Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     05 அக்டோபர் 2019  
                                    பொதுக்காலம் 26ம் ஞாயிறு - 1ம் ஆண்டு              
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவர் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29

இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும் என் மக்களே, வீறுகொள்வீர். நீங்கள் வேற்றினத்தாரிடம் விற்கப்பட்டது உங்கள் அழிவிற்காக அன்று; நீங்கள் கடவுளுக்குச் சினமூட்டியதால்தான் பகைவரிடம் ஒப்படைக்கப் பட்டீர்கள். கடவுளை விடுத்துப் பேய்களுக்குப் பலியிட்டதால் உங்களைப் படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள். உங்களைப் பேணிக் காத்துவந்த என்றுமுள கடவுளை மறந்தீர்கள். உங்களை ஊட்டி வளர்த்த எருசலேமை வருத்தினீர்கள்.

கடவுளின் சினம் உங்கள் மீது வரக் கண்டு எருசலேம் கூறியது: " சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள். கடவுள் எனக்குப் பெருந்துயர் அனுப்பியுள்ளார். ஏனெனில் என்றுமுள்ளவர் என் புதல்வர், புதல்வியர் மீது சுமத்திய அடிமைத்தனத்தை நான் கண்டேன். மகிழ்ச்சியோடு நான் அவர்களைப் பேணி வளர்த்தேன்; ஆனால் அழுகையோடும் துயரத்தோடும் அனுப்பி வைத்தேன். நானோ கைம்பெண்; எல்லாராலும் கைவிடப்பட்டவள். என் பொருட்டு யாரும் மகிழ வேண்டாம்; என் மக்களின் பாவங்களை முன்னிட்டு நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன்.
ஏனெனில் அவர்கள் கடவுளின் சட்டத்தை விட்டு விலகிச் சென்றார்கள். என் மக்களே வீறு கொள்வீர்; கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர். இத்துயரங்களை உங்கள் மீது அனுப்பி வைத்தவர் உங்களை நினைவு கூர்வார்.

கடவுளை விட்டு அகன்று செல்வதில் முன்பு நீங்கள் முனைந்து நின்றீர்கள். அதை விடப் பன்மடங்கு ஆர்வத்துடன் அவரைத் தேடும் பொருட்டு இப்பொழுது அவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில், இக்கேடுகளை உங்கள் மீது வரச் செய்தவரே உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்."


=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 69: 32-34. 35-36 (பல்லவி: 33a) Mp3
=================================================================================
பல்லவி: ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்.

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. 34 வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

35 கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள். 36 ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-24

அக்காலத்தில் அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, " ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர்.

அதற்கு அவர், " வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகை அடைந்து, " தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்" என்றார். " என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, " நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள்; ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
லூக்கா 10: 17-24

' உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்கட்கு அடிபணிகின்றன'

நிகழ்வு

அமெரிக்காவில் ரோஜர் என்றொரு குருவானவர் இருந்தார். கடவுள் அவர்க்குப் பேய்களை ஓட்டவும் பயணிகளைக் குணமாக்கவும் வல்லமை அளித்திருந்ததால், பலரிடமிருந்தும் அவர் பேய்களை ஓட்டியும் பிணிகளைக் குணமாக்கியும் வந்தார். இதுபோக அவர் சிறைச்சாலைகட்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் விடுதிகட்கும் சென்று ஆற்றுப்படுத்தும் பணியினைச் செய்து வந்தார்.

ஒருநாள் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்தவர்களை ஆற்றுப்படுத்திவிட்டு, திரும்பும்போது, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு முரடன் (மனநலம் பாதிக்கப்பட்டவன்) கையில் ஒரு கத்தியை வைத்துக்கொண்டு அவரைக் குத்துவதற்காகப் பாய்ந்து வந்தான். அந்த இல்லத்தில் இருந்தவர்களெல்லாம் ' குருவானவருக்கு என்னவாகப் போகிறதோ?' என்று பயந்துகொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது குருவானவர் அவனைப் பார்த்து, " இயேசுவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகின்றேன். உன்னுடைய கையில் இருக்கக்கூடிய கத்தியை உடனே கீழே போடு" என்று ஆணையிட்டார். அடுத்த நொடி, கையில் கத்தியோடு குருவானவரைக் குத்துவதற்காகப் பாய்ந்து வந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்டவன் கையில் இருந்த கத்தியைக் கீழே போட்டுவிட்டு, சாதுவைப் போன்று அவர்க்கு முன்னம் அமர்ந்தான். இதைப் பார்த்துவிட்டு, அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்தில் இருந்த எல்லாரும் வியந்துபோய் நின்றார்கள்.

