Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     07 அக்டோபர்  2019  
                                    பொதுக்காலம் 27ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 1: 1-17

அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், " நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன" என்றார்.

யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்பட இருந்த ஒரு கப்பலைக் கண்டார்; உடனே கட்டணத்தைக் கொடுத்துவிட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார்.

ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

கப்பல் தலைவன் அவரிடம் வந்து, " என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்" என்றான்.

பிறகு கப்பலில் இருந்தவர்கள், " நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது.

எனவே, அவர்கள் அவரை நோக்கி, " இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது?" என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், " நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்" என்று சொன்னார். மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார்.

எனவே அவர்கள் மிகவும் அஞ்சி, " நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்டார்கள். கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், " கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்ய வேண்டும்? " என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், " நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்" என்றார்.

ஆயினும் அவர்கள் கரைபோய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்; ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில் கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகிக் கொண்டேயிருந்தது.

அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, " ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழியவிட வேண்டாம்; குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள்மீது பழி சுமத்த வேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்" என்று சொல்லி மன்றாடினார்கள்.

பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கடல் கொந்தளிப்பும் தணிந்தது.

அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்; பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள். ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்தபடியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -யோனா 2: 2. 3. 4. 7 (பல்லவி: 6c)
=================================================================================
பல்லவி: பாதாளக் குழியிலிருந்து ஆண்டவரே நீர் என்னை மீட்டீர்.

2 ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்; என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர். பல்லவி

3 நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழ்ந்து கொண்டது. நீர் அனுப்பிய அலை திரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன. பல்லவி

4 அப்பொழுது நான், `உமது முன்னிலையிலிருந்து புறம்பே தள்ளப்பட்டேன்; இனி எவ்வாறு உமது கோவிலைப் பார்க்கப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டேன். பல்லவி

7 என் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, ஆண்டவரே! உம்மை நினைத்து வேண்டுதல் செய்தேன். உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எனக்கு அடுத்திருப்பவர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 25-37

அக்காலத்தில் திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், " போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, " திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார்.

அவர் மறுமொழியாக, " உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார்.

இயேசு, " சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, " எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.

அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: " ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கமாக விலகிச் சென்றார்.

அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின்மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டு போய் அவரைக் கவனித்துக்கொண்டார்.

மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, `இவரைக் கவனித்துக்கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.

" கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.

அதற்குத் திருச்சட்ட அறிஞர், " அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார்.

இயேசு, " நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
யோனா 1: 1-17, 2: 1-2

இறைவாக்கினர் யோனாவின் கீழ்ப்படியாமை


நிகழ்வு

சிறுநகர் ஒன்றில் டாமி என்ற சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பட்டம் விடுவது என்றால் உயிர். ஒருநாள் அவன் தன்னுடைய வீட்டுக்கு முன்பு பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அதைப் பார்த்துவிட்டு அவனுடைய அம்மா, " தம்பி! தெருவில் நின்றுகொண்டு பட்டம் விட்டுக்கொண்டிருக்காதே! அது வருவோர் போவோர்க்கு பெரிய இடையூறாக இருக்கும். இன்னும் சிறிதுநேரத்தில் வேலையை முடித்துவிட்டு அப்பா வீட்டுக்கு வந்துவிடுவார். அவரோடு சேர்ந்து, நீ ஊருக்கு வெளியே இருக்கும் மைதானத்திற்குச் சென்று பட்டம் விடு, இங்கு தயவு பட்டம் விடவேண்டாம்" என்று கெஞ்சிக் கேட்டார். அவனோ தன்னுடைய அம்மா சொல்வதை ஒரு பொருட்டாகக்கூட மதியாமல், தெருவில் நின்று பட்டம் விட்டுக்கொண்டிருந்தான். இதனால் டாமியின் அம்மா மிக வருத்ததோடு வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.

சிறிதுநேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ' டாமியின் அப்பாதான் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார் போலும்' என்று நினைத்துக்கொண்டு டாமியின் அம்மா கதவைத் திறந்து பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை அதிர்ந்து போக வைத்தது. ஆம், அவருடைய மகன் டாமி நன்றாக அடிபட்டிருந்தான்; அவனுடைய முகத்தில் யாரோ நன்றாக அடித்திருந்தது தெரிந்து; அவனுக்குப் பக்கத்தில் எதிர் வீட்டுக்காரர் நின்றுகொண்டிருந்தார்.

" என்ன நடந்தது?" என்று டாமியின் அம்மா அவரிடம் கேட்க, அவர், " தம்பி தெருவில் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்தான் அல்லவா! இவன் பட்டம் விட்டுக்கொண்டிருக்கையில், தெரியாமல் எதிரில் இரண்டுசக்கர வண்டியில் வந்தவர் மேல் மோத, பட்டத்திலிருந்த நூல் அறுந்து, அவருடைய கழுத்தில் இழுத்துவிட்டது. இதனால் அவருடைய கழுத்திலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது. ஆகையால், அவர் இவனை அடியடியென அடித்துத் துவைத்துவிட்டார், தற்செயலாக அங்கு வந்த நான், அவரிடம் பொறுமையாகப் பேசி, அவரைச் சரி செய்தபின்தான், அவர் இவனை விட்டுவிட்டுப் போனார்" என்றார்.

இதைக் கேட்ட டாமியின் அம்மாவிற்கு அழுகையாய் வந்தது. இருந்தாலும் தன்னுடைய அழுகையை அடக்கிக்கொண்டு, " இன்றைக்கு ஏதோ விபரிதம் நடக்கப் போகிறது என்று எனக்கு நன்றாக தெரிந்தது. அதனால்தான் நான் வீட்டிற்குள் சென்று, டாமிக்காக இறைவனிடம் மன்றாடத் தொடங்கினான். நான் இறைவனிடம் மன்றாடியது வீண்போகவில்லை. ஒருவேளை நான் மட்டும் இறைவனிடம் மன்றாடவில்லை என்றால், இதைவிட விபரீதமான சம்பவம் நடைபெற்றிருக்கும்!" என்றார்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த டாமி, " அம்மா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் மட்டும் உங்களுடைய சொல்கேட்டு நடந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்காது அல்லவா!" என்று அழுதுகொண்டே சொன்னான். அதற்கு அவனுடைய தாய், " சரி மகனே! இனிமேலாவது அம்மாவின் சொல்கேட்டு நட" என்று சொல்லி, அவனை வீட்டுக்குள் கூட்டிக்கொண்டுபோய் முதலுதவி செய்யத் தொடங்கினார்.

கீழ்ப்படியாமல் நடப்பதால், எப்படி ஆபத்து வருகின்றது என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்த யோனாவைக் குறித்துப் பேசுகின்றது. யோனாவின் கீழ்ப்படியாமையால் என்ன நடக்கின்றது என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யோனாவின் கீழ்ப்படியாமை

ஆண்டவராகிய கடவுள் யோனாவிடம் அசிரிரியர்களின் நகர்களுள் ஒன்றான நினிவே நகருக்குச் சென்று, நற்செய்தி அறிவி என்று சொல்கின்றபோது, அவரோ ஆண்டவரின் சொல்லுக்குக் கீழ்ப்படியாமல், யோப்பாவிற்குச் சென்று, அங்கிருந்து தர்சீசுக்குச் செல்ல முயற்படுகின்றார். கடவுள், யாரும் அழிந்துபோகக்கூடாது' (2 பேது 3:9) என்று நினைத்து, யோனாவை நினிவே மக்கட்கு தன்னுடைய வார்த்தையை எடுத்துச் சொல்லச் சொன்னபோது, அவரோ அந்நகரில் இருப்பவர்கள் அழிய வேண்டும் என்று ஆண்டவர்க்குக் கீழ்ப்படியாமல், வேறொரு திசையில் போகின்றார்.

