்த்தைகளும்
இயேசுவின் வார்த்தைகளும் ஆழமான சிந்தனைக்கு உட்படுத்திப்
பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
இந்த உலகத்தில் யார்க்கும் கிடைக்காத பேறு தாய் மரியாவுக்குக்
கிடைத்தது. ஆம், எத்தனையோ தாய்மார்கள் 'இயேசு என்னுடைய வயிற்றில்
பிறக்கமாட்டாரா...?' என்று தவம் கிடந்தபோது, இயேசுவோ, மரியாவின்
வயிற்றில் பிறந்தார். அந்த விதத்தில் தாய் மரியா பேறுபெற்றவர்தான்.
அதைத்தான் நற்செய்தியில் வருகின்ற பெண்மணி குறிப்பிட்டுப்
பேசுகின்றார்; ஆனால், இயேசு அதைவிடப் பெரிய பேறு ஒன்று இருக்கின்றது
என்று குறிப்பிடுகின்றார்.
இறைவார்த்தையைக் கேட்டுத் தியானித்ததால் மட்டுமல்ல
இயேசு குறிப்பிடுகின்ற அந்தப் பேறு, இறைவார்த்தையைக் கேட்பதா...?
நிச்சயமாக இல்லை. மரியா ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதை உள்ளத்தில்
இருத்திச் சிந்தித்தார் (லூக் 2: 51). அதனால் மட்டும் அவர்
பேறுபெற்றவராக மாறிவிடவில்லை. ஏனென்றால் புனித யாக்கோபு தன்னுடைய
திருமுகத்தில் கூறுவது போன்று, பலர் இறைவார்த்தையைக் கேட்பவராக
இருந்து தங்களையே ஏமாற்றிக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்
(யாக் 1: 22). மரியா இறைவார்த்தையைக் கேட்டு மட்டும் இருக்கவில்லை.
அதை விட மேலான ஒரு செயலைச் செய்தார். அது என்ன என்று தொடர்ந்து
சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவார்த்தையைக் கேட்டு நடந்ததனால் பெற்றுபெற்றவரான மரியா
மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்ல அல்லது ஆண்டவரின்
வார்த்தையைக் கேட்டதனால் மட்டுமல்ல. மாறாக அதைவிட, தன்னுடைய
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவார்த்தையைக் கேட்டு, அதனைக்
கடைப்பிடித்து வந்தார். அதனால் அவர் பேறுபெற்றவர் ஆகின்றார்.
அதைதான் இயேசு தன்னுடைய தாய் பேறுபெற்றவர் என்று கூறிய
பெண்ணிற்குப் பதிலாகத் தருகின்றார்.
இயேசு அந்தப் பெண்ணுக்கு அளித்த பதில் மறைமுக, இயேசுவின்
வார்த்தையைக் கேளாமலும் அதன்படி நடக்காமலும் இருந்த பரிசேயர்களைக்
சாடுவதாக இருக்கின்றன. அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட
யூத இனத்தில் பிறந்திருந்தாலும் கடவுளின் மகனை நம்பவும் இல்லை,
அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதனால் அவர்கள் பேறுபெற்றவர்களாக
மாறாமல் போகின்றார்கள். இவர்களில் நாம் யாராக இருக்கின்றோம்.
இறைவார்த்தையைக் கேட்டு அதைக்க் கடைப்பிடித்து, பேறுபெற்றவரான
மரியாவைப் போன்று இருக்கின்றோமா? அல்லது இறைவார்த்தையைக் கேளாமலே
இருந்த பரிசேயர்களைப் போன்று இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
'நற்பெயர் பெற்றவர் யார்? அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்' (திபா 1:
1-2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் மரியாவைப்
போன்று ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து
பேறுபெற்றவர்கள் ஆகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
யோவேல் 3: 12-21
"குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்"
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். அவர் ஊருக்கு நடுவில் இருந்த ஓர்
ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு, மக்கட்கு பல நல்ல செய்திகளைச்
சொல்லிக்கொண்டு வந்தார். அவரை அவ்வூரில் இருந்த எல்லார்க்கும்
பிடித்தது. ஒரே ஒரு பெண்மணியைத் தவிர. அதற்குக் காரணம், அப்பெண்மணி
செய்துவந்த தவறுகளை இவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்தார். அதனால்தான்
அந்தப் பெண்மணிக்கு இவரைப் பிடிக்காமல் போனது.
அந்தப் பெண்மணி துறவியை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று
திட்டம் தீட்டினாள். அதனால் அவள் அறுசுவை உணவு தயாரித்து அதை
ஒரு தூக்குவாளியில் வைத்து, துறவியிடம் கொண்டு
போய்க்கொண்டுத்தாள். "சுவாமி! நீங்கள் சொன்னதெல்லாம் என்னுடைய
நன்மைக்காகத்தான் என்பதை இப்பொழுதுதான் உணர்ந்தேன். அதனால்
நான் மனம்திரும்பிவிட்டேன். என்னுடைய மனமாற்றத்தின் அடையாளமாக
இந்த அறுசுவை உணவை உங்கட்குத் தயாரித்துக் கொண்டுவந்திருக்கின்றேன்.
தயவுசெய்து இதைச் சாப்பிடுங்கள்" என்றாள்.
அவள் சொன்னதெல்லாம் உண்மையென நம்பி துறவி அவளிடம், "சரிம்மா!
நீ அன்போடு தயாரித்துக் கொண்டுவந்திருக்கின்ற இந்த உணவைச்
சாப்பிடுகிறேன். ஆனால், இப்பொழுது என்னால் சாப்பிட முடியாது;
இன்று நான் திருப்பயணம் மேற்கொள்கின்றேன். அதனால் நான்
போகும்வழியில் சாப்பிட்டுக் கொள்கின்றேன்" என்றாள். அந்தப்
பெண்மணியும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து
விடைபெற்றார்.
