Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     10 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 27ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது.

இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 13 - 4: 2a


" எனக்கு எதிராக நீங்கள் கடுஞ்சொற்களை உதிர்த்து வந்தீர்கள்," என்கிறார் ஆண்டவர். ஆயினும், " உமக்கு எதிராக என்ன பேசினோம்?" என்று கேட்கிறீர்கள். கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவரது திருமுறைகளைக் கடைபிடித்து ஒழுகுவதாலும் படைகளின் ஆண்டவர் திருமுன் மனம் வருந்தி நடந்து கொள்வதாலும் நமக்கு என்ன பயன்? இனிமேல் நாங்கள், `ஆணவக்காரரே பேறுபெற்றோர்' என்போம். கொடியோர் தழைத்தோங்குவது மட்டுமல்ல, கடவுளை அவர்கள் சோதித்துப் பார்த்தாலும், தப்பித்துக் கொள்ளுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கூறவில்லையா?"

அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தோர் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டனர். ஆண்டவரும் உன்னிப்பாகக் கேட்டார். ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவரது பெயரை நினைந்து வாழ்வோருக்கென நினைவு நூல் ஒன்று அவர் திருமுன் எழுதப்பட்டது. " நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் எனது தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.

ஒரு தந்தை தமக்குப் பணிவிடை செய்யும் மகன்மீது கருணை காட்டுவது போல் நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன். அப்போது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும், கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை மீண்டும் கண்டுகொள்வீர்கள்.

" இதோ! சூளையைப் போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும்அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்துவிடும்," என்கிறார் படைகளின் ஆண்டவர்.

" ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்."


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 1: 1-2. 3. 4,6 (பல்லவி 40: 4a) Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திப 16: 14b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 5-13

அக்காலத்தில் இயேசு சீடர்களை நோக்கிக் கூறியது: " உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, `நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

உள்ளே இருப்பவர், `எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார்.

எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!"


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 11: 5-13

கேளுங்கள் கொடுக்கப்படும்

நிகழ்வு

பெண்ணொருவர் இருந்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில், பெரிய பொறுப்பில் இருந்தார். ஒருநாள் நண்பகல் வேளையில் அவருடைய அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து அவர் பேசியபோது, மறுமுனையில் அவருடைய வீட்டில் குழந்தையைக் கவனித்துக்கொண்டு வந்த ஆயா, அம்மா! குழந்தைக்கு கடுமையாகக் காய்ச்சல் அடிக்கின்றது... என்ன செய்வதன்றே தெரியவில்லை என்றார். இதைக்கேட்டு அதிர்ந்து போன அந்தப் பெண்மணி, தன்னுடைய நான்கு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வேகமாகக் கிளம்பி வந்தார்.

வழியில் மருந்தகம் ஒன்று அவருடைய கண்ணில் தென்படவே, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு மருந்தகத்திற்குச் சென்று, காய்ச்சலுக்கான மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வண்டிக்குத் திரும்பினார். அவர் தன்னுடைய வண்டிக்கு அருகில் வந்தபோதுதான் அவர்க்குத் தெரிந்தது. அவசரத்தில் வண்டிச்சாவி உள்ளே வைத்துப் பூட்டப்பட்டுவிட்டது என்று. அவர் வண்டியைத் திறப்பதற்கு எவ்வளவோ முயற்சி பார்த்தார், முடியவில்லை.