இயேசுவின் திருப்பெயரைச் சொன்னால் பேய்கள் நடுங்கும்; பிணிகள் நீங்கும். எல்லாவிதமான துன்பங்களும் நீங்கும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதி, இயேசுவின் திருப்பெயரால் ஆகும் வல்ல செயல்களைப் பற்றி எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பணித்தளங்களிலிருந்து திரும்பி வந்த இயேசுவின் சீடர்கள்

நற்செய்தியில், இயேசுவால் பணித்தளங்கட்கு அனுப்பப்பட்ட எழுபத்து இரண்டு சீடர்கள் அவரிடம் திரும்பிவந்து, தாங்கள் செய்த அனைத்தையும் எடுத்துக்கூறுகின்றார்கள். பணித்தளங்களில் சீடர்கள் செய்ததாக இயேசுவிடம் சொல்வதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு சொற்றொடர், ' ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்கட்கு அடிபணிகின்றன' என்பதாகும். இது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு எழுபத்து இரண்டு சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்பியபோது, அவர்கட்குப் பிணிகளைக் குணமாக்குவதற்கான ஆற்றலையும் அதிகாரத்தையும் அளித்தார் (லூக் 10:9; 9:1). காரணம், அவர் எல்லா அதிகாத்தையும் தந்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருந்தார் (மத் 28: 18). அதைத்தான் அவர் தன் சீடர்கட்குத் தருகின்றார். ஆண்டவர் இயேசு தந்த அதிகாரத்தைக் கொண்டு சீடர்கள் தீய ஆவியினை விரட்டி அடிக்கின்றார்கள்.

இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமை

சீடர்கள் இயேசுவிடம் வந்து சொன்ன, " ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள்கூட எங்கட்கு அடிபணிகின்றன' என்ற சொற்கள், இயேசுவின் திருப்பெயருக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

புனித பவுல், பிலிப்பியர்க்கு எழுதிய மடலில் இவ்வாறு கூறுவார், " இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்." (பிலி 2:10) ஆம், இயேசுவின் திருப்பெயர் அவ்வளவு உயர்ந்தது... வல்லமை நிறைந்தது என்பதால்தான் அனைவரும் அதற்கு மண்டியிடுகின்றனர். இத்தகைய திருப்பெயரை இயேசுவின் சீடர்கள் சொன்னதால்தான் பேய்கள் அடிபணிந்தன; பிணிகள் எல்லாம் நீங்கின. இன்னும் பல்வேறு வல்ல செயல்கள் நடைபெற்றன. அப்படியானால், இயேசுவின் திருப்பெயருக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்து, நாமும் அத்திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவது மிகவும் இன்றியமையாததாகும்.

தீய ஆவியின்மீது அதிகாரம் கொண்ட இயேசு

இயேசுவின் சீடர்கள் அவருடைய திருப்பெயரைச் சொன்னதும், தீய ஆவிகளும் அடிபணிந்தன என்பது, இயேசு தீய ஆவியின் அதிகாரம் கொண்டிருக்கின்றார் என்ற உண்மையையும் பறைசாற்றுவதாக இருக்கின்றது.

இறைவாக்கினர் எசாயா நூலில் இவ்வாறு வாசிக்கின்றோம், " தீயோரின் கோலையும் ஆட்சியாளரின் செங்கோலையும் ஆண்டவர் முறித்துவிட்டார்." (எசா 14: 5) ஆம், ஆண்டவர் தீயோரின் கோலை முறியடித்துவிட்டார் என்பதற்கு அடையாளமாக இருப்பதுதான், இயேசுவின் சீடர்கள் அவருடைய திருப்பெயரைச் சொல்லி, தீய ஆவியை விரட்டியடித்தது. ஆகையால், நமக்குத் தீமையிலிருந்து விடுதலையும் எல்லா நலன்களையும் தரும் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாட முயற்சி செய்வோம்.

சிந்தனை

' நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்கட்குக் கொடுப்பார்' (யோவா 15: 16) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
ஆண்டவர் உங்களுக்கு முடிவில்லா மகிழ்ச்சியையும் மீட்பையும் அருள்வார்.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 4: 5-12, 27-29

இஸ்ரயேலரின் கீழ்ப்படியாமைக்குக் கிடைத்த தண்டனை

நிகழ்வு

ஒரு சிற்றூரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் குறும்புகாரனாக இருந்தான். குறிப்பாக அவன் அவனுடைய பெற்றோர் என்ன சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படியாமல், எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தான். ஒரு விடுமுறை நாளில் அவனுடைய அம்மா அவனிடம், " தம்பி! அம்மா சந்தைக்குப் போய்வருகின்றேன். நீ எங்கேயும் போகாமல் வீட்டிலியே இரு; குறிப்பாக பக்கத்திலிருக்கின்ற குளத்திற்குக் குளிக்கப் போகாதே; உன்னுடைய நல்லத்துக்குதான் சொல்கிறேன்" என்றார். அவனும் சரி என்று சொல்லிவிட்டு, சிறிதுநேரம் வீட்டிலேயே இருந்தான்.

