|
|
11 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
27ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 1: 13-15; 2: 1-2
குருக்களே, சாக்கு உடை உடுத்திக் கொண்டு தேம்பி அழுங்கள்; பலிபீடத்தில்
பணிபுரிவோரே! அலறிப் புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே,
சாக்கு உடை அணிந்தவர்களாய் இரவைக் கழியுங்கள்; ஏனெனில், உங்கள்
கடவுளின் வீட்டில் தானியப் படையலும் நீர்மப் படையலும் இல்லாமற்
போயின. உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத்
திரட்டுங்கள்; ஊர்ப் பெரியோரையும் நாட்டில் குடியிருப்போர் அனைவரையும்
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தில் கூடிவரச் செய்யுங்கள்;
ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள். மிகக் கொடிய நாள் அந்த நாள்!
ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; எல்லாம் வல்லவர் அழிவை அனுப்பும்
நாளாக அது வரும். சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; என்னுடைய
திருமலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்கள்
அனைவரும் நடுங்குவார்களாக!
ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது.
அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும்
சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல், ஆற்றல்மிகு
வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே
நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதும்
இல்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 9: 1-2. 5,15. 7b-8 (பல்லவி: 8a)
Mp3
=================================================================================
பல்லவி: உலகிற்கு ஆண்டவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.
1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு
உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உம்மை முன்னிட்டு
மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப்
பாடுவேன். பல்லவி
5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது
பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். 15 வேற்றினத்தார்
வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து
வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. பல்லவி
7b ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி
வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார். 8
உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு
நேர்மையான தீர்ப்புக் கூறுவார். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 12: 31b-32
அல்லேலூயா, அல்லேலூயா! இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்கு
உள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான்
மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால்
ஈர்த்துக்கொள்வேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி
உங்களிடம் வந்துள்ளது அல்லவா!
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 15-26
அக்காலத்தில் மக்களுள் சிலர் இயேசுவைக் குறித்து, "பேய்களின்
தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்"
என்றனர்.
வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து
ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களிடம் கூறியது:
"தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும்
பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்துவிடும்.
சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போனால் அவனது
அரசு எப்படி நிலைத்து நிற்கும்?
பெயல்செபூலைக் கொண்டு நான் பேய்களை ஓட்டுகிறேன் என்கிறீர்களே.
நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால்
உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?
ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.
நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி
உங்களிடம் வந்துள்ளது அல்லவா! வலியவர் ஆயுதம் தாங்கித் தம்
அரண்மனையைக் காக்கிறபோது அவருடைய உடைமைகள் பாதுகாப்பாக
இருக்கும். அவரைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை
வென்றால் அவர் நம்பியிருந்த எல்லாப் படைக்கலங்களையும்
பறித்துக் கொண்டு, கொள்ளைப் பொருளையும் பங்கிடுவார்.
என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து
மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்.
ஒருவரை விட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து
திரிந்து இளைப்பாற இடம் தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல்,
'நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச்
சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி
அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று
தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள்
புகுந்து அங்கே குடியிருக்கும். அவருடைய பின்னைய நிலைமை
முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 11: 15-26
நிறைகளைப் பார்க்காமல் குறைகளைப் பார்க்கும் உலகம்
நிகழ்வு
அது ஓர் அரசாங்கப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தில், ஐந்தாம்
வகுப்பு மாணவர்கட்கு வாய்ப்பாட்டுப் பாடம் நடத்தத் தொடங்கினார்
ஆசிரியர். அதன் பொருட்டு அவர் கருப்பலகையில் இவ்வாறு எழுதத் தொடங்கினார்:
"ஓர் எட்டு ஏழு, ஈரெட்டு பதினாறு; மூவெட்டு இருபத்து நான்கு...
பைத்தெட்டு எண்பது."
இதைப் பார்த்துவிட்டு, ஆசிரியர் வாய்ப்பாட்டைத் தவறாக எழுதியிருக்கின்றார்
என்று மாணவர்கள் அனைவரும் மெல்லச் சிரிக்கத் தொடங்கினார்கள்.
அவர்களைப் பார்த்த ஆசிரியர், "அன்பு மாணவச் செல்வங்களே! கரும்பலகையில்
நான் எழுதிய வாய்ப்பாடு தவறாக இருக்கின்றது என்றுதானே
சிரிக்கிறீர்கள். நான் எழுதியதை நன்றாகக் கவனித்தீர்கள் என்றால்,
முதல் வரியைத் தவிர, மற்ற எல்லா வரிகளும் சரியாக இருக்கின்றன
என்ற உண்மை உங்கட்குத் தெரியும். இதிலிருந்து உங்கட்கு ஒரு
வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுததரப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு
ஆசிரியர் தொடர்ந்து பேசினார்.