பின்னர் அவர் வீட்டிலிருந்த ஆயாவை அலைபேசியில் தொடர்புகொண்டு, குழந்தையின் நிலைமை எப்படி இருக்கின்றது என்று கேட்டுவிட்டு, வண்டிச்சாவியை வண்டிக்குள்ளே வைத்துப் பூட்டிவிட்டு செய்தியைச் சொன்னார். உடனே ஆயா, பக்கத்திலிலுள்ள கடைகளில் சட்டைதூக்கி (Coat Hanger) ஒன்றை வாங்கி, அதைவைத்து, கைப்பிடி பக்கத்தில் வைத்து ஓர் அழுத்து அழுத்தினால் கதவு எளிதாகத் திறந்துவிடும் என்றார். ஆயா சொன்ன இந்த ஆலோசனையின் பேரில் அவர் பக்கத்திலிருந்த ஒரு கடையில் சட்டை தூக்கி ஒன்றை வாங்கி, அதை வண்டிக் கதவில் இருந்த கைப்பிடியில் வைத்து அழுத்தினார். வண்டி திறக்கவில்லை. மீண்டும் மீண்டுமாக அழுத்திப் பார்த்தும் திறக்காமல் போகவே, அவர்க்கு அழுகை அழுகையாக வந்தது.

அந்த நேரத்தில் அவர் இறைவனை நோக்கி, இறைவா! என்னுடைய இந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவி புரியும் என்று உருக்கமாக மன்றாடினார். அப்பொழுது ஓர் இளைஞன் அழுக்கு உடையுடன், ஒரு பழைய இரண்டு சக்கர வண்டியை ஓட்டிக்கொண்டு வேகமாக வந்தான். அவன் அப்பெண்மணி பார்ப்பதற்கு மிகவும் பரிதாப இருக்கிறார் என்று, ஏதாவது உதவிவேண்டுமா? என்று அவரிடம் கேட்டான். பெண்மணியோ நடந்ததையெல்லாம் எடுத்துக்கூறி, உங்களால் வண்டியைத் திறக்க உதவசெய்ய முடியுமா...? என்று கேட்டுவிட்டு தன்னுடைய கையில் இருந்த சட்டைதூக்கியைக் கொடுத்தார்.

அந்த இளைஞனோ பெண்மணி கொடுத்த சட்டைதூக்கியை வாங்கி, வண்டிக் கதவில் இருந்த கைப்பிடியில் வைத்து ஓர் அழுத்து அழுத்த, மறுநொடி கதவு திறந்து கொண்டது. பெண்மணிக்கு மகிழ்ச்சி தாங்கமுடியில்லை. இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட எனக்கு உதவிசெய்த நீங்கள் மிகவும் நல்லவர் என்று சொல்லி அந்த இளைஞனுக்கு நன்றி சொன்னார். அதற்கு அவன், அம்மா! நான் நல்லவன் எல்லாம் கிடையாது. கடந்த வாரம்தான் நான் ஒரு நான்கு சக்கர வண்டியைத் திருடிய குற்றத்திற்காக சிறைக்குச் சென்றுவிட்டு, இப்பொழுது சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறேன் என்று சொல்லிவிட்டு தன்னுடைய இரு சக்கர வண்டியை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.

இதைப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணி, வானத்தை அண்ணார்ந்து பார்த்து, இறைவா! என்னுடைய வண்டியின் கதவைத் திறக்க சாதாரண ஒரு மனிதனைத்தான் கேட்டேன்; ஆனால், நீர் வண்டியின் கதவைத் திறப்பதில் கைதேர்ந்த ஒரு மனிதனை அனுப்பி வைத்தாயே, அதற்காக உமக்கு நன்றி என்றார்.

வேடிக்கையான ஒரு நிகழ்வாக இருந்தாலும் இறைவனிடம் நாம் தொடர்ந்து வேண்டுகின்றபோது, அவர் நம்முடைய வேண்டுதலுக்கு நிச்சயம் செவிசாய்ப்பார் என்ற செய்தியை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இறைவனிடம் இடைவிடாது மன்றாடவேண்டும் என்ற செய்தியைச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கேளுங்கள் உங்கட்குக் கொடுக்கப்படும்

நற்செய்தியில் இயேசு, இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுகின்றபோது, அந்த மன்றாட்டு கேட்கப்படும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றார். அதை விளக்க ஓர் உவமையையும் சொல்கின்றார்.