யோனாவின் பொருட்டு மற்ற எல்லார்க்கும் தண்டனை

யோனா ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படியாமல் தர்சீசு நகருக்குச் சென்றதால், அவர் சென்ற கப்பல் ஆபத்துக்குள்ளாகின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், அவர் பொருட்டு கப்பலில் இருந்தவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். இதனால் அவர் கடலில் தூக்கி வீசப்படுகின்றார். யூதர்கள் மற்ற எல்லா இனத்துக்கும் ஆசியாக இருந்திருக்க வேண்டும் (தொநூ 12: 1-3) ஆனால், யோனா ஆசியாக இல்லாமல், எல்லார்க்கும் சாபமாக இருக்கின்றார். இதனால் அவர் கடலில் தூக்கி வீசப்படுகின்றார்.

தன்னுடைய தவறை உணர்வும் யோனா

கடலில் தூக்கி வீசப்பட்ட யோனா பெரிய மீனின் வயிற்றுக்குள் செல்கின்றார். அங்கு அவர் மூன்று இரவும் மூன்று பகலும் இருக்கின்றார். மூன்றாம் நாளின் இறுதியில் தன்னுடைய தவறை உணர்ந்து இறைவனிடம் மன்றாடுகின்றபோது, இறைவனை அவரை மன்னித்து, மீண்டுமாக அவரை நினிவே நகருக்கு அனுப்புகின்றார்.

கடவுளின் குரலுக்குக் கீழ்ப்படியாமல் நடந்தால் நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்கட்கும் தீமை வந்துசேரும் என்பதை யோனா நமக்கு உணர்த்துகின்றார். ஆகையால், நாம் கடவுளின் குரல் கேட்டு, அவர்க்குக் கீழ்ப்படிந்து வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

' உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு' (இச 30: 10) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
லூக்கா 10: 25-37

" அவர்க்கு இரக்கம் காட்டியவரே"


நிகழ்வு

அன்று மாலை ஐந்து மணி இருக்கும். செல்வி, பக்கத்து ஊரில் இருந்த அரசு மேனிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்துவந்த தன்னுடைய மகளை, வீட்டிற்கு அழைத்து வருவதற்காக தன்னிடம் இருந்த இரு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு மகள் படித்துவந்த பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினாள். பள்ளிக்கூடத்தை அடைந்ததும், மகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினாள். வீட்டில் மகளை இறக்கிவிட்டுவிட்டு, ஒரு சாக்குப் பையை எடுத்துக்கொண்டு. பலசரக்குகள் வாங்க அருகில் இருந்த நகருக்கு வண்டியில் கிளம்பிப் போனாள். ஒரு வாரத்திற்குத் தேவையான பலசரக்குச் சாமான்களை வாங்கி வண்டியில் வைத்துக்கொண்டு, வண்டியை வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினாள் செல்வி.

ஏற்கனவே நன்றாக இருட்டி இருந்ததால், செல்வி வண்டியை மிகக் கவனமாக ஒட்டிக்கொண்டு வந்தாள்.. ஒரு திருப்பத்தில் அவள் வண்டியைத் திருப்பியபோது, யாரோ ஒரு பெண்மணி, தன்னுடைய இரண்டு கைகளிலும் பைகளை வைத்துக்கொண்டு சுமக்க முடியாமல், சுமந்துவந்தார். அவர் யார் என்று செல்வி அவர் அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது. அந்தப் பெண்மணி செல்வியின் ஊரைச் சார்ந்தவர்தான் என்று. உடனே அவள் தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்மணியை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டாள்.

