|
|
09 அக்டோபர்
2019 |
|
|
பொதுக்காலம்
27ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
ஆமணக்கு செடிக்காக நீ வருந்துகிறாய்; நினிவே மாநகருக்கு நான்
இரக்கம் காட்டாமல் இருப்பேனா?
இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 4: 1-11
அந்நாள்களில் யோனா கடுஞ்சினங் கொண்டு ஆண்டவரிடம் முறையிட்டார்.
"
ஆண்டவரே, நான் என் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே
சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன்.
நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா
அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும். அழிக்க
நினைப்பீர்; பிறகு உம் மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பதும் எனக்கு
அப்போதே தெரியும். ஆகையால் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக்
கொள்ளும். வாழ்வதை விடச் சாவதே எனக்கு நல்லது"
என்று
வேண்டிக்கொண்டார்.
அதற்கு ஆண்டவர், "
நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?"
என்று
கேட்டார். யோனாவோ நகரை விட்டு வெளியேறினார்; நகருக்குக் கிழக்கே
போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு அவர் தமக்கு ஒரு பந்தலை அங்கே
அமைத்துக் கொண்டு, நகருக்கு நிகழப் போவதைப் பார்ப்பதற்காக அதன்
நிழலில் அமர்ந்திருந்தார்.
கடவுளாகிய ஆண்டவரது ஏற்பாட்டின்படி ஆமணக்குச் செடி ஒன்று அங்கே
முளைத்தது. அது வளர்ந்து யோனாவின் தலைக்கு நிழல் தந்து அவரது
மனச்சோர்வை நீக்கியது. அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு யோனா
மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால் ஆண்டவரது கட்டளைப்படி மறுநாள் பொழுது விடியும் நேரத்தில்
ஒரு புழு வந்து அந்த ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து
போயிற்று. கதிரவன் எழுந்தபின் கடவுளின் கட்டளைப்படி, கிழக்கிலிருந்து
அனற்காற்று வீசிற்று. கடும் வெயில் யோனாவின் தலையைத் தாக்கவே
அவருக்கு மயக்கம் உண்டாயிற்று. "
வாழ்வதை விடச் சாவதே எனக்கு
நல்லது"
என்று அவர் சொல்லி, தமக்குச் சாவு வரவேண்டுமென்று
வேண்டிக் கொண்டார்.
அப்பொழுது கடவுள் யோனாவை நோக்கி, "
ஆமணக்குச் செடியைக்
குறித்து நீ இவ்வாறு சினங்கொள்வது முறையா?"
என்று கேட்டார்.
அதற்கு யோனா, "
ஆம், முறைதான்; செத்துப்போகும் அளவுக்கு நான்
சினங் கொள்வது முறையே"
என்று சொன்னார்.
ஆண்டவர் அவரை நோக்கி, "
அந்தச் செடி ஓர் இரவில்
முளைத்தெழுந்து, மறு இரவில் முற்றும் அழிந்தது. நீ அதற்காக உழைக்கவும்
இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அதற்கு இவ்வளவு இரக்கம்
காட்டுகிறாயே! இந்த நினிவே மாநகரில் இலட்சத்து இருபதாயிரத்துக்கும்
மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். வலக்கை எது, இடக்கை எது என்று
கூடச் சொல்லத் தெரியாத இத்தனை மக்களும், அவர்களோடு எண்ணிறந்த
கால்நடை களும் உள்ள இந்த மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா?"
என்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
- திபா 86: 3-4. 5-6. 9-10 (பல்லவி: 15b)
Mp3
=================================================================================
பல்லவி: என் தலைவரே! நீரே பேரன்பும் உண்மையும் கொண்டவர்.
3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும்
உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச்
செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
பல்லவி
5 என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும்
அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்
செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். பல்லவி
9 என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம்
திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்;
நீர் ஒருவரே கடவுள்! பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
உரோ 8: 15
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே
பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், "
அப்பா, தந்தையே"
என அழைக்கிறோம்.
அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆண்டவரே, எங்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-4
அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்
கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர்
அவரை நோக்கி, "
ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக்
கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்"
என்றார்.
அவர் அவர்களிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு
சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது
ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத்
தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள்
மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு
உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்"
என்று கற்பித்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
லூக்கா 11: 1-4
" இறைவேண்டல் செய்வோரை எவராலும் வெற்றிகொள்ள முடியாது"
நிகழ்வு
அது ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் பெரியவர் ஒருவர் இருந்தார்.
அவர் எல்லார்க்கும் எடுத்துக்காட்டன வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
மட்டுமல்லாமல், தன்னிடம் உதவி என்று வந்தவர்கட்கு முகம் கோணாம்
உதவி செய்தார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தலைமைச் சாத்தான், தன்னிடம்
பணியாற்றி வந்த குட்டிச் சாத்தானை அழைத்து, "
பெரியவருடைய மனதை
எப்படியாவது குழப்பி, அவரைப் பாவம் செய்ய வை"
என்று சொல்லி அனுப்பியது.
குட்டிச் சாத்தானும் தலைமைச் சாத்தான் சொன்னதற்கிணங்க கிராமத்தில்
இருந்த பெரியவரைப் பாவத்தில் விழ வைப்பதற்குப் புறப்பட்டுச்
சென்றது. குட்டிச் சாத்தான் பெரியவர் இருந்த இடத்திற்குச் சென்றபோது
பெரியவர் இறைவனின் திருப்பெயரைச் சொல்லிப் புகழ்ந்துகொண்டே இருந்தார்.
குட்டிச்சாத்தான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. '
என்றாவது
ஒருநாள் இவர் இறைவனின் திருப்பெயரைச் சொல்லித் தொழாமல் இருப்பாரல்லவா...
அப்பொழுது இவரைப் பாவத்தில் விழச் செய்துவிடலாம்'
என்று திட்டம்
தீட்டியது.
ஒரு வாரம், இரண்டு வாரம் என்று நாள்கள் சென்றுகொண்டிருந்தே ஒழிய
குட்டிச் சாத்தானால் பெரியவரைப் பாவத்தில் விழச் செய்ய முடியவில்லை.
காரணம் அவர் இறைவனின் திருப்பெயரை இடைவிடாது உச்சரித்துக்கொண்டும்
தொழுதுகொண்டும் இருந்தார். இதனால் பொறுமை இழந்த குட்டிச்
சாத்தான் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு தலைமைச் சாத்தானிடம்
திரும்பிச் சென்றது. தலைமைச் சாத்தான் குட்டிச் சாத்தானிடம்,
"
கொடுக்கப்பட்ட பணி என்னவாயிற்று?"
என்று கேட்டபோது, அது அதனிடம்
நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தது. இதைக்
கேட்டுவிட்டு, '
இறைவனிடம் வேண்டுகின்ற மனிதரை யாராலும்
வெற்றிகொள்ள முடியாது. அதனால் அவரை ஒன்றும் செய்யாமல் இருப்பதே
நமக்கு நல்லது'
என்று வேறொரு வேலையைப் பார்க்கத் தொடங்கியது;
ஆம், இறைவேண்டல் செய்கின்ற மனிதரை யாராலும் எதனாலும்
வெற்றிகொள்ள முடியாது. அதற்கு இந்தக் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நற்செய்தியில் இயேசு தன் சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,
அவர்கட்கு இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுத் தருகின்றார். அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தன் சீடர்க்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுத்த திருமுழுக்கு
யோவான்
நற்செய்தியில், இயேசுவிடம் வருகின்ற அவருடைய சீடர்கள்,
"
யோவான், தம் சீடர்க்குக் இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல்,
எங்கட்குக் கற்றுக்கொடும்"
என்கின்றார்கள். இங்கு ஒரு செய்தியை
நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அது என்னவென்றால்,
திருமுழுக்கு யோவான் என்றால், மெசியாவின் வருகைக்காக மக்களைத்
தயார் செய்தவர்; யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்தவர்
என்றுதான் நாம் அதிகமாக அறிந்து வைத்திருக்கின்றோம்; ஆனால்,
யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்
கொடுத்தார் என்ற செய்தி சற்றுப் புதுமையாகவும் புதிதாகவும் இருக்கின்றார்.
யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுக்
கொடுத்தார் எனில், அவர் இறைவேண்டலில் எந்தளவுக்கு ஆழம் கண்டிருப்பார்
என்பதை யோசித்துப் பார்த்துக் கொள்ளலாம். அதனால்தான் என்னவோ இயேசு,
"
மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர்
ஒருவருமில்லை"
(லூக் 7: 28) என்று கூறுகின்றார் போலும்.
தன் சீடர்கட்கு இறைவேண்டல் செய்யக் கற்றுக்கொடுத்த இயேசு
இயேசுவின் சீடர்கள் அவரிடம், இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுக்கொடும்
என்று சொன்னதும், அவர் அவர்களிடம், "
இறைவனிடம் வேண்டும்பொழுது
இவ்வாறு வேண்டுங்கள்"
என்று சொல்லிவிட்டு ஓர் இறைவேண்டலைக் கற்றுத்
தருகின்றார்.
இயேசு தம் சீடர்க்கு கற்றுத்தரும் இறைவேண்டலின் முக்கியத்துவத்தை
உணர்வதற்கு முன்னம், அவர் இறைவேண்டலுக்குத் தன்னுடைய வாழ்வில்
எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்பதை அறிந்துகொள்வது
நல்லது. இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனிடம்
வேண்டினார். கீழ்காணும் திருவிவிலியப் பகுதிகள் அதற்குச்
சான்றுகளாக இருக்கின்றன. (லூக் 3:21; 5:16; 6:12 மாற் 1: 35).
இப்படி இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்வராய் இருந்ததால்தான் இயேசு
தன் சீடர்க்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத் தருகின்றார்.
இயேசு தன சீடர்க்கு கற்றுத்தரும் இறைவேண்டலில் இரண்டு பகுதியில்
இருக்கின்றன. முதல் பகுதி இறைவனைத் துதிப்பதாகவும் இரண்டாவது
பகுதி நமது தேவைகட்காக மன்றாடுவதாகவும் இருக்கின்றது. இதில்
குறிப்பிட்டுச் சொல்லேண்டும் என்றால், இறைவனிடம் வேண்டுகின்றபோது,
அவருடைய திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேறவும் அவருடைய ஆட்சி இம்மண்ணுலகில்
மலரவும் வேண்டினால், நம்முடைய மன்றாட்டுக் கேட்கப்படும் என்பதாகும்.
ஏனெனில், நம் இறைவன் நாம் கேட்கும் முன்னமே நம்முடைய தேவைகளை
அறிந்துவைத்திருப்பவராக இருக்கின்றார்.
ஆகையால், இறைவனிடம் வேண்டும்போது அவருடைய திருவுளம் நிறைவேற மன்றாடுவோம்.
நிச்சயமாக நம்முடைய மன்றாட்டுகள் கேட்கப்படும் என்பது உறுதி.
சிந்தனை
'
இறைவேண்டல், இவ்வுலகை நகர்த்துகின்றவரின் கைகளை நகர்த்தும் வல்லமை
கொண்டது'
என்பார் சோரேன் கீர்க்ககார்ட் என்ற மெய்யியலார். ஆகையால்,
நாம் இறைவனிடம் மிகவும் உருக்கமாக மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
2
=================================================================================
யோனா 4: 1-11
கனிவும் இரக்கமும் மிகுந்த பொறுமையும் அளவில்லா அன்பும் உள்ள
இறைவன்
நிகழ்வு
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள விஷாவ் நகரில் நீதிபதி ஒருவர் இருந்தார்.
கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்து வந்த அவர் நேர்மையான முறையில்
தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதனால் மக்களிடம் அவர்க்குத்
தனி மரியாதை இருந்தது.
ஒருநாள் அவரிடம் ஒரு வழக்கு வந்தது.. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்
அவருடைய பால்ய காலத்து நண்பர்; அவர் செய்த குற்றம் அவருடைய அண்டை
வீட்டாருடைய நிலத்தை அபகரிக்க முயன்றது. குற்றவாளி நீதிபதியின்
நெருங்கிய நண்பராக இருப்பதால், நீதிபதி அவருடைய குற்றத்தை மன்னித்து,
அவரை விடுதலை செய்துவிடுவார் என்றுதான் நீதிமன்றத்தில் இருந்த
எல்லாரும் எண்ணினார்கள்.. ஆனால், நீதிபதி குற்றவாளியை அப்படியே
விட்டுவிடவில்லை. மாறாக, அவர் அந்தக் குற்றவாளிக்கு அவர் செய்த
குற்றத்திற்கு ஏற்றவாறு தண்டனை கொடுத்தார். இதைக் கண்டு நீதிமன்றத்தில்
இருந்த எல்லாரும் வியந்துபோனார்கள்.
இதைவிடமும் வியக்கத்தக்க ஒரு செயலும் நடந்தது. அது
என்னவென்றால், நீதிபதியின் நண்பரும் குற்றவாளியுமானவர்
செலுத்தவேண்டிய அபராதத் தொகையை இவரே தன்னுடைய கையிலிருந்து
செலுத்தி, அவரை விடுதலை செய்தார். இதைப் பார்த்துவிட்டு மக்கள்
அனைவரும், "
இந்த நீதிபதிக்குத் தன்னுடைய நண்பர்மீது எவ்வளவு
இரக்கம் இருந்திருந்தால், இவர் இவருடைய நண்பர் செலுத்தவேண்டிய
அபராதத் தொகையை இவரே செலுத்தியிருப்பார்!"
என்று பெருமையாகப்
பேசிக்கொண்டு சென்றார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற நீதிபதி எப்படி தன்னுடைய நண்பர்மீது
மிகுந்த இரக்கமும் அன்பும் கொண்டிருந்தாரோ, அதுபோன்று
ஆண்டவராகிய கடவுள் நம் ஒவ்வொருவர்மீதும் இரக்கமும்
அன்பும்கொண்டுள்ளார். இறைவாக்கினர் யோனா நூலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் இறைவனின் இரக்கத்திற்கும்
அன்பிற்கும் மிகுந்த பொறுமைக்கும் சான்றாக இருக்கின்றது. அது
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நினிவே மக்களை அழிக்காமல் அவர்கள்மேல் இரக்கம்கொண்ட இறைவன்
ஆண்டவரின் சொல்கேட்டு இறைவாக்கினர் யோனா நினிவே மக்களிடம்
சென்று, "
இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்"
என்று
சொன்னபோது, அங்கிருந்த அரசன் முதல் எல்லாரும் சாக்கு உடை
உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருக்கத்
தொடங்குகின்றார்கள். இதனால் நினிவே மக்களை அழிப்பதாகச் சொன்ன
இறைவன், அவர்களை அழிக்காமல் விடுகின்றார்.
இறைவனுடைய விருப்பம் தவறு செய்கின்றவர்கள் தங்களுடைய தவறை
உணர்ந்து மனம்மாறவேண்டும் என்பதுதானே ஒழிய, அவர்கள் அழிந்து
போகவேண்டும் என்பதல்ல (2பேது 3: 9). இறைவாக்கினர் யோனா நினிவே
மக்களிடம் மனம்மாற வேண்டும் என்று சொன்னபோது, அவர்கள் உடனே
மனம்மாறினார்கள். இதனால் இறைவன் தன்னுடைய முடிவை
மாற்றிக்கொள்கின்றார். ஆம், மக்கள் மனம்மாறவேண்டும். அது
நடந்தபின்பு, அவர்களை அழிக்கக்கூடாது என்பதுதான் இறைவனின்
எண்ணமாக இருக்கின்றது. அது நினிவே மக்களிடம் நடந்ததால் இறைவன்
தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்கின்றார்.