இயேசு சொல்லும் உவமையில் ஒரு முக்கியமான செய்தி இருக்கின்றது. அது என்னவெனில், உவமையில் வருகின்ற - தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளோடு படுத்திருக்கின்ற - மனிதர் தன்னைத் தேடிவந்த நண்பர்க்கு அப்பங்களைக் கொடுக்க விருப்பமில்லாவிட்டாலும், நண்பரின் தொல்லையின் பொருட்டு அப்பங்களைக் கொடுக்கின்றார். அப்படியிருக்கும்போது, அன்பே வடிவான இறைவன் தன் பிள்ளைகள் கேட்கின்றபோது அவர்கட்கு கொடுக்காமல் போவாரா...? நிச்சயம் கொடுப்பார் என்பதுதான் இயேசு சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

உவமையின் வழியாக இயேசு சொல்லும் இரண்டாவது செய்தி, இறைவனிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறைவனிடம் கடைசி நேரத்தில் கேட்டுக்கொண்டிருக்கக்கூடாது; மாறாக, தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். அப்படி நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தால், அதற்கான பதில் நிச்சயம் (லூக் 18: 1-8) கிடைக்கும். இன்றைக்குப் பலர் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல், ஒன்றைக் கடைசி நேரத்தில் இறைவனிடம் கேட்டுவிட்டு, அதை இறைவன் கொடுக்கவில்லை என்று புலம்புவதைக் காணமுடிகின்றது. இத்தகையோர்க்கு இயேசு சொல்லும் பதில்தான், நீங்கள் இறைவனிடம் கேளுங்கள்... கேட்டுக்கொண்டே இருங்கள் என்பதாகும்.

ஆகையால், நாம் இறைவனிடம் ஒரு தந்தைக்குரிய வாஞ்சையுடனும் தொடர்ந்தும் மன்றாடுவோம். அதன்மூலம் அவருடைய ஆசியைப் பெறுவோம்.

சிந்தனை

இறைவனிடம் இடைவிடாது மன்றாடுங்கள் (1 தெச 5: 17) என்பார் பவுல். . ஆகையால், நாம் இறைவனிடம் இறைவிடாது மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
மலாக்கி 3: 13-4:2a

இதோ அந்த நாள் வருகின்றது

நிகழ்வு

பிரபல ரவுடி ஒருவன் இருந்தான். அவனுக்கும் ஒரு கொலைக் குற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்று காவல்துறை அவனைக் கைசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லவோ அல்லது அவன்தான் கொலைக் குற்றவாளி என்று நிரூபிக்கவோ போதிய ஆவணத்தில் இல்லாமையால் அவன் விடுதலை செய்யப்பட்டான்.

இந்த வழக்கு முடிந்தபின்பு அந்தப் பிரபல ரவுடி நீதிமன்ற வளாகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தான். அவனை எதிர்கொண்டு வந்த நீதிபதி அவனருகே வந்து, இப்பொழுது நீ சட்டத்தில் இருக்கின்ற ஓட்டைகளை கொண்டு, தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால், எல்லார்க்கும் பெரிய நடுவரான ஆண்டவரின் நீதித் தீர்ப்பிலிருந்து உன்னால் தப்ப முடியாது. அதனால் கவனமாக இரு என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார். நீதிபதி அவனிடம் சொல்லிவிட்டுச் சென்ற இவ்வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தை வெகுவாகத் தைத்தன. இதனால் அவன் தன்னுடைய தவறை உணர்ந்து திருந்தி நடக்கத் தொடங்கினான்.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவர்க்கும் நீதித் தீர்ப்பு என்ற உண்டு. இதில் ஒவ்வொருவர்க்கும் அவரவர் செயல்கட்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்படும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் ஆண்டவரின் நாளைக் குறித்துப் பேசுகின்றது. அந்நாளில் என்னென்ன நடக்கும் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக சிந்தித்துப் பார்ப்போம்.

தீமை செய்வோர்க்குத் தண்டனை உண்டு

மலாக்கி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் நாளைக் குறித்துத் தெளிவாகச் சொல்கின்றது. அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது முன்னம், இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதியில் வரும் இதையொட்டிய கருத்துக்களைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.