அவனுடைய அம்மா நீண்டதூரம் சென்றுவிட்டார் என்று தெரிந்ததும், அவன் வீட்டை அடைத்துவிட்டு, தன்னுடைய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு குளத்தில் குளிக்கச் சென்றான். அன்றைக்கு வெயில் மிக அதிகமாக இருந்ததால், குளத்தில் குளிப்பதற்கு அவனுக்கும் அவனுடைய நண்பர்களும் அவ்வளவு இதமாக இருந்தது. அதனால் அவர்கள் நேரம் போனது தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

மாலை நேரமானதும் எல்லாரும் அவரவருடைய வீட்டிற்குக் கிளம்பிப் போனார்கள். அவன் மட்டும் சிறிது தாமதமாக வீட்டிற்குக் கிளம்பிப்போனான். அப்படி அவன் போய்க்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கு ஓர் ஓநாய் அவனைத் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. திடீரென ஒரு யோசனை அவனுக்குத் தோன்ற, அவன் தரையில் படுத்து, செத்தவன் போன்று நடிக்கத் தொடங்கினான். வேகமாகப் பாய்ந்துவந்த ஓநாய், அவனருகே வந்து அவனை மோந்து மோந்து பார்த்தது. அவன் செத்துப் போய்விட்டான் என்று நினைத்துக் கொண்டு, அது வந்த வழியே திரும்பிச் சென்றது.

உடனே அவன் ' தப்பித்தோம் பிழைத்தோம்' என்று அங்கிருந்து ஒரே ஓட்டமாய் வீட்டுக்கு ஓடிவந்தான். அவன் வீட்டுக்கு வந்த சிறிதுநேரத்தில் அவனுடைய அம்மா சந்தையிலிருந்து திரும்பிவந்தார். மகனுடைய முகத்தில் ஒருவிதமான கலவரம் இருப்பதைத் தெரிந்துகொண்டு, " என்ன நடந்தது?" என்று கேட்டார். அவனோ நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு, " அம்மா! உங்களுடைய சொல்கேட்டு நடந்திருந்தால் எனக்கு இப்படியோர் ஆபத்து வந்திருக்காது. இனிமேல் நான் உங்களுடைய சொல்கேட்டு நடப்பேன்" என்று கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னான். அவனுடைய அம்மாவோ, " இப்பொழுதாவது நான் சொல்வது உனது நல்லதுக்குத்தான் என்ற உண்மையை உணர்ந்துகொண்டாயே. அதுவே போதும்" என்று அவனைக் கட்டியணைத்துக் கொண்டார்.

பெற்றோர்க்கும் பெரியோர்க்கும் கடவுளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்; கீழ்ப்படிந்து நடக்காவிட்டால், ஆபத்துதான் நேரிடும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகம், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்ததால், இஸ்ரயேல் மக்கள் எப்படி அழிவினைச் சந்தித்தார்கள் என்பதை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கீழ்ப்படியாமல் இருந்ததால் தண்டனை

பாரூக்கு நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர்க்குக் கீழ்ப்படியாமல் நடந்ததால் எத்தகைய தண்டனையை அனுபவித்தார்கள் என்பதை எடுத்துக் கூறுகின்றது.

இஸ்ரயேல் மக்கள் உண்மை இறைவனாம் யாவை இறைவனை வழிபட்டு (விப 20: 1-2) அவர்க்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்திருக்க வேண்டும். அவர்களோ யாவே இறைவனை மறந்துவிட்டு அல்லது புறக்கணித்துவிட்டு, வேற்று தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இதனால்மூலம் அவன் கடவுளுக்குச் சீனமூட்ட, அவர்கள் பகைவர்களின் கையில் ஒப்புவிக்கப்பட்டார்கள். ஆதலால், இஸ்ரயேல் மக்களின் கீழ்ப்படியாமையே அவர்கள் பகைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

ஆண்டவருடைய ஆசியைப் பெற அவரிடம் திரும்பி வரவேண்டும்

கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், பகைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள், கடவுளிடமிருந்து ஆசி பெறவேண்டும் என்றால், அவருடைய அன்பு மக்களாக மாறவேண்டும் என்றால், அவர்கள் ஒரு முக்கியமான செயலைச் செய்யவேண்டும். அது என்ன என்பதை பாரூக்கு கூறுகின்றார். அதுதான் குற்றத்தை உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பி வருவது. இஸ்ரயேல் மக்கள் ஒருகட்டத்தில் தங்களுடைய குற்றத்தை உணர்ந்து ஆண்டவரிடம் திரும்பி வந்தார்கள், அதனால் அவர்கள் இறைவனிடமிருந்து மீட்பையும் மகிழ்ச்சியையும் பெற்றுக்கொண்டார்கள்.

நாமும் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவருடைய சொல்கேட்டு நடந்தால், அவரிடமிருந்து எல்லா ஆசியையும் பெறுவோம் என்பது உறுதி.

சிந்தனை

' கடவுளோடு ஒப்புரவாகுங்கள்' (2 கொரி 5: 20) என்பார் புனித பவுல். ஆகையால், புனித பவுலும் இன்றைய இறைவார்த்தையும் கொடுக்கும் அழைப்பினை ஏற்று, கடவுளோடு ஒப்புரவாகி, அவர் சொல்கேட்டு நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!