யோனாவுக்கும் ஆண்டவர்க்கும் இடையே நடக்கும் விவாதம்
நினிவே மக்கள் மனம்மாறியத்தைத் தொடர்ந்து, ஆண்டவர் அவர்களை
அழிக்காமல் விடுகின்றார். இதைப் பார்த்துவிட்டு யோனா
ஆண்டவரிடம், உம்மைப் பற்றி எனக்குத் தெரியும். அழிக்க
நினைப்பீர்; பிறகு உம் மனத்தை மாற்றிக் கொள்வீர் என்பதும்
எனக்கு அப்போதே தெரியும்"
என்கின்றார்.
யோனா ஆண்டவரிடம் பேசுகின்ற வார்த்தைகள், அவர் நினிவே மக்களிடம்
எத்தகைய மனநிலையோடு பணியாற்றினார் என்பதை எடுத்துக்கூறுவதாக
இருக்கின்றது. யூதரான யோனா புறவினத்து மக்களாகிய நினிவே நகர
மக்கள் அழிந்து போகவேண்டும் என்ற மனநிலையில்தான்
பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், அங்குள்ள மக்களோ, அவருடைய
வார்த்தையை கேட்டு மனம்மாறியதால் தாங்கிக் கொள்ள முடியாமல்,
யோனா
"
வாழ்வதைவிட சாவதே மேல்"
என்று சொல்லிக்கொண்டு நகரை விட்டு
வெளியேறி, ஒரு பந்தல் அமைத்து, நகருக்கு என்ன நடக்கப்போகிறது
என்று பார்க்கத் தொடங்குகின்றார்.
ஆண்டவர் தான் இரக்கமே உருவானவர் என்பதை வெளிப்படுத்துதல்
யோனா இப்படியெல்லாம் நடந்துகொள்வதைப் பார்த்த இறைவன் அவரிடம்,
ஒரு இரவில் மலர்ந்து மறு இரவில் மறைந்துபோகும் ஓர் ஆமணக்குச்
செடிக்கு நீ இரக்கம் காட்டும்போது, வலது கை எது, இடது கை எது
என சொல்லத் தெரியாத ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கும்
மேற்பட்டோர்மேல் நான் இரக்கம் காட்டாது இருப்பேனா என்கின்றார்.
இறைவன் பாவத்தை வெறுக்கின்றாரே அன்றி, பாவிகளை, அவர் இனத்தைச்
சார்ந்தவராக இருந்தாலும் வெறுப்பதில்லை என்ற உண்மையை யோனா
உணராததால்தான் இப்படியெல்லாம் அவர் நடந்து கொள்கின்றார்.
ஆகையால், நாம் பாவிகள் ஆண்டவரிடம் திரும்பி வருவதற்கு,
அவர்கள்மீது இரக்கம்கொண்டு, அவர்களிடம் ஆண்டவருடைய செய்தியை
எடுத்துச் சொல்லி, அவர்களை ஆண்டவரிடம் அழைத்து வர முயற்சி
செய்வோம்.
சிந்தனை
'
மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான
மகிழ்ச்சி உண்டாகும்'
(லூக் 15: 7) என்பார் இயேசு. ஆகையால்,
விண்ணுலகில் மகிழ்ச்சி உண்டாகக் காரணமாக இருக்கும் பாவிகள்
மனம்மாற, நாம் ஆண்டவருடைய செய்தியை அவர்கட்கு எடுத்துரைப்போம்.
அதன்மூலம் அவர்களும் நாமும் இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
|
|