Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      08 அக்டோபர் 2019  
                                    பொதுக்காலம் 27ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகியதைக் கண்டு, ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டார்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர் " நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி" என்றார்.

அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார்.

நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், " இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக் கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். " இதனால் அரசரும் அரசவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீயவழிகளையும், தாம் செய்துவரும் கொடும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது."

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 130: 1-2. 3-4. 7-8 (பல்லவி: 3) Mp3
=================================================================================
பல்லவி: நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்?

1 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; 2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி

3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்கமுடியும்? 4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி

7 இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. 8 எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 11: 28

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மார்த்தா அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 38-42


அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் ஓர் ஊருக்குச் சென்றார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார்.

மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, " ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்" என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, " மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
யோனா 3: 1-10

மனம் மாறிய நினிவே மக்கள்

நிகழ்வு

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள விஷாவ் (Wishaw) என்ற நகரில் குருவானவர் ஒருவர் இருந்தார். அந்நகரில் இருந்தவர்கள் மிகவும் ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். இதைப் பார்த்துவிட்டு மிகவும் மனவேதனை அடைந்த இவர், ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் நகர் முழுக்கச் சென்று, 'மனம்மாறி ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று உருக்கச் சொல்லி வந்தார். கூடவே, 'திரும்பி வாருங்கள் இல்லையென்றால் தீக்கு இரையாவீர்கள்' (Turn or Burn) என்றும் உரக்கச் சொல்லிவந்தார்.

மக்கள் இதைக் கேள்விவிட்டு, 'மனமாறாவிட்டால் அழிந்து போய்விடும்' என்று அஞ்சி மனம்மாறி வாழத் தொடங்கினார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற குருவானவர் எப்படி மக்கள் மனம்மாறவேண்டும் என்று விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து, மக்கள் மனம்மாறி வாழத் தொடங்கினார்களோ, அதுபோன்று இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோனா விடுத்த அனுப்பினைத் தொடர்ந்து மக்கள் மனம்மாறி வாழத் தொடங்குகின்றார்கள். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யோனாவை இரண்டாம் முறையாக அழைத்த இறைவன்

ஆண்டவராகிய கடவுள் முதன்முறையாக யோனாவை அழைத்த போது, அவர் அவருடைய சொல்லுக்குக் கீழ்ப்படியாமல் தர்சீசு நகருக்குத் தப்பியோட முயன்றார். ஆனால், அவர் பொருட்டு கடலில் கொந்தளிப்பு ஏற்பட, அங்கிருந்தவர்கள் அவரைக் கடலுக்குள் தூக்கிப்போடுகின்றார்கள். அப்பொழுது ஒரு பெரிய மீன் வந்து அவரைத் தன்னுடைய வயிற்றில் தாங்கிக்கொள்கின்றது. அதன்பிறகு யோனா தன்னுடைய தவறை உணர்கின்றார். இதற்குப் பின்பு கடவுள் அவரை மீண்டுமாக தன்னுடைய பணிக்கு, அதாவது நினிவே நகர மக்கட்குத் தன்னுடைய செய்தியை அறிவிக்க அனுப்புகின்றார்.

கடவுள் ஒருவரை இரண்டாம் முறையாக அழைப்பது ஒன்றும் புதிதில்லை. தன் மனைவியை சகோதரி என்று அழைத்த ஆபிரகாமையும் (தொநூ 12: 10- 13: 4) தன் தந்தையை ஏமாற்றிய யாக்கோபையும் தன் இனத்தானை இன்னொரு இனத்தான் அடித்தான் என்பதற்காக அவனைக் கொன்றுபோட்ட மோசேயையும் இயேசுவை மும்முறை மறுதலித்த பேதுருவையும் (யோவா 21: 19) அவர் இரண்டாம் முறைதான் அழைத்தார். இவ்வாவாறு இறைவன் அவர்களை இரண்டாம் முறையாக அழைப்பது ஒருவிதத்தில் இறைவன் அவர்களுடைய குற்றங்களை மன்னித்துவிட்டார் என்பதை எடுத்துக்கூறும் அதே வேளையில், இன்னொரு பக்கம் யாரெல்லாம் இரண்டாம் முறையாக அழைக்கப்பட்டார்களோ, அவர்கள் தங்களிடம் கொடுக்கப்பட்ட பணியினை இன்னும் சிறப்பாகச் செய்தார்கள் என்பது வரலாறு.

யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு மனம்மாறிய நினிவே மக்கள்

யோனா, ஆண்டவர் தன்னிடம் ஒப்படைத்த பணியினை ஏற்றுக்கொண்டு புறவினத்தாரின் நகரான நினிவே நகருக்குச் சென்று, " இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" என்று சொல்கின்றார். இறைவாக்கினர் யோனா நினிவே மக்களிடம் பேசிய வார்த்தைகளாகத் திருவிவிலியத்தில் இடம்பெறும் வார்த்தைகள் வெறும் ஐந்தே ஐந்து வார்த்தைகள்தான். ஆனால், அந்த ஐந்து வார்த்தைகளைக் கேட்டு, அரசன் முதல் அடிமை வரை, பெரியவர் முதல் சிறியவர் வரை சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருக்கத் தொடங்குகின்றார்கள்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கட்கு நடுவில் மூன்றாண்டுகள் பணிசெய்தார்; ஆனாலும் அவர்கள் அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. இங்கோ யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு புறவினத்து மக்களாகிய நினிவே மக்கள் மனம்மாறுகின்றார்கள். எவ்வளவு பெரிய முரண் இது! இதனால்தான் இயேசு யூதர்களைப் பார்த்து, ' தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் உங்களைக் கண்டனம் செய்வார்கள் (மத் 12: 41) என்று கூறுகின்றார்.

எல்லாரும் வாழ்வு பெற விரும்பும் இறைவன்

ஆண்டவராகிய கடவுள், புறவினத்து மக்களாகிய நினிவே மக்களிடம் யோனாவின் மூலம் தன்னுடைய வார்த்தையை எடுத்துரைக்கச் சொன்னதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர்கள் செய்த பாவம். அசிரியர்களாகிய இவர்கள் இரத்த வெறியோடு தங்களுடைய எதிரிகளை ஒன்றுமில்லாமல் செய்ததால், இவர்களுடைய பாவங்கள் பெருகிக்கொண்டே போயின. இன்னொரு காரணம், இந்த மக்கள் அழிந்து போகக்கூடாது என்பது. யாரும் அழிந்துபோகாமல் மனம்மாறவேண்டும் என்று விரும்பிய கடவுள் (2 பேது 3:9), நினிவே மக்களும் தன்னுடைய மக்கள்தான் என்பதால் கடவுள் அவர்களிடம் யோனாவை அனுப்பி மனமாறச் செய்கின்றார். இதனால் மூலம், கடவுள் தான் இரக்கமும் அன்பும் கொண்டவர் என்பதை நிரூபித்துக் காட்டுகின்றார்.

நாம் நினிவே மக்களைப் போன்று பாவம் செய்து கடவுளை விட்டு வெகு தொலைவில் சென்றிருக்கின்றோமா? சிந்திப்போம். ஒருவேளை நாம் கடவுளை விட்டு வெகுதொலைவில் சென்றிருந்தால் அவர் குரல்கேட்டு மனம்மாறி, அவர்க்கு உகந்த மக்களாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

' ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர் (திபா 103: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கடவுளின் பேரன்பை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 10: 38-42

நீங்கள் மார்த்தாவா? மரியாவா?


நிகழ்வு

இங்கிலாந்து நாட்டில் பிறந்த மிகப்பெரிய பணக்காரர் ரூட்ஷெல்ட். சில சமயங்களில் இவர் அரசாங்கத்திற்கே நிதியுதவி செய்வார். அந்தளவுக்குப் பெரிய பணக்காரர். இவர் நிறையப் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியில் கடவுளை மறந்து வாழ்ந்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் பணம்தான் கடவுள்... பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் இவர் தன்னுடைய பணமெல்லாம் இருந்த இரகசிய அறையில் அமர்ந்துகொண்டு கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று வேகமாக வீசிய காற்று இவர் இருந்த அறையின் கதவைச் சாத்த, இவர் உள்ளே மாட்டிக்கொண்டார். இவருடைய துரதிஷ்டம், அறையின் சாவி வெளிப்பக்கமாக இருந்ததால், இவர் எவ்வளவு முயன்றும் அறையைத் திறக்க முடியவில்லை.

நாள்கள் பல ஆயின. அன்னம், தண்ணீர் உட்கொள்ளாமல் இவர் உடல் மெலிந்து போனார். இறுதியில் தான் இறக்கப்போகிறோம் என்பத்தை உணர்ந்து, ஒரு காகிதத்தை எடுத்து, அதில் இவ்வாறு எழுதத் தொடங்கினார்: " பணம்தான் எல்லாம்... பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். கடைசியில் இவ்வளவு பணமிருந்தும் உணவும் தண்ணீரும் இல்லாமல் இறக்கப்போகிறேன்." இதை அவர் எழுதி, அங்கிருந்த மேசை ஒன்றில் வைத்துவிட்டு அப்படியே இறந்துபோனார்.