வண்டி சிறிதுதூரம் போனபின்பு செல்வி அந்தப் பெண்மணியோடு பேசத் தொடங்கினார். " அக்கா! இந்த நேரத்தில் அதுவும் தனியாக எங்கு போய்விட்டு வருகிறீர்கள்?" " வேறு எங்கு போக...? சந்தைக்குப் போய்விட்டுத்தான் வருகிறேன். பேருந்தில் வர கையில் காசு இல்லை. அதனால்தான் ஊருக்கு நடந்தே வந்துகொண்டிருந்தேன். நல்லவேளை நீ வந்து உதவி செய்தாய். இல்லையென்றால் இந்த ஆளில்லாத காட்டுப் பாதையில் பயந்துகொண்டுதான் ஊருக்கு வரவேண்டும்" என்றார் அந்தப் பெண்மணி. அந்தப் பெண்மணி சொன்ன வார்த்தைகள் செல்விக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன. இதற்குப் பின்பு இருவரும் பேசிக்கொண்டே ஊரை வந்தடைந்தார்கள். செல்வி அந்தப் பெண்மணியை அவருடைய வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிட, அவர் செல்விக்கு மனதார நன்றிகூறினார்.
செல்வியோ, ' தன்னந்தனியாக வந்த ஒரு பெண்மணிக்கு தன்னால் முடிந்தோர் உதவி செய்திருக்கின்றோம்' என்ற உவகையில் வீட்டிற்குத் திரும்பினாள்.

தன்னந்தனியாய் வந்த பெண்மணியின்மீது இரக்கம்கொண்டு, அவருடைய வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்த வகையில் செல்வியையும் ஒரு நல்ல சமாரி(யை)யர்தான் என்றால் அது மிகையில்லை. இன்றைய நற்செய்தி வாசகம் நிலைவாழ்வைப் பெறுவது எப்படி? அடுத்திருப்பவர் யார்? போன்ற கேள்விகட்கு விடையாக அமைகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யார் எனக்கு அடுத்திருப்பவர்?

நற்செய்தியில் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வருகின்ற திருச்சட்ட அறிஞர், " நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கின்றார். இயேசு அவர் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், அவருடைய வாயிலிருந்தே பதிலை வரவழைக்கின்றார். அப்பொழுதும்கூட அவர், தன்னுடைய கேள்விக்கான விடை கிடைத்துவிட்டது என்று திருப்தி அடையாமல், தன்னை நேர்மையாளர் என காட்டிக்கொள்ள விரும்பி, " யார் எனக்குக் அடுத்திருப்பவர்?" என்று கேட்கின்றார். இக்கேள்விக்கு இயேசு கூறும் விடைதான் நல்ல சமாரியன் உவமை. இவ்வுவமை வழியாக இயேசு கூறும் செய்தி என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

விவாதத்தை விட செயலில் இறங்குவது அல்லது இரக்கம் காட்டுவது மேலானது

திருச்சட்ட அறிஞர் ' நிலைவாழ்வு உரிமையாக்க என்ன செய்வது?' , ' எனக்கு அடுத்திருப்பவர் யார்?' என்பது போன்ற விவாதம் நடந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கும்போது, இயேசு அவரைச் செயல்படத் தூண்டுகின்றார். எப்படி நல்ல சமாரியன் அடிபட்டுக் கிடந்தவர்க்கு இரக்கம் காட்டினாரோ, அதுபோன்று திருச்சட்ட அறிஞரும், நாமும் தேவையில் இருப்பவர்மீது இரக்கம் கொள்ளவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றார். ஆம், விவாதத்தை விட அல்லது சொற்களை விட நற்செயலும் தேவையில் உள்ளவர்மீது காட்டும் இரக்கமும் மிக மிக உயர்ந்தவை. இந்த உண்மையை உணர்ந்துகொண்டு செயல்பட்டால், நாம் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது உறுதி.

சிந்தனை

' பலியை விட இரக்கத்தையே விரும்புகிறேன்' (ஓசே 6:6) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் தேவையில் உள்ளவர்கள்மீது இரக்கம்கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை. நிறைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!