"நான் எழுதிய வாய்ப்பாட்டில் முதல் வரியைத் தவிர மற்ற எல்லா வரிகளும்
சரியாக இருந்தாலும் உங்களுடைய பார்வைக்கு தவறாக இருந்த முதல்
வரிதான் கண்ணில் பட்டது. இதுபோன்றுதான் மனிதர்களும்; நம்மிடம்
ஓராயிரம் நல்ல பண்புகள் இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு, நம்மிடம்
ஒரே ஒரு கெட்ட பண்பு இருந்தால் அதைப் பெரிதாகப் பார்ப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து முன்னேறிச்
சென்றால்தான் உங்களுடைய வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருக்கும்."
ஆசிரியர் சொன்ன இவ்வார்த்தைகட்குச் சரியென்பது போல் மாணவர்கள்
தலையாட்டினார்கள்.
ஆம், இந்த உலகம் ஒருவரிடம் இருக்கும் நிறைகளைப் பார்க்காமல்,
குறைகளைத்தான் பார்க்கும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த
நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு
பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார்.
அச்செயல் யூதர்களிடம் எத்தகைய எதிர்வினை ஆற்றுகின்றது? இயேசு
அவர்கட்கு எத்தகைய பதிலளித்தார்? என்பவற்றைக் குறித்துச்
சிந்தித்துப் பார்ப்போம்.
தூய ஆவியாரின் வல்லமையால் வல்ல செயல்களைச் செய்த இயேசுவின்மீது
விமர்சனம்
இயேசு பேய்பிடித்து பேச்சிழந்த ஒருவரிடமிருந்து பேயை ஓட்டுகின்றார்,
அதுவும் தூய ஆவியாரின் வல்லமையால் (திப 10:38). இயேசு செய்த இந்த
வல்லசெயலைப் பார்த்துவிட்டு, மக்கள் அவரைப் பாராட்டாமல்,
'தங்களிடைய பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கின்றார்'
என்று இறைவனுக்கு நன்றி செலுத்தாமல், 'இவர் பேய்களின் தலைவனாகிய
பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகின்றார் என்று குற்றம்
சாட்டுகின்றார்கள்.
முதலில் யார் இந்தப் பெயல்செபூல் எனத் தெரிந்துகொள்வது நல்லது.
பெயல்செபூல் என்றால் ஈக்களின் ஆண்டவர் (Lord of Flies) என்று
பொருள். இதனைப் பெலிஸ்தியர்கள் வழிபாட்டு வந்தார்கள். யூதர்களைப்
பொறுத்தளவில் பெயல்செபூல் ஒரு சாத்தான். அதனால்தான் இயேசு பேயை
ஓட்டியதும், பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டுகின்றார்
என்று விமர்சனம் செய்கின்றனர். யூதர்கள் தன்னை இப்படி விமர்சனம்
செய்துவிட்டார்களே என்று இயேசு மனம் சோர்ந்துவிடவில்லை. மாறாக,
அவர் அவர்கட்குத் தக்க பதிலடி கொடுக்கின்றார். அது என்ன என்பதை
இப்பொழுது பார்ப்போம்.
இயேசு கொடுத்த பதிலடி
யூதர்கள் இயேசுவின்மீது வைத்த விமர்சனத்திற்கு அவர் மூன்றுவிதமான
பதில்களை அளித்து அவர்களை வாயடைக்கின்றார். இயேசு அளித்த முதல்
பதில். தனக்கு எதிராகப் பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும்
என்பதாகும். சாத்தான் தன்னுடைய அரசு மேலும் மேலும் வளரவேண்டும்
என்று விரும்புமே ஒழிய, அது அழிந்துபோகவேண்டும் என்று விரும்புவதில்லை.
அந்த வகையில் இயேசு பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டவில்லை; தூய
ஆவியாரின் வல்லமையைக் கொண்டுதான் பேயை ஓட்டினார் என்பது உண்மையாகின்றது.
அடுத்ததாக இயேசு தன்னை விமர்சித்தவர்கட்கு அளித்த பதில், நான்
பெயல்செபூலைக் கொண்டு பேயை ஓட்டுகின்றேன் என்றால், நீங்கள்
யாரைக் கொண்டு பேயை ஒட்டுகின்றீர்கள் என்பதாகும். யூதர்களிடையே
பலர் பேயை ஒட்டிவந்தார்கள் அவர்கள் எல்லாம் எந்த வல்லமையால்
பேயை ஓட்டினார்கள்? யாரைக் கொண்டு பேயை ஓட்டினார்கள்? என்பதுதான்
இயேசுவின் கேள்வியாக, அவர் அவர்கட்கு அளிக்கும் பதிலாக இருக்கின்றது.