இதற்கு நடுவில் ' ரூட்ஷெல்ட் எங்கே?' என்று பல நாள்களாகத் தேடிய அவருடைய குடும்பத்தினரும் அவருடைய உறவினர்களும் அவர் பாதாள அறையில் செத்துக் கிடப்பதைக் கண்டு மிகவும் அதிர்ந்து போனார்கள்.

வாழ்க்கையில் பணமும் இன்ன பொருள்களும் வேலையும்தான் முக்கியம்; கடவுள் எல்லாம் அதற்கு அப்புறம்தான் என்று வாழக்கூடியவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய இறைவார்த்தை நம்முடைய வாழ்க்கையில் எதற்கு முதன்மையான இடம் கொடுத்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்ட மார்த்தா

இயேசு தன் சீடர்களோடு மார்த்தாவின் வீட்டிற்குச் செல்கின்றார். அங்கு மார்த்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் இயேசுவுக்கு நல்லதொரு விருந்து கொடுக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் மிகவும் பரபரப்பாக அலைகின்றார். மட்டுமல்லாமல், தனக்கு உதவி செய்யவில்லை என்று தன் மரியாவின் மீது குறைபட்டுக் கொள்கின்றார்.

இங்கு மார்த்தா செய்த தவறு என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். மார்த்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருந்த இயேசுவை வரவேற்றதோடு சரி. அதன்பிறகு அவர் இயேசுவை மறந்துவிட்டு பற்பல பணிகளில் மிகவும் ஈடுபடத் தொடங்கினார். மார்த்தாவின் செயல்பாடு, இயேசு அல்லது இறைவன் இல்லாமல் வாழமுடியும் என்ற எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது. ஆனால் இறைவார்த்தை சொல்கின்றது, " என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது" (யோவா 15:5) என்று.

மார்த்தா செய்த இன்னொரு தவறு, தன் சகோதரியின் மீது குறைபட்டுக் கொண்டது. நம்முடைய மத்தியில் ஒருசிலர் இருக்கின்றார். அவர்கள் ' தாங்கள்தான் கடின உழைப்பாளி' , தங்களால்தான் எல்லா ஆகின்றன' என்று பம்மாத்துக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இது ஒருவகை மனநோய். தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொண்டு அடுத்தவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று ஒப்பாரி வைப்பது அல்லது முறையிடுவது மனநோய் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்! இதனால்தான் இயேசு மார்த்தாவிடம் பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்று கூறுகின்றார்.

தேவையான ஒன்றின்மீது கவனம் செலுத்திய மரியா

மார்த்தாவோ பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கையில், மரியா தேவையான ஒன்றான, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ஆண்டவரின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்பதில் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார்.

திருவிவிலியத்தில் மார்த்தாவின் சகோதரி மரியாவைக் குறித்த குறிப்புகள் மூன்று முறை இடம்பெறுகின்றன (லூக் 10: 39, யோவான் 11: 32; 12:3) இந்த மூன்று முறையும் அவர் இயேசுவின் காலடியில் இருப்பதாக இருக்கின்றன. அப்படியானால் மரியா இயேசுவோடு இணைந்திருந்து, அவருடைய வார்த்தையைக் கேட்பதில், அதைத் தியானிப்பதில் நிறைவுகண்டார் என்றுதான் சொல்லவேண்டும். இங்கு மரியா தன் சகோதரி மார்த்தாவிற்கு உதவி செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது. அவர் மார்த்தாவிற்கு நிச்சயம் உதவி செய்திருக்கவேண்டும். அதன்பிறகுதான் அவர் இயேசுவின் வார்த்தையைக் கேட்பதன் தேவையை உணர்ந்து, அவருடைய காலடியில் வந்து அமர்கின்றார். இவ்வாறு அவர், ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார்' (மத் 4: 4) என்ற உண்மையை உணர்ந்து, நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டவர் ஆகின்றார்.

இந்த இருவரில் நாம் யார்? என்பதை நம்முடைய தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்ப்போம்.

சிந்தனை

' நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்' (யோவா 15: 4) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் வார்த்தையைக் கேட்பதன் மூலமும் அதன்படி நடப்பதன் மூலமும் அவரோடு இணைந்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!