இதற்குப் பின்பு துறவி அந்தப் பெண்மணி கொடுத்த அறுசுவை உணவு இருந்த
தூக்கிவாளியை ஒரு கையிலும் பயணத்திற்குத் தேவையான பொருள்களை இன்னொரு
கையிலும் தூக்கிக்கொண்டு திருப்பயணம் மேற்கொண்டார். வழியில் ஒரு
மரத்தடியில் இரண்டு இளைஞர்கள் களைப்பாக அமர்ந்திருப்பதைக் கண்டார்.
உடனே அவர் அவர்களருகில் சென்று, "தம்பிகளா! உங்களைப் பார்ப்பதற்கு
மிகவும் களைப்பாக இருப்பது போன்று தெரிகின்றது. என்னிடம் கொஞ்சம்
உணவு இருக்கின்றது. அதைச் சாப்பிடுகிறீர்களா...?" என்று
கேட்டார். அவர்கள் ஆம் என்பதுபோல் தலையாட்டினார்கள். பின்னர்
அவர் தான் கொண்டு வநதிருந்த தூக்குவாளியைத் திறந்து அதிலிருந்த
உணவை அவர்கட்குச் சாப்பிடக் கொடுத்தார். அவர்கள் வயிறார உண்டார்கள்.
அவர்களோடு அவர் பேசுகையில்தான் தெரிந்தது, அவர்கள் இருவரும் பட்டணத்தில்
வேலைபார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவதும், எந்தப் பெண்மணி
தனக்கு உணவு சமைத்துக் கொடுத்தாளோ, அந்தப் பெண்மணியின் இரு மகன்கள்
என்பதும்.
தொடர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அந்த இரண்டு இளைஞர்களும்
மயக்கம் போட்டுக் கீழே விழுந்து இறந்துபோனார்கள். அவரோ ஒன்றும்
புரியாமல் திகைத்துநின்றார். அந்நேரத்தில் அங்கு வந்து ஒருசிலர்
துறவிதான் அந்த இரண்டு இளைஞர்களைக் கொன்றுபோட்டுவிட்டார் என்று
அவரை ஊரில் இருந்த நடுவரிடம் இழுத்துக்கொண்டு போனார்கள்.
நடுவர் அவரை விசாரிக்கையில் துறவி, அந்த உணவை, தான் தயாரிக்கவில்லை
என்றும் அந்த இரண்டு இளைஞர்களுடைய தாய்தான் தனக்குத் தயாரித்துக்
கொடுத்தார் என்றும் உண்மையை உரக்கச் சொன்னார். இதனால் நடுவர்,
துறவியை நஞ்சு அல்லது விஷம் வைத்துக் கொல்ல முயன்ற அந்த இரண்டு
இளைஞர்களின் தாயைச் சிறையில் அடைத்தார். அந்தப் பெண்மணியோம
'துறவிக்குக் கெடுதல் செய்யப்போய் நமக்கே அது வினையாகிவிட்டதே!
என்று நினைத்துக் காலமெல்லாம் சிறைக் கம்பிகளை எண்ணிக்
கொண்டிருந்தார்.
தீமையை விதைத்தால், தீமையைத்தான் அறுவடை செய்யவேண்டும் என்ற
செய்தியை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது.
இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்களை அழித்தொழிக்க முயன்ற
வேற்றினத்தார்க்கு எத்தகைய தண்டனை கிடைக்கப் போகிறது என்பதை எடுத்துச்
சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
தீர்ப்பு வழங்கக் காத்திருக்கும் இறைவன்
இஸ்ரேயலின் மீது படையெடுத்து வந்த ஆசிரியர்கள், இஸ்ரயேலில் இருந்த
தீயவர்களை மட்டுமல்லாது குற்றமற்றவர்களுடைய இரத்தத்தையும்
சிந்தினீர்கள். இதனால் ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தண்டியாது
விடேன்; அவர்கட்குத் தீர்ப்பு வழங்குவேன் என்று சொல்வதாக இருக்கின்றது
இன்றைய முதல் வாசகம். குற்றமற்றவர்களைக் கொடுமைப்படுத்திய
வேற்றினத்தாரைப் போன்று நாமும் குற்றமற்றவர்களைக் கொடுமைப் படுத்தினால்,
அதற்கான தண்டனையைப் பெறுவோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இஸ்ரேயல் மக்கட்குப் புகலிடமாக இருக்கும் இறைவன்
ஆண்டவராகிய கடவுள் தீயவர்களைத் தண்டிக்கப் போவதாகச் சொல்வதுடன்,
அவருடைய மக்களாகிய இஸ்ரயேலுக்கு புகலிடமாக இருக்கப் போவதாகவும்
அவர்கட்குக் கடவுளாக இருந்து, எல்லா நலன்களையும் அளிக்கப் போவதாகவும்
இறைவாக்கினர் யோவேல் வழியாக எடுத்துக் கூறுகின்றார். நாமும்
கடவுளுடைய மக்களாக இருக்கின்றபோது, அவருடைய வழியில் நடக்கின்றபோது,
அவர் நமக்கு எல்லா நலன்களையும் தருவார் என்பது உறுதி.
சிந்தனை
'உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள்' (எரே
26: 13) என்பார் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், நாம் நம்மிடமிருந்து
தீமையைத் தவிர்த்துவிட்டு, ஆண்டவரின் சொல்லுக்குச் செவி
சாய்ந்து, அவருடைய அன்பு மக்களாகி மாறி, அவருடைய அருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|