மூன்றாவதாக இயேசு அவர்கட்கு அளித்த பதில், வலியவரை அவரைவிட வலியவர்தான்
வெற்றி கொள்ள முடியும் என்பதாகும். இயேசு பேயை ஓட்டினார் என்றால்,
அவர் பேயைவிட வலிமை வாய்ந்தவர் என்றுதான் அர்த்தம். இவ்வாறு இயேசு
தான் பெயல்செபூலைக் கொண்டு அல்ல, தூய ஆவியாரின் வல்லமையால்
பேயை ஓட்டினேன் என்பதை நிரூபிக்கின்றார்.
இயேசு பேயை ஓட்டியதும் அதைத் தொடர்ந்து யூதர்கள் அவரை விமர்சித்ததும்
நமக்கொரு முக்கியமான செய்தி சொல்கின்றது. அதுதான் நல்லதைப்
பார்க்கப் பழகுதலாகும். ஆகையால், நாம் யூதர்களைப் போன்று இல்லாமல்,
இயேசுவைப் போன்று அடுத்தவர் நல்லது செய்கின்றபோது பாராட்டக் கற்றுக்
கொள்வோம்.
சிந்தனை
'உலகில் நான் என்னைத் தவிர வேறொரு சகோதரனைக் குறை சொல்லமாட்டேன்.
ஏனெனில் என் குறைகள் எனக்குத் தெரியும்' என்பார் ஷேக்ஸ்பியர்.
ஆகையால், நாம் அடுத்தவரைக் குறைகூறிக்கொண்டிருக்காமல், பிறர்
நல்லது செய்கின்றபோது பாராட்டக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக
இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
யோவேல் 1: 13-15, 2: 1-2
"உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்"
நிகழ்வு
இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் நிறையப் பொருள்செல்வம் சேர்க்க
வேண்டுமென்று காட்டிற்குச் சென்று நோன்பிருக்கத் தொடங்கினான்.
ஓராண்டு கழித்து இறைவன் அவனுக்கு முன்னம் தோன்றி, "மகனே! நீ
மேற்கொண்ட நோன்பினைக் கண்டு நான் வியந்து போனேன். இப்பொழுது நீ
என்னிடம் கேட்கின்ற வரத்தை நான் உனக்கு அளிக்கப் போகிறேன். உனக்கு
என்ன வரம் வேண்டுமோ, அதைக்கேள்" என்றார். உடனே அவன், "இறைவா!
எனக்கு நிறையப் பொருள்செல்வம் வேண்டும்" என்றார்.
"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு இறைவன் அவனிடம் ஒரு தடியைக்
கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு அவன், "இறைவா! நாம் உம்மிடம்
பொருள்செல்வம் கேட்டேன். ஆனால், நீர் என்னிடம் தந்திருப்பது ஒரு
தடி. இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?" என்று கேட்டான்
அந்த இளைஞன். "மகனே! இது சாதாரண தடி அல்ல, நீ கேட்கின்ற வரங்களை
தருகின்ற தடி. உனக்கு என்ன வேண்டுமோ அதை நினைத்துக்கொண்டு இந்தத்
தடியைத் தட்டினால் நீ நினைத்தது நடக்கும்" என்றார்.
"அப்படியானால் எனக்கு பத்துகிலோ தங்கம் வேண்டும் என்று
நினைத்துக்கொண்டு நான் இந்தத் தடியைத் தட்டினால், உடனே பத்துக்கிலோ
தங்கம் கிடைக்குமா...?" என்று கேட்ட இளைஞனிடம் "ஆமாம்" என்றார்
கடவுள்.
உடனே அவன், 'எனக்குப் பத்துக்கிலோ தங்கம் வேண்டும்' என்று
நினைத்துக்கொண்டு, கடவுள் தன்னிடம் கொடுத்த தடியைத் தரையில் தட்டினான்.
மறுகணம் அவனுக்கு முன்னம் பத்துக்கிலோ தங்கம் வந்து விழுந்தது.
அவனால் மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. "இறைவா! உம்முடைய கருணையோ
கருணை" என்று சொல்லி இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினான்.
அப்பொழுது இறைவன் அவனைப் பார்த்து, "மகனே! நீ செய்த நோன்பின்
பயனாகக் கிடைத்திருக்கும் இந்தத் தடியைப் பயன்படுத்தும்போது ஒன்றை
மனதில் வைத்துக்கொள்" என்றார். "என்னவென்று சொல்லுங்கள்" என்று
அவன் இறைவனைப் பணிந்துநின்றபோது, அவர் அவனிடம், "இனிமேல் நீ எக்காரணத்தைக்
கொண்டும் சினம் கொள்ளக்கூடாது. அப்படிச் சினம்கொண்டால், உன்னிடம்
இருக்கும் இருக்கும் இந்த அதிசயத் தடி மறைந்துபோய்விடும்" என்றார்.