இன்றைய முதல் வாசகத்தின் முதல் பகுதியில், ஒருசிலர், இந்த உலகத்தில் நல்லவர்கள் அழிவுறுவதும் கொடியவர்கள் தழைத்தோங்குவதுமாக இருக்கின்றார்கள். அதனால் ஆண்டவர்க்கு ஊழியம் செய்வதும் அவர்க்கும் அஞ்சி நடப்பதும் வீண் எனப் பேசிக்கொள்கின்றார்கள். அப்பொழுது இறைவாக்கினர் மலாக்கி, அவர்கள் பேசிக்கொள்வதற்குப் பதில்சொல்லும் வண்ணமாக, ஆண்டவரின் நாள் வருகின்றது. அப்பொழுது, ஆணவக்காரர், கொடுமை செய்வோர் யாவரும் தீக்குள் போடப்பட்ட சருசாவர் என்று கூறுகின்றார். அப்படியானால், கொடியோர் தழைத்தோங்குவர் என்ற குற்றானது பொய்யாகின்றது. மாறாக, கொடியோர் அவர்கள் செய்த செயல்கட்கு ஏற்ப தண்டனையைப் பெறுவர் என்பது உண்மையாகின்றது.

ஆண்டவர்க்கு அஞ்சி நடக்கின்றவர்மீது நீதியின் கதிரவன் உதித்தெழுவான்

ஆண்டவரின் நாள் வருகின்றபோது கொடியோர் தங்களுடைய செயல்கட்கு ஏற்ப தண்டனை பெறுவர் என்று சொன்ன இறைவாக்கினர் மலாக்கி, தொடர்ந்து ஆண்டவர்க்கு அஞ்சி, அவருடைய வழியில் நடப்போர் எத்தகைய ஆசியைப் பெறுவர் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார். ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் பெறுகின்ற ஆசியாக, இறைவாக்கினர் மலாக்கி சொல்லக்கூடியது, அவர்கள்மீது தீயின் கதிரவன் உதித்தெழுவான் என்பதாகும். மேலும் அவர்கள்மீது நலம் தரும் மருந்து இருக்கும் என்பதாகும்.

சில சமயங்களில் ஒருசிலர், இறைவனுக்கு ஊழியம் செய்து அல்லது இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்து என்ன நன்மையைப் பெற்றுக்கொண்டுவிட்டேன் என்று பேசிக்கொள்வதுண்டு. ஆனால், இன்றைய இறைவார்த்தை இதற்கான பதிலை மிகத் தெளிவாக அளிக்கின்றது. எவர் ஒருவர் இறைவனுக்கு அஞ்சி, அவர்க்கு பணிசெய்து வாழ்கின்றாரோ, அவர்மீது நீதியின் கதிரவன் உதித்தெழுவதோடு மட்டுமல்லாமல், அவருடைய இறக்கையில் நலம் தரும் மருந்தானது இருக்கும்.

திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு கூறுவார், ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள். (திபா 100: 2). ஆம், நாம் ஆண்டவர்க்கு அஞ்சி, அவரை மகிழ்ச்சியுடன் வழிபடவேண்டும். பிறர் சொல்கிறார் என்பதற்காக நாம் இறைவனை வழிபடாமல் இருப்பின் அல்லது அவர்க்கு அஞ்சி வாழாமல், நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் போன்று நம்முடைய மனம்போன போக்கில் வாழ்ந்தோமெனில், திடீரென்று ஆண்டவருடைய நாள் வருகின்றபோது, நாம் அனைவரும் அதற்கான தண்டனையைப் பெறுவோம் என்பது உறுதி. எனவே, நாம் அஞ்சி அஞ்சிநடந்து, அவர் வரும்நாளுக்காக எதிர்நோக்குடன் காத்திருப்போம்.

சிந்தனை

ஆண்டவர்க்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவார் (திபா 34: 7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் ஆண்டவர்க்கு அஞ்சி, அவர் காட்டும் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!