"இதுவரைக்கும் நான் யார்மீதும் சினம்கொண்டதில்லை... இனிமேலும்
நான் யார்மீதும் சினம் கொள்ளப்போவதில்லை" என்று சொல்லிவிட்டு
கடவுளிடமிருந்து விடைபெற்றான்.
அவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வழியில் துறவி ஒருவர் அவன் எதிரே
வந்தார். அவர் அவனிடம் இருந்த தடியைப் பார்த்துவிட்டு, "இது என்ன?"
என்று கேட்டார். உடனே அவன் நடந்தது அனைத்தையும் அவரிடம் எடுத்துச்
சொன்னான். அதற்கு அவர் அவனிடம், "இப்பொழுது நீ பொற்காசுகளை
நினைத்துக்கொண்டு தடியைத் தட்டினால், பொற்காசுகள்
கிடைக்குமா...?" என்றான் அவர், "ஆமாம்" என்று சொல்லிவிட்டு,
அவன் தடியைத் தட்ட பொற்காசுகள் விழுந்தன. அவற்றைப் பார்த்து வியந்து
நின்று துறவி அவனிடம், "இந்தத் தடியை நாளைக்குத் தட்டினால்
பொற்காசுகள் கிடைக்குமா...? அடுத்த வாரம்...? அடுத்த மாதம்...?
அடுத்த ஆண்டு...? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவர் கேட்டதற்கெல்லாம்
பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டு வந்த அந்த இளைஞன், ஒரு கட்டத்தில்
பொறுமையை இழந்து, "ஆமாம். இதை எப்பொழுது தட்டினாலும் பொற்காசுகளைத்
தரத்தான் செய்யும்" என்று கத்தத் தொடங்கினான். மறுகணம் அவனிடம்
இருந்த தடி மறைந்துபோனது. அவனோ தன்னுடைய நிலையை நினைத்து
நொந்துகொண்டான்.
இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் பொருள்செல்வம் வேண்டி
நோன்பிருந்தான் அது அவனுக்கு கிடைத்தது. ஆனால், அவன் தன்னுடைய
சினத்தினால் இழந்துபோனான். இஸ்ரயேல் மக்கள் பல கருத்துகட்காக
நோன்பிருந்தார்கள்; நிறைய நன்மைகளைப் பெற்றார்கள். இன்றைய முதல்
வாசகத்தில் ஒரு கருத்திற்காக அவரால் நோன்பிருக்க அழைக்கப்படுகின்றார்கள்.
அது என்னவென்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நிகழவிருந்த அழிவிலிருந்து தப்பிக்க நோன்பிருக்க அழைப்பு
இஸ்ரயேல் மக்கள் ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகாரநாளில்
நோன்பிருப்பது வழக்கம் (லேவி 16: 29,31). அதை அவர்கள் தொடர்ந்து
கடைப்பிடித்து வந்தார்கள். ஒருசில சமயங்களில் அவர்கள் ஒருகுறிப்பிட்ட
கருத்துக்காக நோன்பிருந்திருக்கின்றார்கள். (2குறி 20:2, எஸ்
8:21, நெகே 9: 1-3, எரே 36:9). ஆனால், இன்றைய முதல் வாசகத்தில்
இறைவாக்கினர் யோவேல் இஸ்ரேயல் மக்களைப் பார்த்து, உண்ணா
நோன்புக்கென நாள் குறியுங்கள் என்று சொல்கின்றார். அது எதற்காக
என்றால், வெட்டுக்கிளிகள் எனப்படும் அசிரியர்களின் படையெடுப்பிலிருந்து
தப்பிக்க (எசா 36-37) யோவேல் கொடுத்த இந்த அனுப்பினை இஸ்ரயேல்
மக்கள் கேட்கவும் இல்லை; கடைப்பிடிக்கவும் இல்லை. இதனால் அவர்கள்
அசிரியர்களின் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
நாம் ஒவ்வொருவரும் இறையடியார்கள் வழியாகச் சொல்லப்படும் ஆண்டவருடைய
வார்த்தைக்குச் செவிமடுத்து வாழவேண்டும். இல்லையென்றால் இஸ்ரயேல்
மக்களைப் போன்றுதான் அழிவினைச் சந்திக்க வேண்டிவரும்.
சிந்தனை
'நீங்கள் அனைவரும் ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுங்கள்' (எரே
44: 24) என்பார் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், நாம் அனைவரும்
ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுத்து, அதன்படி வாழ முயற்படுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|